கடக்க முடியாத யாமம்

எனது நாவல் யாமம் குறித்து கவிஞர் சமயவேல் எழுதிய சிறப்பான விமர்சனக்கட்டுரை

••

இரவால் கோர்க்கப்பட்ட கதைகள் – சமயவேல்

 

எஸ்.ராமகிருஷ்ணனின் புதினம் யாமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ஒரு கர்ண பரம்பரைக் கதைகளின் தொகுப்பு என அன்றைய புத்திலக்கியப் பரப்பால் ஒதுக்கப்பட்டது ஞாபகம் வந்தது. எனவேதான் ‘யாமம்’ பற்றிய இந்த எழுத்தாடலை ஒரு வாசகத் தளத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன்.

விதம் விதமாகக் கசியும் இருளுக்குள் ஏராளமான கதைகள் மெல்லிய குரலில் வெளிப்படுகின்றன. இருட்டுக்குள் குளிருக்குள் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஆளுக்கொரு கதை சொல்லிய இரவுகள் அழிந்துவிட்டன. யாமத்தின் கதைகள் பல்வேறு பாதைகளில் கட்டுக்கடங்காமல் விரிந்து கொண்டே செல்கின்றன. பிரம்மாண்டமான பரப்பில் பல்வேறு தளங்களில் தோன்றும் எல்லா மனிதர்களும் இரவிடம் அகப்பட்டு அலைக்கழிந்து இருளாகி விடுகிறார்கள்.

கடந்த காலத்தில் காலூன்றிய புனைவுகளின் வசீகரம் மொழியின் உச்சபட்ச அழகியல் வீச்சுக்களை உள்ளிழுத்துக்கொண்டு ஒரு விசித்திரப் பெருங்கனவாக, புதினமாக மாறிவிடுகிறது. என்றோ இறந்த நிகழ்வுகள் நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிய மனிதனின் கனவுக்குள் நுழைந்து அவனது நினைவுகளை விழுங்கி நமது சித்தத்தைக் கலங்கடிக்க முனைகின்றன. மதராப்பட்டினமும் அது உருவான காலமும் வரலாறும் கதையும் பின்புலமாக அல்லாமல் யாமப் பெருங்கதையின் உயிர் அங்கங்களாகத் துடிக்கின்றன.

பெருந்துக்கங்களைத் தின்று வளர்ந்தவன் களிப்பின் நித்ய கரைகளை அடைந்து விடுகிறான். மாறாக களியாட்டங்களில் நீந்திக் களைத்தவர்கள் துக்கத்தின் இருளில் சறுக்கி மூழ்கி புதைந்து போகிறார்கள். யாமம் புதினம் முழுதும் இப்படி மூழ்கிப் புதைந்தவர்களே ஏராளம். அப்துல்கரீம், அவனது மூன்று மனைவிகள், சந்தீபா, பத்திரகிரி, தையல்நாயகி, விசாலா, சட்டநாதன், திருச்சிற்றம்பலம், சற்குணம் மற்றும் புதினத்தின் பின்புலமாக இருக்கும் வரலாறு. எல்லாரும் பரிதாபகரமாக வீழ்ந்துவிடுகிறார்கள். தமிழக நாட்டுப்புற பெருங்கதைகளின் சோகம் யாமம் புதினத்தையும் பீடித்துக் கொள்கிறது.

 II

இரவின் தாழ்வாரங்களில் நடந்து திரிந்து அதன் விசித்திரங்களை அறிந்த அப்துல்கரீமின் கதை புதினத்தின் முற்பகுதியைக் கட்டமைக்கிறது. இரவை சிருஷ்டிக்கும் சூட்சமம் விரல் வழியாக யாமம் என்னும் வாசனைத் திரவியம் ஆகிறது. பெரும் வெற்றிகளை அடைந்து செல்வந்தராகி மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறார். ஆனால் பேரருளாளனின் கருணை ஆற்றலால் மூன்று மனைவிகள் இருந்தும் கரீமுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகிறது. குதிரைப் பந்தயத்தில் எல்லாப் பணத்தையும் இழந்த அப்துல்கரீம் ஒரு விடிகாலைப்பொழுதில் வீட்டை விட்டு வெளியேறி மறைந்து போகிறார். ஆண் வாரிசு வழி தொடர்ந்த நறுமணம் காணாமல் போகிறது. ‘வாசனைகளின் திறவுகோல்’ என்ற ரோஜாத் தோட்டம் அழிந்து போகிறது. மூன்று மனைவிகளின் வாழ்வும் பெரும் போராட்டமாக சின்னா பின்னமாகி விடுகிறது. ஏழுகிணறு பகுதியில் பரவிய காலரா பீதியூட்டுகிற பெரும் நிகழ்வாக எஸ்.ராம கிருஷ்ணனின் எழுத்தில் ஆவணமாகிறது.

அப்துல் கரீமின் கதைக்குள்ளேயே பத்திரகிரி திருச்சிற்றம்பலம் என்ற சகோதரர்களின் கதை செருகப்படுகிறது. பத்திரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலம் கணிதம் பயில லண்டன் சென்றுவிட அவளது மனைவி தையல்நாயகி பத்திரகிரியின் வீட்டில் விடப்படுகிறாள். தையல்நாயகிக்கும் பத்திரகிரிக்கும் ஏற்பட்டுவிடும் உறவு அந்தக் குடும்பத்தின் எல்லா இனிமைகளையும் சிதைத்து விடுகிறது. திருச்சிற்றம் பலத்தின் லண்டன் அனுபவங்கள், உல்லாசப் பிரியனான அவனது நண்பன் சற்குணம் புரட்சிக்காரனாகும் கதை என புதினத்தின் பரப்பு விரிந்துகொண்டே போகிறது.

யாமத்தின் இருளோடு தைக்கப்பட்ட இன்னொரு கதை கிருஷ்ணப்பக் கரையாளரையும் அவரது தோழி எலிசபத்தையும் பற்றியது. கிருஷ்ணப்பாவும் மதராப்பட்டணத்தில் வேசையாக இருந்த எலிசபத்தும் மேல்மலைக்கு வருகிறார்கள். மேல்மலைக்காடு எலிகளைப் போல் அலையும் அவர்கள் இருவரையும் முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. கிருஷ்ணப்பக் கரையாளர் சொத்துக்களையெல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டு சாந்தமடைகிறார். மேல்மலைச் சரிவுகளை தேநீர் பயிரிட குத்தகைக்கு விட்ட பணத்தில் லண்டனுக்குப் புறப்படுகிறாள் எலிசபத். துக்கத்தைத் தின்று வளர்ந்த இருவரும் சாந்தி அடைகிறார்கள்.

திருச்சிற்றம்பலம் மட்டும் எதிலும் அகப்பட்டு விடாமலும் வீழ்ந்து விடாமலும் தப்பித்து வருகிறான். கணிதமும் தையல்நாயகியின் நினைவும் லண்டனில் அவனது எல்லாத் துயரங்களையும் தாங்கிக் கொள்ள வைக்கின்றன. லேடி ஆண்டர்சனின் பேரன்பு அவனைக் காப்பாற்றுகிறது. எண்ணும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அவன் கப்பலின் மேல் தளத்தில் நின்று கடல் மீன்களை எண்ணியபடி இந்தியா வந்தடைகிறான். ஆனால் மதராப் பட்டணத்தில் நடந்து முடிந்திருக்கும் நிகழ்வுகளைக் கண்டு தவறு எங்கிருந்து துவங்கியது என்ற கணக்கிற்கு விடை தெரியாமல் குழம்புகிறான். எல்லாம் கைவிட்டுப் போய்விட்டது என்ற கசப்போடு திருச்சிற்றம்பலமும் இருளில் கரைந்துவிடுகிறான். முழுமொத்த நல்ல மனிதனுக்கும் தவறுகளில் சறுக்கித் தத்தளிக்கிற மனிதனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வாழ்வின் கணக்கு வரையறுக்க முடியாத சூத்திரங்களில் சுழல்கிறது. இப்பகுதி கணித மேதை ராமானுஜத்தின் கதையை ஞாபகப்படுத்துவது நெருடலாக இருக்கிறது.

 III

இந்தப் புதினத்திற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் பிரதான ஊடுருவல் என சதாசிவப் பண்டாரம் & நீலகண்டம் என்ற நாய் இணையின் பயணத்தைக் கூறலாம். முதல் முதலாக ஒரு அசலான தமிழ்ப் பண்பாட்டுப் புனைவை புதினமொன்றில் படிக்கிறோம். யாமத்தின் பெரும் நிகழ்வுகள், போராட்டங்கள், துயரங்கள், களியாட்டங்கள் எல்லாவற்றையும் ஊடறுத்துக் கொண்டு பண்டாரமும் நாயும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ நிகழ்கிறது. ஒரு பெண்ணிடம் கூட சிக்கிக் கொள்கிறார். பண்டாரத்திற்கும் அந்தப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லையே எனப் புலம்புகிறார். ஆனால் நாய் அவரை உலக வாழ்விலிருந்து பிடுங்கியெடுத்து தரதரவென்று இழுத்துக் கொண்டு ஓடுகிறது. தொடர்ந்து ஓடி ஓடி நடந்து நடந்து இருவரும் எல்லாவற்றையும் கடந்து விடுகிறார்கள். 45ஆம் அத்தியாயத்தில் இரு வரும் பட்டினத்தடிகள் சமாதிக்கு வந்து சேர்கிறார்கள். மடம் ஒன்றுக்குள் நுழைந்து திரையிட்டுக் கொள்ளும் சதாசிவப் பண்டாரத்தின் வாழ்வு எரியும் ஐந்துமுக விளக்கும் அத்தரின் வாசனையுமாக ஒரு கதையாகி முடிகிறது. அடுத்த அத்தியாயங்களில் பிரதானக் கதையின் முடிவும் இதே போன்று அர்த்தமற்ற பெருஞ்சூன்யமாய் முடிகிறது.

காவியசோகம் என்பது ஒரே சொல்தான். ஒளியிலிருந்து இருளுக்கு ஆனந்தத்திலிருந்து துக்கத்துக்கு என எல்லாத் திருப்பங்களிலும் சோகம் இருளென மனிதனை அப்பிக் கொள்கிறது. துக்கம் ஞானிகளை உருவாக்குகிறது. ஆனால் துக்கமும் ஆனந்தமும் இடம் மாறுகிற திருப்பங்களில் நின்றபடி கலைஞன் கைகொட்டிச் சிரிக்கிறான். அவனை ஒரு பைத்தியம் என்றும் நீங்கள் அழைக்கலாம்.

 IV

கடந்த காலத்தில் காலூன்றிய புனைவுகள் கடந்த காலத்தின் விழுமியங்களையே கொண்டிருப்பது தான் இயல்பு. யாமம் படித்து முடித்ததும் நமக்குள் பெருகும் துக்கத்திலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால் ஏதோ ஓர் ஏமாற்றம் நமக்கு ஏற்படுகிறது. அதற்கான காரணம் புதினத்தின் வீச்சுக்களாக வெளிப்படும் கடந்த கால விழுமியங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நமது நவீன மனம்தான். பத்திரகிரிக்கும் தையல்நாயகிக்கும் நிகழ்ந்த உறவை ஓர் உயிரியல் நிகழ்வாக மட்டுமே நவீன நுண்பண்பாட்டுத் தளத்தில் கருத முடியும். சறுக்கல், தகாத உறவு, குற்றவுணர்வு என்ற சொல்லாடல்கள் நம்மை அழுத்திக் கொண்டிருக்கும் மரபுப் பண்பாட்டிலிருந்து கிளம்பும் புகைகள். நிகழ்காலப் புதினமொன்றில் திருச்சிற்றம்பலம் ஒரு புதிய வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சாத்யம் ஏற்படலாம். விசாலா தன் இதயத்தின் நல்லோரத்தை விரிவுபடுத்தி பத்திரகிரியைப் புரிந்து கொள்ளலாம். குற்றவுணர்வால் ஏற்படும் மனநோயிலிருந்து தையல்நாயகி தப்பித்துவிடலாம்.

இதெல்லாம் என்ன? கடந்தகால வாழ்வை நவீனப் புதினமாக்குவதின் கால முரண் படைப்பாளியைக் கத்திமேல் நடக்க வைக்கிறது. சமீபத்தில் சல்மன் ருஷ்டி அக்பரின் கற்பனைக் காதலியைப் பற்றி ஒரு புதினம் எழுதி  எல்லா விமர்சகர்களிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். வரலாறே பல சமயங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி விடுகிறது. பண்பாட்டின் நுண் வரலாறு தமிழில் இன்னும் எழுதப்படவே இல்லை. “யாமம்” கடந்த இரு நூற்றாண்டுகளின் தமிழகப் பண்பாட்டு நுண் வரலாறு ஆகிவிட்டது, இப்போதைக்கு.

 ***

0Shares
0