கல்வியின் பாதை.

Class Dismissed – என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்க பொதுக்கல்வி முறையின் குறைபாடுகளைப் பற்றிப் பேசும் இப்படம் ஹோம் ஸ்கூலிங் போன்ற மாற்றுக்கல்வி முறைகளின் தேவை குறித்து விவாதிக்கிறது.

அமெரிக்கா முழுவதிலும், பெற்றோர்கள் பொதுக் கல்வி நிலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள். .அப்படி அதிருப்தி அடைந்த லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு குடும்பம், தங்கள் இரு குழந்தைகளையும் புகழ்பெற்ற பள்ளி ஒன்றிலிருந்து படிப்பை நிறுத்தி ஹோம் ஸ்கூலிங் முறைப்படி வீட்டிலே கல்வி கற்க வைக்கிறார்கள். அவர்களின் அன்றாடப் பணிகளை ஆவணப்படம் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

தங்கள் குழந்தைகளின் ஆளுமை முக்கியமானது எனக் கருதும் அந்தப் பெற்றோர்கள் மாற்றுக்கல்வி முறை குறித்துத் தீவிரமாகத் தேடுகிறார்கள். புதிய வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள் . இவர்களைப் போல மாற்றுக் கல்விமுறைகளில் ஈடுபாடு காட்டும் பெற்றோர்களைச் சந்திக்கிறார்கள். கூடிப் பேசுகிறார்கள். இணைந்து கல்வி கற்க முற்படுகிறார்கள்.

அமெரிக்கக் கல்விமுறையும் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்று வருகின்றன. ஆனால் இப்படம் அந்தக் கல்விமுறை மாணவர்களை இயந்திரங்களைப் போலவே கையாளுகிறது. கடுமையான மனஅழுத்தம் தரும் கல்விமுறையது என்று கண்டிக்கிறது.

குறிப்பாகக் கசப்பான பள்ளி அனுபவங்களைக் கொண்ட சிலர் அதிலிருந்து விடுபட்டு தங்களின் தனித்திறமை மூலம் எப்படி வெற்றியைத் தேடிக் கொண்டார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது

ஹோம் ஸ்கூலிங் முறையைப் புகழ்பெறச் செய்த கல்வியாளர் ஜான் ஹோல்ட் பற்றியும் அவரது இயக்கத்தின் செயல்பாடுகளையும் ஆவணப்படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்

ஐந்தே பாடங்களுக்குள் குழந்தைகளின் அறிவைச் சுருக்கி வைக்கும் மரபான கல்விமுறைக்கு மாற்று தேவை என்பதை இந்தப்படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. அதே நேரம் இப்படி ஹோம் ஸ்கூலிங் மூலம் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும். அவர்கள் உயர்கல்வி பயில விரும்பினால் எவ்விதமான நெருக்கடியைச் சந்திப்பார்கள் என்பதையும் பேசுகிறது.

ஹோம் ஸ்கூலிங் அமெரிக்காவில் ஒரு காலத்தில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது எல்லா மாநிலத்திலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் வீட்டில் பிள்ளைகளுக்கு எப்படிக் கல்வி கற்பிக்க முடியும் என்ற கேள்விக்குப் பதிலாக இதற்கான சிறப்பு ஆலோசகர்கள். உதவியாளர்கள். ஆசிரியர்கள் எனத் திறமையான வல்லுநர்கள் இருப்பதையும் அவர்கள் வழிகாட்டுதலையும் எடுத்துச் சொல்கிறது.

இப்படி ஹோம் ஸ்கூலிங் செய்கிறவர்கள் இந்தியாவிலும் இப்போது அதிகமாகி வருகிறார்கள். அவர்கள் வீட்டிலே பிள்ளைகளைக் கல்வி கற்கச் செய்துவிட்டு ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலிங்’’ மூலம் நேரடியாகப் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதச் செய்கிறார்கள்.

ஜான் கால்ட்வெல் ஹோல்ட் தமது சக ஆசிரியரான பில்ஹீல் என்பவரோடு இணைந்து கற்றல் முறையில் புதிய பரிசோதனைகளைச் செய்து வந்தார். அதன்படி ஒரு ஆசிரியர் வகுப்பில் கற்பிக்கும் போது மற்றொரு ஆசிரியர் மாணவர்களுடன் இருந்து ஆசிரியர் கற்பிக்கும் முறையினையும் மாணவர்கள் கவனிக்கும் முறையினையும் அவதானிப்பார். இப்படிச் செய்வதன் வழியே இரண்டு பக்கமும் என்ன குறைபாடுகள் உள்ளது என்பதை அறிந்து தீர்க்க முடிகிறது என்கிறார் ஜான் ஹோல்ட்

பதினொரு ஆண்டுகள் ஜான் ஹோல்ட் ஆசிரியராகப் பணியாற்றிக் கிடைத்த அனுபவத்திலிருந்து 1964 ஆம் ஆண்டு, ‘ குழந்தைகள் ஏன் தேர்வில் தோற்றுப் போகிறார்கள் ? ‘(How children Fail?) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலிற்குக் கடுமையான விமர்சனங்கள் உருவாகின. அதே நேரம் ஜான் ஹோல்ட் முக்கியமான கல்வியியல் அறிஞராக அடையாளம் காணப்படவும் நேரிட்டது. அவர் தொடர்ந்து கற்றல் முறைகள் குறித்து உரையாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயன்றார்.

இதைத் தொடர்ந்து குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்னும் நூலை 1967 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் பொதுக்கல்வி முறையின் பலவீனத்தை மிக விரிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். கல்வி நிலையங்கள் மாணவர்களின் மனஅழுத்ததை அதிகமாக்குகின்றன. அவர்களை முட்டாளாகக் கருதுகின்றன. மாணவர்களின் தனித்திறன்களை அழித்து ஒழிக்கின்றன எனக் கூறிய ஜான் ஹோல்ட் மரபான கல்வி முறைக்கு மாற்றாக வீட்டிலிருந்தபடியே சுதந்திரமாகக் கல்வி கற்பது என ஹோம் ஸ்கூலிங் முறையை முன்னெடுத்தார்.

இந்த முறையின் சாதகபாதகங்களை ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம் பொதுக்கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் முக்கியமானவை என்பதையும் வலியுறுத்துகிறது.

மாற்றுக் கல்விமுறையைப் பேசியதை விடவும் அமெரிக்கக் கல்வி முறை குறித்த பெற்றோர்களின் குழப்பத்தைத் தான் ஆவணப்படம் அதிகம் பேசியிருக்கிறது.

இந்த ஆவணப்படம் குறித்து மதிப்பிடும் பல்வேறு பெற்றோர்கள்,“ குழந்தைகள் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி வளர்க்கப்படுவது சரியானதில்லை. அவர்களுக்குப் பொதுக்கல்வி முறையின் தேவையிருக்கிறது. ஆனால் அங்கே உள்ள பாடத்திட்டம், மதிப்பிடும் முறைகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் சுதந்திரமாகத் தங்கள் எண்ணங்களை வகுப்பறையில் பேசவும் எழுதவும் ஜனநாயகம் தேவை“ என்கிறார்கள்

கல்விக் கட்டணம் அதிகமாகிக் கொண்டே போவது தான் முக்கியமான பிரச்சனை. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் எப்படி ஹோம் ஸ்கூலிங் செய்ய முடியும். என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள்.

பெற்றோர்கள் ஏன் பொதுக்கல்வி முறை குறித்து இவ்வளவு குழப்பமடைந்திருக்கிறார்கள் என்பதற்கு உள்ள பதில் தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்து எதையும் கல்விநிறுவனங்களிடம் கேட்கவோ விவாதிக்கவோ முடியவில்லை என்பதே முக்கியமான காரணம்.

இசையில் ஆர்வம் கொண்ட சிறுவன் எதற்காகப் பல ஆண்டுகள் அறிவியலைப் பயில வேண்டும் என்ற கேள்வி பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதே நேரம் இசையை மட்டும் நம்பி அவனால் எப்படி வாழ முடியும் என்ற குழப்பமும் கூடவே இருக்கிறது.

ஆகவே கல்வியும் தனித்திறனும் ஒன்றிணைந்த கல்விமுறை எங்கேயிருக்கிறது என்று தேடுகிறார்கள். அப்படியான கல்வி நிலையங்களைக் கண்டறிய முடியாதபோது ஹோம் ஸ்கூலிங் முறையில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அமெரிக்காவில் 1999 ஆம் ஆண்டில் 1.7 சதவிகித குழந்தைகள் மட்டுமே  ஹோம் ஸ்கூலிங்  பயின்றார்கள் , ஆனால் அது 2012 ல் 3.4 சதவிகிதத்திற்கும் அதிகமாக கூடியது. இன்று  அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஹோம் ஸ்கூலிங்  குழந்தைகள் இருக்ககூடும் என்கிறார் ஆவணப்படத்தின் இயக்குநர் டஸ்டின் உட்டார்ட்.

ஹோம் ஸ்கூலிங் எளிதான விஷயமில்லை. இதில் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரப் பெற்றோர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒதுக்க வேண்டும். எதை எப்படிக் கற்றுத் தருவது என்பதற்குப் பயிற்சி வேண்டும். அதே நேரம் இயற்கையோடு இணைந்த கல்விமுறையை முன்னெடுப்பதால் வகுப்பறையின் இறுக்கம் இல்லாமல் பிள்ளைகள் கல்வி பயிலக்கூடும்.

இந்த ஆவணப்படம் அமெரிக்க பொதுக்கல்வி முறையின் குழப்பத்தைப் பதிவு செய்திருக்கிறது என்று மட்டுமே சொல்ல முடிகிறது. உண்மையான மாற்றுக்கல்வி குறித்தோ, அதற்கான வழிமுறைகள் பற்றியோ, அப்படி முன்மாதிரியாகச் செயல்படும் கல்வி நிறுவனங்கள் பற்றியோ இந்தப்படத்தில் எவ்விதமான தகவலும் இல்லை.

தங்கள் குழந்தைகளின் கல்விமுறையில் வெவ்வேறு தேர்வுகளை விரும்பும் பெற்றோர்கள் இன்று அதிகமாகி வருகிறார்கள் என்ற உண்மையைப் படம் பேசுகிறது. அது முக்கியமான விஷயமே.

••

0Shares
0