காலி நாற்காலி

பண்டிட் ரவிசங்கரின் இசை குறித்த தேடுதலின் போது இணையத்தில் தற்செயலாக A Chairy Tale என்ற குறும்படத்தைப் பார்த்தேன். நார்மன் மெக்லாரன் என்ற கனேடிய அனிமேஷன் இயக்குநர் உருவாக்கிய படம். இதற்கு ரவி சங்கர் இசையமைத்திருக்கிறார்.. அற்புதமான இசை. சதுர்லாலுடன் இணைந்து இந்த இசைக்கோர்வையை உருவாக்கியிருக்கிறார் ரவிசங்கர். பரவசமூட்டுகிறது இசை

ஒன்பது நிமிஷங்கள் ஓடும் இந்தக் குறும்படம் 1957ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு நாற்காலியில் அமருவதற்காக ஒரு இளைஞன் முயல்கிறான். ஆனால் நாற்காலி நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. அவனால் உட்கார முடியவில்லை. அவன் நாற்காலியோடு போராடுகிறான். நாற்காலி அவனை அனுமதிக்க மறுக்கிறது. அவன் நாற்காலியை எப்படிக் கையாளுவது என்று தெரியாமல் தடுமாறுகிறான். வழக்கமான முறைகள் எதுவும் பலிக்கவில்லை. ஆகவே நாற்காலி வேண்டாம் என முடிவு செய்து தரையில் அமருகிறான். தரையில் அவன் அமர்ந்த காட்சியில் பூமியே ஒரு நாற்காலி போலத் தோன்றுகிறது. ஒரே வித்தியாசம் கையில்லாத நாற்காலியது. ஆனால் அந்த இருக்கை அவனுக்கு வசதியாக இல்லை.

இப்போது நாற்காலியை எப்படித் தன்வசமாக்குவது எனப் புரியாமல் குழப்பமடைகிறான். அவன் ஒதுங்கியதும் நாற்காலியே அவனைத் தேடி வருகிறது. அவனை நெருங்குகிறது. அவன் நாற்காலியோடு ஒரு நடனமாடுகிறான்.

நாற்காலியின் விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன் போல நாற்காலி தன் மீது அமருவதற்கு அவன் இடமளிக்கிறான். இப்போது நாற்காலியும் அவனும் தோழமை கொண்டுவிடுகிறார்கள். நாற்காலி அதன்பிறகு அவனை உட்கார அனுமதிக்கிறது.

காலி இருக்கை என்பது ஒரு குறியீடு. ஒரு முறை கூட்டத்தில் என் முன்னே இருந்த காலி இருக்கையைச் சுட்டிக்காட்டி இது போலக் காலி இருக்கைகளில் எனக்கு விருப்பமானவர்களை மனதளவில் உட்கார வைத்துக் கொள்வேன் என்று பேசினேன். உண்மையில் காலி இருக்கைகள் எப்போதும் காலியானவையில்லை. யார் அதிலிருந்து எழுந்து போனார்கள். அல்லது எழுப்பிவிடப்பட்டார்கள். இயல்பாக நடந்ததா, அல்லது துரத்தப்பட்டாரா. காலி இருக்கை எப்போதும் யாருக்கோ தயாராகக் காத்திருக்கிறது.

ஒரு நாற்காலியில் யார் அமரப்போகிறார்கள் என்பது பெரும் புதிரே. கர்னலின் நாற்காலி என்ற எனது குறுங்கதை காலனிய ஆட்சியில் நாற்காலி சுமப்பவன் கதையைச் சொல்கிறது. அப்படி நாம் எஜமானர்களின் நாற்காலிகளை சுமந்து அலைந்தவர்கள். இன்றும் அரூபமாக அவர்களின் நாற்காலியை சுமந்து கொண்டுதானிருக்கிறோம்.

ஒரு நாற்காலியில் அமர்ந்தவுடன் அதிகாரம் நம் வசம் வந்துவிட்டது போல உணருகிறோம். நாற்காலியில் அமர்ந்தபிறகு சும்மா இருக்க நம்மால் முடியாது. திரையரங்கில் நடப்பது போல ஏதோ ஒன்று நம்மைக் களிப்பூட்டச் செய்ய வேண்டும். அல்லது நாம் அதிகாரத்தைக் காட்டத் துவங்கிவிடுவோம்.

கிராமங்களில் சில வீடுகளில் நாற்காலி கிடையாது. விருந்தினர் வந்தால் இரவலாக நாற்காலி பெற்று வருவார்கள். கிராமத்தில் திருவிழாவில் நடக்கும் நாடகம் பார்க்க நாற்காலி போடப்பட்டிருக்காது. தரையில் தான் அமர வேண்டும். தரையில் அமரும் போது வேற்றுமை தெரிவதில்லை. ஆனால் பெரிய நாற்காலிகள். சிம்மாசனங்கள் தான் வேற்றுமையை உருவாக்குகின்றன.

எந்த நாற்காலியும் எவரையும் அமர அழைப்பதில்லை. எளிதாகக் கிடைத்துவிடுவதுமில்லை. காலி இருக்கைகளை எதையோ உணர்த்தியபடியே இருக்கின்றன.

ஆசிரியர்களின் நாற்காலியில் அமர்ந்தவுடன் மாணவன் ஆசிரியன் போலாகிவிடுகிறான். ஆசிரியர் இல்லாத நேரத்திலும் அவரது நாற்காலி அவரது இருப்பை வெளிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது

இந்தக் குறும்படத்தில் நடப்பது நாற்காலியோடு ஒருவன் ஆடும் நடனமே. முடிவில் அவன் நாற்காலியைப் புரிந்து கொள்கிறான். நாற்காலியும் அவனைப் புரிந்து கொள்கிறது. அந்த நிமிஷத்தில் படம் நாற்காலியை பற்றியதல்ல என்பது ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது

எந்த ஒன்றும் மற்றதை அனுமதிப்பது எளிதானதில்லை.

இந்தத் தேர்தல் காலத்தில் நாற்காலியைப் பற்றிய குறும்படம் நிறைய அர்த்தங்களைத் தருகிறது என்பதால் அவசியம் இதனைக் காண வேண்டும்.

0Shares
0