குறுங்கதை 45 இளமையின் படிக்கட்டுகள்

அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகளே இருந்தன. அந்த அலுவலகத்தின் உயர்பதவியிலிருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற அசதி வந்துவிடும். திடீரென உடல் கனமாகிவிட்டதைப் போல உணருவார்.

எல்லாப் பொருட்களும் பார்த்துப் பழகியவை. அதே ஊழியர்கள். அதே ஜன்னல். அதே திரைச்சீலை. கண்ணாடி டம்ளர்கள்.மரமேஜை. நாற்காலி. ஏன் கழிப்பறையில் ஓடும் கரப்பான் பூச்சி கூடப் பார்த்துப் பார்த்துப் பழகியது தான். எதுவும் புதியதில்லை. எதிலும் விருப்பமில்லை என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வார்.

பின்பு வேலையின் சுமை அவரை இழுத்துக் கொண்டுவிடும். கையெழுத்து இடவேண்டிய கோப்புகள் .அன்றாட நடவடிக்கைகள் என வேலையில் மூழ்கிவிடுவார். மதிய உணவின் போது அதே சோறு, அதே சாம்பார். தொடுகறிகள் என்ற சலிப்பு மனதில் தோன்றி மறையும். சாப்பிட்டாக வேண்டுமே என்று சாப்பிட்டு முடிப்பார். அதன்பிறகு அரைமணி நேரம் உறங்கிவிடுவார்.

ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணி ஆனது திடீரென மனது மிகுந்த உற்சாகமாகிவிடும். இளமையின் படிக்கட்டுகளில் கிடுகிடுவென இறங்கி ஓடுவது போலிருக்கும். எழுந்து கண்ணாடியில்  தன்னைப் பார்த்துக் கொள்வார். நரைத்த மீசைகள் மறைந்து இளமையின் அரும்பு மீசை தெரிவது போலத் தோன்றும். தன் வயது இருபது என்பது போலவே உணருவார்.

கழிப்பறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு சப்தமாகத் தனக்குத் தானே பேசிக் கொள்வார். சிரிப்பார். இறகுப் பந்தாடுவது போலக் காற்றில் கைகளை வீசி விளையாடுவார். சில நேரம் தனியே நடனமாடுவதும் உண்டு. பத்து நிமிஷம் இப்படி அசட்டுத்தனமாக நடந்து கொள்வது அவருக்குப் பிடித்திருந்தது.

பின்பு தலை சீவி பவுடர் போட்டுக் கொண்டு அவரது அறையை விட்டு வெளியே வருவார். மற்ற ஊழியர்களுடன் உற்சாகமாகப் பேசுவார். ஜன்னல் வழியாகப் பள்ளி விட்டுச் செல்லும் சிறுமிகளை வேடிக்கை பார்ப்பார்.

ப்யூனிடம் கேலியாகப் பேசுவார். சூடான தேநீரை துளித்துளியாக ருசித்துக் குடிப்பார். திடீரென அலுவலகம் ஊழியர்கள், அந்த மேஜை நாற்காலிகள். எல்லாமும் புதியதாகத் தோன்றும். இந்த நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்.

ஐந்து மணியை நெருங்கியதும் நடுவானில் பட்டம் அறுபட்டு தனியே பறப்பது போலச் சட்டென மனநிலை மாறிவிடும். இன்னும் மூன்று ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். எத்தனை நாட்கள். எத்தனை மணித்துளிகள் என்று சலித்துக் கொள்வார்.

ஒரு நாளில் ஒரேயொரு மணிநேரம் மட்டும் அவரால் இளமையின் படிகளில் இறங்கி அமர முடிகிறது. அதன் பிறகு அந்தப் படிக்கட்டுகள் மறைந்துவிடுகின்றன.

தன்னைப் போலவே மற்றவர்களும் இப்படிச் சில நிமிடங்களோ, சில மணி நேரமோ காலத்தின் பின்னால் போய் வருவார்கள் என்றே நம்பினார். ஆனால் ஒருவரிடம் அதைப்பற்றிக் கேட்டுக் கொள்ளவேயில்லை.

••

0Shares
0