குளிர்மலைக்குச் செல்லும் வழி

மலையை நோக்கிச் செல்லும் பாதைகள் வசீகரமானவை. அவை அறியாத உலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்பவை. தொலைவிலிருந்து மலைப் பாதையைக் காணும் போது அது மலையின் நாக்கை போலவேயிருக்கிறது. உண்மையில் பாதைகள் காத்திருக்கின்றன. மனிதர்களைப் போலவே பாதைகளுக்கும் வாழ்நாளிருக்கிறது. சில பாதைகள் அற்ப ஆண்டுகளில் மறைந்து விடுகின்றன. பழைய பாதைகள் கதை சொல்லக் கூடியது என்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். அது உண்மையே.

பாதையை நம்முடைய தலை மறந்துவிடும் கடந்து சென்ற பாதங்கள் மறக்காது என்றொரு சீனப்பழமொழி இருக்கிறது. அதிவேக விரைவுபாதைகளை விரும்பும் இன்றைய வாழ்விற்குப் புறக்கணிக்கபட்ட பழைய பாதைகளைப் பற்றி என்ன கவலையிருக்கப் போகிறது சொல்லுங்கள்.

மலையின் உச்சிக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் என்பது போலப் பாதை தோற்றம் தருவது வெறும் மயக்கம் மட்டுமே. தலைவகிடு போலப் பாதியில் பாதையும் நின்றுவிடும். பாறைகளின் தயவும். காற்றின் அனுமதியும். சூரிய வெளிச்சத்தின் துணையும் மேகங்களின் வழிகாட்டலும் இருந்தால் மட்டுமே மலையின் உச்சியை அடைய முடியும். எளிதானது போலத் தோன்றும் கடினமான பயணமது.

துறவிகளும் கவிஞர்களும் எப்போதும் மலையைத் தேடிச் செல்கிறார்கள். கடற்கரையும், தீவுகளும், பசுமையான நிலவெளியும் வறண்ட, கைவிடப்பட்ட இடங்களும் கதாசிரியர்களை அதிகம் வசீகரிக்கின்றன. அவற்றை நோக்கியே தொடர்ந்து பயணிக்கிறார்கள். ஹம்பி தரும் நெருக்கத்தைச் சிம்லா தருவதில்லை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன்.

உரைநடை என்பதே சிறியதும் பெரியதுமான நிகழ்வுகளின் இயக்கம் தானே. கடற்கரையில் நடப்பதும் அது தான். ஆகவே கடலிடம் நெருக்கம் கொண்ட நாவலாசிரியர்கள் நிறைய இருக்கிறார்கள்.

பால்சாக் நாவல் எழுதுவதற்காகப் புதிய தீவுகளைத் தேடிச் செல்வார் என்கிறார்கள். ஜான் பான்வில் தன்னைக் கடலே எழுத வைக்கிறது என்கிறார். டால்ஸ்டாய் கடல் கடந்து பயணம் செய்திருக்கிறார். ஆனால் கடல்வாழ்க்கை சார்ந்த கதையை எழுதவில்லை. சீனாவிலும் ஜப்பானிலும் கவிஞர்கள் தொலைதூர மலைகளைத் தேடிச் சென்று தனிமையில் வாழ்ந்திருக்கிறார்கள். அங்கேயிருந்த பௌத்த மடாலயங்களில் தங்கி எழுதியிருக்கிறார்கள். ஜப்பானிய செவ்வியல் கவிதைகளில் மலையும் பனியும் மலர்களும் எழுதப்பட்ட அளவிற்குக் கடல் எழுதப்படவில்லை.

ரெட் பைன் பண்டைய சீனக் கவிஞர்கள் வாழ்ந்த மலைத்தொடர்களுக்குப் பயணம் செய்திருக்கிறார். அது குறித்து விரிவான ஆவணப்படம் ஒன்றையும் எடுத்திருக்கிறார். ரெட் பைன் போலவே கேரி ஸ்னைடர், ஆர்தர் வேலி,பர்டன் வாட்சன், எஸ்ரா பவுண்ட், பால் ரூசர் எனப் பலரும் சீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

தமிழில் குளிர்மலையின் நூறு கவிதைகளைச் சசிகலா பாபு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். கவிதைகளை எப்படித் தேர்வு செய்தார். மொழிபெயர்ப்பில் என்ன சிக்கல்களை எதிர்கொண்டார் என்று அவர் விரிவான கட்டுரை ஒன்றை எழுத வேண்டும்.

ரெட் பைன் ஹான்ஷான் வசித்த தியான்-டாய் மலைத்தொடருக்கு யாத்திரை ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். அதன் காணொளி இணையத்தில் காணக்கிடைக்கிறது.

ஹான்ஷானின் வாழ்க்கை பற்றித் தெளிவாக எதுவும் தெரியவில்லை. கவிதைகளிலிருந்தே அவரது வாழ்க்கையைக் கண்டறிகிறார்கள். அந்த வகையில் கவிதை தான் அவரது வாழ்க்கை ஆவணம்.

கவிதையிலிருந்து கவிஞனின் வாழ்க்கையைக் கண்டறிவது பலநேரங்களில் ஏமாற்றமளிக்கக் கூடியது. ஒரு போதும் பனிப்பிரதேசத்தில் வசிக்காத கவிஞன் பனியைப் பற்றிச் சிறப்பான கவிதையை எழுதிவிட முடியும். கவிதையில் பாலைவனம் வருவதால் அவன் அங்கே வசித்தவன் என்று அர்த்தமில்லை. கவிஞர்கள் தனது சொந்த அனுபவங்களை உரைகல்லாகவே பயன்படுத்துகிறார்கள்.

ஹான்ஷான் என்பவர் யார். துறவியா, அரசு அதிகாரியா, எதற்காகத் தியான்-டாய் மலைத்தொடருக்கு வந்தார் என்பது குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. குளிர்மலையின் பெயரிலே அவரது கவிதைகள் அழைக்கபடுகின்றன. குளிர்மலை என்பது இடத்தின் பெயராக அன்றிக் குறிப்பிட்ட மனநிலையின் வடிவமாகவே குறிப்பிடப்படுகிறது. தமிழில் கூட இப்படிக் காளமேகம் என்று கவியைக் குறிப்பிடுகிறோமே.

ஹான்ஷான் கவிதைகளை அமெரிக்காவில் புகழ்பெறச் செய்தது பீட் இயக்கம். ஹிப்பிகளின் கட்டற்ற வாழ்வியலுக்கு ஏற்றார் போல ஹான்ஷான் அறிமுகம் செய்யப்பட்டார். அமெரிக்க எதிர் கலாச்சார இயக்கத்தை ஹான்ஷான் தூண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீட் ஜெனரேஷன் எழுத்தாளர் ஜாக் கெரோவாக்கின் The Dharma Bums நாவலில் குளிர்மலையின் கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்யும் ஜாஃபி ரைடர் என்ற கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அது கேரி ஸ்னைடரின் கற்பனையான உருவமே.

கெரோவாக் தன்னை ரே ஸ்மித்தாகக் கற்பனை செய்து கொள்கிறார். ஸ்மித்துக்கும் ரைடருக்கும் இடையில் ஹான்ஷான் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியுமான உரையாடல் நடக்கிறது. அதில் ஹான்ஷான் நிகரற்ற கவிஞராக முன்னிறுத்தப்படுகிறார். அது தான் அமெரிக்காவில் ஹான்ஷான் புகழ்பெறுவதற்கான முக்கியக் காரணம்.

சீன ஜப்பானிய கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர்களில் சிலர் அந்தக் கவிதைகள் தந்த தூண்டுதலால் சொந்தமாகக் கவிதை எழுதியிருக்கிறார்கள். அவை பொன்னில்லை. காக்கைப் பொன்.

இன்றளவும் அமெரிக்கப் பல்கலைகழகம் மற்றும் இலக்கிய உலகில் சீன ஜப்பானிய செவ்வியல் கவிதைகளுக்கும் அதன் பின்புலமாக உள்ள பௌத்த மரபிற்குப் பெரிய வரவேற்பும் தனித்த நிதிநல்கைகளும் இருந்து வருகின்றன. அது ஒருவகைச் செயற்கை விருப்பம். ஆயிரம். இரண்டாயிரம் வருஷங்களைக் கடந்த பழைய கவிஞர்களை அரிய புதைபொருட்களை அகழ்வாய்வு செய்து கண்டுபிடித்துக் காட்டுவது போல அமெரிக்கப் பல்கலைகழகங்கள் ஆரவாரமாக வெளிப்படுத்துகிறார்கள். அதை ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கொண்டாடுகின்றன. இந்தியா போன்ற நாட்டில் கவிதை அதன் வயதால் முக்கியத்துவம் பெறுவதில்லை. இந்தியக் கவிதையின் பன்முகத்தன்மையை உலகம் இன்றும் அறிந்து கொள்ளவில்லை.

ஹான்ஷானின் கவிதைகளைச் சீனர் வாசிப்பதற்கும் ஒரு அமெரிக்கர் வாசிப்பதற்குமான வேறுபாடு முக்கியமானது. சீனர் அந்தக் கவிதைகளைப் பௌத்த சமயத்திற்குள் வைத்தும் விலக்கியும் ஒரே நேரத்தில் வாசிக்க முயலுகிறார். கவிதையைப் பொருள்கொள்ளும் போது அதன் அக்காலப் பொருள்கொள்ளுதலை கவனம் கொள்கிறார். ஆனால் பெரும்பான்மை அமெரிக்க வாசகர்களுக்கு ஹான்சானோ, லிபெய்யோ, தூபோவோ தத்துவச் சார்புள்ள செவ்வியல் கவிஞர்கள் மட்டுமே. அவர்களின் பௌத்த மரபு மற்றும் ஞானம் பொருட்டாகயில்லை.

ஹான்ஷான் கவிதைகளில் வெளிப்படும் குரல் பௌத்த மடாலயங்களில் காணப்படும் குருவின் குரலை ஒத்தேயிருக்கிறது. இளந்துறவியிடம் பேசுவது போலவே அவர் கவிதையில் தன்னை வெளிப்படுத்துகிறார். இன்மையைப் பற்றிப் பேசுவதற்காக இருப்பை முன்னிறுத்துகிறார். அசைவற்றது அசைவுள்ளது என்ற இருநிலையை அவரது கவிதைகள் பேசுகின்றன. கடந்து செல்வது, நிலைத்திருப்பது என இரண்டாக உலகைப் பிரிகின்றன. ஹான்ஷான் கவிதைகளில் வறுமையின் அவலமும், விமர்சகர்களின் புறக்கணிப்பும், தன்னைக் கைவிட்ட குடும்பத்தின் நினைவுகளும் வெளிப்படுகின்றன. தண்ணீரும் பனியும் போன்றதே வாழ்வும் மரணமும் என்கிறார். வெறுமையின் ஊடாகச் செல்லும் வெண்மேக பாதையை அடையாளம் காட்டுகிறார். நம்மையும் பறந்தலையும் குருவிகளைப் போல நடனமாடச் செய்கிறார்.

ஹான்ஷானின் கவிதைகளுக்கு ஜென் துறவியான ஹகுயின் விளக்கமளித்துள்ளார். அந்த உரை முக்கியமானது. பௌத்த துறவியிடமிருந்து கற்றுக் கொள்வதை விடவும் ஹான்சானிடமிருந்து அதிகம் பௌத்த ஞானத்தைக் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் ஹகுயின்.

ரெட்பைன் தனது பயணத்தில் ஹான்ஷானின் இருப்பிடம் என்ற குகையைக் கண்டறிகிறார். கைவிடப்பட்ட நிலையில் உள்ள அந்த இடத்தைப் பற்றிப் பகடி செய்கிறார். அது அவரது ஏமாற்றத்தின் வெளிப்பாடு. ஹான்ஷான் கவிதைகள் குறித்த அவரது பல்கலைகழகச் சிறப்புரையில் அவர் கவிதைகளுக்குப் பொருள்கொள்ளும் விதம் மற்றும் அதை வெளிப்படுத்தும் விதம் இரண்டும் எனக்கு ஏமாற்றமே அளித்தன.

ஹான்ஷானின் கவிதைகள் இன்று ஒரே தொகுதியாக வாசிக்கக் கிடைக்கின்றன என்னிடம் மூன்று மாறுபட்ட மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. சில நேரங்களில் ஒரே கவிதையின் மூன்று வேறுபட்ட மொழியாக்கங்களை வாசிக்கிறேன். எந்த மொழியாக்கத்தில் படித்தாலும் மனதில் தமிழில் தான் ஒலிக்கிறது. சீன கவிதைகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். காரணம் அதன் சித்திர எழுத்துக்கள். அது தரும் பல அர்த்தங்கள்.

கேரி ஸ்னைடர் இந்தக் கவிதைகளை மொழியாக்கம் செய்யும் போது பரபரப்பான பொருளியல் வாழ்விலிருந்து விடுபட்டு இயற்கையிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொள்ள விரும்பும் ஒருவனுக்கான துணையாகவே இதனைச் செய்திருக்கிறார். இக்கவிதைகள் மகிழ்ச்சிக்கான புதிய பாதையை அடையாளம் காட்டுகிறது என்றே எதிர்கலாச்சாரத்தை உருவாக்கிய பீட் தலைமுறை புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்று அந்தத் தலைமுறையும் இல்லை. இன்றைய இலக்கியத்தில் அவர்களின் பாதிப்பும் இல்லை.

இரண்டாயிரத்திற்குப் பின்பான உலகின் போக்கும் விருப்பங்களும் முற்றிலும் வேறானவை. உலகம் பற்றிய சித்திரம் இன்று மாறிவிட்டிருக்கிறது. எந்த ஆசைகளால், கனவுகளால் ஒருவர் வழிநடத்தப்படுகிறார் என்று புரியவில்லை. தனிமை, அழகு, மகிழ்ச்சி, கவலை போன்றவை கேலிப்பொருளாகிவிட்டன. மிருதுவான பொருட்கள். கையாள எளிதாக உள்ள விஷயங்கள், எடையற்ற நிகழ்வுகள் இவற்றையே மக்கள் விரும்புகிறார்கள். செய்திகளின் பேராறு நம்மை மூழ்கடிக்கிறது. அந்தரங்கத்தின் திரை விலகி யாவும் கேமிரா முன்பாக அரங்கேறுகின்றன. உலகெங்கும் அரசியல் மற்றும் அதிகார வேட்கை பெரும் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது.

செல்போனும் இணையமும் நமது விருப்பங்களை உருவாக்குகின்றன. பெருக்குகின்றன. சந்தைக்குப் போய்த் தேவையான பொருட்களை வாங்கியது போய் இன்று நமது கைபேசியே சந்தையாகிவிட்டது. நாம் சதா சந்தைக்குள் குடியிருக்கிறோம். எந்த இரவிலும் எந்தப் பொருளையும் வாங்குகிறோம். வீதியில் நடமாடும் நேரத்தை விட இணைய அங்காடிகளில் சுற்றித்திரியும் நேரம் அதிகம். நாம் செல்லுமிடம், நமது செயல்கள் நமது உறக்கம் உள்ளிட்ட யாவும் கண்காணிக்கபடுகின்றன. பதிவு செய்யப்படுகின்றன. நினைவூட்டப்படுகின்றன. புகைப்படங்கள் பொய் சொல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயற்கை அறிவால் வழிநடத்தப்படுகிறோம். இந்தச் சூழலுக்குள் இலக்கியத்தின் இடம் என்ன. தேவை என்ன என்று பேசவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது. முந்தைய தலைமுறை இலக்கிய வாசகன் சந்திக்காத பிரச்சனைகளை இன்றைய வாசகன் சந்திக்கிறான். குழப்பமடைகிறான்.

இந்தச் சூழலுக்குள் ஒருவன் ஜென் கவிதைகளை, ஹான்சானை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி ஹான்ஷான் போன்ற செவ்வியல் கவிகள் அனைவருக்கும் பொதுவானதே.

குளிர்மலைக்குச் செல்லும் வழியை மக்கள்

கேட்கின்றனர்

குளிர்மலைக்கா ? அங்கு செல்ல எந்தச் சாலையும்

இல்லை

கோடைகாலத்திலும் கூட அங்கு உறைபனி

உருகி வழியாது

சூரியன் பிரகாசிக்கும் போதும் மூடுபனி கண்களை

மறைத்து நிற்கும்

என்னைப் பின்தொடர்வதன் மூலம் அங்கு சென்று

சேர்ந்துவிடலாம் என எங்ஙனம் நீ நம்பலாம்

உன்மனதும் என் மனதும் ஒன்றல்லவே

என்னுடையதைப் போன்றே உன் மனதும்

இருக்குமானால்

மலையின் மையப்பகுதிக்கே நீ சென்று சேர்ந்துவிடுவாய்.

( தமிழில் சசிகலா பாபு. )

இந்தக் கவிதையில் ஒரு உரையாடலைக் காண முடிகிறது. கேட்பவர் யார் என தெரியவில்லை. ஆனால் சொல்பவர் குளிர்மலையில் வசிப்பவர். கோடையிலும் பனி உருகாத வெளியது. அது உலக வாழ்வின் அடையாளம். என் மனது என ஹான்சான் குறிப்பிடுவது கவிஞனின் மனதையா, துறவியின் மனதையா. கவிதையில் துறவியின் குரலே கேட்கிறது.

ஹான்ஷானின் கவிதைகளை வாசிக்கும் போது ஒரு குரல் தன்னைச் சுற்றிய இயற்கையை, நேரடியாகவும் அரூபமாகவும் விளக்குவதை உணர முடிகிறது. சில கவிதைகளில் அக்குரலில் கேலி கலந்திருக்கிறது. அக்கவிதைகள் சின்னஞ்சிறு காட்சிகளைக் கொண்டு முழுமையான தோற்றம் ஒன்றை உருவாக்க முனைகின்றன.

இயற்கைக்குக் கடந்தகாலம் முக்கியமில்லை. அது நினைவு வைத்துக் கொள்வதுமில்லை. ஆகவே இந்தக் கவிதைகளில் வரும் மலையும் பனியும் காற்றும் நிலவும் என்றும் இருப்பவை.

பறவை வானைப் பற்றிச் சொல்வதைப் போல ஹான்ஷான் அவற்றை அறிமுகப்படுத்துகிறார். நட்சத்திரங்கள் இருளைப் புகழ்வது போலத் தனது இருப்பின் ஆதாரங்களை வியக்கிறார். வெள்ளை மேகங்களுக்கு அடியில் அமர்ந்திருப்பதன் அலாதிதன்மையைப் பகடியோடு வெளிப்படுத்துகிறார். பாயை பிடுங்கி சுருட்டி வைப்பது போலத் தனது மனவுறுதியை சுருட்டிவிட முடியாது என்கிறார்.

ஜென் கதைகளில் வரும் குரு சீடனின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தருவதில்லை. ஆனால் மறைமுகமாக விளக்குவார். அது போலவே குளிரை, மலையை, காற்றை, வானை. நிலவை சுட்டிக்காட்டி ஹான்ஷான் விளக்குவது பௌத்த ஞானத்தையே.

ஹான்ஷான் சுவரில்லாத வீடு ஒன்றில் வசிக்கிறார். அதைக் குளிர்மலை என்கிறார்கள். மலைக்கும் கதவிருக்கிறது. அது திறப்பதும் மூடுவதுமாகயிருக்கிறது. உள்ளங்கைக்குள் தானியத்தை ஒளித்து வைத்துக் கொள்வதைப் போல அது துறவியைத் தனக்குள் மூடி வைத்துக் கொள்கிறது. பசியும் தூக்கமும் மட்டுமே அங்கே வசிப்பவரை வழிநடத்துகின்றன. குளிர்மலையில் நாட்களும் மாதங்களும் தண்ணீரைப் போல நழுவி செல்கின்றன, தனித்து வாழ்பவனைச் செயலற்றவனாக உலகம் கருதுகிறது. அது உண்மையில்லை. மனம் எல்லா எண்ணங்களிலிருந்தும் விடுபட்டால் அது குளிர்மலை போல அசைக்கவே முடியாததாக மாறிவிடும். மனதின் பாதை இருள்வதில்லை. அது எப்போதும் பிரகாசமாகவே இருக்கிறது. ஆசைகளும் ஏமாற்றங்களும் அதைப் பனிப்புகை போல மறைக்கின்றன.

உலகிடம் எதையும் எதிர்பார்க்காத மனிதனாக வாழ்வதே ஹான்ஷானின் விருப்பம். அவர் பாறையைப் போலப் பனியில் நனைகிறார். இலைகளைப் போலக் காற்றில் ஆடுகிறார். மலர்களைப் போலத் தான் நிரந்திரமில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்.

ஹான்ஷானின் காலத்திற்கும் நமக்கிற்குமான இடைவெளியை கவிதை அழிக்கிறது. என்றுமிருக்கும் வானைப் போல அது மர்மமாக, ரகசியமாக, ஆனந்தமாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

என் வீட்டின் அருகில் ஏதோவொரு மரத்திலிருந்து குயில் பாடுகிறது. அந்தக் குரல் எனக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குயிலை தேடிச் சென்று பார்க்க மனம் விரும்பவில்லை. மாறாக முகத்தில் தண்ணீர் பட்டது போன்ற மகிழ்ச்சி உருவாகிறது. ஹான்ஷானை வாசிக்கும் போதும் அந்த உணர்வே ஏற்படுகிறது

••

நன்றி

குளிர்மலை கவிதைகள் தமிழில் சசிகலா பாபு. எதிர்வெளியீடு.

0Shares
0