கேமிராவின் சிறகுகள்

உலகின் பார்வையில் என்றோ முடிந்து போன நிகழ்வுகள் கூடத் திரையில் காணும் போது நமக்குள் பதைபதைப்பையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா. அப்படியான அனுபவத்தை Tokyo Olympiad ஆவணப்படம் காணும் போது உணர்ந்தேன்.

1964ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைக் கோன் இச்சீகாவா ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய ஆவணப்படங்களில் இதுவே தலைசிறந்தது என்கிறது பிபிசி. அது வெறும் புகழ்ச்சியில்லை.

கோன் இச்சிகாவா ஒலிம்பிக் போட்டிகளை வியப்பூட்டும் விதமாகப் படமாக்கியிருக்கிறார். எங்கிருந்து படமாக்கினார்கள். எப்படிப் படமாக்கினார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. கேமிரா கோணங்கள். நகர்வுகள், காட்சி துணுக்குகளின் வேகம், லயம் எனப் பிரமிப்பு அதிகமாகிறது. குறிப்பாகப் பார்வையாளர்களின் கண்ணோட்டத்திலும். விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே வீர்ர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் படமாக்கியுள்ள விதம் சிறப்பானது. ஜூம் லென்ஸ்கள் மற்றும் குளோஸ்-அப் காட்சிகளின் மூலம் தனித்துவமான கலையுணர்வை உருவாக்கியுள்ளார் இச்சிகாவா. நூற்றுக்கும் மேற்பட்ட கேமிராக்கள், துணை உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பட்டாளத்தையே இச்சிகாவா வைத்திருந்தார்.

.மழைக்கு ஊடாகப் போட்டி நடக்கிறது. கேமிரா வீரனையும் மழைத்துளியினையும் ஒன்றாகக் காட்டுகிறது. குடைபிடித்தபடியே பார்வையாளர்கள் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். ஒலிம்பிக்கில் செய்யப்படும் சாதனைகள் யாவும் மனித உடலின் உச்சபட்ச சாத்தியங்களைக் காட்டுகின்றன. உடலிலுள்ள தசைநார்களின் அழகினை, உறுதியினை, இலயத்துடன் கூடிய இயக்கத்தை உண்மையாக, நேர்த்தியாக, படம்பிடிக்க விரும்பினேன் என்கிறார் இச்சிகவா. அதைப் படத்தில் நன்றாக உணர முடிகிறது. யோஷினோரி சகாய் ஒலிம்பிக்கின் தீபம் ஏற்றச் செல்லும் காட்சி மிக அழகானது

இந்த ஆவணப்படத்தின் சில க்ளோசப் காட்சிகள் செர்ஜியோ லியோன் திரைப்படத்தில் வருவது போன்ற அதே அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைப் படமாக்குவதற்காக முதலில் இயக்குநர் அகிரா குரசோவாவை அணுகினார்கள். அவர் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நாள் மற்றும் இறுதிநாள் நிகழ்வுகளையும் தானே படமாக்குவேன். அதற்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே ஒலிம்பிக் பற்றிய ஆவணப்படத்தை இயக்குவேன் என்று நிபந்தனை விதித்தார். ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி அதை ஏற்கவில்லை. அவர்கள் குரசோவாவிற்குப் பதிலாகப் புகழ்பெற்ற இயக்குநர் கோன் இச்சிகாவாவைத் தேர்வு செய்தார்கள். இச்சிகாவா 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்

வெற்றி தோல்வி குறித்த தகவல்கள், விருதுவழங்கும் நிகழ்வுகள் ஒலிம்பிக் சாதனைகளை மட்டுமே தான் படமாக்கவிரும்பவில்லை. சுதந்திரமாக, தனது விருப்பத்தின்படி படமாக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் கோன் இச்சிகாவா. அதைக் கமிட்டி ஏற்றுக் கொண்டது.

164 கேமராமேன்கள், 100 க்கும் மேற்பட்ட கேமராக்கள், 250 வெவ்வேறு லென்ஸ்கள், 57 ஒலிப்பதிவாளர்கள், 70 மணிநேர காட்சிகள். என ஆவணப்படத்தை உருவாக்கினார்.

அவர் 165 நிமிட ஆவணப்படத்தை முடித்துக் காட்டிய போது ஒலிம்பிக் கமிட்டி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நிறையப் பகுதிகளைக் குறைக்கச் சொன்னார்கள். இன்று நாம் காணுவது இரண்டு மணி ஐந்து நிமிடப் படம் மட்டுமே. ஆனால் முழுமையான ஆவணப்படம் சிறப்புப் பதிப்பாகத் தனியே விற்பனைக்குக் கிடைக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் முக்கிய நகரங்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகின. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி தாக்கியது அமெரிக்கா. அதே ஹிரோஷிமாவினை மறுபடியும் விண்முட்டும் நகரமாக உருவாக்கி அங்கே ஒலிம்பிக்கின் துவக்க விழா நிகழ்வை ஜப்பான் ஏற்பாடு செய்திருந்தது. ஒருவகையில் மீண்டு எழுந்து வரும் ஜப்பானின் அடையாளமாக இந்த ஒலிம்பிக் கருதப்பட்டது

இந்த ஆவணப்படம் ஜப்பானியத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மிக அதிக வசூல் செய்த படமாகச் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து ஆங்கில வடிவத்தில் அமெரிக்காவிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தொலைக்காட்சி முதல் முறையாக உலகளாவிய பார்வையாளர்களுக்கு ஒலிம்பிக்கை ஒளிபரப்பியது.

இந்தப் போட்டியில் தான் புள்ளிவிவரங்களைப் பதிவுசெய்யக் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அறிமுகமானது. அது போலவே துல்லியமாக நேரத்தைக் குறிக்கக் குவார்ட்ஸ் கடிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சிகாவாவின் ஆவணப்படம், சுட்டெரிக்கும் சூரியனுடன் துவங்குகிறது. அது ஜப்பானின் அடையாளம். பழைய டோக்கியோ கட்டிடங்கள் இடிக்கப்படுவதைக் கேமிரா காட்டுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு சுருக்கமாக விவரிக்கப்படுகிறது. ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி புறப்படும் நிகழ்ச்சியும். அதை உலகெங்கும் மக்கள் வரவேற்பதையும் காண்கிறோம். ஜப்பானின் ஃபுயூஜி எரிமலைக்கு முன்னால் ஜோதி ஏந்தியபடி ஒருவர் ஒடிச் செல்வதைக் காண்கிறோம். மிக அழகான காட்சியது.

பல்வேறு போட்டிகளுக்கு வீர்ர்கள் தயார் ஆவது. காத்திருப்பது. வெற்றி தோல்விக்குப் பின்பாக அவர்களின் மனநிலை. பார்வையாளர்களின் ஆரவாரம். எனக் கேமிரா அலைபாய்ந்தபடியே இருக்கிறது.

1960 ஆம் ஆண்டு ரோமில் வெறுங்காலுடன் ஓடி தங்கம் வென்ற எத்தியோப்பிய மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் அபே பிகிலா – வெள்ளைக் காலணிகளை அணிந்து ஜப்பான் மாரத்தானில் தங்கம் வென்றதைப் படத்தின் இறுதிக் காட்சிகள் காட்டுகின்றன . கேமிரா அவர் ஸ்லோ மோஷனில் ஸ்டேடியத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது. மற்ற போட்டியாளர்களின் வெளிப்பாடுகளில் காணப்படும் அவசரம், பதற்றம் அவரிடமில்லை.

பத்திரிகையாளர் அறையில் வேகவேகமாகச் செயல்படும் தட்டச்சுப்பொறிகளின் வெறித்தனம், மைதானத்தில் காணப்படும் சிறுவர்களின் முகபாவங்கள். வீர்ர்களின் தனித்துவமான நம்பிக்கைகள் என மலரின் இதழ்களைப் போலக் கச்சிதமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறார் இச்சிகாவா.

டோக்கியோவில் ஒலிம்பிக் நடந்தாலும் படம் மாநகரை அதிகம் காட்சிப்படுத்தவில்லை. ஜப்பானிய வீர்ர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படவில்லை. இந்த ஆவணப்படத்தில் விளையாட்டு வீரர்கள் – பார்வையாளர்கள் மற்றும் போட்டியை நடத்துபவர்கள் சமமான அளவில் கவனம் செலுத்தப்படுகிறார்கள். மைதானத்தில் நடைபெறும் சின்னஞ்சிறு நிகழ்வுகளை, உணர்ச்சிகளைப் படம் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது. விளையாட்டுப் போட்டியினை இச்சிகாவா ஒருவித விசித்திரமான கவிதையாகக் காண்கிறார். அதன் கவித்துவத்துடனே படமாக்கியிருக்கிறார். ஐம்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த ஆவணப்படம் புதிதாகவே இருக்கிறது. உலகெங்கும் கொண்டாடவும் படுகிறது.

••

0Shares
0