சாம்பலும் பனியும்

முன்னொரு காலத்தில் மனிதர்களும் விலங்குகளும் ஒருவரோடு மற்றவர் இணைந்து இணக்கமாக வாழ்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்து பயம் கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பகை கொள்ளவில்லை. இரண்டும் ஒரே உயிர் இயக்கம் என்ற புரிதலோடு  ஒன்றுகலந்திருந்தனர்.அதை நினைவுபடுத்துவதே எனது படத்தின் பிரதான நோக்கம் என்று கூறும் கிரிகோரி கோல்பெர்ட் (Gregory Colbert) மனிதனும் விலங்கும் ஒன்று கலந்த ஒரு மாயவெளியை தன்னுடைய ஆஷஸ் அண்ட் ஸ்நோ (Ashes and Snow) என்ற படத்தின் மூலம் உருவாக்கி காட்டியிருக்கிறார். இது ஒரு ஆவணப்படம். இன்று வரை முப்பது லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு திரையிடலின் போது இந்த ஆவணப்படத்தினை ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து பார்த்திருக்கிறார்கள்


புகைப்படம், நாவல், ஒவியம் என்று பல்வேறு வடிவங்களின் ஒன்றுகலந்த கூட்டுவடிவம் போல உருவாக்கபட்ட இந்த முயற்சி உலகெங்கும் கண்காட்சியாக நடத்தப்படுகிறது. இதற்காகவே நோமடிக் ம்யூசியம் என்ற நடமாடும் ம்யூசியம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் கோல்பெர்ட். பல்வேறு தேசங்களில் இந்த ம்யூசியம் காட்சிக்காக திறந்து வைக்கபட்டு பொதுமக்களின் பலத்த வரவேற்பினை பெற்றிருக்கிறது. இதுவரை ஒரு கோடி பேர்களுக்கும் அதிகமாக பார்வையிட்டிருக்கிறார்கள்.ஆஷஸ் அண்ட் ஸ்நோ ஆவணப்படம் அதன் ஒளிப்பதிவிற்காக அவசியம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது. நவீன சினிமாவில் ஒளிப்பதிவு எந்த அளவு சாதனைகள் புரிய முடியும் என்பதற்கானஉதாரணப்படமது.ஒவியங்களை போன்றே ஒவ்வொரு காட்சிதுண்டுகளும் உருவாக்கபட்டிருக்கின்றன. கவித்துவமான அனுபவம் தரக்கூடிய இப்படம் சிறந்த இசை மற்றும் நடனங்களை கொண்டது.அவற்றை நடனம் என்று எளிதாக சொல்லி கடந்துசென்று விட முடியாது. மாறாக இச்சைகள், பயம், கட்டுபாடற்ற சந்தோஷம் என்று மனதின் ஆதார உணர்ச்சிகளை இந்த நடனம் பிரதிபலிக்கிறது. கண்களை மூடியபடியே ஏதோ ஒரு மெய்மறந்த நிலையில் தங்களை காற்றிடம் ஒப்படைத்துவிட்ட செடிகளை போல பெண்களின் உடல் அசைந்து ஆடுகிறது. தண்ணீர் சிதறி விழுவது போலவும், மணலில் காற்று கடந்து போவது போன்றும் உடல்கள் நெளிவதும் அலைவதுமாக உள்ளன.காமம் நீருற்றை போல ஒரு பெண் உடலில் இருந்து பீறிடுவதாக ஒரு நடனப்பகுதி உள்ளது. எத்தனை அற்புதமான காட்சிபடுத்தல் அது தெரியுமா? அந்த லயத்தினை உச்சபட்ச அனுபவமாக்குகிறது Lisa Gerrard & Patrick Cassidy` பின்ணணி இசை. இவ்வளவு காட்சிகளோடு பொருந்திய இசையை அனுபவித்து நீண்ட நாட்களாகிறது. நஸ்ரத் பதேக் அலிகானின் குரலும் காட்சிபடிமங்களும் ஒன்று கலக்கும் போது மனம் விண்முட்டும் பறத்தலை உணர்கிறது.படம் நீருக்கடியில் துவங்குகிறது. நீருக்கடியில் ஒரு மனிதன் கடற்குதிரை போல இயல்பாக அலைவுறுகிறான். அவனது முன்பின்னான நீந்துதலின் வழியே நீரிலினுள்ள இயக்கங்கள் காட்சிப்படுத்தபடுகின்றன. மனிதன் நீந்தும் அந்த வெளியில் அவனோடு சிறு மீன்கள் துவங்கி மாபெரும் திமிங்கலம் வரை உடன் நீந்துகின்றன. கர்ப்பத்தில் உள்ள நீரில் இருந்து எல்லையற்ற கடல் நீர் வரையான தண்ணீரின் என்றைக்குமான இருப்பை இந்த காட்சிபடுத்துதல் நினைவுபடுத்துகிறது. தண்ணீரோடு மனிதன் கொண்டுள்ள உறவையும் அதன் புதிர்தன்மையும் விவரிக்கிறது பின்ணணிக் குரல்.


இதுபோலவே பாலைவனத்தில் சிறுத்தைகளை சந்திக்கும் மனிதர்களை பற்றியதும். புத்த பிக்குகளும் அவர்களது தியானநிசப்தம் கலந்த இயற்கை வெளியும், ஒநாய்களின் பாய்ச்சலும். பசியெடுத்த மிருகங்களின் வேகமும்,  ஒடும் நீரில் ஒன்றாக கூடி களிக்கும் யானைகளும், சிறகு முளைத்த சிறுவனும் என படம் மனிதனை மீண்டும் ஆதிநிலைக்கு கொண்டு செல்கிறது.


முன்னொரு காலத்தில் பறக்கும் யானைகள் இருந்தன. அவை பறந்து வானில் போய் உறங்கிவிட்டன. இன்றும் அவை ஒற்றை கண்விழித்து பூமியை பார்த்து கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தையே நாம் நட்சத்திரம்  என்கிறோம் என்பது போன்ற பின்ணணி குரலின் வசீகர வரிகள் ஆழ்ந்த பொருள்புதைந்தவை.


இந்த காட்சிகள் யாவும் கணிணி உதவியால் உருவாக்கபட்டதோ எனும்படியாக தோன்றுகின்றன. ஆனால் அவை நேரடியாக ஹைஸ்ஸ்பீட் கேமிரா , வைட் லென்ஸ் மற்றும் அண்டர்வாட்டர் கேமிரா வழியாக படமாக்கபட்டவை என்று அறியும் போது ஏற்படும் வியப்பு அசாதாரணமானது. இவை எப்படி படமாக்கபட்டன என்பதை பற்றி நேற்று இரவு முழுவதும் வாசித்தேன். வியப்பூட்டும் நீண்ட நாவல் ஒன்றை படித்து முடித்தது போன்றிருந்தது.


ஒரு மனிதன் தன் வாழ்வின் ஒற்றைத் தேடுதல் போல பதினாறு ஆண்டுகள் இந்த ஆவணப்படம் மற்றும் கண்காட்சிக்காக அலைந்து திரிந்திருக்கிறான். யானைகளையும் புலிகளையும் வன மிருகங்களையும் இப்படி சிறார்களை போல ஒன்றாக விளையாட விட்டு படம் எடுப்பது எளிதானதில்லை.


பொதுவாக வனவிலங்குகளை பற்றிய படங்களில் கண்களை உறுத்தும் வன்முறையும் ரத்த வேட்டையும் இயல்பாக வெளிப்படும். இப்படத்தில் வரும் இயற்கையும் மிருகங்களும் தியானநிலை கொண்டது போன்ற அமைதியும் சாந்தமும் ஈர்ப்பும் கொண்டிருக்கின்றன.


குறிப்பாக யானைகளுடன் விளையாடும் புத்த பிக்குவான சிறுவன். பெண்கள் தொடர்பான காட்சிகள். மணற்பாலையில் வயதான ஆளுடன் உள்ள சிறுவன். நீருனுள் யானையுடன் விளையாடும் இளம் பெண் போன்ற காட்சிகளில் ஆழ்ந்த மெய்யுணர் அனுபவம் கிடைக்கிறது. ஒரு திரைப்படம் தியானவெளி போன்ற ஒன்றை உருவாக்குவதை முதன்முறையாக இந்த படத்தில் தான் அறிந்தேன்.


அறுபத்திரெண்டு நிமிசங்கள் ஒடக்கூடிய இந்த ஆவணப்படம் இயற்கையை பற்றிய நமது புரிதல்களை முற்றிலும் மாறுபட்ட அனுபவம் கொள்ள வைக்கிறது. 2005 ம் ஆண்டு வெளியான இந்த படம் உலகின் முக்கிய நகரங்கள் யாவிலும் திரையிடப்பட்டிருக்கின்றது.


கோல்பெர்ட் ஒன்பது ஆண்டுகள் இந்தியா பர்மா ஆப்ரிக்கா. ஜப்பான், எகிப்து கென்யா, அன்டார்டிகா  என்று 27 நாடுகளில் நீண்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். 130 வகையான விலங்குகளை நெருங்கி படமாக்கியிருக்கிறார். பர்மீய புத்தபிக்குகள். ஆப்ரிக்க ஆதிவாசிகள். நவீன நடனக்காரிகள் என்று ஒன்றுக்குமேற்பட்ட காட்சிபடிமங்களின் ஒன்றுசேர்ந்த வடிவமாக இதை உருவாக்கியிருக்கிறார்.


இந்த முயற்சியின் பின்னால் நூறு கோடிக்கும் மேலாக பணம் செலவாகியிருக்கிறது. மண் நிறத்திலும் சேபியா டோன் போன்ற வண்ணத்திலும் காட்சிகள் திரையில் தோன்றி ஒளிர்கின்றன. அந்த வண்ணங்களே நமது புலன் உணர்வின் ஆழ்ந்த தூண்டுதலுக்கு முக்கிய காரணமாக ஆகின்றன.


மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இயக்கத்தில் ஒரு அரூபமான நடனம் உள்ளது. அது விசித்திரமானதொரு மாயம். அதையே நான் படமாக்கியிருக்கிறேன் என்கிறார் கோல்பெர்ட். சிறுவயதில் அவருக்கு காது மிகப்பெரியதாக இருந்த காரணத்தால் அவரை யானை என்று வீட்டில் கேலி செய்திருக்கிறார்கள். அன்றிலிருந்து யானைகள் மீது அவருக்கு உண்டான ஈர்ப்பு இந்தபடத்தில் யானைகளின் மீதான வசீகரமான மாயமாக வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய  நிறுவனத்திற்கு பறக்கும் யானைகள் என்றே பெயரிட்டிருக்கிறார்.


படம் பார்க்கும் ஒவ்வொருவரும் சில நாட்களாவது யானையின் நினைவிலிருந்து விடுபட முடியாதபடி மனதில் ஒரு யானையை நீந்த வைப்பது தான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பு.


இயற்கையோடு மனிதனுக்குள் உள்ள உறவு இன்று முற்றிலும் சிதைந்து வருகிறது. ஆதியில் இருந்து வரும் தொடர்பையும் இணக்கத்தையும் மீண்டும் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தவே தான் இந்த ஆவணப்படத்தை இயக்கியதாக சொல்லும் கோல்பெர்ட் முன்னதாக எய்ட்ஸ் பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்கி அதற்காக திரைப்பட விழாக்களின் விருதுகளை பெற்றிருக்கிறார். இந்த படத்தினை படத்தொகுப்பு செய்தவர் இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற எடிட்டரான Pietro Scalia.  காட்சிகளை தண்ணீருக்குள் உப்பு கரைவது போல இயல்பான ஒன்று கலந்திருக்கிறார்.


ஒரு நீண்ட கனவிற்குள் பிரவேசித்து அதிலிருந்து விடுபட்டு வருவது போன்ற அனுபவமே இந்த ஆவணப்படத்தினை காணும்போது கிடைக்கிறது.


 அவசியம் காணவேண்டிய மிக அற்புதமான ஆவணப்படமிது.


Ashes and Snow – Gregory Colbert – Documentary- Flying Elephants Productions.****

0Shares
0