புதிய குறுங்கதை
சிம்பன்சிக் குரங்கு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தது
மிருகக்காட்சி சாலையில் இருந்த அந்தச் சிம்பன்சிக் குரங்கிற்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அது கடந்த சில வாரங்களாகச் சிகரெட் பிடிக்கத் துவங்கியிருந்தது.

சிகரெட் புகையை ஊதியபடியிருக்கும் சிம்பன்சியின் புகைப்படம் நியூஸ்பேப்பரில் வெளியான பிறகு அதைக் காணுவதற்காக ஏராளமானவர்கள் மிருகக் காட்சிசாலைக்கு வரத் துவங்கினார்கள்.
சிகரெட்டினை பற்ற வைத்து குரங்கின் முன்னால் நீட்டினார்கள். சிம்பன்சி ஸ்டைலாகச் சிகரெட் பிடித்துக் காட்டியது. மனிதர்களின் செயலை குரங்கு செய்யும் போது ஏன் விநோதமாக இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை.
குரங்கு சிகரெட் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்த மிருகக் காட்சியின் தலைமை நிர்வாகி எவரும் குரங்கிற்குச் சிகரெட் கொடுக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையைக் கூண்டின் முன்பாக வைத்தார், ஆனாலும் எப்படியோ குரங்கிற்குச் சிகரெட் கிடைத்து வந்தது.
பணியாளர்களில் எவரோ குரங்கிற்குச் சிகரெட் கொடுக்கிறார்கள் என்று நிர்வாகி. சந்தேகப்பட்டார் சிகரெட் பிடிக்கத் துவங்கிய பிறகு குரங்கிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன
சிகரெட்டுடன் ஏதோ யோசனை செய்வது போல அமர்ந்திருந்தது. சில நேரங்களில் நடந்தபடியே சிகரெட் பிடித்தது. அப்போது எதையோ புரிந்து கொண்டது போலத் தலையசைத்தது. பெண்களின் முன்னால் சிகரெட் பிடிக்கும் போது அதன் முகபாவம் மாறியது. செயின் ஸ்மோக்கர்கள் போல ஒரு சிகரெட் முடிந்தவுடன் அடுத்தச் சிகரெட்டிற்குக் கையை நீட்டியது சிம்பன்சி.
இதனைக் கட்டுப்படுத்தவேண்டி மிருகக் காட்சி சாலைக்குள் சிகரெட் கொண்டுவருவதற்குத் தடை விதித்தார்கள். சிகரெட் கிடைக்காத நாட்களில் சிம்பன்சி ஆவேசமாகி கத்தியது. அங்குமிங்கும் தாவியது கையில் கிடைக்கும் பொருட்களை வீசி அடித்தது. குரங்கின் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப் பதற்றமாக நடந்து கொள்ளும் என்றார் மருத்துவர்.
ஒரு நாளைக்கு இரண்டு சிகரெட் கொடுப்பது என முடிவு செய்தார்கள். முன்பு போலக் கூண்டின் அருகே வந்து சிகரெட் பிடிக்காமல் தள்ளி நின்று கூண்டிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு குரங்கு சிகரெட் பிடித்தது.
சிம்பன்சியின் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்காக நடத்தை பயிற்சியாளர் ஒருவரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்தார்கள். ஐம்பது வயதான அந்தச் சீனர் சிம்பன்சி இருந்த கூண்டின் முன்பாக முக்காலி போட்டு அமர்ந்து அதன் நடவடிக்கையை ஆராய்ந்தார்.
“ஏன் சிம்பன்சி சிகரெட் பிடிக்க விரும்புகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்“ என்றார்.
“மனிதர்களைப் போலவே குரங்குகளும் வெறுமையை உணருகின்றன. தொடர்ந்து தான் பார்க்கப்படுவதை சிம்பன்சி விரும்பவில்லை. அது எவர் கண்ணிலும் படாமல் இருக்க விரும்புகிறது. அந்தச் சூழ்நிலை கிடைக்காத போது சிகரெட் பிடிக்கிறது“என்றார் சீனர்
மிருகக்காட்சி நிர்வாகம் அவரது வேண்டுகோளை மறுத்தது.
“சிம்பன்சி புகையை ரசிக்கிறது. அதற்காகவே சிகரெட் பிடிக்கிறது. புகையைப் போலத் தானும் காற்றில் கலந்துவிட விரும்புகிறது “என்றார் சீனர்.
“சிம்பன்சி சிகரெட் பிடிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். அது எங்களுக்குத் தேவையற்றது. அதை உடனடியாக நிறுத்த வேண்டியது உங்கள் வேலை. அதைச் செய்துகாட்டுங்கள்“ என்றார் நிர்வாகி
சில நாட்களுக்குப் பிறகு அவர் சிம்பன்சி சிகரெட் பிடிக்கும் நேரம் தானும் ஒரு சிகரெட் பிடித்தார். சிம்பன்சி அவரைக் கண்டுகொள்ளவில்லை.
“புதிய பழக்கம் ஒன்றை ஏற்படுத்தும் போது சிம்பன்சி சிகரெட் பிடிப்பதை விட்டுவிடும்“ என்று சீனர் நம்பினார். இதற்காகக் கூண்டின் முன்னால் அமர்ந்து விசில் அடித்தார். சோப்பு நுரைகளை வைத்து விளையாடினார். புத்தகம் படித்தார். கால்பந்து விளையாடினார். பபிள்கம்மை மென்று பலூன் ஊதினார். தண்ணீர் வாளியை தலையில் ஊற்றி ஆடினார். எதுவும் சிம்பன்சிக்கு பிடிக்கவில்லை.
ஒரு நாள் பள்ளிமாணவன் ஒருவன் பச்சை நிற ஊதுகுழலை ஊதியபடி சிகரெட் பிடிக்கும் குரங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
குரங்கு சிகரெட் புகையை அவனை நோக்கி ஊதியது.
வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தான் வைத்திருந்த ஊதுகுழலை அதன் முன்பாக நீட்டி சிகரெட்டை கொடு என்று கேட்டான்.
மறுநிமிஷம் சிம்பன்சி தனது சிகரெட்டை அவனிடம் நீட்டியது. சிறுவன் தனது ஊதுகுழலை அதனிடம் தர மறுத்தான். சிம்பன்சி பாய்ந்து பிடுங்க முயன்றது. அவன் கூண்டினை விட்டு விலகி நின்று கொண்டான். சிம்பன்சி கூண்டின் இரும்புக் கம்பியை பிடித்து ஆவேசமாக ஆட்டியது.
புதிய டிரம்பட் ஒன்றை சிறுவனுக்கு அளிப்பதாகச் சொல்லி அவனது ஊதுகுழலை சிம்பன்சியிடம் கொடுத்துவிடச் சொன்னார் நடத்தை பயிற்சியாளர். கையில் கிடைத்த ஊதுகுழலை எப்படி ஊதுவது என்று தெரியாமல் சிம்பன்சி ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அன்று மாலை அது இரண்டாவது சிகரெட்டிற்காகக் கூண்டின் முன்பு வந்து நிற்கவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிந்தைய இரவில் சிம்பன்சி ஊதுகுழலை வாசித்துக் கொண்டிருக்கும் சப்தம் மிருகக் காட்சி சாலை முழுவதும் கேட்டது. அதன்பிறகு நாள் முழுவதும் சிம்பன்சி ஊதுகுழலை வாசித்தபடி இருந்தது. அதன் முகத்தில் முன்பு காணாத சந்தோஷம் வெளிப்பட்டது.
சிம்பன்சி ஊதுகுழல் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் அந்தச் சிறுவன் ரகசியமாகப் பள்ளியின் கழிப்பறையில் சிகரெட் பிடிக்கத் துவங்கியிருப்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.