சிறகுள்ள புலி

புதிய நெடுங்கதை.

அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பதினாறு ஆண்டுகள் ஆகியிருந்தது. இன்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள் என்று தெரிவித்தார்கள்.

பூமாலை கொல்லப்பட்ட போது வெயிலானுக்கு வயது ஆறு. அந்த வழக்கில் எதிரிகளில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட தனுக்கோடி நாலு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போய்விட்டார். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட தங்கமாரியப்பன் இப்போது நகராட்சி துணைத் தலைவராகிவிட்டார். அவரது இரண்டாவது மகன் ஆனந்த் உள்ளூரிலே வக்கீல் , அடுத்தவன் பிரபு பைபாஸ் ரோட்டில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கிறான்.

“இந்த நேரம் காசைக் கொடுத்துத் தீர்ப்பை மாற்றியிருப்பார்கள். ஒருத்தனையும் கோர்ட் தண்டிக்காது. இத்தனை வருஷம் கேஸ் நடத்த காசு செலவானது வேஸ்ட்“ என்று நினைத்துக் கொண்டான் வெயிலான். அவனுக்கு அப்பாவைப் பிடிக்காது. அம்மாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டதோடு அவளை நடுத்தெருவில் தவிக்க விட்டுப் போனவர் என்பதால் தீராத ஆத்திரமிருந்தது.

வீட்டிலிருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குக் கோபமாக வரும். “இவருக்கு எதுக்குப் புலி போடுற ஆசை. ஒழுங்கா படம் வரைஞ்சிட்டு நாலு காசை பாத்துகிட்டு இருக்க வேண்டியது தானே. புலி போடப்போயி தானே இத்தனை வில்லங்கமும்“ என்று நினைத்துக் கொள்வான். ஆனால் அவனது அப்பாவைப் பற்றி அம்மா எப்போதும் பெருமையாகச் சொல்வாள்

“அவரு கைபட்டா சோதா பய கூடப் புலியாகிருவான். கோவில் சுவத்துல இருக்கே ஆள் உயர மாரியம்மன் படம். அதை வரைஞ்சது அவரு தானே. அவரு வரைஞ்ச படத்தைத் தானே இன்னைக்கும் சாமியா கும்பிடுறாங்க. அந்தச் சாமி நமக்கு நல்ல வழியைக் காமிக்கும் வெயிலா“ என்பாள் சிந்தாமணி

அவனுக்கு நம்பிக்கையில்லை. கோவிலை ஒட்டிய கிணற்றில் அப்பா முகம் வீங்கி செத்து மிதந்த காட்சி அவன் மனதிலிருக்கிறது. அது கொலை தான். சந்தேகமில்லை. ஆனால் எதற்காகக் கொன்றார்கள் என்று புரியவேயில்லை. வீறாப்பிற்காக அப்பா புலி போட்டு செத்துப் போனார். இனிமேல் அவர்களைத் தண்டித்து என்ன ஆகப்போகிறது. செத்துப்போனவருக்கு என்ன தண்டனை தந்துவிட முடியும்

அவன் வேலை செய்யும் பரோட்டா கடைக்கு ஒன்றிரண்டு தடவை தனுக்கோடி சாப்பிட வந்திருக்கிறார். போதையில் தள்ளாடியபடி வந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது மனதிற்குள் கோபம் கொப்பளிக்கும். வேண்டுமென்றே அவருக்குப் போடுகிற கொத்துப் புரோட்டாவில் எச்சில் துப்பிக் கொத்துவான். அதற்கு மேல் என்ன செய்துவிட முடியும்.

••

“நான் கோர்ட்க்கு கிளம்புறேன். நீயும் வந்துரு“ என்றாள் வெயிலானின் அம்மா சிந்தாமணி

“நான் வரலை. அங்கே போயி யாரு காத்துக் கிடக்கிறது. “

“அதுக்காகத் தீர்ப்பு சொல்ற அன்னைக்கு நாம போக வேண்டாமா“

“நீதி நியாயம் எல்லாம் நமக்குக் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அதை வச்சி என்ன செய்யப்போறே“

“அவிங்க அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போகணும். அப்போ தான் என் மனசு ஆறும்“

“ நீ எப்படியோ போய்த் தொலை.. எனக்கு வேலையிருக்கும்மா… இந்த ஆளை மாதிரி வெறிச்சிகிட்டு இருந்தா வெட்டியா சாக வேண்டியது தான்“

“உங்கப்பாவை பற்றி இப்படிப் பேசாதேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்“

“அப்படிதான் பேசுவேன். இந்த ஆளு கெட்ட கேடுக்கு ரெண்டு பொண்டாட்டி வேற. அதைக் கேட்க உனக்குத் துப்பு இல்லை“

“அது என்பாடு. நான் பாத்துகிடுவேன். நீ போறதுன்னா போடா. நான் சாரதி கூடப் போய்கிடுவேன்“

“அந்த நாயி இந்த வீட்ல காலை வச்சா. வெட்டிப்புடுவேன் பாத்துக்கோ. நீ ஏன் அவன் கால நக்கிட்டு கிடக்கே“

“அவனும் உங்கப்பனுக்குப் பிறந்தவன் தானே. உனக்கு அண்ணன் தானே. “

“அண்ணே கிண்ணேனு சொல்லாதே. அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது“.

“சண்டைபோட்டுக்க வேண்டிய பொம்பளை ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டோம். உங்களுக்கு என்னடா கோபம்“

“எனக்கு மானம் ரோசம் இருக்கு.. உப்பு போட்டு திங்குறேன். அதான்“

“இந்த ரோசம் தான் உங்கப்பனை புலி போட வச்சது“

“அந்தக் கதை எல்லாம் வேணாம். நான் கிளம்புறேன்“

என்று தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான் வெயிலான். அவன் வேலை செய்யும் பரோட்டா கடை பைபாஸ் ரோட்டில் இருந்த்து. மாலையில் தான் வேலை. இரவு இரண்டு மணி கடை திறந்திருக்கும். ஆகவே அவன் வீடு திரும்ப இரவு மூன்று மணியாகிவிடும். பெரும்பான்மை நாட்கள் பகலில் உறங்கிவிடுவான். மதியம் இரண்டு மணிக்கு எழுந்து குளிப்பான்.மதிய சாப்பாடு சாப்பிட நான்கு மணியாகிவிடும்.

நட்சத்திர வடிவத்தில் ஸ்டார் பரோட்டா என்று அவன் அறிமுகம் செய்து வைத்த பரோட்டா பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. ஆகவே அதைச் சாப்பிடுவதற்கென்றே நிறைய இளைஞர்கள் கடைக்கு வந்தார்கள். அவன் போடுற கொத்துப் பரோட்டாவில் என்ன சேர்க்கிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அதன் ருசி நிகரில்லாதது.

••

தங்க மாரியப்பனின் கார் அருப்புக்கோட்டை கோர்ட் வளாகத்தினுள் நுழைந்த்து. மரத்தடியில் காத்துக் கொண்டிருந்த சிலர் காரை நோக்கி வந்தார்கள். வக்கீல் தனபால் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். தங்க மாரியப்பன் அவரை நோக்கி நடந்தார்

“தீர்ப்பு எத்தனை மணிக்கு வாசிப்பாங்க“ என்று கேட்டார் தங்க மாரியப்பன்

“பனிரெண்டரை ஆகிரும். நீங்க நம்ம ரூம்ல வந்து உட்காருங்க. நீங்க பயப்படுற மாதிரி ஒண்ணும் ஆகாது“

“அவங்க பக்கம் தீர்ப்பு வந்தா ஹைகோர்ட் இருக்கு பாத்துகிடுவோம்“ என்றார் தங்க மாரியப்பன்.

“அதுக்கெல்லாம் தேவையே இருக்காது“ என்று உறுதியாகச் சொன்னார் தனபால். தங்க மாரியப்பன் தனது மேல்சட்டைப் பையினுள் கையை விட்டு ஐநூறு ரூபாய்களை எடுத்தார். அதில் பாதியை எண்ணாமல் அப்படியே தனபால் கையில் கொடுத்தார்.

“நீ வச்சிக்கோ. என் கூட வந்துருக்கப் பசங்க ஒருத்தனும் சாப்பிடலை. ஏதாவது பாத்து வாங்கிக் குடு“

தனபால் பவ்வியமாகப் பணத்தை வாங்கிக் கொண்டார். இதற்குள் தங்க மாரியப்பன் போன் அடிக்கத் துவங்கியது. அவர் விலகி நின்று யாருடனோ பேச ஆரம்பித்தார்.

••

“புலி வேஷமிட்ட பூமாலை கிணற்றில் தவறி விழுந்து இறந்து போனது தற்செயல் நிகழ்வு. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை இல்லை“ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று குற்றவாளிகளும் அனைத்துக் குற்றசாட்டுகளில் இருந்தும் விடுவிக்கபட்டார்கள்.

தங்கமாரியப்பன் வியர்த்து ஈரமாகி உடலோடு ஒட்டியிருந்த வெள்ளைசட்டையை உதறிக் கொண்டபடியே வெளியே வந்தார். இத்தனை ஆண்டுகள் இழுவையாக இழுந்த வழக்கு தன் பக்கம் முடிந்து போனது மகிழ்ச்சி அளித்த்து.

அந்தச் சந்தோஷத்துடன் காரை நோக்கி நடக்கத் துவங்கினார். அவர் கண்ணில் மண்விழுந்தது போலிருந்த்து. மண்ணைத் துடைப்பதற்காகக் கைகளை முகத்தில் வைத்தபோது யாரோ அவர் மீது வெட்டுவதற்குப் பாய்வது போலிருந்த்து. தன்னை அறியாமல் சப்தமிட்டபடியே அவர் தரையில் விழுந்தார். கோர்ட் வாசலில் நின்றிருந்த காவலர்கள் ஒடி வந்தார்கள். கையில் அருவாளுடன் ஒரு இளைஞன் ஆவேசமாக நிற்பது அவரது கண்ணில் தெரிந்த்து. அந்த இளைஞனை காவலர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். தரையில் விழுந்ததால் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. வேஷ்டி முழுவதும் புழுதி. எழுந்து கையைத் துடைத்துக் கொண்டு கோபத்துடன் “எங்கடா போய்த் தொலைஞ்சீங்க“ என்று உடன் வந்தவர்களை நோக்கிக் கத்தினார். அவர்கள் பதில் சொல்வதற்குள் “அந்த நாயி யாரு“ என்று கேட்டார். அவரது தோளில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தில் ரத்தம் கசிந்து சட்டையில் பட்டது. சட்டையைக் கழட்டி உதறியபடியே ஏதோ சொல்ல முயன்று சுயஉணர்வின்றி மயங்கி விழுந்தார்.

••

பூமாலையின் தாத்தா பெயர் சிகிலன். வெள்ளைக்காரர்கள் காலத்திலே புலி வேஷம் வரைவதில் பெயர் பெற்றவர். இவரது திறமையைக் கண்டு வியந்து டி லா ஹே என்ற வெள்ளைக்காரன் தன்னோடு மதராஸிற்கு அழைத்துக் கொண்டு போனான் என்கிறார்கள்.

அவனுடன் சிகிலன் நிற்கும் புகைப்படம் ஒன்று பூமாலை வீட்டிலிருந்தது. பரம்பரையாக அவர்கள் வண்ணக்காரர்கள். அதாவது வண்ணம் தீட்டுகிறவர்கள். கோவில் வேலைகளும் அலங்கார பொம்மைகளும் செய்வது வழக்கம்.

பூமாலை தனது குடும்ப வரலாற்றைப் பற்றிய சில கதைகளைக் கேட்டிருக்கிறார். அவற்றைப் பற்றி எப்போது நினைத்துக் கொண்டாலும் அவரது மனது கனத்துவிடும். எப்பேர்பட்ட ஆட்கள் என்று சொல்லிக் கொள்வார். தனது தாத்தா சிகிலனை மனதில் வணங்கியே எந்தக் காரியத்தையும் செய்ய ஆரம்பிப்பார்.

••

நியூவிங்டன் பள்ளி முதல்வரும் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரரும், புலிவேட்டையில் ஆர்வம் கொண்டவருமான கிளெமென்ட் டி லா ஹேயின் கொலை வழக்கினைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.

இந்தக் கொலை 1919 அக்டோபர் 15ம் தேதி நடந்தது. டி லா ஹேய் தனது படுக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலையின் வலது பக்கத்தில் தோட்டா தாக்கியதில் மரணம் ஏற்பட்டது.

ஜமீன்தார்களின் ‘மைனர்’ வாரிசுகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு நியூவிங்டன் பள்ளியை உருவாக்கியது. தேனாம்பேட்டையிலிருந்த அந்த இடத்தை மக்கள் மைனர் பங்களா என்று அழைத்தார்கள்.

இந்தக் கொலை வழக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது கொலைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறுதியில் சாட்சியங்கள் இன்றி விடுவிக்கப்பட்டார்கள். இந்த வழக்கு இன்று வரை தீர்க்கப்படாமலே உள்ளது.

டி லா ஹேயின் மனைவி டோரதியோடு கள்ள உறவில் இருந்த ஒருவர் இந்தக் கொலையைச் செய்தார் என்றும், டி லா ஹேயின் இனவெறியை தாங்க முடியாத ஜமீன்தார்களே சதி செய்து கொன்றார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த வழக்கோடு நேரடியாகத் தொடர்பு இல்லாத, ஆனால் டி லா ஹேயின் வீட்டில் பணியாளராக இருந்த ஒருவனைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.

டி லா ஹே ஒருமுறை தென்மலைக்குச் சென்றிருந்த போது புலிக்கலி நடனத்தைக் கண்டார். முப்பது நாற்பது ஆட்கள் புலி வேஷம் அணிந்து சாஸ்தா கோவிலின் முன்பாக நடனமாடியது வியப்பளித்தது. அதைப்பற்றிக் கிழக்கிந்திய கம்பெனி சர்வேயர் ரிச்மண்டிடம் விசாரித்த போது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கொச்சி மகாராஜா  ராமவர்மா சக்தன் தம்புரான் இதனை அறிமுகப்படுத்தினார் என்றார்.

புலிவேஷமிட்டவர்கள் தாளத்திற்கு ஏற்ப துள்ளி ஆடிவந்தார்கள். டி லா ஹேயின் அருகில் வந்த போது அவரை வணங்கி மரியாதை செய்தார்கள். நிஜமான புலிகள் தன்னை வணங்குவதைப் போலவே அவர் உணர்ந்தார். அன்று அவரது மனதில் விசித்திரமானதொரு எண்ணம் உருவானது.

ஊர் திரும்பியதும் டி லா ஹே விசித்திரமான காரியம் ஒன்றில் ஈடுபடத் துவங்கினார். புலி வேஷம் தீட்டுகிறவரில் சிறந்தவர் யாரென விசாரிக்கத் துவங்கினார். யானையடி என்ற கிராமத்தை சேர்ந்த சிகிலனுக்கு நிகராக யாருமில்லை. அவன் சிறகுள்ள புலியை உருவாக்குகிறவன் என்றார்கள்

“சிறகுள்ள புலியா“ என்று டி லா ஹே வியந்து போனார். அப்படி ஒன்றைப் பற்றிக் கற்பனை செய்யவே வியப்பாக இருந்தது. ஆள் அனுப்பி அவனை மதராஸிற்கு அழைத்து வரச் சொன்னார்.

சிகிலன் வர மறுத்ததோடு “வெள்ளைக்காரனால் ஒரு போதும் புலியாக முடியாது“ என்று சொல்லி அனுப்பினான்.

டி லா ஹே தனது பள்ளியில் பயிலும் மேக்கரை ஜமீன்தாரை அழைத்துக் கொண்டு யானையடியில் வசித்த சிகிலனைக் காணச் சென்றார்.

சிகிலன் கற்சிற்பம் போல உறுதியான உடல் கொண்டிருந்தான். அழுக்கடைந்த அரைக்கச்சு. திறந்த மேல் உடம்பு. இடது காலில் செம்பு வளையம், அவன் வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே புலி வேஷம் வரைபவன். மற்ற நாட்களில் மண்பொம்மைகள் செய்து வண்ணமடித்து விற்பது வழக்கம்.இதற்காக அருகிலுள்ள புளிக்கரை சந்தைக்கு வாரம் ஒருமுறை போய்வருவான். சில நேரம் குதிரையெடுப்பிற்கு மண் குதிரை செய்து தருவதும் உண்டு.

சிறிய கூரைவீட்டில் வசித்த அவனைத் தேடி சென்ற டி லா ஹே உட்கார ஆசனம் எதுவும் இல்லை என்பதை அறிந்து கொண்டு நின்றபடியே கேட்டார்

“நீ சிறகுள்ள புலியை உருவாக்குவாய் என்கிறார்களே. அது நிஜமா“

“எல்லாப் புலிவேஷம் போடுகிறவனுக்கும் ரெக்கை கிடையாது. ரெக்கையுள்ள புலியாக இருப்பவன் காளிங்கன். அவன் ஒருத்தனுக்கு மட்டுமே ரெக்கை வரைவேன். அவன் இப்போது புலியாடுவதில்லை. “ என்றான் சிகிலன்.

“நான் ரெக்கையுள்ள புலியாடுவதைப் பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்ய முடியுமா“ என்று கேட்டார் டி லா ஹே.

“அதற்கென்ன நாளைக்கு ஏற்பாடு பண்ணிவிடுவோம்“ என்றார் மேக்கரை ஜமீன்தார்

மறுநாள் அவர்கள் ஐம்பது வயதான காளிங்கனை அழைத்து வந்தார்கள். உடல்நலமற்று கால் வீங்கி காணப்பட்ட காளிங்கன் அவர்களை வணங்கிச் சொன்னான்

“உத்தரவு இல்லாமல் புலி போட முடியாதுங்க சாமி“

“யாரு உத்தரவு கேட்கணும்“

“தென்மலையான் கோவில்ல உத்தரவு கேட்கணும்“

“அதெல்லாம் கேட்டுகிடலாம். துரை பாக்கணும்னு ஆசைப்படுறார். புலி போட்டு ஆடுறா“

“இந்தக் காலை வச்சிகிட்டு என்னாலே ஆட முடியாதுங்க. “

“என்னவோ நீ ஒருத்தன் தான் ரெக்கையுள்ள புலினு சிகிலன் சொன்னான். நீ நொண்டிபுலியால்லே இருக்கே. “ என்று ஏளனம் செய்தார் மேக்கரை ஜமீன்

காளிங்கனுக்கு ஆத்திரம் வந்த்து, அவன் வேஷம் போடுவது என்று தீர்மானம் செய்தான். சிகிலனுக்கு அதில் சம்மதமில்லை. என்றாலும் காளிங்கனுக்காகப் புலிவேஷம் போட்டுவிடுவது என்று முடிவு செய்தான்.

மாந்தோப்பின் உள்ளே வைத்து காளிங்கன் உடலில் புலிவரையத் துவங்கினான். புலியின் கோடுகள் உடலில் தோன்றியதும் காளிங்கனின் முகம் இறுக்கமடைய ஆரம்பித்தது. சாக்குதுணியில் ரெக்கை போல வரைந்து கொக்கிகளுடன் தோளில் மாட்டிக் கொள்வது போல ஏற்பாடு செய்தான். புலிவேஷமிட்ட காளிங்கன் சிவந்த தனது கண்களுடன் மேக்கரை ஜமீன் பங்களாவின் முற்றத்தில் ஆட ஆரம்பித்தான்.

வேட்டையில் தப்பிய புலியின் ஆவேசம் கொண்டது போலிருந்தது அந்த ஆட்டம். அந்தக் கண்களில் வெளிப்படும் வெறுப்பு. வெறியை கண்ட டி லா ஹே எங்கே தன்னைப் புலி பாய்ந்து கொன்றுவிடுமோ என்று பயந்தான். பாய்ச்சலின் உச்சத்தில் இரண்டு ரெக்கைகளையும் தனது தோளில் மாட்டிக் கொண்ட காளிங்கன் வௌவால் ரெக்கையை அடிப்பது போலச் சடசடப்புக் காட்டினான். உண்மையில் ரெக்கையுள்ள புலியை நேரில் வந்துவிட்டது போலிருந்த்து. டி லா ஹேவால் நம்ப முடியவில்லை. பயமும் ஆச்சரியமுமாக ரெக்கையடிக்கும் புலியை பார்த்துக் கொண்டிருந்தான். தரையை விட்டு நாலு அடி உயரத்திற்குத் தாவி சிறகை அடித்து எம்பி பறந்தான் காளிங்கன். காலில் ரத்தம் வழிந்து சொட்டியது. மேக்கரை ஜமீன்தார் சில்லறை காசுகளை அவன் மீது வீசி எறிந்தார். இடமும் வலமுமாகப் பாய்ந்து பறந்து போக்கு காட்டிய காளிங்கன் முன்னால் ஆட்டுகுட்டி ஒன்றை கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதைப் பாய்ந்த வேகத்தில் பல்லால் கடித்து இழுத்துக் கொண்டு பறந்தான். ஆட்டின் உயிர்பயமான குரல். தெறிக்கும் ரத்தம். ஆவேசமான காளிங்கனின் பாய்ச்சல் டி லா ஹேவை பிரமிக்க வைத்தது.

ஆட்டம் போதும் என மேக்கரை ஜமீன் கையை உயர்த்தி நிறுத்தினார். ஆனால் காளிங்கன் நிறுத்தவில்லை. அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். அந்தப் புலியாட்டம் பித்தேறியதாக இருந்த்து. காணும் மனிதர்களைக் கடித்துத் துப்பிவிடப் போவது போல ஆவேசமாக ஆடினான். மேக்கரை ஜமீன் கோபத்தில் எழுந்து நின்று சப்தமிட்டார். அவரை நோக்கி பாய்ந்தான் காளிங்கன். புலி நகங்கள் அவரது பட்டுச்சட்டையைக் கிழித்தது. அவர் தடுமாறிப் பின்னால் விழுந்தார்.

டி லா ஹே பயத்தில் எழுந்து விலகி நின்று கொண்டார். கிழே விழுந்த மேக்கரை ஜமீன் ஆவேசமாக வீட்டிற்குள் சென்றார். வெளியே வந்த போது அவர் கையில் வேட்டைத்துப்பாக்கி இருந்தது. அதை உயர்த்திக் காளிங்கனை சுட்டார். துப்பாக்கி குண்டு துளைத்த போதும் காளிங்கன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. கண்மயங்கி விழும்வரை ஆடிக் கொண்டிருந்தான். பின்பு சரிந்து விழுந்து இறந்து போனான்.

ரெக்கையுள்ள புலியின் ஆட்டத்தையும் காளிங்கனின் முடிவையும் கண்டு பிரமித்துப் போன டி லா ஹே செத்துக்கிடந்த காளிங்கன் உடலைத் தொட்டுப் பார்த்தார். நிஜப்புலியை தொடுவதைப் போலவே இருந்த்து. ஒரு மனிதனை இப்படிப் புலி போல நிஜமாக மாற்ற முடிவது எவ்வளவு பெரிய கலை. அதுவும் ரெக்கையடிக்கும் புலியாக மாற்றிப் பாய்ச்சல் காட்டுவது நினைத்துப் பார்க்க முடியாத கற்பனை.

அவர் சிகிலனை தன்னோடு கூடவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். மேக்கரை ஜமீன் மூலம் பேசி அவனது குடும்பத்திற்கு ஒரு மா நிலமும், நான்கு பசுக்களும், இரண்டு பொற்காசுகளும் கொடுப்பதாகப் பேசி முடிவு செய்தார்கள். தன்னால் பட்டணத்திற்கு வர முடியாது என்று சிகிலன் மறுத்தான். ஆனால் அவனால் ஜமீன் உத்தரவை மீற முடியவில்லை.

••

மதராஸ் பட்டணத்தில் யார் புலி வேஷம் போடப்போகிறார்கள். எந்தக் கோவிலில் புலி ஆடப்போகிறது என்று தெரியவில்லை. டி லா ஹேயின் வீட்டில் பணியாளர் போல வசித்து வந்த சிகிலனுக்கு நல்ல சாப்பாடும் தேவையான சௌகரியங்களும் கிடைத்தன. ஆனால் அவன் மனது யானையடியில் இருந்த வீட்டையே நினைத்துக் கொண்டிருந்தது. எப்படியாவது துரையிடமிருந்து விலகி ஊருக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அன்றாடம் அவனுக்குச் சீமையிலிருந்து கெண்டுவரப்பட்ட மதுபோத்தலில் கொஞ்சம் குடிப்பதற்குத் தரப்ப்ட்டது. அப்படியான மதுவை அவன் குடித்ததேயில்லை. ஆகவே ஆசையாகக் குடித்தான்.

மதுவின் பொன்னிறம். அதன் விநோத மணம். நாவில் ஏற்படுத்தும் ருசி. உடலில் ஏற்படுத்தும் மயக்கம் அவனை ஆட்கொண்டது.

மழைக்காலம் முழுவதையும் மதராஸில் வெறுமனே கழிக்க வேண்டியதாக இருந்த்து. பனிக்காலத்தின் துவக்கத்தில் ஒரு நாள் டி லா ஹே தன்னோடு வரும்படி அழைத்துக் கொண்டு போனார். ரயிலில் பயணம் செய்தார்கள். ஓடிசாவின் சுந்தர்கரில் கருஞ்சிறுத்தையை வேட்டையாட வந்திருக்கிறார்கள் என்பதைப் பயணத்தின் போது சிகிலன் அறிந்து கொண்டான். துரைமார்கள் வேட்டையாட போகும் எதற்காகத் தன்னை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.

சுந்தர்கரில் அவர்கள் முகாமிட்டார்கள். வேட்டைக்குக் கிளம்பும் நாளில் டி லா ஹே தனக்குப் புலி வேஷம் போடும்படியாகச் சொன்னார்.

“தெய்வம் அனுமதிக்காது துரை. என்னை மன்னிச்சிருங்க“ என்றான் சிகிலன்

“நான் தான் உனக்குத் தெய்வம். எனக்குப் புலிவேஷம் போடணும்னு ஆசை“. என்று துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டினார்

“என்னாலே முடியாது. என்னை விட்ருங்க“ என்று மன்றாடினான் சிகிலன்

“இந்தச் சாமி உத்தரவு கொடுத்தா புலிவேஷம் வரைவியா“ என்று கேட்டபடியே மது போத்தல் ஒன்றை அவன் முன்னால் நீட்டினார் டி லா ஹே.

அதை ஆசையாகக் கையில் வாங்கும் போது சிகிலன் மனதில் செத்துகிடந்த காளிங்கன் முகம் வந்து போனது. காரணமில்லாத அச்சம். போதையின் விருப்பு. இரண்டும் ஒன்று சேர்ந்து கொண்டன. சிகிலன் தனது வண்ணங்களைக் குழைக்க ஆரம்பித்தான்.

புலி வரைந்து முடித்த போது டி லா ஹேவால் நம்பமுடியவில்லை. தான் ஒரு புலி. வெள்ளைப்புலி. காளிங்கன் தன் முன்னே ஆடியது போல அவர் கைகளை நீட்டி முன்னால் பாய்ந்து ஆடினார். சிகிலன் அவரைக் கவனிக்காமல் குடித்துக் கொண்டிருந்தான்.

அன்றைக்குத் தன்னுடைய உடல் முழுவதும் புலி போல மாற்றிக் கொண்ட டி லா ஹே இரட்டைக் குழல் துப்பாக்கியை உயர்த்தியபடி காட்டிற்குள் வேட்டையாடச் சென்றார். இது என்ன பித்து என்று உடன் வந்தவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் அன்று டி லா ஹே ஆவேசத்துடன் கருஞ்சிறுத்தை ஒன்றை வேட்டையாடினார்.

கொன்ற சிறுத்தையின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்றிரவு அவரும் சிகிலனும் ஒன்றாகக் குடித்தார்கள். அவர் சிகிலனின் கைகளை முத்தமிட்டு சொன்னார்

“உன்னை இங்கிலாந்துக்குக் கொண்டு போகப் போகிறேன். லண்டனின் வீதியில் நான் புலியாக நடமாடப் போகிறேன். “

போதையிலும் அந்தச் சொற்கள் அவனைக் கலக்கமடையச் செய்தன. ஒரு வேளை தான் இனிமேல் யானையடிக்கு திரும்பவே முடியாதோ என்று தோன்றியது. மறுநாளும் அவர்கள் வேட்டையைத் தொடர்ந்தார்கள். வேட்டையாடிய விலங்குகளை மாட்டுவண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். டி லா ஹே தனது பரிசாகத் தங்கசங்கிலி ஒன்றை சிகிலனுக்கு அணிவித்தான்.

எப்படியாவது டி லா ஹேவிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஊர் வந்த மறுநாள் சிகிலனுக்குக் காய்ச்சல் கண்டது. விஷக்காய்ச்சல் என்று சொன்ன மருத்துவர் கொய்னா எடுத்துக் கொள்ளும்படி கொடுத்தார். உறக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருந்தான் சிகிலன். காய்ச்சல் குணமாகாத காரணத்தால் அவனை ஊருக்கு அனுப்பி வைப்பது என்று டி லா ஹே முடிவு செய்தார். அவன் புறப்பட்ட நாளின் இரவில் தான் டி லா ஹே படுக்கையறையில் கொல்லப்பட்டார். அவர் இறந்து போன தகவல் இரண்டு வாரங்களுக்குப் பிறகே சிகிலனுக்குத் தெரிய வந்தது. துரை தனது பரிசாகக் கொடுத்து அனுப்பிய பொருட்களில் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும், இரண்டு வெள்ளிக்கிண்ணங்களும் கொஞ்சம் பணமும் இருந்தன.

நல்ல வேளை டி லா ஹே இறந்து போனார். இல்லாவிட்டால் கப்பலேறி லண்டன் போயிருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்ட சிகிலன் எங்கே தன்னைத் தேடி துரையின் ஆட்கள் திரும்ப வந்துவிடுவார்களோ என்று பயந்து எந்த உறவும் இல்லாத ஊரில் வாழ்வது என்று அருப்புக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அங்கேயே குடும்பத் தொழிலான பொம்மை செய்வதை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் அதன்பிறகு அவர் புலி வேஷம் போடவேயில்லை

••

பூமாலை தனது அப்பாவிடமிருந்தே வரையக் கற்றுக் கொண்டார். கோவில் சுவர்களில் புராணக் கதைகளை ஓவியம் வரைவார்கள். அப்போதெல்லாம் சிரட்டையில் தான் வண்ணங்களைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். வண்ணக்கட்டிகளை வாங்கி வந்து உடைத்து வண்ணம் தயாரிக்க வேண்டும். அப்பாவிற்குச் சாமி படம் தவிர வேறு எதையும் வரையப் பிடிக்காது. ஆனால் பூமாலைக்கு மனிதர்களைத் தத்ரூபமாக வரைவது பிடிக்கும். அது போலவே புலி வேஷம் வரைவதும் பிடித்தமானது. ஆனால் வீட்டில் புலி வேஷமிடும் வேலையைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். கைச்செலவிற்காக ரகசியமாகச் செய்வது வழக்கம்.

அந்த ஊரில் இரண்டு சினிமா தியேட்டர்கள் இருந்தன. அதில் எந்தப் புதுப்படம் வந்தாலும் பூமாலையைத் தான் வரையக் கூப்பிடுவார்கள். பூமாலை அந்த ஊரின் புகழ்பெற்ற பேனர் ஆர்டிஸ்ட்டாக மாறினார்..

சினிமா பேனர்கள் என்றாலும் நிஜமாக நடிகர்கள் நேரில் நிற்பது போல வரைந்துவிடுவார். ஆட்கள் சினிமா தியேட்டரின் வாசலில் அவரது பேனரை வியந்து பார்ப்பதை அருகிலுள்ள டீக்கடையில் அமர்ந்து பூமாலை ரசித்துக் கொண்டிருப்பார்.

சில நாட்கள் அவரது அப்பாவைப் போலவே கோவில் சுவரில் படம் வரைவதும் உண்டு. ஒருமுறை சினிமா தியேட்டர் முன்பாக அவர் வரைந்து வந்த அம்மன்  படத்திற்கான பேனரை சூடம் காட்டி கும்பிடுகிறார்கள் என்று கேள்விபட்டபோது மனம் மகிழ்ந்து போனார்.

வருஷத்தில் ஒரு வாரம் மட்டும் அவர் புலி வேஷம் வரைவது உண்டு. உண்மையில் அது தங்கள் குடும்பத்தை வாழ வைத்த கருப்பு கோவிலுக்குச் செய்கிற காணிக்கை என்றே நினைத்துக் கொள்வார்.

••

செந்தடி கருப்பு கோவிலுக்குப் போவதற்குக் காசியாபுரம் செல்லும் செம்மண் சாலையில் போக வேண்டும். வெட்டவெளியில் இருந்த காட்டுக்கோவிலது. அருகில் ஒரு வேப்பமரம் . தண்ணீர் தொட்டி. கோவில் பொருட்களை வைத்துக் கொள்ளச் சிறிய அறை. ஊர்கூடி தண்ணீர் பம் போட்டிருந்தார்கள். மின்வசதி செய்து வைத்திருந்தார்கள். கருப்புக் கோவில் பூசாரி பரமசிவம் லட்சுமியாபுரத்திலிருந்தார்.

செந்தடி கருப்புக் கோவிலில் மாசித் திருவிழா மிகவும் பிரபலமானது. அந்தத் திருவிழாவின் போது கோவிலைச் சுற்றி பந்தல் போடுவார்கள். நூறு கிடாக்களும் மேலாக வெட்டப்படும். திருவிழாவை முன்னிட்டு ஐந்து ஊர்களிலிருந்தும் ஆட்கள் புலி வேஷம் போட்டு ஆடி வருவார்கள். அடிவானம் வரை விரிந்து கிடக்கும் வெட்டவெளியில் செம்மண் புழுதிபறக்க புலிகள் ஆடிவருவதைக் காண விநோதமாக இருக்கும்.

இரண்டு சாதிக்காரர்கள் மட்டுமே புலி போட முடியும். அதுவும் வீதிக்கு ஒரு புலி தான் அனுமதிக்கபடும். அதுவும் வீமன் வாத்தியார் சொல்கிற ஆள் தான் புலி போட முடியும்.

வீமன் வாத்தியார் அந்த வட்டாரத்தில் புகழ்பெற்ற புலி வேஷக்காரர். பிறவியிலே பார்வையில்லாதவர். ஆனால் சிலம்பு. மான்கொம்பு சுற்றுவது எனத் துவங்கி புலி போடுவது வரை அவரை மிஞ்ச ஆள் கிடையாது. வீமன் வாத்தியார் மனைவி தான் லட்சுமியாபுரத்தின் பஞ்சாயத்து தலைவர். அவர்களுக்குத் திருமணமாகி முப்பது வருஷங்கள் கடந்து போனது. ஆனால் குழந்தைகள் இல்லை. அந்தக் கவலை தெரியாமல் இருப்பதற்காகவே தனது தங்கை சிவகாமி குடும்பத்தைத் தன்னோடு வைத்துக் கொண்டார் வீமன். பூமாலையை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். காரணம் பூமாலை தான் வீமனை புலிவேஷம் போடவைத்து பெரிய ஆட்டக்காரனாக்கியது.

“கண்தெரியாத தன்னால் எப்படிப் புலி போட முடியும்“ என்று வீமன் தயங்கிய போது பூமாலை தான் சொன்னார்

“சிலம்பு வரிசை படிச்சிருக்கீங்கள்ளே. அதே அடிமுறை தான். சிவக்கண்ணுவை கூட வச்சிக்கிட்டா புலிப்பாய்ச்சலை பழக்கிவிட்ருவான். நான் புலி வரைந்து விடுறேன். உங்க திறமை உங்களுக்கே தெரியாது“

அப்படிச் சொன்னதோடு புலி வேஷம் வரைந்து தன்னைப் புலியாக்கி காட்டியவன் பூமாலை. அந்த வருஷ விழாவில் அவரும் ஆவேசம் வந்த புலி போல ஆடினார். அந்த நினைப்பு அவரது மனதில் அழியாமல் இருக்கிறது.

வீமன் வாத்தியார் புலி போடுவதில் நிறையக் கட்டுபாடுகளைக் கொண்டு வந்தார். புலி வேஷம் கட்டுகிறவன் விரதமிருக்க வேண்டும். குடி பொம்பளை சகவாசம் கூடாது. ஊர் கட்டுப்பாட்டினை மீறி எவரும் புலி போடக்கூடாது. வீமன் வாத்தியார் கட்டுப்பாட்டினை மீறிய பரமகுரு என்ற லட்சுமியாபுரத்து இளைஞனுக்குப் புலி வேஷம் போடுவதற்குத் தடை விதித்தார் வீமன் வாத்தியார்

அவன் “முடிந்தால் தடுத்துப் பாரு“ என்று வீமன் வாத்தியாரிடம் சவால் விட்டான்.

“அவன் புலி வேஷம் கட்டி வந்தால் உயிரோடு வீடு திரும்ப முடியாது“ என்றார் வீமன் வாத்தியார்.

வீமன் வாத்தியாரின் எச்சரிக்கையை மீறி பரமகுரு புலி போட்டான். செந்தடி கருப்பு கோவிலை சுற்றி நிறையப் போலீஸை குவித்திருந்தார்கள். நீண்ட பல வருஷத்திற்குப் பின்பு வீமன் வாத்தியாரும் புலி போடுவது என்றுமுடிவு செய்தார். அவர் களத்தில் இறங்கினால் நிச்சயம் வெட்டுகுத்து நடக்கும் எனப் பயந்த லட்சுமியாபுரவாசிகள் பரமகுருவை தடுத்து நிறுத்தியதோடு ஊரைவிட்டும் அனுப்பி விட்டார்கள்.

ஆனால் இது நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆமத்தூர் ஜோசியரைப் பார்த்து வருவதற்காகக் காரில் சென்ற வீமன் வாத்தியாரும் உடன் சென்றவர்களும் விபத்தில் இறந்து போனார்கள். அது விபத்தில்லை. பரமகுரு தான் லாரியை விட்டு அடித்துக் கொன்றுவிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் வீமன் வாத்தியாரின் மரணத்திற்குப் பிறகு புலி போடுவதில் எந்தக் கட்டுபாடும் இல்லாமல் போனது. புலி சுற்றி வருவதில் அடிதடி நடந்தது. புலிவேஷமிட்ட ரெங்கனின் வலது கையை வெட்டிவிட்டார்கள். இதனால் போலீஸ் தலையிட்டு இனிமேல் எவரும் புலிவேஷம் போடக்கூடாது என்று தடை விதித்தார்கள்

இதனை எதிர்த்து காசியாபுரத்துக்கார்ர்கள் கோர்டிற்குச் சென்று அனுமதி பெற்று வந்தார்கள். அப்போதிலிருந்து யார் புலி வேஷம் போடுவது என்றாலும் காவல்துறையிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். அதுவும் எந்த ஊரிலிருந்து புலி எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும். எந்த வழியே வர வேண்டும் என்பது தீர்மானிக்கபட்டது.

••

அந்த வரும் காசியாபுரம் பஞ்சாயத்து தலைவர் தங்க மாரியப்பனின் கடைசி மகன் எழில் புலி போடுவதாக இருந்தான். அவன் மைனர் போலச் சுற்றி அலைபவன். அவனுக்குப் புலி வரைவதற்காகப் பூமாலையை அழைத்து வந்திருந்தார்கள்.. கையில் சிகரெட் புகைய புலி போடுவதற்காக அமர்ந்திருந்தவனைக் கண்டதும் பூமாலைக்குக் கோபம் வந்தது. எழில் மிதமிஞ்சிய போதையில் இருப்பது அவனின் கண்களிலே தெரிந்தது.

“இப்படிக் குடிச்சிட்டு மட்டு மரியாதை இல்லாம நிக்குறவனுக்கு எல்லாம் நான் புலி போட மாட்டேன்“ என்றார் பூமாலை

“குடுக்குற காசை வாங்கிட்டுப் பெயிண்ட் அடிச்சிவிடுறா. பெரிய பருப்பு மாதிரி பேசுறே“ என்றார் தனுக்கோடி

“,இது சாமி காரியம். அப்படி எல்லாம் செய்ய முடியாது. அதுக்கு வேற ஆளை பாருங்க“

“பெடதிலே நாலு போட்டுச் செய்ய வைப்பியா. இவன்கிட்ட போயி பேசிகிட்டு இருக்கே“ என்றார் சின்னராமு.

பூமாலைக்குக் கோபம் வந்தது.

“அதுக்கு எல்லாம் பயந்த ஆள் நானில்லை. “

“அந்த விறகு கட்டை எடுறா“ என்று தனுக்கோடி ஆவேசமானார். அவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து பூமாலையைத் தாக்கினார்கள். மணிக்கட்டிலே அடித்துக் கையை உடைத்தார்கள். “இந்தக் கை இருந்தா தானே பெயிண்ட் அடிப்பே“ என்று சொல்லிச் சொல்லி அடித்தார்கள்.

வலது கை மணிக்கண்டு உடைந்து பூமாலை இரண்டு மாதங்கள் சிகிட்சை எடுத்துக் கொண்டார். சோற்றை அள்ளி சாப்பிடுவதற்குக் கூட முடியவில்லை. தனுக்கோடி ஆட்கள் மீது போலீஸில் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அந்த வருஷத்தோடு அவரைப் புலிவேஷம் வரைவதற்கு எவரும் கூப்பிடுவதுமில்லை. மதுரையிலிருந்து ஆள் கூட்டிவரத் துவங்கினார்கள். பூமாலையை வைத்து எவரும் புலி வரையக்கூடாது என்றும் ஊர் தடை உருவாக்கினார்கள்.

இந்த அவமானத்தை எல்லாம் அனுபவித்த போது பூமாலை மனதில் ஒரு வெறி தோன்றி மறைந்தது. “இத்தனை வருஷம் எவன் எவனுக்கோ புலி போட்டு விட்ருக்கேன். ஆனால் என் மரியாதை இவங்களுக்குத் தெரியலை. இந்த வருஷம் நானே புலி போடப்போறேன்“ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்

பூமாலைக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. அவருடன் நெருங்கி பழகியது டெய்லர் லட்சுமணன் மட்டுமே. அவரிடம் இந்த யோசனையைச் சொல்லிய போது “உனக்கு ஏன்பா இந்த வீண்வேலை. நீ புலி போட்டு என்ன ஆகப்போகுது. பிழைக்கிற வழியைப் பாரு“

“நான் வீமன் வாத்தியாருக்கே புலி போட்டுவிட்டவன். இன்னைக்கு என்னைக் கூப்பிட ஒரு நாதியும் இல்லை. பெயிண்ட் அடிக்கிற வெறும்பயனு நினைச்சிட்டாங்க. நானும் புலியாடுவேன். என்னை மிஞ்சி எவன் ஆடுறானு பாக்குறேன்“

சொன்னது போலவே அந்த வருஷம் புலி போடப்போவதாகப் பூமாலை காவல்துறையின் அனுமதி வாங்கினார். அது தங்க மாரியப்பனுக்கு ஆத்திரத்தை உருவாக்கியது. அவனைத் தேடிச் சென்று எச்சரிக்கை செய்து வந்தார். ஆனால் பூமாலை சொன்னபடியே புலி போட்டான். காசியாபுரத்துப் புலியாகக் களம் இறங்கிய எழில் ஆடிவரும் போது வேண்டுமென்றே எதிர்போட்டான்.

இரண்டு புலிகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளக் கூடாது. மீறி எதிர்வந்துவிட்டால் ரெண்டில் ஒரு புலி தான் மிஞ்ச வேண்டும். ஆவேசமாகக் காசியாபுரத்து புலியும் பூமாலையும் மோதினார்கள். பூமாலையின் உடலுக்குள் சிகிலன் புகுந்து கொண்டது போலிருந்தது. காசியாபுரத்து புலியான எழிலைக் கடித்து இழுத்துச் சென்று போட்டான் பூமாலை. அந்த வெற்றியை கூட்டம் ஆரவாரம் செய்தது.

கோவிலின் முன்பு சென்று வணங்கி ஆவேசம் அடங்கிய போது பூசாரி “இத்தனை வருஷத்துல இப்படி ஒரு புலியை பாத்தது இல்லே“ என்று சொல்லி நெற்றியில் திருநீறு பூசிவிட்டார்

மகிழ்ச்சியோடு உடலில் வரையப்பட்ட வண்ணங்களைத் துடைத்துக் கொள்வதற்காகக் கிணற்றடியில் மண்ணெண்ய் பாட்டிலோடு உட்கார்ந்திருந்தான். தனது புலிப்பாய்ச்சலை மனைவியும் மகனும் பார்த்திருக்க வேண்டும். ஆனால் தன்மீது உள்ள கோபத்தால் பார்க்காமல் போய்விட்டார்களே என்று நினைத்துக் கொண்டபடியே எண்ணெய்யால் வண்ணங்களைத் துடைத்துக் கொண்டான். யாரோ பின்னால் வந்து நிற்பது போலத் தெரிந்தது. அவன் பின்னந்தலையில் அடி விழுந்தது. மண்டைஉடைந்து ரத்தம் பெருகியோட மயங்கினான். புலி வேஷத்துடன் இறந்து கிடந்த பூமாலையின் உடல் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது.

••

வெயிலானைத் தேடி டெய்லர் லட்சுமணன் வந்திருந்தார். பரோட்டா மாவு பிசைந்தபடியே “என்ன கோர்ட்டில ஊத்திக்கிச்சா“ என்று கேட்டான் வெயிலான்

“இன்னைக்கு உங்கப்பனை ரெண்டாவது தடவையா கொன்னுட்டாங்க“ என்றார் டெய்லர் லட்சுமணன்

“தண்டத்துக்கு எங்க அம்மா எவ்வளவு காசை செலவு செய்துருக்கு தெரியும்லே. அதை என்கிட்ட குடுத்து இருந்தா நான் ஒரு பரோட்டா கடை வச்சிருப்பேன்“

“உங்கப்பன் செஞ்சதும் இப்படியான வேலை தான்“

“புலி போடுறதாலே என்ன கிடைக்கப் போகுது சொல்லுங்க“

“காசு பணத்தை எப்பவும் சம்பாதிக்கலாம். ஆனா மனுசனா பிறந்தா மான அவமானத்துக்குப் பயப்படணும். ரோஷமா வாழணும். இல்லேன்னா அவன் செத்த பொணம்“

“இப்படிச் சொல்லி தான் எங்க அப்பனை ஏத்தி விட்டீங்களா“

“அவன் நான் சொல்லி கேட்குற ஆள் கிடையாது. உங்க அண்ணனுக்கு இருக்கிற ரோஷம் உனக்கில்லே. அவனைப் போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்களாமே“

“ஜெயில்ல கிடந்து சாகட்டும்“

“அதுவும் சரிதான். உன்னை மாதிரி அவனும் பொணமா வாழ்ந்துகிட்டு இருக்க முடியாதுல்லே“

“நான் ஒண்ணும் பொணமில்லை“

“நீ உயிரோடு இருக்கிறதா நினைச்சா. உங்கப்பன் எப்படிச் செத்தானு விசாரி. “

“ஏன் என்னையும் புலி வேஷம் போட்டு சாகச் சொல்றயா“

“பூமிக்கு பாரமா நூறு வருஷம் வாழ்ந்து என்ன செய்யப்போறே. இந்தா கிடக்கே குத்துக்கல். அதுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். பரோட்டா போடுற உன் கையை உடைச்சிவிட்டா. நீ என்ன செய்வே. அதைத் தான் உங்க அப்பன் செய்தான். நீயே நாலு பேர்கிட்ட விசாரிச்சி பாரு. அப்போ புரியும்“

பரோட்டா மாவு பிசைந்து வைத்துவிட்டு வெயிலான் யோசிக்கத் துவங்கினான். ஏன் அப்பாவின் மீது இவ்வளவு வெறுப்பு. அம்மாவை இரண்டாம் தாரமாக வைத்துக் கொண்டார் என்பது மட்டும் தானா. அப்பா இறந்து அம்மாவும் அவனும் நடுத்தெருவில் நின்ற போது ஏற்பட்ட அவமானங்கள் தானா. யோசிக்க யோசிக்கத் தலைவலிக்க ஆரம்பித்தது

••

கோவில் சுவரில் அப்பா வரைந்திருந்த மாரியம்மன் உருவத்தையே வெயிலான் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா தனது பெயரான பூமாலை என்பதை மாலை போலவே அழகான வடிவமாக எழுதியிருந்தார். அப்பாவின் ஒரேயொரு புகைப்படம் வீட்டிலிருக்கிறது. வேறு புகைப்படம் ஏதாவது டெய்லர் லட்சுமணனிட்ம் இருக்குமா. ஏன் சாரதிக்கு வரும் கோபம் தனக்கு ஏற்படவில்லை. அவனைப் போலீஸ் ஸ்டேஷனில் போய்ப் பார்த்து வர வேண்டுமா. யோசனை.  ஒன்றுக்கு மேல் ஒன்றாக யோசனைகள். ஆச்சரியங்கள்.  சுனையை அடைத்துக் கொண்டிருந்த கல் விலகி நீர் பெருக்கெடுப்பது போல அப்பாவைப் பற்றி அறியாத விஷயங்களை அறிந்து கொண்டான். கேட்க கேட்க வியப்பாக இருந்தது. புகைப்படத்தில் சாந்தமாக தெரியும் இந்த மனிதனின் வாழ்க்கை இவ்வளவு ஆச்சரியங்கள் கொண்டதா என்று அவனால் நம்ப முடியவில்லை.

அதைவிடவும் சிகிலன் தாத்தாவைப் பற்றிக் கேள்விபட்ட போது பிரமிப்பாக இருந்தது. தனது தந்தை  பூமாலையின் மீது எந்தத் தவறும் இல்லை. அவரைக் காசியாபுரத்துகார்ர்கள் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அடித்து கையை உடைத்திருக்கிறார்கள். அந்த ஆவேசத்தில் அவர் புலி போட்டு ஆடினார்.  புலி வேஷமிட்ட எழில் அவரிடம் அடிபட்டு இடும்பு எலும்பு முறிவு கொண்டுவிட்டதை தங்க மாரியப்பனால் தாங்க முடியவில்லை. அப்பாவைக் கொன்று கிணற்றில் வீசிவிட்டார்கள்.

அப்பாவோடு பழகியவர்கள் அவரைப் பெருமையாக நினைவு கொள்கிறார்கள். வீமன் வாத்தியாரின் மனைவி அப்பாவைப் பற்றிப் பேசமுடியாமல் கண்ணீர் சிந்தினாள். சினிமா தியேட்டர் மேனேஜர் கணபதி ஆயிரம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்பாவின் புலிப்பாய்ச்சலை பார்க்காமல் போய்விட்டோமே என்று வெயிலானுக்கு ஏக்கமாக இருந்தது

••

அந்தத் திங்கள்கிழமை சாரதியை கோர்ட்டிற்கு ஆஜர் படுத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டு அவனும் அம்மாவும் போயிருந்தார்கள். அப்பாவின் மூத்த தாரத்து மனைவியும் அவரது மகன் சாரதியும் இத்தனை காலம் எதிரிகளாகத் தெரிந்தார்கள். ஆனால் இன்று அந்த வெறுப்பு மறைந்து போயிருந்தது. சாரதியைச் சொந்த அண்ணன் என்றே வெயிலான் உணர்ந்தான். கோர்ட் வாசலில் கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்த சாரதியின் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சிந்தாமணி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்

சாரதியை போலீஸார் அழைத்துக் கொண்டு வந்த போது வெயிலான் அருகில் சென்று அவன் காதில் கேட்பது போலச் சொன்னான்

“நான் புலி போடப்போறேன்“

“அந்த மசிரை எல்லாம் நான் பாத்துகிடுவேன். நீ ஒழுங்கா குடும்பத்தைக் கவனி“

“உங்கம்மாவை எங்க வீட்ல வந்து இருக்கச் சொல்லு. நான் பாத்துகிடுறேன்“

“அதெல்லாம் சரிப்படாது. எங்கம்மா செலவுக்கு ஏதாவது காசு குடு அது போதும். “

“என்னை மன்னிச்சிரு அண்ணே. இத்தனை நாளா உன்னைப் புரிஞ்சிகிடலை“ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் வெயிலான் சொல்லவில்லை.

••

சாரதியை மதுரை சிறைச்சாலையில் அடைத்திருந்தார்கள். அம்மாவும் அவனும் வாரம் ஒருமுறை போய்ப் பார்த்து வந்தார்கள். சில நேரம் சாரதியின் அம்மாவும் அவர்களுடன் வருவாள். சாரதியின் கோபம் அடங்கியிருந்தது. ஹைகோர்ட்டில் வழக்கை மீண்டும் அப்பீல் செய்ய வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சாரதி

அந்த ஆண்டுச் செந்தடி கருப்பு கோவிலுக்குத் திருவிழாச் சாட்டினார்கள். புலி போடுவதற்காக ஆட்கள் காவல்துறையிடம் விண்ணப்பம் கொடுத்தார்கள். அதில் வெயிலானின் விண்ணப்பமும் இருந்தது. அதைப் பரிசீலனை செய்த காவல்துறை அதிகாரி “உங்கப்பா பேரு பூமாலை தானே. நீ காசியாபுரத்து புலி போன பிறகு தான் வேஷம் கட்டணும். இப்பவே சொல்லிட்டேன் பாத்துக்கோ“. என்றார். சிரித்தபடியே “ஒரு பிரச்சனையும் வராது சார்“ என்றான் வெயிலான்.

அவன் புலிவேஷம் போடுவதற்கு அனுமதி வாங்கிய இரவில் தங்க மாரியப்பன் அவனை ஆள் அனுப்பி வரவைத்திருந்தார். அவரது டின்பேக்டரிக்கு வெயிலானை அழைத்து வந்திருந்தார்கள்

“உனக்கு எதுக்குத் தம்பி இந்தப் புலிவேஷம் எல்லாம். உங்கப்பா தான் அற்ப ஆயுசில போயிட்டார். நீயாவது வாழணும்லே“

“நான் என்ன செய்யணும் அண்ணாச்சி“

“புலி போடலைணு ஒதுங்கிக்கோ. சுப்பு.. இவனுக்கு அந்தக் காசை குடுறா“ எனக் கையைக் காட்டினார்.

மஞ்சள் பையில் வைத்திருந்த ஒரு கட்டுப் பணத்தை ஒருவன் வெளியே எடுத்து நீட்டினான். அதை வாங்க மறுத்தபடி வெயிலான் சொன்னான்.

“இது எல்லாம் எதுக்கு அண்ணாச்சி காசு.. நான் ஒரு அடி எடுத்து வைக்குறதுக்குள்ளே நீங்க இவ்வளவு பயப்படுவீங்கன்னு நான் நினைச்சி கூடப் பாக்கலை. ஆனா உங்களை இப்படிப் பாக்க நல்லா இருக்கு. வர்றேன் “

“அப்போ புலி போடப்போறயா“

“புலி யார் சொன்னாலும் கேட்காது அண்ணாச்சி. “

தங்க மாரியப்பன் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். இருவர் மனதிலும் ஆயிரம் திட்டங்கள் இருந்தன. புலியின் நடமாட்டமும் பாய்ச்சலும் முன் அறிய முடியாதவை. எதிரியை புலி கண்காணிக்கும். காத்திருக்கும். ஆனால் அது பாயும் போது எதிரியின் கதை முடிந்துவிடும்.

வெயிலான் இரண்டு வாரங்கள் ஆரியங்காவிலுள்ள காளிங்கன் வம்சாவழியில் வந்த திவாகர ஆசானிடம் புலிக்கலி கற்றுக் கொண்டு திரும்பினான்.

பின்பு பௌர்ணமி நாளின் காலையில் வெயிலான் தனது தந்தையை வணங்கிக் கொண்டு புலி வேஷம் போட அமர்ந்திருந்தான். சிந்தாமணி தனது மகன் உடலில் புலி வரைய ஆரம்பித்தாள். புலியாக உருமாறிய வெயிலான் அம்மாவைப் பார்த்துச் சிரித்தான்.

“என் கண்ணே பட்ரும் போல“ என்றாள் அம்மா.

வெயிலான் அம்மாவின் முன்னால் பாய்ந்து தாவி புலி பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தான். அதன் சாட்சியமாக வெயில் நின்றிருந்தது

செந்தடி கருப்புக் கோவில் விழா அன்று வழக்கத்தை விடப் போலீஸ் அதிகம் நின்றிருந்தார்கள். ஏதோ நடக்கப்போகிறது என்று மக்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.

வெயிலான் வேஷமிட்டு வருகிறானா என்று பார்ப்பதற்கு ஆள் நியமித்திருந்தார்கள். லட்சுமியாபுரத்து புலி. செக்கடி கிராமத்து புலி எனப் பல புலிகள் இறங்கி விளையாட்டு காட்டின. காசியாபுரத்துப் புலியாகத் தங்கமாரியப்பனின் இரண்டாவது மகன் பிரபு இறங்கி வந்தான். தாள முழக்கம் வேகம் எடுக்க அவன் ஆடி வந்த போது தெற்குதெரு மாடி ஒன்றிலிருந்து தாவிக் குதித்தது ஒரு புலி. அது ரெக்கை கட்டிய புலி. பிரபுவிற்கு எதிர்புலி போட வெயிலான் இறங்கினான்.

அப்படி ஒரு ரெக்கை விரித்த புலியை ஊர்மக்கள் கண்டதேயில்லை. சிகிலனின் வாரிசு என்பது போல வெயிலான் ஆவேசமாக நின்றிருந்தான். அவனது கோபத்திற்குத் துணை சேர்ப்பது போல வெயில் உக்கிரமாகத் தனது ஆட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

கருப்பு கோவில் வேம்பில் அமர்ந்திருந்த காகங்கள் நடக்கப் போவதை அறிந்து கொண்டது போலச் சப்தமாகக் கரைந்து கொண்டிருந்தன.

••

0Shares
0