புதிய குறுங்கதை.
அப்பாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. சில நாட்கள் தந்திமரத்தெருவில் இருந்த கோல்டன் டெய்லர்ஸ் கடையின் முன்பாகப் போய் நின்று கொள்வார். அந்த டெய்லரிடம் எந்த உடையும் அவர் தைக்கக் கொடுக்கவில்லை. ஆனால் எதற்கோ காத்திருப்பவர் போல அங்கே நின்றிருப்பார். அவரது பார்வை தையல் இயந்திரத்தின் மீது நிலைகுத்தியிருக்கும். கடைக்குள் வரும்படி டெய்லர் விஜயன் அழைத்தாலும் வர மாட்டார். அந்தக் கடையினுள் என்ன பார்க்கிறார் என்று தெரியாது. வீட்டிலிருந்து யாராவது போய் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். கையைப் பிடித்து இழுத்தாலும் வர மாட்டார். காந்தத்தால் இழுக்கபடும் இரும்பு ஆணியைப் போல அந்தக் கடை அவரை இழுத்துக் கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியாத வேறு காட்சிகள் எதுவும் அவருக்குத் தெரிகிறதோ என்னவோ. அப்பா அப்படி நிற்கும் நாட்களில் விஜயன் குற்றவுணர்ச்சி கொள்வது வழக்கம். தவறுதலாக கத்தரித்துப் போட்ட பட்டுத்துணியைப் போல அப்பாவைக் காணுகிறாரோ என்னவோ. சற்றே வளைந்த கழுத்துடன் நின்றிருந்த அப்பா மறந்து போன சொல் திரும்ப நினைவிற்கு வந்துவிட்டது போலச் சில மணி நேரத்தின் பின்பு தலையை உலுக்கியபடி நல்லது என்று சொல்லுவார். என்ன நல்லது. யாருக்குச் சொல்கிறார் என்று எவருக்கும் புரியாது.
••
அம்மாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. விறகு அடுப்பு இருந்த நாட்களது. சமைக்கும் போது அடுப்பில் எரியும் நெருப்போடு பேசிக் கொண்டிருப்பாள். சில வேளைகளில் அவனே என்று நெருப்பைச் சொல்வாள். சில வேளைகளில் அவளே என்று திட்டுவாள். தீக்கொழுந்துகள் வேகமாகி சப்தமிடும் போது திடீரென ஒரு கை உப்பை அள்ளி அடுப்பில் போடுவாள். அடுப்பினுள் எதற்காக உப்பைப் போட வேண்டும் என்று தெரியாது. மங்களம் அக்கா கேட்டதற்கு நெருப்போட வாயை அடக்கணும் என்று சொல்வாள் அம்மா. உப்பால் நெருப்பின் வாயை அடக்க முடியுமா என்ன. ஆனால் அம்மா அதைக் கண்டுபிடித்திருக்கிறாள். நெருப்பை அல்ல உப்பைத் தண்டிக்கிறாள் என்பாள் மங்களம். சமைப்பவர்களுக்கு எனச் சில விசித்திர நம்பிக்கைகள் பழக்கங்கள் இருப்பது இயல்பு தானா.
••
மங்களம் அக்காவிற்கு ஒரு பழக்கமிருந்தது. அவள் படுத்திருக்கும் மரக்கட்டிலிற்குக் கிழே ஒரு ஜோடி குழந்தை காலணியைப் போட்டு வைத்திருப்பாள். குழந்தைகள் அணியும் செருப்பு கிடந்தால் கெட்ட கனவுகள் வராது என்பது அவளது நம்பிக்கை. அப்போது அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. யார் சொல்லி அப்படிச் செய்கிறாள் என்று தெரியவில்லை. மூடிவைக்கபட்ட கண்ணாடி பாட்டிலின் மீதேறிய எறும்புகள் ஏமாந்து திரும்பிப் போவது போலத் துர்கனவுகள் அக்காவின் செருப்பின் வரை வந்து அவளுக்குள் நுழைய முடியாமல் திரும்பிப் போகின்றன என்பது விசித்திரமாக இருந்தது.
••
தாத்தாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. அவரது ஒரு கண்ணில் தான் அழுகை வரும். எப்போது அவர் மனத்துயர் கொண்டாலும் அவரது வலது கண்ணில் இருந்து மட்டுமே கண்ணீர் கசியும். இடது கண்ணில் இதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் வந்ததில்லை. எப்போதோ இதைப்பற்றிக் கேட்டதற்கு இடது கண் உலகிற்கானது, வலது கண் வீட்டிற்கானது என்றார் தாத்தா. அப்படிக் கண்களைப் பிரித்துக் கொள்ள முடியுமா என்ன. தாத்தாவால் முடிந்திருக்கிறது.
••