சோம்பல் நாயகன்


ருஷ்ய இலக்கியத்தின் பிரதான படைப்பாளி களாக அறியப்பட்ட செகாவ் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி,  கார்க்கி போன்றவர்களின் படைப்புகள் அறிமுகமான அளவு அதே காலகட்டத்தை சேர்ந்த பல முக்கிய படைப்புகள்  உலக இலக்கிய பரப்பிற்குள் அறிமுகமாகவில்லை. அவை பல ஆண்டு காலமாக முறையான ஆங்கில மொழி பெயர்ப்பின்றி  முடங்கி கிடந்துள்ளன.


தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் வியந்து போற்றி தங்களது எழுத்துலக போட்டியாளர் என்று வர்ணித்த இவான் கோன்சரோவின் (Ivan Goncharov) படைப்புகள் ஆங்கிலத்தில் நூறு வருடத்திற்கு பிறகு தற்போது தான் நல்ல மொழிபெயர்ப்பில் வாசிக்க கிடைக்கின்றன.


குறிப்பாக ருஷ்ய இலக்கியத்தில் மிகப் பிரபலமான நாவலாக அறியப்பட்ட கோன்சரோவின் ஒப்லமோவ் (Oblomov)நாவல் தற்போது சிறப்பான மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது. செவ்வியல் நாவலாசிரியர்கள் என்று கொண்டாடப்படும் டால்ஸ்டாய்,தஸ்தாயெவ்ஸ்கி இருவரது ஆளுமை யிலிருந்தும் விடுபட்டு தனக்கென தனித்துவமான ஒரு கதை சொல்லலையும் அக உலகையும் கொண்டிருந்த கோன்சரோவின் படைப்பு உலகம் முழுவதும் தனித்த வாசகர்களை உருவாக்கியிருக்கிறது


1858 ஆண்டு ருஷ்ய மொழியில் வெளியான ஒப்லமோவ்  கான்சிரோவின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலின் கதாநாயகன் வழக்கமான ருஷ்ய நாவல்களின் நாயகனை போல சாகசத்தை தனது இலக்காக கொண்டவன் அல்ல. மாறாக தன்னுடைய படுக்கையை விட்டு கிழே இறங்காமல் இருந்த இடத்தில் இருந்தபடியே தன் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் பணக்கார பிரபுவின் கதை தான் ஒப்லமோவ்.


ஒப்லமோவ் என்ற  பெயர் காலமாற்றத்தில் சோம்பேறிதனம் என்பதன் அடை மொழியாக உருமாறி போயுள்ளது. ருஷ்யப் புரட்சிக்கு பிறகு உரையாற்றிய லெனின் தேசமே புரட்சியில் கொந்தளிப்பு அடைந்துள்ள போதும் இன்னும் சில ஒப்லமோக்கள் தங்கள் படுக்கையை விட்டு கிழே இறங்கவேயில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.அந்த அளவு ருஷ்ய மக்களிடம் செல்வாக்கு பெற்ற கதாபாத்திரமாக அடையாமாகி உள்ளது ஒப்லமோவ்.


ருஷ்ய இலக்கியத்தின் பிரதான போக்கான யுத்தமும் அடிதட்டு மக்களின் வாழ்க்கை போராட்டத்தை விவரிப்பதுமாகவே  அமைந்திருந்தன. அதிலும் ருஷ்ய யதார்த்தவாதம் என்ற கதை சொல்லும் பாங்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிக தீவிரமான இலக்கிய போக்காக இருந்தது. துர்கனேவும் டால்ஸ்டாயும் இந்த இலக்கிய போக்கிற்கு முக்கிய தூண்களாக இருந்தனர். விவசாயிகள் மற்றும் அடிநிலை மக்களின் வாழ்வை நெருங்கி சித்திரிப்பதில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள்.


தஸ்தாவெஸ்கி இன்னொரு புறம் குற்றமனப்பாங்கினையும் அடக்கபட்ட உணர்ச்சிகள் கொண்ட மனிதர்களின் உளச்சிக்கல்களையும் தனது நாவல்களின் மையமாக கொண்டு எழுதி வந்தார். பிரதான ருஷ்ய கதாசிரியர்களின் இலக்கிய போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை சொல்லலை முன் வைத்த நாவலாசிரியராக லெர்மன்தேவை சொல்லலாம். அவரது நம் காலத்து நாயகன் நாவலின் கதாநாயகன் பிச்சோரின் ருஷ்ய இலக்கியத்தின்  தனித்துவமான பாத்திரப்படைப்பாகும்.


பிச்சோரின் சாகசங்களின் பாதையில் அலைந்து திரிபவன். காதலும் வீரமும் மட்டுமே அவனது உலகம். பிச்சோரின் மனத்துணிவும் நேரடியான செயல்பாடும் லெர்மன்தேவால் நுட்பமாக வெளிப்படுத்தபட்டுள்ளன. பிச்சோரினுக்கு நிகராக உருவாக்கபட்ட பாத்திர படைப்பே ஒப்லமோவ்


ஆனால் ஒப்லமோவ் சாகசங்களுக்கு எதிரானவன். ஒருவகையில் இவன் ஒரு ருஷ்ய ஹாம்லெட்.  ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் பழிவாங்குவதா வேண்டமா என்ற மனக்குழப்பம் கொண்டவன்.ஒப்லமோவின் குழப்பம் அவ்வளவு தீவிரமானதல்ல. ஆனால் அதே அளவு நெருக்கடி கொண்டது. ஒப்லமோவிற்கு உள்ள ஒரே பிரச்சனை வாழ்வை எப்படி எந்த மாற்றமும் இல்லாமல் சுகமாக கொண்டு செல்வது என்ற முடிவின்மை மட்டுமே.


அவனது ஒரே விருப்பத்திற்கு உரிய இடம் படுக்கை அறை மட்டுமே. அதை படுக்கை அறை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அது தான் அவனது படிப்பறை. உணவு உட்கொள்ளும் அறை. விருந்தினர்களை சந்திக்கும் அறை. தூங்கினாலும் விழித்திருந்தாலும் அவன் படுக்கையை விட்டு எழுந்து கொள்வதேயில்லை.


நாவலிலும் முதல் நூறு பக்கங்கள் ஒப்லமோவ் தனது படுக்கையிலே கிடக்கிறான்.முப்பது வயதை கடந்த நிலப்பிரபுவான அவன் சோம்பல் பீடித்தவனாக உறக்கத்திலிருந்து எட்டு மணிக்கு எழுந்து அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் வெற்று யோசனைகளுடன் படுக்கையில் புரண்டு படுத்துக் கொள்கிறான்.


பிறகு இப்படியே இருந்தால் தன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று தனக்கு தானே கவலைப்பட்டு கொள்கிறான். ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றுகின்றதேயன்றி என்ன செய்வது என்று புரியவில்லை.


ஒப்லமோவிற்கு சொந்தமான எஸ்டேட் ஒன்று ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது. அந்த எஸ்டேட்டின் நிலைமை மிக மோசமாகி வருகிறது ஆகவே ஒரு முறை நேரில் வந்து போகவும் என்று அதை நிர்வகிக்கும் மேலாளர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அந்த கடிதத்திற்கு இன்று பதில் எழுதி விடலாம் என்று முடிவு செய்கிறான் ஒப்லமோவ். ஆனால் அந்த கடிதத்தை எங்கே வைத்தான் என்று அவனுக்கு தெரியவில்லை.


இந்த குழப்பத்தின் ஊடாக படுக்கையை விட்டு கிழே இறங்க மனதின்றி அப்படியே உட்கார்ந்தபடியே எதை எதையோ யோசிக்கிறான். பிறகு அவனது வேலைக்காரனான ஜாகிரை அழைக்கிறான்.அந்த வீட்டில் உள்ள ஒரே வேலைக்காரன் ஜாகிர் மட்டுமே. அவனுக்கு பல நேரங்களில் தன் எஜமானின் சோம்பேறிதனம் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது. அதே நேரம் மனதளவில் தன் எஜமான் மிக சிறந்தவர் என்ற பாராட்டு உணர்வும் அவனிடமிருக்கிறது


ஒப்லமோவின் அறைக்குள் நுழைந்த வேலையாள் என்ன வேண்டும் என்று கேட்கிறான். ஒப்லமோவிற்கு  எதற்காக அவனை அழைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. யோசித்து எதற்காக அழைத்தேன் என்று நினைவு வரும்போது அழைக்கிறேன் அதுவரை உன் வேலையை பார் என்று அனுப்பி விடுகிறான். சில நிமிசங்களுக்குப் பிறகு அவனுக்கு தான் ஒரு கடிதம் எழுத நினைத்த விஷயம் நினைவிற்கு வருகிறது. அதற்குள் இன்னொரு தேநீர் அருந்திக் கொள்ளலாம் என்றும் ஒரு யோசனை உருவாகிறது.


திரும்ப ஜாகீரை அழைக்கிறான். தனக்கு வந்த கடிதத்தை தேடி எடுத்து வரச் சொல்கிறான். அவர் எங்கே வைத்திருக்கிறார் என்று தனக்கு எப்படி தெரியும் என்று புலம்பியபடியே ஜாகீர் அறையில் தேடுகிறான். அறை முழுவதும் ஒரே குப்பையாக உள்ளது. பல நாட்களாக சுத்தம் செய்யப்படாத தரைவிரிப்புகள். சிலந்தி வலை பின்னிய சுவர்கள். பாதி சாப்பிட்டு தூக்கி எறிந்த ரொட்டி துண்டுகள்,படித்துவிட்டு பாதியில் திறந்து கிடந்த புத்தங்கள் தூசியேறி யிருக்கின்றன.


இரவு உடை அணிந்திருந்த ஒப்லமோவ் தன்னைச் சுற்றிய குப்பைகளைப் பெரிதாக கவனத்தில் கொள்ளவேயில்லை. ஜாகீர் கடிதத்தை தேடியபடியே தாங்கள் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக பலசரக்கு கடைக்காரனும் இறைச்சிகடைக்காரனும் காத்திருப்பதாக சொல்கிறான்.சிறிய கணக்கு என்றாலும் அதைப் பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை இன்னொரு நாள் வரச்சொல் என்று ஒப்லமோவ் மறுத்துவிடுகிறான்.


ஜாகீர் திரும்பவும் சமையல் அறையில் சென்று தனது அன்றாட வேலையைக் கவனிக்க துவங்குகிறான்.கடிதம் கிடைக்கவில்லை ஆகவே உடனே படுக்கையை விட்டு எழுந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒப்லமோவிற்கு தோன்றுகிறது. ஆகவே அவன் திரும்பவும் சாய்ந்து கொண்டு யோசிக்கத் துவங்குகிறான். திடீரென்று ஜாகீர் ஜாகீர் என்று கூச்சலிடுகிறான்.


அவசரமாக ஒடிவந்த ஜாகீர் என்ன வேண்டும் என்று கேட்க தனது கர்சீப் எங்கேயிருக்கிறது என்று தேடிப்பார் என்று கத்துகிறான்.அதற்குள் ஒப்லமோவிற்கு தும்மல் வந்து கொண்டு வேறு இருக்கிறது. ஜாகீர் கர்சீப்பைக் கூடவா நீங்களாக தேடி எடுத்துக் கொள்ள கூடாது என்று நேரடியாகே சொல்கிறான். கடைசியில் கர்சிப்  ஒப்லமோ உட்கார்ந்த இடத்தின் அவன் தொடைக்கு அடியிலே கிடக்கிறது.


இப்படியே காலை முழுவதும் ஒப்லமோவ் படுக்கையிலே கிடக்கிறான். அவனைப் பார்க்க வரும் நண்பரை கூட அங்கேயே சந்திக்கிறான். தனது அறையில் உள்ள ஒழுங்கீனத்திற்கு காரணம் தனது வேலைக்காரன் என்று பழியை அவன் மீது போடுகிறான்.ஒப்லமோவின் நண்பன் ஒரு இரவு விருந்திற்கு அழைக்கிறான்.


ஒப்லமோவோ தனக்கு வீட்டை விட்டு வெளியேறி வர விருப்பமேயில்லை. இந்த வீட்டில் நான்கு அறைகள் உள்ளன. இருந்தாலும் படுக்கை அறையை விட்டு இன்னொரு அறைக்குப் போய்வருவதற்கே தனக்கு பிடித்தமானதாக யில்லை என்று புலம்புகிறான்.


ஒப்லமோவ் இப்படியே அறையிலே அடைந்து கிடப்பதற்காக காரணமாக அவனது பால்யவயது விவரிக்கபடுகிறது.வசதியான வீட்டில் பிறந்த ஒப்லமோவ் நல்ல சாப்பாடும் சொகுசான தூக்கமுமாக வளர்க்கபடுகிறான். பாதி நாட்களுக்கு மேல் பள்ளிக்கு போவததேயில்லை. எங்காவது  சுற்றுலா அழைத்து செல்லபட்டுவிடுவான்.இப்படியாக வளர்ந்த காரணத்தால் அவனுக்கு இருப்பிடமே சொர்க்கமாக தோன்றுகிறது.


ஒப்லமோவிற்கு உள்ள ஒரே நட்பு அவனது தோழன்  ஸ்டோல்ஜ். ருஷ்ய தாயிற்கும் ஜெர்மனிய தகப்பனிற்கும் மகனாக பிறந்த ஸ்டோல்ஜ் மிகக் கண்டிப்பாக வளர்க்கபடுகிறான்.வாழ்வில் ஒரு நாளைக் கூட வீண் அடித்துவிடக்கூடாது என்ற கவனம் அவனது எண்ணத்திலிருக்கிறது. அவன் எப்படியாவது ஒப்லமோவை மாற்றிவிட முடியும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறான். ஆனால் அது வெற்றி பெற முடியவில்லை.


முப்பது வயதைத் தாண்டுவதற்குள் ஒப்லமோவிற்கு வெளியுலகம் அலுத்து போய்விடுகிறது.அறைக்குள்ளாகவே பகல்கனவு கண்டபடியே சாப்பாடும் யோசனைகளுமாக அவனது நாட்கள் நீண்டு கொண்டிருக்கின்றன


ஒருவகையில்ஒப்லமோவ் டான்குவிகாத்தேயின் சாயலைக் கொண்டிருக்கிறான். டான் குவிகாத்தேயும் சான்சோ பான்சோவும் போலவுமே ஒப்லமோவும் அவனும் வேலைக்காரனும் பல நேரங்களில் நடந்து கொள்கிறார்கள். ஆனால் டான் குவிகாதேவிற்கு சாகசம் செய்ய வேண்டும் என்ற விருப்பமிருக்கிறது. கற்பனையான எதிரிகளோடு சண்டையிடுகிறான்.


ஒப்லமோவோவிற்கு அத்தகைய ஆசைகள் இல்லை.அவன் தனது பகல்கனவில் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது போன்றும் தனது பண்ணையைப் பெரியதாக விஸ்தாரணம் செய்து நிர்வகிப்பது போன்றும் கனவு காண்கிறான். ஒருவிதத்தில் அவனுக்கு வீடும் படுக்கை அறையுமே போதுமானதாக இருக்கிறது


உலகின் பரபரப்பையும் தீர்மானிக்க முடியாத அதன் மாற்றங்களையும் ஒப்லமோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் மாறாத ஒரு உலகில் சகல சௌகரியங்களோடும் ஒளிந்து கொண்டு வாழவே விரும்புகிறான். அதற்கு அவனது வீடு பாதுகாப்பானதாகயிருக்கிறது. நத்தை தன் முதுகில் தன் வீட்டை சுமந்து திரிவது போல ஒப்லமோவ் தன் அறைக்குள்ளாகவே சுருண்டு கிடக்கிறான்


ஆனால் மாற்றமில்லாத வாழ்க்கையே இல்லை என்பது போல அவனையும் மாற்றுவதற்கு ஒரு பெண் வந்து சேர்கிறாள். இசையில் ஆர்வம் கொண்டிருந்த ஒப்லமோவிற்கு அவனது நண்பன் ஒல்கா என்ற பாடகியை அறிமுகம் செய்து வைக்கிறான்.


அவள் ஒப்லமோவின் சோம்பேறிதனத்தை அறிந்து கொண்டவளாக அவனை தன்னால் மாற்றிவிட முடியும் என்று கூறி முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே அழைத்து செல்கிறாள். ஒப்லமோவ் அவளோடு மலைப்பயணத்திற்கு செல்கிறான்.அவளுக்காக கவிதைகள் படித்து காட்டுகிறான்.கொஞ்சம் கொஞ்சமாக அவன் வெளி உலகில் சஞ்சரிக்கத் துவங்குகிறான். அவளால் மட்டுமே வாழ்வை சுவாரஸ்யப்படுத்த முடியும் என்று நம்புகிறான்


ஒல்காவின் மீதான காதல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒருவேளை தான் ஒல்காவைத் திருமணம் செய்து கொண்டால் எல்லாக் கணவன்களையும் போல குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் அதற்காக வேலைகள் செய்ய வேண்டும் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் ஆகவே அவளது காதலை விட்டு மெல்ல வெளியே திரும்பவும் தன் அறைக்குள் சென்று ஒடுங்கி கொண்டுவிட வேண்டியது தான் என்று திடீரென முடிவு செய்கிறான்.


அதன்படியே ஒல்காவை விட்டு பிரிந்து செல்கிறான். அவனது தயக்கத்தை புரிந்து கொள்ள முடியாத ஒல்கா ஏன் அவளை வெறுக்கிறான் என்று திரும்ப திரும்ப கேட்கிறான். தன்னால் மற்றவர்களை போல வாழமுடியாது காரணம் தான் ஒரு ஒப்லமோவ் என்று சொல்கிறான்.


அவள் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவனது முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை.வேறு வழியின்றி ஒல்கா அவனை பிரிந்து செல்கிறான். அதுவரை வீட்டில் இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த ஒப்லமோவ்  காதலை பிரிந்து தனிமையில் வாடும் போது மிகுந்த மன நெருக்கடி கொண்டவனாக மாறிவிடுகிறான்


தன்னுடைய வாழ்வை தன்னால் தீர்மானித்து கொள்ள முடியவில்லை என்பதை அவன் ஒத்துக் கொள்கிறான். தனது தவறான முடிவுகள் தான் தன்னை இப்படி படுக்கையில் தள்ளியிருக்கின்றன என்பதை அவன் அறிந்த போதும் அதிலிருந்து விலகி வர முடியாதவனாக இருக்கிறான். சிலந்தி தன் வலைக்குள்ளாகவே தன் வாழ்வை கழித்துவிடுவதை போன்று தன் அறைக்குள்ளாகவே மீதமுள்ள வாழ்வைக் கடந்து செல்ல முயற்சிக்கிறான்.


எஸ்டேட் முறையான நிர்வாகம் இன்றி நஷ்டமடைகிறது. காதலை மறுத்த வேதனை ஒரு பக்கம் மனதில் வாட்டுகிறது. இன்னொரு பக்கம் பணக்கஷ்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. வேறு வழியில்லாமல் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டு அவள் சொத்தை அடைந்து கொள்கிறான்.


உப்புசப்பு இல்லாமல் நடைப்பிணமாக வாழ்ந்து முடிவில் வயதாகி ஒரு நாள் மரணமடைகிறான். ஒப்லமோவ் அப்படி வாழ்ந்தற்கு என்ன காரணம் என்று அவனது வேலைக்காரனிடம் கேட்டதற்கு அவர் ஒரு ஒப்லமோவ் அதற்கு மேல் வேறு என்ன காரணம் வேண்டியிருக்கிறது என்று சொல்கிறான். அத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது


ஒருவிதத்தில் இந்த நாவல் ருஷ்ய மேல்தட்டு வர்க்கத்தின் மனநிலையை பரிகாசமாக பிரதிபலித்து காட்டுகிறது. தங்களுக்கு வசதியாக மட்டுமே வாழ்வை அமைத்துகொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கும் அதன் பின்விளைவுகளும் நாவலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.


படுக்கையை விட்டு எழுந்து கொள்ளாத ஒரு மனிதனின் நாட்களை இத்தனை துல்லியமாக வேறு ஒருவரால் எழுதவே முடியாது என்ற அளவிற்கு கோன்சிரோவ் படைத்திருக்கிறார். நாவலின் மையப் படிமமாக இருப்பது வெறுமையே.அதை வாசகன் உணரும் வகையில் முழுமையாக வெளிப் படுத்தியிருக்கிறார். அத்தோடு நாவல் முழுவதும் விவரிக்கிடக்கும் பகடியும் வெளிப்படையான கேலியும் வாய்விட்டு சிரிக்க வைக்க கூடியவை.


கோன்சிரோவ் ருஷ்ய அரசு உயரதிகாரியாக பதவி வகித்தவர். இவரது அப்பா ஒரு பிரபலமான வணிகர். மிக வசதியான குடும்பத்தில் பிறந்த கோன்சிரோவ் சிறுவயதிலே அப்பாவை இழந்த காரணத்தால் தாய்மாமன் வீட்டிலிருந்து வளர்க்கபட்டார். மாஸ்கோ பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் ருஷ்ய அரசு பணிக்கு தேர்வுசெய்ய பட்டு நிதித்துறையில் சிலகாலமும் சில காலம் தணிக்கை அதிகாரியாகவும் பணியாற்றினார்


இவர் தணிக்கை அதிகாரியாக பணியாற்றியபோது அரசிற்கு சாதகமாக பல முக்கிய படைப்புகளை வெளிவராமல் செய்த என்ற குற்றசாட்டு இவர் மேலிருக்கிறது. ஆனால் அவரது முயற்சியின் காரணமாகவே தாஸ்தாயெவ்ஸ்கி யின் படைப்புகள் தணிக்கையின்றி வெளியாகி என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.


முப்பது ஆண்டுகாலம் அரசு பணியில் இருந்த கோன்சிரோவ் ஒப்லமோவ் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் மட்டுமல்ல. உலகம் முழுவதுமே மாற்ற த்தை ஏற்றுக் கொள்ள மறுத்து தன் படுக்கை அறைக்குள்ளே சுருண்டு கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவருமே ஒப்லமோக்கள் தான் என்று குறிப்பிடுகிறார்


கோன்சிரோவ் தான் வாழும் காலத்தில் முக்கிய படைப்பாளியாக அங்கீகாரம் பெறவில்லை. அவரது மற்ற படைப்புகளும் கூட பரவலாக வாசகர்களால் விரும்படவில்லை. ஆனால் நுறு வருடங்களுக்கு பிறகு ருஷ்ய இலக்கிய விமர்சகளாலும் தீவிர இலக்கிய வாசகர்களாலும் விரும்பி படிக்க கூடியவராக மாறினார் கோன்சிரோவ்


சக படைப்பாளிகள் தனது கதைகளை திருடிக் கொண்டார்கள் என்று சண்டையிட்ட கோன்சிரோவ் துர்கனேவ் தான் சொல்லிய ஒரு கதைக்கருவை திருடி நாவல் எழுதிவிட்டார் என்று ஒரு இலக்கிய கூட்டத்தில் உரக்க அறிவித்ததோடு துர்கனேவை திருடன் என்று வசை மாறி பொழிந்ததும் நடந்துள்ளது.


தன் வாழ்நாள் முழுவதும் அவர் துர்கனேவை தனது எதிரியாகவே கருதி வந்தார். அவரால் தான் தனது படைப்புகள் போதிய கவனம் பெறாமல் போய் விட்டன என்று கூட குறிப்பிட்டிருக்கிறார்.


கோன்சிரோவை முக்கியப் படைப்பாளியாக அடையாளம் கண்டவர்களில மிக முக்கியமானவர் சாமுவேல் பெக்கட். அவர் மிக சுமாரான மொழியாக்கத்தில் வெளியாகியிருருந்த ஒப்லமோவ் நாவலை தன் மனைவி வாசிப்பதற்கு சிபாரிசு செய்ததோடு அந்த நாவல் ருஷ்ய இலக்கியத்தில் மிக முக்கியமானது என்றும் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்


இந்த நாவலை ருஷ்ய சினிமாவின் முக்கிய இயக்குனரான Nikita Mikhalkov  திரைப்படமாக்கியிருக்கிறார். இப்படம் சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பு, திரைக் கதைக்கான முக்கிய விருதுகளை லண்டன் திரைப்பட விழாவில் பெற்றிருக்கிறது.அத்தோடு ஒபராவாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெற்றி பெற்றிருக்கிறது.


எந்த தனித்துவமும் இல்லாத ஒரு சோம்பேறியை நாவலின் கதாநாயகானக் கொண்டு நானூறு பக்கங்களுக்கும் மேலாக ஒரு நாவலை எழுதி  ஒரு துயரகாவியத்தின் நாயகன் போல வாசித்து முடிக்கையில் அவன் மீது வேதனையும் ஈர்ப்பும் ஏற்படுத்திய விந்தை தான் இந்த நாவலை வாசிப்பதற்கு இன்றும் காரணமாக இருக்கிறது. அவ்வகையில் காலம் மறந்த கோன்சிரோவின் பெயர் இன்று மீட்டு எடுக்கபட்டிருக்கிறது.


**


 


 


 

0Shares
0