தாத்தாவின் புகைப்படங்கள்

தனது தாத்தாவிற்குச் சொந்தமான குடும்பத்தின் கோடைக்கால வீட்டில், பழைய உபகரணங்கள் மற்றும் கருவிகளுக்கு நடுவே இருந்த பை ஒன்றைக் கண்டுபிடிக்கிறான் இகோர்.

அதில் நிறையப் புகைப்படச்சுருள்கள் காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலுள்ள அந்தப் புகைப்படச்சுருளை இன்றுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு மீள் உருவாக்கம் செய்கிறான். அந்தப் புகைப்படங்கள் வியப்பளிக்கின்றன.

சோவியத் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான தனது தாத்தா லியோனிட் புர்லாகாவின் இளமைக்காலச் சாட்சியமாக உள்ள அந்தப் புகைப்படங்களை ஆராயத் துவங்குகிறான்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு நினைவு அழிந்து போன தாத்தாவிடம் புகைப்படங்களைக் காட்டி விளக்கம் கேட்கிறான். அவருக்குத் தன்னை மட்டுமே தெரிகிறது. படம் பிடிக்கப்பட்ட இடம், மற்றும் படத்திலிருப்பவர் பற்றிய நினைவுகள் மறந்து விட்டன.

அந்தப் புகைப்படங்களைப் பாட்டி காணுகிறாள். இளமையான தாத்தாவைக் கண்டு எவ்வளவு அழகாக இருந்திருக்கிறீர்கள் என்று வியக்கிறாள். அந்த அழகு இப்போது எங்கே போய்விட்டது என்று கேலி செய்கிறாள்.

ஒரு புகைப்படத்தில் தாத்தா பைப் புகைக்கிறார். பாட்டி அதைப் பார்த்துவிட்டு நீங்கள் புகைப்பீர்களா.. இத்தனை வருஷம் தெரியாமல் போய்விட்டதே என்று கோவித்துக் கொள்கிறாள்.

புகைப்படங்கள் கால ஒட்டத்தில் ரசம் அழிந்து போவது போல மனித நினைவுகளும் அழிந்து போகின்றன என்கிறார் தாத்தா. அவரது நினைவிலிருந்த மனிதர்கள். இடங்களை அடையாளம் கண்டு கொள்ளும் பேரன் அவரது திரையுலக வாழ்வினையும் அவர் எடுத்த படங்களையும் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த முயலுகிறான்

இந்த முயற்சியின் விளைவே Fragile memory (2022) என்ற ஆவணப்படம். சோவியத் ஒன்றியத்தில் இயங்கிய திரைப்பட நிறுவனங்கள். இயக்குநர்கள். நடிகர்கள் குறித்தும். அன்றைய அரசு திரைத்துறையை எப்படித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தியது என்பது பற்றியும் இகோர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்

தனது தாத்தாவின் இளமையான தோற்றமும் தனது தோற்றமும் ஒன்று போல இருப்பதைக் கண்டு இகோர். மகிழ்ச்சி அடைகிறான்

எண்பது வயதான தாத்தாவின் அன்றாட வாழ்க்கை. காது கேளாத அவருடன் நடக்கும் உரையாடல். தாத்தாவோடு பணியாற்றிய இயக்குநர்களைத் தேடி பயணம் செய்து விபரங்களைச் சேகரிப்பது என இகோரின் தேடலும் ஆவணப்படுத்துதலும் சிறப்பாக உள்ளது

சோவியத் சினிமா பள்ளியில் ஒளிப்பதிவு பயின்று லியோனிட் புர்லாகா ஒடேசா ஃபிலிம் ஸ்டுடியோவில் 1964 முதல் 1999 வரை பணிபுரிந்திருக்கிறார். கவிஞர் ஜோச ப்ராட்ஸ்கியின் நண்பராக இருந்திருக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் பழைய திரைப்படங்களின் படச்சுருள்கள் கேன் கேனாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை யாரும் பராமரிக்கவில்லை. தூசி படிந்து சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. ஒரு சிற்பம் போலவோ, ஓவியம் போலவே சினிமா பாதுகாக்கப்படுவதில்லை. பல்வேறு அரிய திரைப்படங்களின் மூலச்சுருள்கள் அழிந்து போய்விட்டன.

தனது இளமைக்காலப் புகைப்படங்களையும் தான் எடுத்த திரைப்படங்களையும் பற்றி நினைவு கூறும் போது புர்லாகா முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அபூர்வமானது. ஒரு காட்சியில் தாத்தாவால் தனது சொந்த மகளைக் கூட அடையாளம் காண முடியவில்லை. மரம் தனது உதிர்ந்த இலையை அடையாளம் கண்டு கொள்ளுமா. நினைவு வைத்திருக்குமா. நினைவற்ற நிலையில் மனிதர்கள் நிழல் போலாகி விடுகிறார்கள்.

இந்த ஆவணப்படத்தில் பழைய புகைப்படங்களின் வழியே காலம் மீட்டெடுக்கப்படுகிறது. நாம் எவரெவர் நினைவில் எப்படிப் பதிந்து போயிருக்கிறோம் என்ற தேடல் உருவாகிறது. கலைந்த மேகங்கள் போலப் புகைப்படத்தில் காணப்படும் சிதைவுகளைத் தாத்தா ரசிக்கிறார்.

படத்தில் தாத்தாவை விடவும் பாட்டி அதிக நினைவாற்றலுடன் இருக்கிறாள். பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறாள். இன்றைய தலைமுறை தாத்தாவை மதிப்பதில்லை. அவரது பிறந்தநாளில் கூட வாழ்த்து சொல்வதில்லை என்று ஆதங்கப்படுகிறாள். இது புர்லாகாவின் வருத்தம் மட்டுமில்லை. உலகெங்கும் உள்ள சிறந்த படைப்பாளிகள் முதுமையில் கைவிடப்பட்டவர்களாகத் தனிமையில் வாழுகிறார்கள். இறந்து போகிறார்கள்.

புர்லாகாவின் ஒளிப்பதிவு பாணி தனித்துவமாகயிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படங்களுக்கே அதிகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சோவியத் மற்றும் உக்ரேனிய சினிமாவின் 50 ஆண்டுகளையும், சோவியத் ஒன்றியத்தின் வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்க்கும் விதமாக ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

0Shares
0