திருக்கோகர்ணத்து ரதி

சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை அருகில் உள்ள திருக்கோகர்ணம் கோவிலின் சிற்பமண்டபத்தில் உள்ள ரதி சிற்பத்தைக் கண்டேன், ஆஹா, என்ன ஒரு பேரழகு, அவள் சிலையில்லை, நம் மனதின் ஆழத்தில் புதைந்துள்ள மாறாத பெண்மையின் எழில் உருவம், இவளை எங்கோ வீதியில் தற்செயலாகப் பார்த்திருக்கிறோம் என்பது போன்ற நெருக்கம் உருவாகிறது

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் ரதி மன்மதன் சிற்பங்கள் பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு ரதியும் ஒரு அழகு, கல்லில் செய்த சிற்பங்கள் என்றாலும் பெண் உடலின் குழைவும் ஒயிலும் மயக்கமூட்டும் நளினமும் அசலான வெட்கமும் கொண்டவையாக இச்சிற்பங்கள் இருக்கின்றன

மதுரை புதுமண்டபத்தில் உள்ள சிற்பத்தொகுதியில் ஒரு ரதியிருக்கிறாள், அவள் ஒரு சித்துப்பெண், இசையில் மயங்கி நிற்பவளைப் போல பாவனை செய்கிறாள், அவள் தோளில் அமர்ந்துள்ள பறவை அவளது அழகின் வசீகரம் தாளமுடியாமல் தலை குனிந்தேயிருக்கிறது  அப்போது தான் கோவிலுக்கு வந்து போன இளம்பெண்களில் ஒருத்தி கல்லாக உறைந்துவிட்டாள் என்பது போன்றிருக்கிறது

ரதியும் மன்மதனும் ஒரப்பார்வை பார்த்துக் கொள்வதைக் காண வேண்டுமா சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கோவிலில் உள்ள ரதி மன்மதனைப் பாருங்கள், அவர்களுக்குள் ஊடல் இருப்பது போலவும் ஒருவரையொருவர் காணாமலே காண்கிறார்கள் எனவும்  இருக்கிறது,

திருகுறுக்கை ரதி எரிக்கப்பட்ட மன்மதனை மீட்க காத்திருப்பவள், அது துயர் படிந்த அழகு, குடுமியான்மலை ரதியோ சற்றே ஆண்மை கலந்த பெண்மை,
தாடிக் கொம்பு  சௌந்திரராசப் பெருமாள் கோயில் ரதியோ சுந்தர வல்லி, அவள் கண்கள் கிறங்கியவை, காஞ்சிபுரம் கோவிலில் உள்ள ரதி கொஞ்சம் வடகத்திய சாயல் கொண்டிருக்கிறாள்,

தென்காசி கோவில் ரதியின் உதடுகளைப் பாருங்கள், ஏதோ ஒரு சொல் உதட்டில் வந்து நின்று அப்படியே உறைந்துவிட்டதைப் போல் அல்லவா இருக்கிறது, அவளிடம் காதல் என்பதெல்லாம் தான் அறிந்த ஒன்று என்று எகத்தாளம் இருக்கிறது, சீண்டிவிட்டு பார்க்கும் அழகு அது

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரதியைக்  காண்கையில் மன்மதனால் அவளை ஒரு போதும் வெல்லமுடியாது என்று உணர முடியும் பேரழகு ஒளிர்கிறது, நெருப்பை உண்ண ஆசைப்படுகின்றவனைப் போல தான் மன்மதன் இருக்கிறான், ரதியோ உருவிய வாளின் கம்பீரத்தைப் போல பயங்கலந்த வசீகரத்துடன் இருக்கிறாள்,

பொதுவாக எல்லா ரதி சிற்பங்களிலும் அதன் கண்களில் ஒரு பரிகாசம் ஒளிந்திருக்கிறது, இந்தப் பரிகாசம் மன்மதனுக்கானது மட்டுமில்லை, தன் அழகிற்கு நிகரில்லை என்று சொல்லும் வெளிப்பாடும் அதற்குள்ளிருக்கிறது,

பெரும்பான்மை மன்மதன்கள் ஆசையை அடக்கத் தெரியாமல் அலைபாயும் கண்களுடன் இருக்கிறார்கள், ரதியோ ஆசையற்ற மனது கொண்டவளை போன்ற பாவனையுடன் ஆனால் கண்களின் ஒரத்தில், உதட்டின் சுழிப்பில் ஆசையை உறைய செய்தவர்களாக இருக்கிறார்கள்,

ரதி மன்மதன் சிற்பங்களில் உள்ள காமநாடகத்தை உணர வேண்டுமானாலும்  அந்தச் சிற்பங்களை நெருங்கி அறிய வேண்டும், மனம் நழுவ அதை உணரவேண்டும், அப்போது அந்த இரு சிற்பங்களுக்குள்ளும் குரலால் வெளிப்படுத்தபடாத கேலியொன்று ஊடாடிக்  கொண்டிருப்பதை நன்றாக அறிய முடியும்,

தென்மாவட்டங்களில் காமதகனம் என்ற பண்டிகை நடத்துவார்கள், மாசிமாதம் நடைபெறும், அப்போது காமனை சிவன் எரித்தது சரியா, தவறா என்பதைப் பற்றி லாவணி பாடுவார்கள், சிறுவயதில் கேட்டிருக்கிறேன், எரிந்த கட்சி எரியாத கட்சி என்று இரண்டு பிரிவாக அமர்ந்து காமனை எரிக்க முடியுமா இல்லையா என்பதைப் பற்றிப் பாடுவார்கள், லாவணி பாடுபவர்களின் அருமையான குரல்வளம் கேட்க ரம்மியாக இருக்கும்,

காமனுக்கு கரும்பு வில்லை உருவாக்கியது கற்பனையின் உச்சம், காமம் எப்போதுமே கரும்புடன் ஒப்பிடப்படுகிறது, அவனது அம்புகள் மலர்கள், ரதியோ கிளியில் ஏறி அமர்ந்தவள், இச்சையை உருவாக்குவது அவளது வேலையாம்

தாமரை, அசோகம், மா, முல்லை மற்றும் குவளை ஆகிய ஐந்து மலர்களையே மன்மதன் தனது அம்பாக எய்கிறானாம், அதுவும் உடலின் எந்த பாகங்களில் அம்பு எய்த வேண்டும் என்றும் குறிப்பிருக்கிறது

தாமரை மலரை வைத்துத் தாக்கும் போது அது மார்பில் பட வேண்டும், அப்போது தான் உன்மத்தமேறும்,  உதடுகளைத் தாக்குதவற்கு அசோகமரத்தின் பூக்கள் பயன்படுத்தபட வேண்டும், அதனால் ஏக்கம் உருவாகும்

முல்லையால் கண்களைத் தாக்க வேண்டும், அப்போது தான் அது உறங்க விடாமல் ஆசையை அதிகரிக்கும்

மாமரத்தின் பூவைத் தலையில் எய்ய வேண்டும், அது காமத்தை தலையில் கொப்பளிக்க செய்யும், அதனால் மோக்கிறுக்கு ஏறும்

குவளை மலர்களைக் கடைசியாக நாபியை நோக்கி எய்ய வேண்டும், அது விரகதாபத்தை உருவாக்கி ஆசையின் உச்சத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்

ரதி மன்மதசிற்பங்களைச் செய்தவர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அந்தச் சிற்பி காமத்தின் நுட்பம் அனைத்தையும் அறிந்து கல்லில் வடித்திருக்கிறான், ஒவ்வொரு சிலையும் ஒரு உன்னதம்,

திருக்கோகர்ணம் போகின்றவர்கள் அங்குள்ள புதுக்கோட்டை தொல்பொருள்துறை ம்யூசியத்தை அவசியம் பார்க்கவும், தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான ம்யூசியங்களில் ஒன்று.

••

0Shares
0