ஜெ. திவாகர்
எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன என்பது போல இந்நாவலின் கதையோட்டம் முழுமையும் தெக்கோடு துயில் தரு மாதா கோவிலில் நடைபெறும் பத்து நாள் திருவிழா நோக்கியே நகர்கிறது.
எஸ்.ரா. வின் அத்தனை கதைகளிலும் முக்கிய கதாபாத்திரமாய் இடம்பெறும் வெயில். இக்கதையிலும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் ஓடும் நரம்புகளாய் பின்னி பிணைந்து நம்மோடும், கதையோடும் பயணிக்கிறது வெயில்.
இந்நாவல், மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு தளம் 1870 களிலும், மற்ற இரு தளங்களும் 1982 கால கட்டத்திலும் நடப்பதாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்களில் கடற்கன்னி ஷோ நடத்தும் அழகர், அவன் மனைவி சின்னராணி, அவர்களின் கால் சற்று ஊனமான மகள் செல்வி இவர்கள் மூவரும் யாருமற்ற ஆத்திக்குளம் ரயில் நிலையத்தில் தெக்கோடு செல்வதற்கான ரயிலை எதிர்பார்த்து முகத்தில் வெயில் வழிய காத்திருப்பதிலிருந்து தொடங்குகிறது நாவல்…..
திருவிழாக்களில் ஷோ நடத்துவோரின் வாழ்க்கை, அவர்கள் படும் அவஸ்தைகள், ஒரு சாண் வயிற்றைத் தாண்டி அவர்களுக்குள்ளும் இருக்கும் மனசு என கதை விரிகிறது.
இவர்களோடு ரயிலில் நோய்மையால் பாதிக்கப்பட்ட ரோகிகள், பிச்சைக்காரர்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். தெக்கோட்டிலுள்ள துயில்தரு மாதா கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு கூட்டம் கூட்டமாய் படையெடுக்கும் வெவ்வேறு விதமான நோய்களால் பீடிக்கப்பட்ட – நோய்களை தாமே வலிய தேடி உருவாக்கிக் கொண்ட மக்களின் துயரம் நிறைந்த கதைகளை கேட்கையில், நமக்குள்ளும் ஏதோவொரு இனம் புரியாத நோய் அண்டிக் கொண்டிருப்பதைப் போல் உணர்வதிலிருந்தே நாவலுக்குள் நம்மை நூலாசிரியர் எந்த அளவு ஒன்றிப் போகச் செய்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
நாம் நம் உடலை எந்த அளவிற்கு பொருட்படுத்தாமல் துச்சமாய் மதித்து நோயை தாமே வரவைத்துக் கொள்கிறோம் என்பதை பல இடங்களில் கதை மாந்தர்கள் வழியே எஸ்.ரா. உணர்த்துகிறார்.
*”மனிதர்கள் தங்கள் உடலை எப்போதுமே ஒரு இயந்திரத்தைப் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் வரை அவர்கள் அதை கவனிப்பதேயில்லை. ஆனால் அதில் ஏதாவது கோளாறு என்று வந்துவிட்டால் உடனே பயம் கொண்டு விடுகிறார்கள்.”*
மேலும், நோய்மை என்பது நாம் பார்த்து பயந்து துயரப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வைக்கிறார்.
*”நோய் ஒரு நல்ல ஆசான். அது ஒரு மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது.”*
நாவலில் நம்மை மனம் கலங்கச் செய்யும் பாத்திரங்கள் இருவர் உண்டு. ஒருவர் கொண்டலு அக்கா.
தெக்கோடு செல்லும் நோயாளிகள் வழித் தங்கலுக்காக தங்கும் எட்டூர் மண்டபத்தில் வசிக்கும் கொண்டலு அக்கா அங்கு வரும் நோயாளிகளிடம் காட்டும் பரிவும், அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவதும், அவர்களின் புண்களில் வழியும் சீழை துடைப்பதும் அனைத்திற்கும் மேலாய் அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதுமென நாம் நேரில் காண வாய்க்காத அன்னை தெரசாவினை நினைவூட்டுகிறார்.
அதுவும் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் கூறும் வாழ்க்கை போதனைகள் தான் இந்நூலின் உச்சமென்பேன்…..
*”நாவை அடக்கிக் கொள்ளும் போது மனதும் சேர்ந்து ஒடுங்கத் துவங்குகிறது. மனது ஒடுக்கம் கொண்டுவிட்டால் உலகின் சுமைகள் எதுவும் நம் மீது படியாது. நீர்க்குமிழ் போல நாமும் மிதக்கத் துவங்கிவிடுவோம். ஆனால், நாவைக் கட்டுவது எளிதானதில்லை”*
*”நோயாளியிடம் பரிவு கொள்ளத் தெரியாத மருத்துவரைப் போல இந்த உலகில் மோசமானவர் எவருமில்லை. மருத்துவம் என்பது பணம் சேர்க்கும் தொழில் இல்லை. அது ஒரு சேவை. கைமாறில்லாத சேவை. அது கறைபடும் போது மனிதன் மீட்சியுறவே முடியாது “*
-ஒவ்வொரு மருத்துவரும் தங்களின் மருத்துவமனையின் சுவர்களிலும் அவர்தம் உள்ளத்திலும் பொறித்து வைக்க வேண்டிய வைர வரிகள் இவை.
*” குடும்பத்தை நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் தெரியாத மனிதனால் உலகை நேசிக்க முடியாது”*
இதேபோல் இக்கதையின் மற்றுமொரு ஆகச் சிறந்த கதாபாத்திரம் ஏலன் பவர்.
எஸ்.ராவின் நாவல்களின் பெரும் பலமே அவற்றில் புனைவு எது நிஜமெது என்று அத்தனை எளிதாய் நம்மால் பிரித்தறிய இயலா வகையில் இரண்டும் டி.என்.ஏ.வில் பின்னிப் பிணைந்திருக்கும் இரட்டைச் சுருளாய் கலந்திருப்பது தான்….
இந்நாவலிலும் ஏலன் பவர் என்னும் பாத்திரம் இதைப் போன்றதே. இறை ஊழியத்திற்காய் இந்தியா வரும் ஏலன் பவர் (1873) தெக்கோடு வந்து அங்கு வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்கிறார். ஆனால் அது அத்தனை எளிதாய் இல்லை. மூடப் பழக்கத்திலும், அறியாமையிலும் மூழ்கி இருக்கும் அப்பாவி மக்கள் முதலில் ஏலன் பவரை ஏற்க மறுக்கின்றனர். ஏலன் பவர் தனது ஞானத்தந்தையான லகோம்பேவிற்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாய்க் கொண்டு இக்கதாப்பாத்திரத்தை நூலாசிரியர் கட்டமைத்துள்ளார்.
இறைவனுக்கு தொண்டு செய்வதை விடவும் மக்களை நோய்மையிலிருந்து காப்பதே தமது முதல் பணி என கடமையாற்றும் ஏலன் பவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் ஏராளம். எனினும் தான் கொண்ட கொள்கைக்காய் அத்தனையும் துச்சமென தூக்கி எறிந்து தனது பாதையில் முன்னேறும் ஏலன் நமக்கெல்லாம் ஒரு தன்னம்பிக்கை டானிக்.
உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஓரிடத்தில் ஏலன் பவர் கூறுகையில்,
*”எல்லா நோய்களுக்கும் ஒரே தாய்தானிருக்கிறாள். அது உணவு. சரியான, தேவையான, எளிதான உணவைக் கைக்கொள்ள தவறும்போது நோயின் கைகள் நம்மைப் பற்றிக் கொள்ளத் துவங்குகின்றன. பசியை எதிர்கொள்வதும், அதைக் கடந்து செல்வதும் எளிதானதில்லை. அது மனிதவதையில் முக்கியமானது.”*
ஏலனுக்கு லகோம்பே எழுதும் கடிதங்களில் அவளை ஊக்கப்படுத்தும் தன்னம்பிக்கை வாசகங்கள் மிளிரும்…. அவை ஏலனுக்கானது மட்டுமல்ல நமக்கும் சேர்த்தே….
*”சேவை செய்வது என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. இது தண்ணீர்த் துளிகளால் ஒரு பாறையை துளையிட விரும்புவது போன்றது. தண்ணீர்த் துளி எப்படி ஒரு பாறையைத் துளையிட முடியும் என்று கேலி செய்வார்கள். முட்டாள்தனம் என்று பரிகாசம் செய்வார்கள். நமக்கே வியர்த்தம் என்றுகூடத் தோன்றும். ஆனால் தண்ணீர்த்துளி இடைவிடாமல் ஒரே இடத்தில் சொட்டிக் கொண்டேயிருந்தால் பாறையில் நிச்சயம் ஒரு நாள் துளை விழும். அது சாத்தியமாகியிருக்கிறது. அதுவரை நீயும் காத்திரு.”*
இந்நூலைப் பற்றி பேசப் பேச, எழுத எழுத என் கைகளும், வாயும் ஓய்ந்த பாடாய் இல்லை.
இன்னமும் இந்நூல் குறித்து நான் எழுத நினைத்து எழுதாத வார்த்தைகள் நிறைய மீதமிருக்கிறது.
நூலிலிருந்து சில வரிகள் மட்டும் இறுதியாய்……
*வறுமை எல்லா அவமானங்களையும் நம்மீது சுமத்தி விடும். வறுமை எந்த வைராக்கியத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும்*
*வலியை நீ எப்போது மறைக்கத் துவங்குகிறாயோ அப்போது நீ உன்னை ஏமாற்றிக் கொள்ளத் துவங்கிறாய்*
*மனிதர்கள் தாங்கள் விரும்புவதை விடவும் வெறுப்பதைப் பற்றி தான் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்*
போதுமென்று நினைக்கிறேன்.
“சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!” என்கிறார்- பிரான்சிஸ் பேக்கன். நீங்கள் சுவைத்து மென்று ஜீரணித்து மகிழ ஏற்ற நூல் துயில்.