துயில்

இரண்டு ஆண்டுகளாக எழுதி வந்த எனது புதிய நாவல் துயில் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது, இந்த நாவலின் இறுதிவடிவத்தை சீர்செய்து கொண்டிருப்பதால் இணையத்தில் எழுத நேரம் கிடைப்பதில்லை,

ஒரு நாவலை எழுதுவதற்கு எனக்கு ஒன்றரை வருசங்கள் தேவைப்படுகிறது, அதை எடிட் செய்ய தினமும் ஆறு மணி நேரம் வேலை செய்தால் கூட ஆறு   மாதமாகி விடுகிறது. நாவலை எழுதி இறுதிவடிவம் கொண்டுவருவது எப்போதுமே ஒரு சவால், ஆனால் அந்த உருமாற்றம் தரும் ஆனந்தம் அலாதியானது

உயிர்மை நடத்தவுள்ள இந்த நாவலின் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் இறுதிவாரத்தில் நடக்க கூடும், இது என்னுடைய ஐந்தாவது நாவல்

••

துயில் நாவல் குறித்து ஒரு சிறிய குறிப்பு

நோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்று தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது. நோய்மையுறுதல் என்பது உண்மையில் உடலை அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை.

உடல் ஒரு பிரபஞ்சம். நாம் ஒரு போதும் கண்ணால் காணமுடியாத பேராறு நமது ரத்தஒட்டம். உடலினுள் எண்ணிக்கையற்ற புதிர்கள், வியப்புகள். நுட்பங்கள் மிகுந்த பேரொழுங்குடன் அடங்கியிருக்கின்றன. உடலை அறிவது தான் மனிதனின் முதல் தேடல். அதை நோய்மை நினைவுபடுத்துகிறது.

கடவுளின் இருப்பு குறித்த நம்பிக்கைகள் யாவும் மனிதன் நோய்மையடைவதால் மட்டுமே காப்பாற்றபட்டுவருகிறது. ஒவ்வொரு நோயிற்கும் நூற்றாண்டுகால நினைவுகளிருக்கிறது. மருத்துவத்தின் வரலாறு மகத்தானது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.

**

0Shares
0