நினைவின் உணவகம்.

புதிய குறுங்கதை

அந்த மலைநகரில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களைத் தணிக்கை செய்வதற்காக அவள் வந்திருந்தாள். கூட்டுறவு சங்க நிர்வாகிகளே அவளது உணவு மற்றும் தங்குமிடத்தைக் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை. அவற்றை அவளே ஏற்பாடு செய்து கொண்டாள்.

தணிக்கை செய்யச் செல்லும் இடங்களில் மதிய உணவு கிடைப்பது தான் பிரச்சனையாக இருந்தது. சங்க ஊழியர்களில் எவரேனும் அவளுக்காக உணவு வாங்கி வருவதற்காக மலைநகருக்குள் சென்று வந்தார்கள். அதை மட்டும் அவளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் சாப்பாட்டிற்கான பணத்தை அவளே கொடுத்து அனுப்பினாள்.

நேர்மையாக இருப்பதற்குப் போராட வேண்டியிருக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

அன்றைக்கு அவள் தணிக்கை செய்ய வேண்டிய கூட்டுறவு சங்கம் செயல்பட்ட இடம் பழைய பிரிட்டிஷ் காலத்துக் கட்டிடம். தொலைவிலிருந்து பார்க்க சிறகை விரித்துப் பறக்க காத்திருக்கும் செந்நிற பறவை போலிருந்தது

கர்னல் வில்லியம்ஸ் காலத்தில் மாட்டப்பட்ட சுவரோவியங்கள் கூட அப்படியே இருந்தன. உறுதியான அதன் படிகளில் ஏறும் போது அவள் அறியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

அன்றைக்கு மதிய உணவை வெளியே எங்காவது நடந்து போய்ச் சாப்பிட்டு வரலாம் என நினைத்துக் கொண்டாள். வெயில் வராத காரணத்தால் மணி இரண்டானதை அவள் உணரவில்லை. சோம்பல் முறித்தபடியே வெளியே வந்தபோது ஊழியர்கள் டிபன் பாக்ஸை திறந்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள். மடித்து உருவம் இழந்து போன சப்பாத்திகளைப் பார்ப்பது சாப்பிடும் ஆசையைப் போக்கிவிடுகிறது. எவ்வளவு நாட்கள் இப்படி டிபன் பாக்ஸில் வளைந்த ரப்பர் செருப்பு போன்ற சப்பாத்தியை கொண்டுவந்து சாப்பிட்டிருக்கிறாள் என்ற நினைவு வந்து போனது

அவள் உணவகத்தைத் தேடி மண்பாதையில் நடந்த போது தண்ணீர் குழாய் ஒன்று வெடித்து நீர் பீச்சி கொண்டிருந்தது. மலைநகரங்களில் நிசப்தம் எடைகூடி விடுவதை உணர்ந்தாள்

யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் தேன் விற்கும் கடை ஒன்று கண்ணில்பட்டது. அங்கே அமர்ந்திருந்த நடுத்தரவயது பெண் வலதுபக்கம் திரும்பினால் உணவகம் இருப்பதாகச் சொன்னாள்.

அந்த உணவகத்திற்குப் பெயரில்லை. மரக்கதவைத் தள்ளி உள்ளே நுழைந்த போது அங்கே மூன்று மேஜைகள் இருப்பதைக் கண்டாள். ஒருவரைக் கூடக் காணவில்லை

ஒரு வேளை உணவகம் செயல்படவில்லையோ எனத் தோணியது. கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் யாரோ நடமாடுவது போலிருந்தது. அவள் “சாப்பாடு இருக்கிறதா“ எனச் சப்தமாகக் கேட்டாள். அரக்கு நிறக்கதவை தள்ளி வெளியே எட்டிப்பார்த்த நரைத்த தலை கொண்டவர் சிரித்தபடியே “இருக்கிறது…மெனுகார்டை பாருங்கள்“ என்றார்.

மேஜையில் இருந்த மெனு கார்டினை அவள் கையிலெடுத்து புரட்டினாள். அதில் உணவின் பெயர்களுக்குப் பதிலாக வெவ்வேறு வயதின் உணவுகளாகப் பட்டியல் இருந்தது.

ஐந்து வயதின் உணவு. ஆறு வயதின் உணவு. பதிமூன்று வயதின் உணவு. நாற்பத்திரெண்டு வயதின் உணவு. எழுபத்திமூன்று வயதின் உணவு என வயது வாரியாக உள்ளதே. இதை வைத்து எப்படி உணவைத் தேர்வு செய்வது எனக் குழப்பமாக இருந்தது.

கண்ணாடி டம்ளரில் சூடான வெந்நீருடன் வெளியே வந்த சமையற்காரர் அதே சிரிப்பு மாறாமல் “எந்த வயதின் உணவைத் தேர்வு செய்திருக்கிறீர்கள்“ எனக் கேட்டார்.

“இதில் எப்படித் தேர்வு செய்வது எனக் குழப்பமாக உள்ளது“ என்றாள்.

“எல்லா உணவும் வயதின் அடையாளங்கள் தான். உங்களுக்கு விருப்பமான பூரியோ, கேசரியோ, அடையோ முதன்முதலில் எப்போது அதைச் சாப்பிட்டீர்களோ அந்த வயது உணவோடு சேர்ந்துவிடுகிறது. அதே உணவைத் திரும்பச் சாப்பிடும் போதெல்லாம் நாம் அந்த வயதை திரும்ப அடைகிறோம்“ என்றார்.

அவர் சொல்வது உண்மை. இப்போதும் கூடத் தட்டில் ஆவி பறக்கும் ரவா உப்புமாவும் சீனியையும் கண்டால் உடனே பள்ளி நாட்கள் நினைவில் வந்துவிடுகிறதே.

எந்த வயதின் உணவைத் தேர்வு செய்வது எனத் தெரியாமல் அவள் மெனுக் கார்டில் கண்களை ஒடவிட்டாள்.

பின்பு அவள் தனது பனிரெண்டு வயதின் உணவை தேர்வு செய்தாள்.

காத்திருக்கும் நேரம் வரை இந்தப் புதிர்கட்டத்தை விளையாடலாம் என ஒரு அச்சிடப்பட்ட காகிதம் ஒன்றை அவர் தனது அங்கியின் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தார்.

பசியில் எளிய புதிர்கட்டங்களைப் பூர்த்திச் செய்வது கூட கடினமாக இருந்தது.

அரை மணி நேரத்தின் பின்பு அவள் முன்பாக இலையைப் போட்டுச் சூடான சாதம் வைத்தார், அதில் எண்ணெய் மிதக்கும் பூண்டுக் குழம்பு. அதுவும் பெரிய பூண்டுகள். சுட்ட அப்பளம். தேங்காய் துவையல். நிறைய வெங்காயம் போட்ட உருளைக்கிழங்கு புட்டினை வைத்தார்.

அதைப் பார்த்த மாத்திரம் கோடை விடுமுறைக்குப் பார்வதி அத்தை வீட்டிற்குப் போன போது ஆசையாகச் சாப்பிட்ட நினைவு வந்து போனது.

தனது பனிரெண்டு வயதின் அனுபவம் இவருக்கு எப்படித் தெரிந்தது எனப் புரியாமல் அவள் திகைத்தபோது

“உங்கள் பனிரெண்டு வயது இது தானா“ எனக் கேலியாகக் கேட்டார்.

அதே ருசி. இத்தனை ஆண்டுகளாக நாக்கு இதற்குத் தான் ஏங்கிக் கொண்டிருந்தது.

அவள் ஆசையாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ளும் போது சொன்னார்

“கற்கண்டு பாயாசம் இருக்கிறது. “

ஆமாம் அதுவும் அத்தை வீட்டில் சாப்பிட்டது.

இந்த மனிதரால் எப்படித் தனது பனிரெண்டு வயதை, அதன் ருசியைக் கண்டறிய முடிந்தது என வியப்பு அடங்காமல் அவள் பாயசத்தைக் குடித்தாள்.

வழக்கமாக அவள் சாப்பிடும் உணவகங்களை விடவும் பில் குறைவாக வந்திருந்தது. அதைச் செலுத்திவிட்டு வெளியே வந்த போதும் ஆச்சரியத்திலிருந்து விடுபட முடியவில்லை.

நாளை மறுபடியும் போய் இன்னொரு வயதின் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் உருவானது.

அவள் கூட்டுறவு சங்கத்திற்குத் திரும்பிய போது நிர்வாகி “இங்கே நல்ல சாப்பாடு கிடைக்காது“ எனச் சலித்துக் கொண்டார். “வாழ்நாளில் மறக்க முடியாத சாப்பாடு கிடைத்தது“ எனச் சொல்லியபடியே அவள் தனது வேலையைத் தொடர்ந்தாள்.

மறுநாள் மதியம் அந்த உணவகத்திற்குச் சென்ற போது பச்சை நிற ஸ்வெட்டர் அணிந்த ஒரு கிழவர் தனியே சாப்பிட அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

அவளைப் பார்த்த மாத்திரம் சமையற்காரர் “இந்த ஹோட்டலை எவராலும் மறக்க முடியாது. திரும்பத் திரும்ப வருவார்கள். எனது வாடிக்கையாளர்கள் நிரந்தரமானவர்கள்“ என்று சிரித்தார்.

இன்றைக்கு எந்த வயதின் உணவை தேர்வு செய்வது என மெனுவைப் புரட்டிக் கொண்டிருந்த போது பக்கத்து மேஜையில் இருந்த முதியவர் சொன்னார். “உணவின் வழியே வேறு வேறு வயதிற்குச் சென்று வருவது சந்தோஷம் தருகிறது. “

அதை ஏற்பது போல அவளும் தலையாட்டினாள்

“நீங்கள் எந்த வயதின் உணவை தேர்வு செய்திருக்கிறீர்கள்“ என முதியவர் கேட்டார்.

“அது ரகசியம்“ என்று சொன்னாள்.

“ஆமாம். ரகசியம் “எனச் சொல்லி முதியவர் கண்ணைச் சிமிட்டினார்.

அவளது அடிமனதில் கல்லூரியில் ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணமாகத் திடீர் விடுப்பு அறிவிக்கப்பட்ட நாளில் வீடு திரும்பிய போது அம்மா செய்து கொடுத்த மிதி பாகற்காய் வறுவல். அதுவும் அதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிட்ட நினைவு வந்தது .

மெனு கார்டில் அந்த வயதை அவள் தேர்வு செய்தாள்.

சமையற்காரர் இன்னொரு புதிர்காகிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டுக் “காத்திருங்கள்“ என்றபடியே உள்ளே நடந்த போது அவரது பெயரைக் கேட்க விரும்பினாள்.

அந்த மர்மமும் வியப்பும் கலைய வேண்டாமே என நினைத்தபடியே அவள் மௌனமாகினாள்.

அவளது நாக்கு கசப்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்தது.

••

0Shares
0