நேர்காணல்

ஞாயிறு(05.04.2015) அன்று தி இந்துவில் வெளியான எனது நேர்காணல். இதன் முழுமையான வடிவம் ‘தி இந்து’ சித்திரை மலரில் வெளியாகிறது. நேர்காணல் செய்தவர் கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன்

•••

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய உப பாண்டவம்இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. இவரது சமீபத்திய நாவல் சஞ்சாரம்’.

நாவல், சிறுகதை, சினிமா, பத்திரிகை எழுத்து எனப் பல முகங்களைக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனிடம் தி இந்துசித்திரை மலருக்காக நடத்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது

இன்றுள்ள சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்

தமிழுக்கென ஒரு கதை சொல்லும் முறை இருக்கிறது. தமிழில் உள்ள அளவுக்கு வேறு வேறு வகையான கதைகள், கதைக் கருக்கள், எழுத்தாளர்கள், மொழி வகைமைகளை வேறெங்கும் பார்க்க முடியவில்லை. முன்னூறு யானைகள் என்ற ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட கௌரிஷங்கருக்கும் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இடம் உண்டு. நூற்றுக்கணக்கான கதைகளைத் தொடர்ந்து எழுதிய அசோகமித்திரனுக்கும் அவருக்குரிய இடம் உண்டு. 30-க்கும் குறைவான கதைகள் எழுதிய மௌனியை நாம் இன்னும் கொண்டாடிவருகிறோம்.

அன்றாட வாழ்க்கையைக் களங்கமற்ற சிரிப்புடன் பார்க்கும் வைக்கம் முகமது பஷீர் போன்ற ஒரு அதிசயம் இங்கே உருவாகவில்லையே?

ஒரு இஸ்லாமியக் குடும்பப் பின்னணியில், சுதந்திரப் போராட்டக் காலத்தில் வீட்டிலிருந்து வெளியேறி நாடோடியாகத் திரிந்து அலைந்த வாழ்க்கை அனுபவங்களை அவர் கதைகளாக எழுதியுள்ளார். தன்னைத் தானே பரிகசிக்கும் கதைகள் அவை. இந்த மாதிரியான ஒரு மரபில் தமிழில் ஒருவர் எழுத வந்தாரெனில் அவர் கவிஞர் ஆகியிருப்பார். உரைநடைக்குள் வந்திருக்க மாட்டார். வெறும் அனுபவம் மட்டுமின்றி கற்பனையோடு இணைந்து ஒரு புனைவுலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழ் இலக்கிய மரபாக உள்ளது. பஷீரின் கதைகளில் கற்பனைக்கான பெரிய சிறகடிப்பைப் பார்க்க முடியாது. அவை வாழ்வியல் அனுபவங்களின் பதிவுகளே

தமிழ் நவீன இலக்கியத்தில் இன்னும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர் என்று யாரைக் கூறிப்பிடுவீர்கள்?

பஷீரின் ஆளுமைக்கு நிகரான ஒரு ஆளுமையைச் சொல்ல வேண்டுமானால் நான் புதுமைப்பித்தனைத்தான் சொல்வேன். புதுமைப்பித்தனிடம் மதம் சார்ந்த நேரடியான கேலி, கிண்டல் விமர்சனம்  உண்டு.  பஷீரிடம் இல்லாத அம்சம் அது. மலையாளத்தில் பஷீரை முன்வைத்தால், நாம் அதற்கு நிகராகப் புதுமைப்பித்தனை வைக்க முடியும்.

வாழ்க்கையை அதன் கசப்புடனேயே வாழலாம் என்ற விவேகம் புதுமைப் பித்தனிடம் உள்ளது. சாமானிய மனிதனால் ஏன் சராசரியான, நிம்மதி யான வாழ்வைக்கூட ஒழுங்காக வாழ முடியவில்லை என்பதே அவரது கேள்வி. அவரைத் தொடர்ந்து எழுத வரும் ஒவ்வொரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளனிடமும் புதுமைப்பித்தனின் ஏதோ ஒரு அம்சத்தைப் பார்க்க முடிகிறது.

புதுமைப்பித்தன் உருவாக்கிய கூரிய விமர்சன நோக்குதான் பின்னர் கிளாசிக்குகள் வருவதைத் தடைசெய்துவிட்டதா?

பேரிலக்கியங்கள் எப்போதும் ஒரு காலகட்டத்தில், சமூகச் சூழலில் உருவாகுபவை. மனிதத் துயரங்கள் பெரிதாக நிகழும் காலகட்டமாக இருக்க லாம். மனித மனம் அதிகபட்சமாகச் சஞ்சலங்களையும், திகைப்பையும் அனுபவிக்கும் நிலைமைகளில் பேரிலக்கியங்கள் படைக்கப்படும். 19-ம் நூற்றாண்டு அதற்குச் சாட்சியாக இருக்கிறது.

டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி போன்ற பெரும் படைப்பாளிகள் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த பார்வையைத் தங்கள் படைப்புகளில் வைக்கிறார்கள். அவைதான் பேரிலக்கியங்கள். மனிதனின் அவலங் களுக்கான காரணங்களை, ஆதாரமான பிரச்சினைகளை அவை விசாரணை செய்கின்றன. அன்பால் எல்லாம் தீர்க்கப்பட்டுவிடும் என்றால், அதை ஏன் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று தாஸ்தாயெவ்ஸ்கி கேட்கிறார்.

மனித உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மனிதர்களால் தீர்க்க முடியாது என்ற பார்வை டால்ஸ்டாயிடம் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகளைக் கடவுள் பார்த்துக்கொள்ளட்டும் என்கிறார் டால்ஸ்டாய்.

இன்றைய படைப்புகளில் கேட்கப்படும் கேள்விகள் மனித இருப்பின் அடிப்படை நோக்கிப் போவதில்லை. மனித இருப்பின் அன்றாடத் தளத்திலேயே அவை நின்றுவிடுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் கிளாசிக்குகள் என்பதற்கான வரையறை மாறுபடுகிறது. இன்றைய கிளாசிக்குக்கான வரையறை இன்னும் வரையறுக்கப்படவில்லை.

20-ம் நூற்றாண்டு உரைநடையில் நவீனத் தமிழ் இலக்கிய கிளாசிக்குகள் என்று எந்தப் படைப்புகளைச் சொல்வீர்கள்?

கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், சா. கந்தசாமியின் சாயாவனம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு போன்றவற்றைச் சொல்வேன்.

தமிழ் நாவல்களுக்குள் செவ்வியல் கூறுகள் இருக்கின்றன. ஆனால் முழு செவ்வியல் பிரதியாக ஒரு படைப்பு உருவாகவே இல்லை. ஏனெனில் 20-ம் நூற்றாண்டு வாழ்க்கை முழுமைத்தன்மை உடையதாக இல்லை. சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையைச் சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் கலைஞன் சொல்ல முடியும்.

இந்த நூற்றாண்டின் தனித்துவமான நெருக்கடி எது?

இந்த நூற்றாண்டில்தான் ஒரு மனிதனின் இருப்பைக் கிட்டத்தட்ட இயந்திரங்கள் இடம்பெயர்த்துள்ளன. ஒரு மனிதனிடம் பேசுவதற்கு நமக்குத் தொலைபேசி போதும். தொலைவு என்ற ஒன்றையே இது இல்லாமல் ஆக்கிவிட்டது. ஆனால் மனிதர்களுக்கு இடையிலான தொலைவை அறிவியல் இல்லாமல் ஆக்கிவிட்டாலும், பிரிவு என்பதும் தனிமை என்ற உணர்வும் தொடர்ந்து இருக்கவே செய்கிறது.

படைப்பு மாதிரியே வாசிப்புச் செயல்பாடும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறதே?

ஒரு புத்தகத்தையோ, நாவலையோ வாசிக்கும் மனம் அதைச் சுருக்கிக்கொண்டே இருக்கிறது. ‘சஞ்சாரம்’ நாவலின் மையமாக நாதஸ்வரம் இருந்தால், அவன் அதை நாதஸ்வரம் பற்றிய புத்தகமாக வாசிக்கிறான். நாதஸ்வரம் பற்றி எழுதியிருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்கிறான்.

ஒரு படைப்பு கடற்பஞ்சு மாதிரி, அதை வாசிக்கிற வாசகனுக்குச் சுருங்கியது போன்ற தோற்றத்தைத் தருகிறதே தவிர, அது சுருங்காது. திரும்ப அது தனது விஸ்தீரணத்துக்குள் போய்விடும். ஒரு நாவலையோ, படைப்பையோ திரும்பத் திரும்ப நினைவில் வாசிக்கிற, வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் தன்னைத் திறந்து காட்டுகிற ஒன்றாகத்தான் சிறந்த படைப்புகள் இருக்கின்றன. சொல் இல்லாத உறைந்த நிலையில் இருக்கிற அனுபவங்களை இலக்கியங்கள் வைத்துள்ளன. அதை வாசிப்பதுதான் அவசியமானது.

நீங்கள், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் ஒரு கட்டத்தில் பெரும் பத்திரிகைகள் வாயிலாக வெகுஜன வாசகர்களையும் கணிசமாக ஈட்டியிருக்கிறீர்கள்உங்களது எழுத்துகளை வாசகர்களின் தேவைக்காக எளிமைப்படுத்தியிருக்கிறீர்களா?

தமிழில் எழுத்தாளன் எவ்வளவு பிரபலமானவனாக இருந்தாலும் மற்ற இடங்களை ஒப்பிடும்போது வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா மூவருக்கும் தனித்தனியாக ஐந்தாயிரமோ பத்தாயிரமோ வாசகர்கள் இருக்கலாம். நாங்கள் எழுதும் உள்ளடக்கம் வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் விஷயமல்ல. பொழுது போக்குக்காக எதையும் எழுதுவது கிடையாது. தீவிரமான மொழியில் எழுதாமல் மிதமான மொழியில் எழுதுகிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இங்கே ஒரு வெகுஜனப் பத்திரிகையிலிருந்து என்னிடம் கட்டுரையோ, பத்தியோதான் கேட்பார்கள், இலக்கிய ரீதியான கதையைக் கேட்பதில்லை. என்னால் ஒரு எளிய காதல் கதையை எழுத முடியாது.

ஆவணத்துக்கும் படைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

ஆவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ஸ்ரீரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு குதிரையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த குதிரை, யாருடைய குதிரை, ஏன் இக்குதிரை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு குதிரையை உருவாக்க முயன்றது. இதுதான் ஒரு ஆவணத்துக்கும் படைப்புக்கும் இடையிலான தொடர்பு. ஆவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.

நன்றி : தி இந்து

0Shares
0