தொலைக்காட்சியில் பராசக்தி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் பர்மாவிலிருந்து அகதியாக வந்தவர்களுக்கான முகாமில் பதிவு செய்வதற்காக எஸ்.எஸ்.ஆர் காத்துக் கொண்டிருப்பார். அவருக்கு முன்பாக இரண்டு பேர்களின் ஊர் விபரங்கள் பதிவு செய்வதைக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விபரமும் தெரியாது. சிபாரிசின் பெயரில் ஒருவரை முகாமில் சேர்த்துக் கொள்கிறான் முகாம் பொறுப்பாளர்.
ஊன்று கோலுடன் நிற்கும் எஸ். எஸ். ஆருக்கு முகாமில் இடமில்லை என்று விரட்டியடிப்பார் பொறுப்பாளர். அதற்கு எஸ்.எஸ். ஆர் உயிர் தப்பி நடந்தே பர்மாவிலிருந்து வந்தால் இங்கே வாழ அனுமதிக்க மறுக்கிறார் என்று ஆதங்கப்படுவார். அவரைப் போன்று விலக்கப்பட்டவர்கள் ஒரு மரத்தடியில் ஒன்று கூடி இனி என்ன செய்வது என்பதைப் பற்றிப் பேசுவார்கள். அகதிகளை நிர்கதியாக அலையவிட்ட கதை என்றோ துவங்கியிருக்கிறது.
பர்மா அகதி முகாம் பற்றி வேறு ஏதாவது தமிழ்த் திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதா எனத் தெரியவில்லை. அகதி முகாம் என்பது சொந்த விருப்பு வெறுப்புகளின் படி ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் இடமாக இருப்பதை அன்றே பதிவு செய்திருக்கிறார்கள்.
யுத்த காலத்தில் நடந்தே பர்மாவிலிருந்து தமிழகம் வந்து சேர்ந்த காட்சிகள் ஏன் பராசக்தியில் இடம்பெறவில்லை. கதையின் போக்கிற்கு அவை தேவையற்றதாகத் தோன்றியிருக்கக் கூடும். அல்லது பொருட்செலவு காரணமாக இருக்கும். ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர்தப்பி நடந்து வந்த துயரக்கதை இதுவரை சினிமாவில் காட்சிப்படுத்தப்படவேயில்லை.
நாம் உண்மையில் எடுக்க வேண்டிய திரைப்படம் பர்மாவிலிருந்து அகதிகளாக மக்கள் நடந்துவந்த கதையே. பெரும்பாலோர் மழையில் நனைந்து, வெயிலில் வாடி பசியோடும் நோயோடும் நீண்ட தூர நடைப் பயணத்தையே மேற்கொண்டார்கள்.
இரங்கூனில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்த “ஜோதி” எனும் பத்திரிக்கையின் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தார் சாமிநாத சர்மா. இரண்டாம் உலகப்போரின் போது 1941ன் இறுதியில் ஜப்பானிய விமானங்கள் இரங்கூன் மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டன. இதில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள். உயிருக்குப் பயந்து தங்கள் வீடு சொத்து யாவையும் துறந்து மக்கள் கால்நடையாக இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.
சாமிநாத சர்மாவும் தனது வீடு பத்திரிக்கை அலுவலகம் கையெழுத்துப்பிரதிகள் என எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு அகதியாகத் தமிழகத்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டார்.
அந்தப் பயண அனுபவத்தை எனது பர்மா வழிநடைப் பயணம் என வெ. சாமிநாத சர்மா தனி நூலாக எழுதியிருக்கிறார். இந்நூல் மிக முக்கியமான வரலாற்று ஆவணம். இதிலுள்ள நிகழ்வுகளைக் கொண்டு பிரம்மாண்டமான திரைப்படத்தை எடுத்துவிட முடியும்.
இரங்கூனில் கிளம்பி கல்கத்தா வந்தடைவது வரையான நெடும்பயணம் மிகத் துயரமானது. வாசிக்கையில் கண்ணீர் வரவழைக்கக் கூடியது. கல்கத்தாவிலிருந்து பின்பு சென்னை வந்திருக்கிறார் சர்மா.
கேப்டன் குமார் என்ற நீலமணி எழுதிய சிறார் நாவலும் பர்மாவிலிருந்து அகதியாக வந்து பையனின் வாழ்க்கையைத் தான் விவரிக்கிறது.
தேவேந்திரநாத் ஆச்சார்யா என்கிற அஸ்ஸாமிய எழுத்தாளர் எழுதிய “ஜங்கம்”; என்கிற நாவலும் பர்மாவிலிருந்து புறப்பட்ட மக்களின் நெடும்பயணம் பற்றியதே
பராசக்தியின் துவக்கக் காட்சி ஒன்றில் மதராஸ் வந்து சேர்ந்த சிவாஜி அன்றிரவே மதுரை போவதற்காக ரயிலில் டிக்கெட் போடச்சொல்லி தங்குமிடத்தின் மேலாளரிடம் சொல்லுவார்
அவர் மெஜுரா தானே சார் போடச்சொல்லிவிடுகிறேன் என்று பதில் தருவார் மேலாளர்
மதுரையை மெஜுரா என்று சொல்வது அந்தக் காலத்தின் பேஷன். பள்ளி ஆசிரியர்கள் பலரும் மதுரைக்குப் போய் வந்தால் மெஜுரா போயிட்டு வந்தேன் என்று தான் சொல்வார்கள். வெள்ளைக்கார்கள் மதுரையை இப்படி அழைத்தார்கள் என்பார்கள். இன்றைக்கு மெஜுரா என்ற சொல் மறைந்து போய்விட்டது.
அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு இரண்டே ரயில்கள் . இரண்டிலும் டிக்கெட் இல்லை காலை ரயிலுக்கு டிக்கெட் போடவா என்று மேலாளர் கேட்பார். சிவாஜியும் சம்மதம் தெரிவிப்பார். ஐம்பது ஆண்டுகளுக்குள் மதுரைக்குப் போய் வருவது என்பது எவ்வளவு எளிய விஷயமாகிவிட்டது. அதுவும் தற்போது காலை கிளம்பினால் மதிய உணவிற்கு மதியம் போய்விடலாம். அத்தனை சாலை வசதி.
மதராஸ் திருச்சி மதுரை எனத் தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களின் கதையைச் சொல்கிறது பராசக்தி திரைப்படம். படத்தின் புகழ்பெற்ற நீதிமன்ற காட்சியில் நீதிபதியாக நடித்திருப்பவர் கவியரசர் கண்ணதாசன். ஆனால் படத்தில் அவர் பாடல் எழுதவில்லை.
பர்மா ராணி என்றொரு படமும் அந்தக் காலத்தில் வெளியாகியுள்ளது. இது முழுவதும் அரங்கினுள்ளே படமாக்கப்பட்டது. யுத்த பின்புலத்தில் பர்மாவிலிருந்த தமிழர்களின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது.
1952ல் பராசக்தி வெளியாகியுள்ளது. மதுரை தங்கம் தியேட்டரில் முதல் படமாகப் பராசக்தி தான் வெளியாகியிருக்கிறது.
••