பழகிக் கொள்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 2. 2026

சுதர்சனம் வீட்டின் முன்கேட்டைத் திறக்க முடியாதபடி அந்த பஸ் நின்றிருந்தது. அது ஏதோ போராட்டத்திற்காக வெளியூர் ஆட்களை ஏற்றி வந்த தனியார் பஸ். அதன் முகப்பில் பெரிய துணிபேனர் வைத்திருந்தார்கள்.

யார் அவர்கள், என்ன போராட்டம் என எதுவும் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் சுதர்சனத்திற்கு இல்லை. காரணம் அவர்கள் தெருவை ஒட்டிய திடலை சில ஆண்டுகளாகப் போராட்ட மைதானமாக மாற்றி விட்டிருந்தார்கள். அதற்குக் கேசிஆர் திடல் எனப் புதிய பெயர் வைத்திருந்தார்கள். அங்கே நிரந்தரமாக ஒரு மேடை உருவாக்கபட்டிருந்தது. ஷாமியானா போடுகிறவர்கள். வாடகைக்கு நாற்காலி தருகிறவர்கள். மைக் செட் அமைப்பவர்கள் அருகிலே இருந்தார்கள்.

அங்கே தினமும் யாராவது. எதற்காகவோ ஒன்று கூடிப் போராடினார்கள். எப்போதும் ஒரு போலீஸ் வேன் தெருமுனையில் நிற்பது வழக்கம். சில சமயம் தெருவிலிருந்து வெளியே போக முடியாதபடி தடுப்பு அமைத்து விடுவார்கள்.

ஆர்ப்பாட்டம். கண்டன ஊர்வலம், மனித சங்கிலி, உரிமைப் போராட்டம், உண்ணாவிரதம், எதிர்ப்புப் பேரணி என அனைத்து கட்சிகளும் அனைத்து அமைப்புகளும் அந்த இடத்தையே தேர்வு செய்தன.

இதற்காகவே அந்த மைதானத்தை அரசாங்கம் ஒதுக்கிவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால் அரசாங்கம் இந்த மைதானத்தை ஒட்டிய வீதியில் வசிப்பவர்கள் எவ்வளவு நெருக்கடிக்கு ஆளாவார்கள் என நினைக்கவுமில்லை. கருத்து கேட்கவுமில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்திய போது சுதர்சனம் வீட்டிற்குள் சிலர் குதித்தார்கள். போலீஸ்காரர்கள் வீட்டுக் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து போராட்டக்காரர்களைப் பிடித்து இழுத்துப் போனார்கள். இரும்பு கேட்டை சொந்த செலவில் சரி செய்ய வேண்டியிருந்தது.

ஒரு முறை வெங்காயம் விலை உயர்வை கண்டித்து நடத்திய போராட்டத்தில் பலரும் வெங்காய மாலை அணிந்து கொண்டு வந்தார்கள் கூட்டம் முடிந்தபிறகு அத்தனை வெங்காயங்களும் சாலையில் கிடந்து நாறிப்போயின. இன்னொரு முறை நூறு பேர் ஒன்று திரண்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினார்கள். அதற்காக உடைக்கபட்ட மண் பானைகளின் துண்டுகள் அவரது வீட்டின் முன்பாகவே குவித்து வைக்கபட்டன. இன்னொரு முறை   அங்கே தெருநாடகம் நடத்தப்பட்டிருப்பதையும். எதிர்ப்பு பாடல்கள்  பாடப்படுவதையும் கேட்டிருக்கிறார்.

மூன்று மாதங்களின் முன்பு  அவர்கள் வீட்டின் முன்பாக ஒரு மூட்டை கருங்கற்களைக் கொண்டு வந்து குவித்துப் போராட்டம் நடத்துபவர்களை எதிர்தரப்புத் தாக்கியது. இரண்டு பக்கமும் கல் எறிந்த போது அவர்கள் வீட்டு கண்ணாடி ஜன்னலும் உடைந்து நொறுங்கியது.

சில நேரம் அவர்கள் வீட்டுக்குழாயில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு போனார்கள். போராட்டத்திற்காக விடிகாலையில் வந்து இறங்குபவர்கள் அவர் வீட்டு வாசலில் மூத்திரம் பெய்துவிடுவார்கள். சுதர்சனம் எத்தனையோ முறை சண்டை போட்டுப் பார்த்துவிட்டார். போலீஸில் புகார் கொடுத்தும் பார்த்துவிட்டார். எந்த நடவடிக்கையும் இல்லை.

“ வீட்டைப் பூட்டி பத்திரமா இருந்துக்கோங்க சார் “ எனக் காவல்துறை ஆய்வாளர் அறிவுரை சொன்னார்.

போராட்டச் செய்திகளைச் சேகரிப்பதற்காகவும் போராடுபவர்களை ஒளிப்பதிவு செய்வதற்காகவும் அவர்கள் வீட்டின் முன்பாகச் சேனல் கேமிராமேன்கள் செய்தியாளர்கள். திரண்டு நிற்பார்கள். சிலர் அவர்கள் வீட்டுச் சுவரின் மீது ஏறி நிற்பதும் உண்டு.. ஒரு சிலர் அவரைக் கேட்காமல் வீட்டிற்குள் நுழைந்து வாட்டர்டேங்க் மீது ஏறி நின்று தொலைவில் நடக்கும் போராட்டத்தை வீடியோ எடுப்பதும் உண்டு. சிலர் செல்போனை சார்ஜ் போட்டு தரச் சொல்வார்கள் எவரையும் கோவித்துக் கொள்ள முடியாது.

ஒருமுறை அவர்கள் வீட்டின் கதவை தட்டி ஒரு ஆள் “ பிரியாணி பொட்டலம் இருநூறு மிச்சமிருக்கு.. வேண்டியதை எடுத்துக் கோங்க சார் “ என்றார்

“ நாங்க வெஜிடேரியன் “ என்றார் சுதர்சனம்

“ அப்போ இங்கே வச்சிட்டு போறேன். யாருக்காவது குடுத்துருங்க “ என அவசரமாக நாலைந்து அட்டைபெட்டிகளை இறக்கி வைத்தார்.

“ இங்கே வைக்காதீங்க. எதிர் ரோட்டுல ஒரு பார்க் இருக்கு… அங்கே வச்சிட்டா.. தேவையானவங்க எடுத்துகிடுவாங்க “ என்றார் சுதர்சனம்

“ அதுக்கெல்லாம் நேரமில்ல சார். நாங்க கடப்பந்தாங்கல் போகணும் “ என அந்த ஆள் பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டுப் போனார்.

சுதர்சனத்திற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. தனக்குத் தெரிந்த பிளம்பர் மணியைப் போனில் அழைத்துச் சொன்னபிறகு அவர் ஆட்டோவில் வந்து பிரியாணி பொட்டலங்களை எடுத்துக் கொண்டு போனார்.

ஒருமுறை பெண்கள் நடத்திய ஒரு ஆர்பாட்டத்தில் தனது கைக்குழந்தையைச் சுதர்சனம் வீட்டில் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஒரு பெண் மன்றாடினாள். போராட்டம் முடிந்து திரும்பும் வரை அந்தக் குழந்தை அவர்கள் வீட்டின் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தது. போராட்டம் முடிந்து வந்த அந்தப் பெண் குடிக்க ஐஸ் வாட்டர் கிடைக்குமா எனக்கேட்டாள். சாவித்ரி அவளுக்குப் பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீர் குடிக்கத் தந்தாள். அந்தப் பெண் நானும் ஐந்து நிமிஷம் படுத்துகிடட்டுமா என அவர் ஹாலில் படுத்துக் கொண்டதும் நடந்திருக்கிறது.

இன்னொரு முறை இறந்த உடல் ஒன்றை அந்த மைதானத்தில் கொண்டு வந்து வைத்து போராடினார்கள். அன்று நடந்த மோதலில் ரத்தக்காயத்துடன் சிலர் அவர்கள் வீட்டுப் படியில் உட்கார்ந்திருந்தார்கள். இறந்தஉடல் மேடையிலே கிடந்தது. அன்றிரவு அவர்கள் வீதியில் மட்டும் நூறு இருநூறு ஜோடி செருப்புகள் கிடந்தன. உடைந்த மூக்குகண்ணாடி, கடிகாரம், வாட்டர் பாட்டில்களை மறுநாள் தூய்மை பணியாளர்கள் அள்ளிச் சென்றார்கள்.

“ வேறு வீட்டிற்கு மாறிவிடுங்கள். இல்லாவிட்டால் இந்தப் போராட்டங்கள் ஒயவே ஒயாது. உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது “ என்று அவரது நெருங்கிய நண்பர் தீனதயாளன் சொன்னார்

“ சொந்த வீட்டை விட்டு எங்கே போறது தீனு “ எனக்கேட்டார் சுதர்சனம்.

“ அதுக்குப் பார்த்தா.. எத்தனை நாள் இப்படி அவதிப்படுவே “

“ எனக்குப் பொறுமையில்லை. என்ன செய்யப்போறேனு எனக்கே தெரியலை “

“ 1970ல உங்க ஏரியா எவ்வளவு அமைதியா இருக்கும் தெரியுமா. நிறைய மரங்கள். அங்க தான் நாங்க கிரிக்கெட் ஆடுவோம் “

“ நான் இந்த வீட்டை 95ல் வாங்கினேன். அப்போ வெறும் மண்ரோடு.. சாயங்காலம் ஆனா.. நிறையப் பறவைகள் மரத்துல அடையும். அந்தச் சப்தம் கேட்க அவ்வளவு நல்லா இருக்கும். “

“ உங்க தெருவோட கடைசில ஒரு தெலுங்கு மியூசிக் டைரக்டர் இருந்தார். அவரைப் பாக்க ஒன்று ரெண்டு கார் வரும். சின்னப் பையன்ல பாத்துருக்கேன் “

“ கேள்விபட்டிருக்கேன். அந்த வீட்டை இடிச்சி. அபார்ட்மெண்ட் கட்டிட்டாங்க. எங்க ஏரியா திடல்ல முன்னாடி கோவில் கச்சேரி தான் நடக்கும். அதை இப்போ போராட்ட மைதானமா ஆக்கிட்டாங்க. எங்க நிம்மதி போச்சு. என்ன பண்ணுறதுனு தெரியலை “

“ சுதர்சனம் இது நம்மாலே முடியுற பிரச்சனை இல்ல. பாறை மேல மோதுனா நம்ம தலை தான் உடையும் பாத்துக்கோ “

“ அதுக்காக.. நான் பயந்துட்டு வேற ஏரியாவுக்கு ஒடணுமா.. பூனைக்கு யாராவது மணி கட்டி தானே ஆகணும் “

“ இது பூனையில்லை. சிங்கம். மணிகட்டினா.. நிக்காது.. “

“ நான் கோர்ட்க்கு போகப்போறன்.. இப்படியே வேடிக்கை பாத்துகிட்டு இருக்க முடியாது “

“ பாத்தியா.. போராட்டங்காரங்க உன்னையும் போராட வச்சிட்டாங்க ரிடயர்ட்மெண்ட் லைப்பை அமைதியா வாழ விடமாட்டேங்குறாங்களே “

“ அது என்னமோ நிஜம் தான் “ எனச் சுதர்சனம் சிரித்துக் கொண்டார்.

தினம் தினம் போராட்டக்காரர்கள் எழுப்பும் உரத்த சப்தங்கள். ஆர்பாட்டம் செய்கிறவர்களின் ஆவேச முழக்கங்கள், சவால்கள்.  எச்சரிக்கைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது அவரை மிகவும் எரிச்சல் அடைய வைத்தது.

இந்த இடத்தில் எந்தப் போராட்டம் நடத்தவும் அனுமதி தரக்கூடாது என உண்ணாவிரதம் இருக்கலாமா எனக் கூட நினைத்தார்.

“ நம்ம தெருவில இருக்கிற எல்லோரும் சேர்ந்து கமிஷனர் கிட்ட கம்ப்ளெயிண்ட் குடுக்கலாம் “ என்றாள் அவரது மனைவி

அது தான் சரியான வழி.. தெருவிற்குள் வந்து போக முடியாதபடி வாகனங்களை நிறுத்திவிடுகிறார்கள். குப்பைகளைப் போட்டுப் போகிறார்கள். அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எவராலும் இதனைத் தடுக்க முடியவில்லையே

தெருவில் உள்ள ஒவ்வொரு வீடாகப் போய்ச் சுதர்சனம் மைதானத்தை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினார்

“ நாம் இணைந்து கமிஷனரை நேரில் சந்தித்துப் புகார் கொடுப்போம் “ என்றார். “ கட்டாயம் செய்யவேண்டும் “ என்று சொன்னார்களே அன்றி ஒருவரும் துணைக்கு வரவில்லை.

சுதர்சனம் ஒருமுறை நேரடியாகக் கமிஷனரை சந்தித்துத் தனது புகாரை அளித்து நடப்பவற்றை தெளிவாக விளக்கினார்

“ உங்க பிரச்சனை புரியுது சார். ஆனா வேற இடம் குடுத்தா போராட்டம் பண்ணுறவங்க கேட்க மாட்டாங்க. “

“ அதுக்காக நாங்க தினம் தினம் அவதிப்படணுமா. காது கிழியுது சார் “

“ உங்க தெரு முனையில ஒரு போலீஸ் டீம் போடுறேன். அவங்க தொந்தரவு இல்லாம பாத்துகிடுவாங்க “

அந்த நாளே உத்தரவு பிறப்பிக்கபட்டது. நான்கு போலீஸ்காரர்கள் தெருமுனையில் நிழற்தாங்கல் போல அமைத்து அதனுள் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தில் நாற்காலி மட்டுமே இருந்தது. காவலர்கள் இல்லை. அதன்பிறகு அந்த நாற்காலியில் ஆர்பாட்டம் செய்ய வந்தவர்களில் சிலரே அமர்ந்து கொண்டார்கள்

நண்பரிடம் சொன்னது போலச் சுதர்சனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது இரண்டு வருஷங்களாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் தீர்ப்பு வரவில்லை.

••

வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ அந்த மைதானத்தில் போராட்டம் எதுவும் நடக்காது. அந்த நாட்களில் அவர்கள் ஜன்னலை திறந்துவிடுவார்கள். வாசலில் கோலம் போடுவார்கள். தொட்டிசெடியை வெயில்பட வைப்பார்கள். மற்ற நாட்களில் வீட்டுக்கதவை திறப்பதேயில்லை. ஆமை தனது ஒட்டிற்குள் தலையை இழுத்துக் கொண்டு ஒடுங்கியிருப்பது போலாகியிருந்தது அவரது வாழ்க்கை.

அன்றைக்கும் அது போல ஏதோ போராட்டத்திற்காக வந்திருந்த வெளியூர் பேருந்தை அவரது வீட்டின் முன்கேட்டை திறக்கமுடியாதபடி நிறுத்தியிருந்தார்கள்.

“ அப்பா நான் காலேஜ் போகணும். ஸ்கூட்டியை வெளியே எடுக்க முடியலை “. என மகள் ராகினி கூச்சலிட்டாள்

“ டிரைவர் யாருனு பாத்து எடுக்கச் சொல்றேன்மா “ என்றபடியே சுதர்சனம் வெளியே வந்தார். சாலையோரம் சிலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் பேருந்தின் டிரைவர் யார் எனக்கேட்டதற்குப் பக்கத்துல சாப்பிட போயிருப்பான் என்றார்கள்

“ வீட்டுவாசல்ல பஸ்ஸை நிறுத்துனா எப்படிப்பா “ என அவர்களிடம் கோவித்துக் கொண்டார்.

அந்த டிரைவரை எங்கே போய்த் தேடுவது எனத் தெரியாமல் அருகில் உள்ள பந்தலை நோக்கி நடந்தார். பந்தலில் இருநூறு பேருக்கும் மேலாக அமர்ந்திருந்தார்கள். யார் இந்தப் போராட்டத்தை நடத்தும் நிர்வாகி எனக் கேட்டபோது வெள்ளை சட்டை அணிந்த ஐம்பது வயதுள்ள ஒருவரை காட்டினார்கள்

“ சார். என் வீட்டு வாசல்ல உங்க ஆட்கள் பஸ்ஸை நிறுத்திட்டு போயிருக்காங்க. கொஞ்சம் எடுக்கச் சொல்லுங்க “

“ எந்த ஊர் பஸ் சார்.. “ என நிர்வாகி கேட்டார்

அதனைச் சுதர்சனம் கவனிக்கவில்லை.

“ உங்க பேனர் தான் கட்டியிருக்கு “.

“ எடுக்கச் சொல்றேன் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க “

“ என் பொண்ணு காலேஜ் போகணும் சார் “

“ எடுக்கச் சொல்றேன் நீங்க போங்க “ என்றபடியே யாருடனோ பத்திரிக்கையாளர்களை வரவழைப்பது தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

எதற்கும் சொல்லி வைப்போம் என அங்கிருந்த காவலர்களில் ஒருவரிடமும் சுதர்சனம் பஸ்ஸை எடுக்கச் சொல்லி வைத்தார்.

“ எடுப்பாங்க சார் “ என்று அவரும் சொன்னார். ராகினியால் தனது ஸ்கூட்டியை எடுக்க முடியவில்லை. அவள் நடந்து போய் மெயின்ரோட்டில் ஷேர் ஆட்டோ பிடித்துக் கல்லூரிக்கு சென்றாள்.

மதியம் மூன்று மணி வரை அந்தப் பேருந்து அவர்கள் வீட்டுவாசலில் நின்றிருந்தது. போராட்டம் முடிந்து ஆட்கள் பேருந்தில் ஏற வந்த போது அந்த டிரைவர் வந்திருந்தார். களைந்த தலை. சிவப்பான கண்கள். முப்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.

சுதர்சனம் மிகுந்த கோபத்துடன் அவனைத் திட்டியபோது தலையைச் சொறிந்தபடியே “ வயிறு சரியலை சார். லூஸ் மோஷன்.. தண்ணியா .பீச்சி அடிக்குது.. அதான் பார்க்கில படுத்துக்கிடந்தேன் “ என்றான்

அது உண்மையில்லை. பொய் சொல்கிறான் என அவனது போதையேறிய கண்களைப் பார்த்தவுடன் தெரிந்தது.

“ இப்படிப் பண்ணுனா.. நாங்க எப்படி இங்கே குடியிருக்கிறது “ எனக் கோபமாகக் கேட்டார் சுதர்சனம்

“ இது பப்ளிக் ரோடு சார். யார் வேணும்னாலும் வண்டியை நிறுத்தலாம் “ என்றான்

நோ பார்க்கிங் என அறிவிப்புப் பலகை உள்ளதை அவனிடம் விரல் நீட்டிக் காட்டினார்.

“ அதான் பஸ்ஸை எடுக்கிறேன்ல சார்.. “ என்றபடி பேருந்தின் ஹார்னை சப்தமாக அடித்தான்.

கல்லூரி முடித்துத் திரும்பி வந்த ராகினி புலம்பிக் கொண்டேயிருந்தாள். சாவித்ரி பூஜை அறையில் இருந்த தெய்வங்களிடம் முறையிட்டாள்.

அன்றிரவே முதலமைச்சர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பலருக்கும் சுதர்சனம் புகார் எழுதி ஆன்லைனில் அனுப்பியதோடு கூடவே வீட்டை அடைத்துப் பஸ் நிற்கும் வீடியோவையும் இணைத்திருந்தார். எவரிடமிருந்தும் ஒரு பதிலும் வரவில்லை..

எது எதற்கோ நீதி கேட்டு நியாயம் கேட்டு ஒன்றுகூடி போராடுகிறீர்களே. இங்கே குடியிருக்கும் எங்கள் பிரச்சனைக்கு ஒரு நியாயமும் செய்ய மறுக்கிறார்களே எனச் சுதர்சனம் மனதிற்குள் புலம்பினார்.

••

இந்த நிகழ்வு நடந்த மூன்றாம் நாள் அவரது வீட்டுச்சுவரில் “ வீரப்போர் புரிவோம் வாருங்கள் “ என நாற்பது வயதான ஒரு ஆள் ஆவேசமாகக் கையில் வாளோடு நிற்கும் போராட்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

எத்தனை சொன்னாலும் கேட்க மறுக்கிறார்களே என அவர் பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் போஸ்டர் மீது ஊற்றினார். பின்பு தேங்காய் கத்தியால் அதனைச் சுரண்டினார். அப்போது அதை யாரோ வீடியோ எடுக்கிறார்கள் என அவருக்குத் தெரியாது. ஆனால் அன்று மாலைக்குள் அந்த வீடியோ இணையத்தில் பரவியிருந்தது. பெங்களூரில் இருந்து அவரது மகன் பரத் அதனைப் பார்த்துவிட்டுப் போனில் அழைத்தான்

“ நீ ஏன்பா இதெல்லாம் செய்றே “

“ சுவத்தை நாசம் பண்ணிவச்சா.. பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும் “

“ நீங்க அந்த வீட்டை காலி பண்ணிட்டு பெங்களூர் வந்துருங்கப்பா. இங்கே நாங்க இருக்க அபார்ட்மெண்ட் உள்ளே வெளி ஆள் வர முடியாது. “

“ உனக்கு வேலை இருக்கு.. பெங்களூர்ல இருக்கே. நான் அங்கே வந்து என்ன செய்றது. எனக்கு அங்கே பிரண்ட்ஸ் யாருமில்லை “

“ இந்த வயசுக்குக்கு மேல என்னப்பா பிரண்ட்ஸ்.. நீ இங்க வந்து கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுப்பா “

“ அது என்னால முடியாது.. இங்கே நான் பண்ணுறதுக்கு நிறைய வேலை இருக்கு “

“ எது. ஒரு என்ஜிவோட சேர்ந்து ரீடிங் கிளப் நடத்துறயே.. “

“ அது மட்டுமில்லை. இப்போ ஆன்லைன்ல் கதை சொல்றேன். அமெரிக்காவுல இருந்து கூடக் கேட்குறா “

“ ராகினி சொன்னா.. பாவம்பா.. அந்தப் பசங்க. “ எனக் கேலி செய்தான். அப்படிப் பரத் சொன்னது அவருக்குப் பிடித்தேயிருந்தது.

••

சுதர்சனம் வீட்டின் முன்பாக இரண்டு பைக்கில் நாலு பேர் வந்திறங்கினார்கள். அவரது வீட்டுக்கதவை தட்டி உள்ளே வந்தார்கள். ஒருவன் கழுத்தில் வௌவால் செயின் போட்டிருந்தான்.

“ எதுக்காகப் போஸ்டரை கிழிச்சீங்க “ எனக்கேட்டான் ஒருவன்

“ இது என்வீடு…. வெளியே போஸ்டர் ஒட்டக்கூடாதுனு எழுதிப் போட்டிருப்பதைப் பாக்கலையா.. “

“ போஸ்டரை எடுக்கச் சொல்லி எங்க கிட்ட தானே சொல்லியிருக்கணும். நீங்களா கிழிப்பீங்களா “ எனக் கோபமாகக் கேட்டான் மற்றவன்.

“ புரியாம பேசாதீங்க. போஸ்டர் ஒட்டுனதே தப்பு. இதுல உங்க கிட்ட சொல்லிட்டு தான் கிழிக்கணுமா “

“ சுவர் உன்னோடதுண்ணா.. போஸ்டர் என்னோடது.. அதைக் குடுத்துரு “ என்றான் மற்றவன்

“ கிழிச்சி போட்டுட்டேன். “

“ அது தப்பில்லையா.. “

“ தப்பில்லை. அது என்னேடா ரைட்ஸ். “

“ அப்போ கிழிச்ச இடத்துல நீயே வந்து புதுப் போஸ்டரை ஒட்டு“ எனத் திமிராகச் சொன்னான் அந்த நபர்.

“ ஒட்ட முடியாது.. என்ன பண்ணுவே “

பேண்ட் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு மடக்கு கத்தியை வெளியே எடுத்து நீட்டியபடியே சொன்னான்.

“ அப்படியே கத்திய வாய்க்குள்ளே விட்டு கிழிச்சிடுவேன் “

சமையலறையில் இருந்து அவர்களைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சாவித்ரி கணவரை உள்ளே வரும்படி சைகையில் அழைத்தாள். சுதர்சனம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

“ மிரட்டினா.. நீங்க சொல்றதை நான் செய்யணுமா “

“ நீ போஸ்டர் ஒட்டுறதை நாங்க வீடியோ எடுத்து போடணும். “ என அந்த ஆள் முறைத்தபடியே சொன்னான்

“ முடியாது. என்ன பண்ணுவே “ என்றார் சுதர்சனம்

சட்டென அந்த ஆள் சுதர்சனம் முகத்தில் ஒங்கி அறைந்தான்

“ கிழபாடு.. சொன்னதைச் செய்றா “

முரட்டுதனமாக அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான் ஒருவன். மற்றவன் ஒரு போஸ்டரை அவரது கையில் திணித்தான். இன்னொரு பைக்கில் இருந்தவன் பசை வாளியை அவர் முன்பாகக் கொண்டுவந்து வைத்தான். சுதர்சனம் அதனை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார். பிடறியோடு இன்னொரு அடி விழுந்தது.

“ ஒட்டுறா மயிரு… “

அவருக்கு வலித்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

கிழே கிடந்த குச்சி ஒன்றை எடுத்து ஒருவன் அவரது கையில் அடித்தான் மற்றவன் கிழட்டு நாயி.. என அவரைத் தள்ளினான்.

அவர் போஸ்டரை ஒட்டவில்லை.. ஒருவன் தானே பசையைச் சுவற்றில் தடவினான். மற்றவன் அவர் கையில் போஸ்டரைத் திணித்துச் சுவர் அருகே இழுத்துப் போய் ஒட்டவைத்தான். மற்றவன் அதை வீடியோ எடுத்தான்

“ எங்க கூட்டம் முடியுற வரைக்கும் இந்தப் போஸ்டர் இப்படியே தான் இருக்கணும். கிழிச்சே.. நீ செத்தே “

என அவர்கள் பைக்கில் புறப்பட்டுப் போனார்கள். தன் கையால் மலத்தை அள்ளி சுவரில் பூசியதை போல அருவருப்பாக உணர்ந்தார். என்ன செய்வது யாருக்கு போன் செய்வது எனப் புரியவில்லை. தீனதயாளனுக்குப் போன் செய்தார்

“ இதுக்குத் தான் அங்கே குடியிருக்காதேனு சொன்னேன். நீ கேட்கலை. வீடு புகுந்து அடிக்கிறாங்கன்னா.. நிச்சயம் பெரிய பேக்ரவுண்ட் இருக்கும் “

“ அவன் யாரா இருந்தாலும் நான் விடமாட்டேன் “

“ நீ உடனே ஒரு போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்துரு.. என் கூட வேலை பாத்த ரவீந்தர் பையன் லாயரா இருக்கான். அவன்கிட்ட பேசிட்டு வர்றேன் “

பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனில் சென்று ஒரு புகார் அளித்தார். ஒரு போலீஸ்காரர் பைக்கில் வந்து அவரது வீட்டின் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டரை புகைப்படம் எடுத்துப் போனார்.

ரவீந்தர் சொன்ன வக்கீல் முகிலன் வந்திருந்தான். காவல்நிலையத்தில் செய்யப்பட்ட புகாரைப் பற்றி விசாரித்துக் கொண்டு அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போய்க் காயங்களைப் பரிசோதனை செய்து மருத்துவசான்றிதழ் வாங்கும்படி செய்தான். பின்பு பத்திரிக்கையாளர்களில் தனக்கு நண்பராக உள்ள இளமாறனை தொடர்பு கொண்டு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டான்.

அன்றிரவு அவரது வீட்டின் வாசலில் ஒரு லேண்ட்ரோவர் கார் வந்து நின்றது. அதிலிருந்து ஆறடி உயரமான, வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த, கழுத்தில் பெரிய தங்கச் செயின் அணிந்த ஒருவர் இறங்கினார். அவர் கூடவே நான்கு இளைஞர்கள் வந்தார்கள். தான் ஒட்டிய போஸ்டரில் இருந்த நபர் அவர் தான் எனத் தெரிந்தது.

“ என்ன சார் ஆச்சு. நம்ம பசங்க யாரோ உங்களை அடிச்சிட்டதா.. கம்ப்ளெயிண்ட் குடுத்துருக்கீங்கன்னு சொன்னாங்க “

நடந்தவற்றை விரிவாக அவரிடம் சொன்னார் சுதர்சனம்

“ இது நம்ம பசங்க செய்த வேலையில்லை சார். வேற யாரோ.. பொறுக்கிப்பசங்க வேலை. “

“ அவங்க ஏன் உங்க போஸ்டரை ஒட்டச் சொல்றாங்க “

“ என் பேரை கெடுக்கக் கூடச் செய்திருக்கலாம்லே “

“ அதைப்பற்றி எனக்குத் தெரியாது சார். வீடு புகுந்து என்ன அடிச்சிருக்காங்க. நான் சும்மா விடமாட்டேன் “

“ சாருக்கு சொந்த ஊர் எது. என்ன வேலை பாத்தீங்க “

“ திருச்சி.. என்டிஎப்ல என்ஜினியரா இருந்து ரிடயர்ட் ஆகிட்டேன் “

“ ஒரே பொண்ணா.. “

சுதர்சனம் பதில் சொல்லவில்லை.

“ எங்க ரிலேடிவ்ஸ் கூடத் திருச்சில இருக்காங்க…. எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க. திருச்சில எங்க வீடு “

அவர் பதில் அளிக்காமல் எதிரே இருப்பவரை வெறித்துப் பார்த்தபடி இருந்தார்

“ உங்களைத் தொந்தரவு செய்தவங்க யாரா இருந்தாலும் நான் சாரி கேட்டுகிடுறேன். பிரச்சனையை இத்தோட முடிச்சிக்கோங்க.. அதான் நல்லது “

“ அப்போ அந்தப் போஸ்டரை நீங்களே கிழிச்சிட்டுப் போயிருங்க“ என உறுதியான குரலில் சொன்னார் சுதர்சனம்.

எதிரேயிருந்தவரின் முகம் மாறியது.

“ என் போஸ்டரை நான் கிழிக்கணுமா “

“ என் வீட்டு சுவர்ல யாரும் போஸ்டர் ஒட்டக்கூடாது “

“ என்னமோ உன் பொண்டாட்டி முகத்துல ஒட்டுன மாதிரி புலம்புறே “.

“ நீங்க பேசுறது சரியில்லை “

“ நீ பேசுறது தான்யா சரியில்லை. வீடு தேடிவந்து சாரி கேட்டா.. என்ன சும்பப்பயனு நினைச்சிட்டயா. ஒரு போஸ்டர் இல்லை. வீடு உள்ளே பூராவும் கூடப் போஸ்டர் ஒட்டச் சொல்லுவேன். நீ என்ன செஞ்சிருவேனு பாப்போம் “

“ பண்ணி பாருங்க தெரியும் “ என்றார் சுதர்சனம்

“ சேகரு… வீட்டுக்குள்ளேயும் பத்து போஸ்டரை ஒட்டிவிடு…. பாத்துகிடுவோம் “

என அவர் முறைத்தபடியே சென்றார். ராகினியும் சாவித்ரியும் பயந்து போய் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுதர்சனம் கண்முன்பாகவே அவரது வீட்டிற்குள் பத்துப் போஸ்டர்களை ஒட்டினார்கள். அவருக்குக் கைகால்கள் நடுங்கின. சாவித்ரி வெடித்து அழுதாள். ராகினி நாம் உடனே இங்கிருந்து போய்விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். அவருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை

சுவரை வெறித்தபடியே அமர்ந்திருந்தார். திடீரென ஒரு முதலை தனது வீட்டிற்குள் நுழைந்து தனது காலைக் கவ்வி இழுப்பதைப் போல உணர்ந்தார். தீனதயாளனுக்குப் போன் செய்தபோது அவர் பதற்றமாகி “ உடனே நீ திருச்சிக்கு போயிடு.. பிரச்சனை இத்தோட நிக்காது “ என்றார்

“ வீடு பூரா போஸ்டர் ஒட்டியிருக்காங்க தீனு.. “

“ அவங்க கூட்டம் முடிஞ்சிட்ட பிறகு அதைக் கிழிச்சிகிடலாம் “

“ இது அராஜகம்.. “

“ நம்மாலே ஒண்ணும் செய்ய முடியாது. நீ ஊருக்குக் கிளம்பு “

“ நான் போகப்போறதில்லை. நாளைக்கு அவங்க மீட்டிங் நடக்குற இடத்துல போயி நியாயம் கேட்கப்போறேன் “

“ ஏன் முட்டாள்தனமா யோசிக்கிறே.. “

“ சும்மா இல்லே… கூட்டத்தோட முன்னாடி போய்த் தீக்குளிக்கப் போறேன் “

“ போலீஸ் பிடிச்சி கொண்டு போய் ஸ்டேஷன்ல அடைச்சிருவான்.. ஆறுமாசம் ஜெயில்ல இருக்கணும்.. உன் கோபம் எனக்குப் புரியுது. எதையும் யோசிக்காம நீ உடனே கிளம்பு “

அவரால் தீனு சொல்வதை எற்றுக் கொள்ளமுடியவில்லை. வீட்டிற்குள் ஒட்டப்பட்ட போஸ்டர்களைக் கிழிப்பதா, அப்படியே விட்டுவைக்க வேண்டுமா எனக் குழப்பமாக இருந்தது. இதற்குள் சாவித்ரியும், ராகினியும் துணிகளை எடுத்து பேக் செய்திருந்தார்கள். வீட்டை பூட்டிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட போது மணி ஒன்பதாகியிருந்தது. சுதர்சனம் தானே காரை ஒட்டினார். நகரை விட்டு வெளியேறுவது மனதை வேதனைப்படுத்தியது. விடிகாலையில் அவர் திருச்சியை அடைந்த போது சாவித்ரியும் ராகினியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்

தனது தம்பி வீட்டில் தங்கிக் கொண்ட போது எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. மறுநாள் பகலில் சாவித்ரி நடந்தவற்றைச் சொன்ன போது அவரது தம்பி ராகவன் உடனடியாக வீட்டை விற்றுவிட்டு வேறு வீடு வாங்கிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை சொன்னான். அதைத் தீர்வாக அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனவருத்தமும் கவலையுமாகப் பத்து நாட்கள் திருச்சியில் இருந்தார். பின்பு மனைவி மகளுடன் வீடு திரும்பிய போது சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கிழிந்து தொங்கியது. வீட்டிற்குள் இருந்த போஸ்டர்களை அவர்கள் சுரண்டி எடுத்தார்கள்.

அதன்பிறகான நாட்களில் சுதர்சனத்திடம் ஒரு மாற்றம் உருவானது. அவராகப் போராட்ட மைதானத்தில் எந்தக் கூட்டம் நடந்தாலும் அதில் ஒருவராகப் போய் அமர்ந்து கொண்டார். திடீரெனத் தன்னை ஒரு நடிகனைப் போலவும் அங்கே நடப்பவை பெரிய நாடகம் போலவும் உணர ஆரம்பித்தார்.

“ இங்கே போஸ்டர் ஒட்டலாம் “ என அவர் தன்னுடைய வீட்டுச்சுவரில் எழுதிப்போட்டிருப்பதைச் சிலர் வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துப் போனது அதன்பிறகே நடந்தது

••

.

0Shares
0