புகைப்படங்களின் எதிரி

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜே.டி.சாலிஞ்சர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். 2013ல் வெளியான இந்தப் படத்தை Shane Salerno தயாரித்திருக்கிறார்

எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு.பெரும்பாலும் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பாகவே ஆவணப்படங்கள் இருக்கின்றன.தமிழின் நேர்த்தியான ஆவணப்படங்கள் என்று கவிஞர் ரவிசுப்ரமணியன்.அம்ஷன்குமார் இயக்கிய ஆவணப்பபடங்களைக் குறிப்பிடலாம்.

சாகித்யஅகாதமியே ஆண்டு தோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறது.ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் குறுந்தகடாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.அவற்றில் தேர்வு செய்த ஆவணப்படங்களைச் சென்னையில் திரையிட்ட விழாவில் நான் கலந்து கொண்டேன்.பெரும்பான்மை படங்கள் நியூஸ் ரீல் போலவே தயாரிக்கப்பட்டிருந்தன.பிபிசி மற்றும் அமெரிக்கத் தயாரிப்பில் உருவான எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் தீவிரமான ஆய்வோடு கடின உழைப்பும் பெரும் பொருட்செலவுடன் உருவாக்கப்படுகின்றன.அவற்றைக் கல்வி நிலையங்களில் திரையிடுகிறார்கள்.ஆனால் நமது கல்வி நிலையங்களில் இது போன்ற முயற்சிகள் குறைவே.

அமெரிக்காவின் முக்கிய எழுத்தாளர்கள் பலரையும் குறித்து விரிவான ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.சமீபமாக ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் குறித்து முழுநீள திரைப்படங்களையும் எடுத்து வருகிறார்கள்.அவை வணிகரீதியாகவும் பெரும் வெற்றி பெறுகின்றன. கவிஞர் எமிலி டிக்கன்சன் பற்றிய A quite passion ஒரு சிறந்த உதாரணம்.

ஜே.டி.சாலிஞ்சர் அமெரிக்க நவீன இலக்கியத்தின் அடையாளம்.அவரது எழுத்து தனித்துவமானது.பதின்வயதின் உளச்சிக்கல்களைப் பற்றி அவரது எழுத்து அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் பெரும்செல்வாக்கு பெற்றிருக்கிறது.இந்தியாவின் பெருநகரங்களில் பிறந்து வாழும் பதின்ம வயதினருக்கு சாலிஞ்சரின் எழுத்து நெருக்கமாக இருக்கக் கூடும்.

சாலிஞ்சரின் தி கேட்சர் இன் தி ரை நாவலை விடவும் எனக்கு ஹெர்மன் ஹெஸ்ஸேயின் டீமியன் நாவலே அதிகம் பிடித்துள்ளது.இரண்டும் ஒரே உலகைப் பேசும் நாவல்களே.சாலிஞ்சரிடம் காணப்படும் அதீத அமெரிக்கத்தன்மையே எனது விலகலுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.உண்மையில் அதுவே அவரது பலம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

படத்தின் முதற்காட்சியில் வெளிஉலகத் தொடர்புகளை முற்றிலும் துண்டித்துவிட்டுக் கார்னிஷ் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வரும் சாலிஞ்சரைப் பத்திரிக்கை ஒன்றிற்காகப் புகைப்படம் எடுக்கக் காத்துகிடக்கிறார். ஒரு போட்டோகிராபார்.

90 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை.அதனுள் தனிக் குடியிருப்பு.அவரது வீட்டின் கதவுகள் மூடியே இருக்கின்றன.எப்போது சாலிஞ்சர் வெளியே வருவார் என்று தெரியாது,

வீட்டின் பின்புறத்தில் சிறிய மரவீடு ஒன்றை அமைத்துக் கொண்டு அதற்குள் எழுத்துப் படிப்பு என்று குடும்பத்தவர்கள் கூடப் பார்க்க முடியாதபடி வாழ்ந்து வந்தார் சாலிஞ்சர். ஆகவே அவரைப் புகைப்படம் எடுப்பது என்பது இயலாத காரியம்.

கானகப்புலியை புகைப்படம் எடுக்கக் காத்து கிடப்பவரைப் போலக் குளிரில் நடுங்கியபடியே போட்டோ கிராபர் மரங்களுக்குள் ஒளிந்தபடியே நாட்கணக்கில் காத்துகிடக்கிறார்.முடிவில் ஒரு நாள் தபால்களை எடுப்பதற்காகச் சாலிஞ்சர் வெளியே வருகிறார்.போட்டோகிராபர் அவசர அவசரமாகப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார். போட்டோ எடுக்கும் ஒசை கேட்டு சாலிஞ்சர் வீட்டினுள் திரும்பிப் போவதற்குள் பத்து பதினைந்து புகைப்படங்களை எடுத்துவிடுகிறார்,

நீண்ட காலத்தின் பின்பு சாலிஞ்சரின் புகைப்படம் பத்திரிக்கையின் அட்டையில் இடம்பெறுகிறது. அமெரிக்கா வியந்து கொண்டாடும் ஒரு எழுத்தாளர் ஏன் இப்படிப் புகழின் வெளிச்சத்தை விட்டு ஒதுங்கி வாழுகிறார் என்பதை ஆவணப்படம்பல்வேறு நேர்காணல்கள் வழியாக விவரிக்க ஆரம்பிக்கிறது.

மேற்குலகில் ஒரு எழுத்தாளன் புகழ்பெறத்துவங்கியதும் அவனது இயல்பு வாழ்க்கை மாற ஆரம்பிக்கிறது.ஒரு நாவல் பெருவெற்றியைப் பெற்றுவிட்டால் உடனடியாகப் பதிப்பகங்கள், சினிமா இயக்குனர்கள்.தொலைக்காட்சி தொடருக்கான தயாரிப்பாளர்கள்.நாடக இயக்குநர்கள் எனப் பலரும் தொடர்பு கொண்டு பணத்தை அள்ளித் தர முன்வருகிறார்கள்.புத்தக வெளியீடு, விருந்து.தொலைக்காட்சி நேர்காணல் என எழுத்தாளன் பரபரப்பாக இயங்க வேண்டிய நிலை உருவாகிறது.எழுத்தாளர் பலரும் இதைப் பயன்படுத்திப் பெரும்பணத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் சாலிஞ்சர் தனது புகழை விட்டு ஒதுங்கியே வாழ்ந்தார்.அவர் அளவிற்கு ஊடகங்களால் கொண்டாடப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் எவருமில்லை.ஆனால் அவர் ஒரு போதும் ஊடகங்களைக் கண்டுகொள்ளவேயில்லை.

நியூயார்க்கில் வசித்த சாலிஞ்சரின் தந்தை வெண்ணெய் கட்டிகள் விற்பனை செய்து வந்த யூதர்.அவரது அம்மா ஒரு ஜெர்மானியர்.யூத மரபுப் படியே சாலிஞ்சர் வளர்க்கப்பட்டார்.பள்ளி நாட்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் சாலிஞ்சர் மனதில் ஆழமாகப் பதிந்து போயின. அதுவே அவரது கதை உலகின் ஆதாரம்.உறைவிடப்பள்ளி ஒன்றில் பயிலும் ஹோல்டன் என்ற கதாபாத்திரத்தின் கதையைத் தான் முதல் நாவலாக எழுதினார் சாலிஞ்சர்.

இரண்டாம் உலகப்போர் தான் சாலிஞ்சரின் ஆளுமையை உருவாக்கியது.கல்லூரி நாட்களில் சாலிஞ்சர் ஜாலியான இளைஞர்.இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.அவருக்கு விருப்பமான எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில்.அமெரிக்க இலக்கியத்தில் மெல்விலுக்கு நிகரே கிடையாது என்கிறார் சாலிஞ்சர்

சிறுகதைகளில் ஹெமிங்வே உருவாக்கிய பாணி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.தானும் ஹெமிங்வேயைப் போலக் கதைகள் எழுத வேண்டும் என ஆசை கொண்டிருந்தார்.

பிரபல நாடக ஆசிரியரான யூஜின் ஒநீலின் மகளுடன் காதல் வசப்பட்ட சாலிஞ்சர் அவளைச் சந்திப்பதற்காக அடிக்கடி இரவு விடுதிக்குச் சென்றார்.இருவரும் ஒன்றாக ஊர் சுற்றினார்கள்.காதலித்தார்கள்.ஆனால் பெயர் புகழுக்காக எதையும் செய்யும் பெண்ணாக இருந்தார் ஒநீல்.ஆகவே அவளைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளம் வலம் வந்தது. இது சாலிஞ்சரை எரிச்சல்படுத்தியது-

அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்பட்ட சாலிஞ்சர் அதற்கான மருத்துவப் பரிசோதனையில் நிராகரிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளின் பின்பு மீண்டும் ராணுவ சேவையில் சேர முயற்சித்து இந்த முறை தேர்வு பெற்றார். போர்முனையில் தீவிரமாகச் செயல்பட்ட சாலிஞ்சர் போர்க்களத்தின் நடுவே தான் தனது புகழ்பெற்ற நாவலான தி கேட்சர் இன் தி ரையை எழுத ஆரம்பித்தார்.

இந்த ஆவணப்படத்தில் சாலிஞ்சர் நாவல் எழுதிக் கொண்டிருக்கும் அபூர்வமான புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

ஆரம்ப நாட்களில் ஸ்டோரி என்ற இதழில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தார் சாலிஞ்சர்.எழுத்துக்கலையைப் பயிலுவதற்காகக் கொலம்பியா பல்கலைகழகத்தில் குறுகியகால வகுப்புகளிலும் கலந்து கொண்டு பயிற்சிகள் பெற்றார்.

எழுதத் துவங்கிய நாட்களிலிருந்தே நியூயார்க்கர் இதழில் தனது சிறுகதை வெளியாக வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார்.ஆனால் அவர் அனுப்பிய கதைகளைத் தொடர்ந்து நியூயார்க்கர் இதழ் நிராகரித்து வந்தது.இந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.எப்படியாவது தனது கதை நியூயார்க்கரில் வர வேண்டும் என்பதற்காக அதன் பழைய இதழ்களைத் தேடித்தேடிப் படித்து அதன் தேர்வு முறையை அறிந்து கொள்ள முயன்றார். முடிவில் அவரது a perfect day for banana fish என்ற சிறுகதை நியூயார்க்கரில் வெளியானது. அக் கதை வாசகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.பின்பு தொடர்ந்து நியூயார்க்கரில் அவரது கதைகள் வெளியாக ஆரம்பித்தன.

போர்முனையிலிருந்த நாட்களில் பாரீஸில் தற்செயலாக ஹெமிங்வேயை சந்தித்தார் சாலிஞ்சர்.தனது ஆதர்ச நாயகனை நேரில் கண்ட மகிழ்ச்சியில் தனது கையெழுத்துப்பிரதி ஒன்றை அவரிடம் வாசிக்கக் கொடுத்தார்.ஹெமிங்வே அந்தக் கையெழுத்துப்பிரதியை வாசித்து மிகவும் நன்றாக இருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்.அது சாலிஞ்சருக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

ராணுவத்தில் அவரோடு பணியாற்றிய நான்கு நண்பர்களே இறுதி வரை சாலிஞ்சருக்கு நெருக்கமாக இருந்தார்கள்.அவர்களுடன் பல்வேறு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.தொடர்ந்து அவர்களுக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.,

சாலிஞ்சர் காதலித்து வந்த ஒனாவை விருந்து ஒன்றில் சந்தித்த சார்லி சாப்ளின் அவளைத் தனது புதிய திரைப்படத்தின் கதாநாயகியாகத் தேர்வு செய்தார். சாப்ளினுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த ஒனா முடிவில் அவரையே திருமணம் செய்து கொண்டுவிட்டார். இந்த அதிர்ச்சி சாலிஞ்சரை முடக்கியது.ஒனா தன்னை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தார்.

இந்தக் கோபம் போர்முனையில் ஆவேசமாகச் செயல்பட வைத்தது.யுத்த புலனாய்வு பணியில் ஈடுபட்டு, பிடிபட்ட போர் கைதிகளை விசாரணை செய்துவந்தார்.போர் சூழல் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதைச் சாலிஞ்சர் நன்கு அறிந்திருந்திருந்தார்.அதுவே அவரது படைப்பில் ஆழமாக வெளிப்பட்டது.சாலிஞ்சரின் பெரும்பான்மைக் கதைகள் அவரது சொந்த வாழ்விலிருந்தே பிறந்தவையே.

தனது கதைகளைப் பத்திரிக்கைகளில் வெளியிட அனுப்பி வைக்கும் போது அதில் ஒரு வரி, ஒரு வார்த்தை மாற்றக்கூடாது என்பதில் சாலிஞ்சர் மிகவும் கறாராக இருந்தார்.ஒருமுறை அவரது கதை ஒன்றினைத் திருத்தம் செய்து கமா ஒன்றினைக்கூடுதலாகச் சேர்த்துவிட்டதாக அதன் ஆசிரியருடன் சண்டை போட்டார் சாலிஞ்சர்.அத்துடன் தனது கதையின் சிதைத்துவிட்ட பத்திரிக்கையோடு தனது உறவை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

ஆகவே அவரது படைப்புகளைக் கேட்டுப் பெறுவதோ, வெளியிடுவதோ எளிதாகயில்லை.கதைகளைத் தனது சொந்த விருப்பத்திற்காகவே எழுதுவதாகவும் அதை வெளியிட வேண்டும் என்று விரும்பவில்லை என்று சாலிஞ்சர் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.

அவரது தி கேட்சர் இன் தி ரை (The Catcher in the rye) நாவலின் கையெழுத்துப்பிரதியை முன்னணி பதிப்பகம் ஒன்றில் வெளியிடுவதற்காகச் சாலிஞ்சர் கொடுத்திருந்தார். அந்த நாவல் ஒரு குப்பை. முற்றிலும் திருத்தி எழுதப்பட வேண்டும் என்று பதிப்பகம் நிராகரிப்பு செய்தது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சாலிஞ்சர் கண்ணீர் வடித்தார்.ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது எனத் தனது கையெழுத்துப் படியைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் சாலிஞ்சர். ஆனால் அந்த நாவல் 1951ல் வேறு பதிப்பகம் ஒன்றில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதுவரை அந்த நாவல் ஆறு கோடி பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியிருக்கும் என்கிறார்கள். இப்போதும் ஆண்டிற்கு ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகி வருகிறது.

பதின்மவயதின் குழப்பங்கள்.நிராகரிப்புகள்.புறக்கணிப்பு ஆகியவற்றைப் பேசும் ஹோல்டன் காஃபீல்டு என்ற நாயகன் அமெரிக்க இலக்கியத்தின் மறக்கமுடியாத கதாபாத்திரங்களில் ஒருவனாகக் கொண்டாடப்படுகிறான்.

சாலிஞ்சரின் நாவல் அமெரிக்காவில் புதிய அலையை உருவாக்கியது.நாவலை வாசித்த இளைஞர்கள் அதைத் தங்களின் சொந்த வாழ்வின் அடையாளமாகக் கொண்டாடினார்கள்.நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போட்டி ஏற்பட்டது.ஆனால் தனது சிறுகதை ஒன்றைத் திரைப்படமாக எடுத்துச் சிதைத்துவிட்டார்கள் என்பதால் நாவலின் திரைப்பட உரிமையைச் சாலிஞ்சர் எவருக்கும் தர மறுத்துவிட்டார்.பிரபல இயக்குநர் எலியா கசன் தொலைபேசியில் அழைத்து உரிமை கேட்டபோது அவரையும் சாலிஞ்சர் கோபித்துக் கொண்டார்.

பணமும் புகழும் ஊடகவெளிச்சமும் சாலிஞ்சரின் இயல்பு வாழ்க்கை புரட்டிப் போட்டது. இத்தனை வெளிச்சம் தனக்குத் தேவையில்லை என அறிவித்த சாலிஞ்சர் தனது நாவலின் பின்னட்டையில் வெளியான தனது புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று பதிப்பாளரிடம் கேட்டுக் கொண்டார். தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ விரும்புவதாகத் தெரிவித்தார்.அதன்படியே அவரது நாவலில் இடம்பெற்றிருந்த சாலிஞ்சரின் புகைப்படம் நீக்கப்பட்டது. அதிலிருந்தே அவர் புதுவாழ்க்கையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள ஆரம்பித்தார்

உண்மையில் அது ஒரு நாடகம்.ஊடகவெளிச்சத்தில் இருப்பவரை விடவும் ஒளிந்து மறைந்து இருப்பவருக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன அமெரிக்க ஊடகங்கள்.அதை சாலிஞ்சர் நன்றாக உணர்ந்திருந்தார்.ஆகவே அவருக்கு எப்போது தேவையோ அப்போது தனது தரப்பை வெளிப்படுத்த அவர் முக்கியமான பத்திரிக்கையை நாடத் தயங்கியதேயில்லை.இதை இந்த ஆவணப்படத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

போர்க் களத்திலிருந்து திரும்பிய சாலிஞ்சர் மனநலசிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கே பிரெஞ்சுப் பெண்ணான சில்வியாவை சந்தித்துப் பழகினார்.அவர்கள் பின்பு திருமணம் செய்து கொண்டார்கள்.அந்தத் திருமணம் எட்டு மாதங்களிலே கருத்துவேறுபாடு காரணமாக முறிந்து போனது.

அதன்பிறகு ஜாய்ஸ் மேனார்டு என்ற பதினெட்டு வயது இளம் எழுத்தாளர் ஒருவருடன் நெருக்கமான நட்பு கொண்டார் சாலிஞ்சர். அப்போது சாலிஞ்சருக்கு 53 வயது.அவளைத் தன் வசப்படுத்திக் கொள்ளச் சாலிஞ்சர் தொடர்ந்து கடிதங்கள் எழுதினார்.காத்துக்கிடந்தார். முடிவில் அவளது அன்பைப் பெற்று அவளுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார்

பௌத்த சமயத்தில் ஈடுபாடு காட்டிய சாலிஞ்சர் தனது வீட்டில் மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்றை வைத்திருந்தார்.தினமும் பௌத்த முறைப்படி தியானம் செய்வதிலும் ஈடுபட்டு வந்தார்.வீட்டின் பின்புறத்தில் மரத்தால் செய்யப்பட்ட சிறிய குடில் தான் சாலிஞ்சர் எழுதும் அறை.அதன் கதவைப் பூட்டிக் கொண்டு நாட்கணக்கில் உள்ளேயே இருப்பார். அவரது டைப்ரைட்டர் இயங்கும் சப்தம் மட்டுமே வெளியே கேட்கும் என்கிறார் ஜாய்ஸ் மேனார்ட்

திரைப்படங்களைக் காணுவதில் ஆர்வம் கொண்டிருந்த சாலிஞ்சர் வீட்டிலே திரையிடுவதற்கு வசதியான புரொஜெக்டர் வைத்திருந்தார்.பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் பிரிண்டுகளை விலைக்கு வாங்கிச் சேகரித்திருந்தார்.பெரும்பான்மை நாட்கள் இந்தத் திரைப்படங்களை ஒன்றாக அமர்ந்து காணுவோம். அதுவே எங்களின் பொழுதுபோக்கு என்றும் ஜாய்ஸ் நினைவு கூறுகிறார்

தான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது குறித்துச் சாலிஞ்சர் எவருடனும் விவாதிப்பதில்லை.தனது கதாபாத்திரங்களை அவர் நிஜ மனிதர்களைப் போலவே கருதினார்.அவர்கள் தன்னுடன் இணைந்து வாழுவதாகவே உணர்ந்தார்.அன்றாடம் தான் எழுதிய பக்கங்களை ரகசியமாக ஒரு அலமாரியில் பூட்டி வைத்திருந்தார் சாலிஞ்சர்.அவற்றைத் தான் கண்டிருப்பதாகவும் படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை என்கிறார் ஜாய்ஸ்.

இளம்பெண்ணான ஜாய்ஸ் மேனார்டு தான் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் போல உணர்ந்தார்.சாலிஞ்சரின் உறவு கசக்க ஆரம்பித்தது.சாலிஞ்சருடன்வாழ்ந்த காதல்வாழ்க்கை பற்றி வெளிப்படையாக ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்தார்.அத்தோடு சாலிஞ்சர் எழுதிய காதல் கடிதங்களை ஏலத்தில் விற்பனை செய்தார்.இது சாலிஞ்சரை ஆத்திரப்படுத்தியது ஆகவே ஜாய்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இது போலவே சாலிஞ்சரின் கடிதங்களைக் கொண்டு அதிலுள்ள தகவல்கள் அடிப்படையில் அவரது சுயசரிதையை எழுத முயன்ற ஐயன் ஹாமில்டன் மீது வழக்குத் தொடுத்து நீதிமன்ற தடையாணை பெற்றார்.

கிளைரா டக்ளஸ் என்ற இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சாலிஞ்சர் இந்திய ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்.மனைவியோடு க்ரியா யோகா பயின்றார்.வீட்டிலே தியானம் செய்வது மந்திரங்களை உச்சரிப்பதுமாக இருந்தார்.

சாலிஞ்சரின் புகழ் உச்சத்திற்குச் சென்ற நாட்களில் அவர் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று எவருக்கும் தெரியாது.அவரது சமீபத்திய புகைப்படம் கிடைக்காமல் டைம் இதழ் அவரது ஒவியம் ஒன்றை இதழின் முன்னட்டையில் வெளியிட்டது.சாலிஞ்சரின் சகோதரி மற்றும் நண்பர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு நேர்காணல் செய்யப்பட்டார்கள்.அவரது சிறுகதைகள் கள்ளத்தனமாக அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.இதை எதிர்த்தும் சாலிஞ்சர் ஒரு வழக்கு தொடர்ந்தார்.கள்ளப்பிரதிகளின் விற்பனை தடைசெய்யப்பட்டது.

வாழ்நாள் முழுவதும் தனிமையில் எழுதி வந்த சாலிஞ்சர் குறைவான படைப்புகளைத் தான் வெளியிட்டிருக்கிறார்.தனக்குத் திருப்தியில்லாத படைப்புகளைத் தானே அழித்துவிட்டார் என்கிறார்கள்.

ஒரு நாவல் இருட்டில் வளரும் தாவரம் போன்றது.அதன் வளர்ச்சியை உலகம் அறியாது என்றொரு குறிப்பை சாலிஞ்சர் எழுதியிருக்கிறார்.அது உண்மை.

அவரது நாவலை வாசித்த இளைஞர்கள் பலரும் கட்டற்ற வாழ்க்கையை வாழ முற்பட்டார்கள்.இதனால் பல்வேறு குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.அது சாலிஞ்சரை வேதனைப்படுத்தியது.தான் எழுதியது ஒரு புனைகதை.அது நிஜமில்லை என்று பகிரங்கமாகத் தொலைக்காட்சி நேர்காணலில் அறிவித்தார்.ஆனால் அதை வெறும் கதையாக எவரும் நினைக்கவில்லை.இதன் காரணமாகவே தன்னைத் தேடி வரும் பத்திரிக்கையாளர்கள்., வாசகர்கள் எவரையும் சந்திக்க மறுத்துவந்தார் சாலிஞ்சர்.

அவரது நாவல் கல்வி நிலையங்களில் பாடமாக வைக்கப்பட்டபோது ஆபாசமான விவரிப்புகள் உள்ளதாகக் கூறித் தணிக்கை செய்யப்பட்டதோடு சில கல்வி நிலையங்களில் தடைசெய்யப்படவும் நேர்ந்தது.

சாலிஞ்சருக்கு ஒரு கிட்னி தான் இருக்கிறது என அவரது தோழிகள் இருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து சாலிஞ்சரின் இன்னொரு கிட்னி என்ன ஆனது எனப் பத்திரிக்கை ஆய்வுக் கட்டுரை வெளியிட்டது. அந்த அளவு சாலிஞ்சர் அமெரிக்க மக்களின் பேசுபொருளாக மாறியிருந்தார்.

பிறந்தநாள், திருமணநாள், புத்தாண்டு என எந்த விழாவினையும் கொண்டாடக்கூடாது எனக் கருதியவர் சாலிஞ்சர்.அவருக்கு இது போன்ற முன்முடிவு செய்யப்பட்ட கொண்டாட்டங்கள் பிடிப்பதில்லை என்கிறார் அவரது மகள்.

தனது 91வது வயதில் இறந்து போன சாலிஞ்சர் இன்றும் அமெரிக்க வாசகர்களின் விருப்பத்திற்குரிய படைப்பாளியாகவே கொண்டாடப்படுகிறார்.இந்த ஆவணப்படத்தில் அரிய புகைப்படங்கள், நேர்காணல்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜே.டி.சாலிஞ்சரை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு நிச்சயம் இப்படம் பிடிக்கக்கூடும்.

••

காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை

••

0Shares
0