புத்தகக் கண்காட்சி

 கடந்த இரண்டு நாட்களாக சென்னைப் புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புதிய வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது உத்வேகம் தருவதாக இருக்கிறது.

நேற்று மதியம் பாரதி புத்தகாலயத்தில் லெப்ட் வேர்ட் என்ற ஆங்கிலப்பதிப்பகம் வெளியிட்டுள்ள காரல் மார்க்சின் மூலதனம் நூலின் இந்தியப்பதிப்பு வெளியீடும் மூலதனத்தை எப்படி புரிந்து கொள்வது என்பதைப்பற்றி வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய நூலும் வெளியிடப்பட்டது, இந்தநூலை தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்.

மார்க்சின் மூலதனத்தின் முதல் தொகுதியை வாசித்திருக்கிறேன், அதை ஒரு இலக்கியப்பிரதி போல வாசிக்க முடியும் என்பதே அதன் தனிச்சிறப்பு, உலகை மாற்றிய சிறந்த பத்து புத்தகங்களில் மூலதனம் இடம் பெற்றிருக்கிறது, அத்தகைய சிறப்பான புத்தகம் ஒன்றின் இந்தியப்பதிப்பு விழாவில் கலந்து கொண்டதை பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்

மாலையில் நண்பர் அஜயன்பாலா மொழியாக்கத்தில் வெளியான பேட்டில் ஆப அல்ஜீரியஸ் திரைப்படத்தின் பின்புலம் மற்றும் திரைக்கதை நூலின் வெளியீடு புத்தக கண்காட்சியினுள்ளே ஆழி பதிப்பகத்தில் நடைபெற்றது, இயக்குனர் லிங்குசாமி வெளியிட கவிஞர் மீனா கந்தசாமி பெற்றுக்கொண்டார். அதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசியல் சினிமாவின் அடையாளமாக கொண்டாடப்படும் இந்தத் திரைப்படம் குறித்து சிறிய அறிமுக உரையாற்றினேன்.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் வந்திருந்த நண்பர் மணியம். பிரான்சில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் நாகரத்னம் கிருஷ்ணா. துபாயில் இருந்து வந்திருந்த நண்பர் சிவகுமார் என நட்புவட்டத்தோடு இணைந்து பேசியபடியே இனிமையாகக் கழிந்தது நேற்றைய பொழுது

தினசரி மாலை 4.30 முதல் 8 மணிவரை உயிர்மை அரங்கில் இருப்பேன், சந்திக்க விரும்பும் வாசகர்க்ள் நண்பர்கள் அனைவரும் வரலாம். சிலர் என்னோடு பேசத் தயங்கி நிற்பதை நேற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் என்னை அறிந்து கொள்ள விரும்புவதைப் போலவே நான் உங்களை அறிநது கொள்ள எப்போதுமே ஆசைப்படுகின்றவன், தயக்கமின்றி என்னோடு பேசலாம்.

 ••

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது புதிய நாவலான துயில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது, இந்த நாவலை நிறைய நண்பர்கள் படித்து முடிந்துவிட்டு என்னோடு பேசியது சந்தோஷம் தருவதாக இருந்தது, ஒரு நாவல் வெளியான சூடு தணிவதற்குள் அதை உடனே வாங்கி வாசித்து ஆர்வமாக கலந்துரையாடல் செய்வது அதற்குச் செய்யப்படும் பெரிய மரியாதை என்றே கருதுகிறேன், அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

••

இந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளியாகி இருந்த எனது புதிய சிறுகதை இரண்டு குமிழ்கள் பற்றி பாராட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பல நண்பர்கள் உணர்ச்சி ததும்ப தொலைபேசியில் உரையாடினார்கள், இன்றும் ஒரு சிறுகதைக்கு வாசகர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை உணரச் செய்தது

••

நாளைய இயக்குனர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் அருண் என்ற இளைஞர் எனது துணையெழுத்தில் இருந்து ஒரு நிகழ்வை குறும்படமாக மாற்றியிருக்கிறார். வீட்டுக்கணக்கு என்ற அந்தக் குறும்பட்ம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது

••

 எனது நண்பரும் தமிழின் மிக முக்கியக் கவிஞருமான தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுதி ஹேம்ஸ் எனும் காற்று உயிர்மை பதிப்பகத்த்தால் வெளியிடப்பட்டுள்ளது, மிகச்சிறப்பான நவீன கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு அவரது முந்தைய கவிதைத் தொகுப்புகளில் இருந்து பெரிதும் மாறுபட்டது, தேவதச்சனின் மிகச்சிறந்த கவிதை சாதனை என்றே இதைச் சொல்வேன்.

கவிதை எழுத. விரும்பும், எழுதிக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் இதை அவசியம் வாசிக்க வேண்டும் என்பது என் விருப்பம்

••

படித்துறை திரைப்படத்தின் இயக்குனரும் எனது நெருக்கமான நண்பருமான சுகா எழுதிய இசை மற்றும் வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பு தாயார் சன்னதி என்ற தலைப்பில் சொல்வனம் வெளியிட்டு உள்ளது, சுகா இசையில் தேர்ந்த ரசனை கொண்டவர். தமிழின் தலைசிறந்த இயக்குனர்களான பாலுமகேந்திரா மற்றும் பாலாவோடு பணியாற்றியவர், இப்போது விகடனில் புதிய பத்தி எழுதிக் கொண்டிருக்கிறார், இந்த நூல் உடுமலை டாட் காமின் அரங்கில் கிடைக்கிறது

••

புத்தகக் கண்காட்சியில் தேடி அலைந்து கடந்த இரண்டு நாட்களில் 40 புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்,

அதில் சில முக்கியமான புத்தகங்களைச் சிபாரிசு செய்ய விரும்புகிறேன்

1. அனொனிமா / மொழியாக்க நாவல் / தமிழில் தேவா, வெளியீடு பூபாளம் புத்தக பண்ணை விலை Rs.290

2. காபிர்களின் கதைகள் தொகுப்பு ஜாகிர் ராஜா வெளியீடு ஆழி பதிப்பகம் விலை Rs.160

3. புத்தக ஜாதக கதைகள் வெளியீடு பூம்புகார் பதிப்பகம் விலை Rs.47

4. ஆயிரத்தோரு அராபிய இரவுகள் எளிமையான மொழியாக்கம் பூம்புகார் பதிப்பகம் 3 தொகுதிகள் விலை Rs. 150

5. சிறைப்பட்ட கற்பனை. வரவரராவ் சிறைக்கடிதங்கள் எதிர் வெளியீடு விலை Rs.150

6. பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் மொழியாக்க கதைகள் துரைப்பாண்டி பாரதி புத்தகாலயம் விலை Rs.30

7. எழுத்தின் தேடுதல் வேட்டை நாகரத்னம் கிருஷ்ணா பிரெஞ்சிலக்கிய கட்டுரைகள் சந்தியா பதிப்பகம் விலை Rs. 85

8. விடுகதைத்தொகுப்பு தமிழ் பல்கலைகழகம் விலை Rs. 130

9. ஒத்தலோ / ஷேக்ஸ்பியர் தமிழில் புவியரசு, நியூசெஞ்சுரி வெளியீடு, விலை Rs. 85

10. Bridging connections an anthology of Srilankan Short stories Rajiva wijesinha – National Book trust- Rs. 85

11. Rousseau`s dog – David Edmonds – Harper Perennial Rs. 520

12. Little Star of bela Lua – Stories from brazil – Luana monterio – Harper. Rs 430

13. Step into a world – Anthology of New black Literature – Rs.400

14. Born- Einstein Letters – Macmillan – Rs.150

15. A monk and Two Peas – Story of Gregor Mandel – phoenix Rs.240

••

0Shares
0