பெயரும் முகமும்

குறுங்கதை

அந்த அரண்மனை இப்போது மியூசியமாக மாற்றப்பட்டிருந்தது. அதிலும் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியிருந்தார்கள்.

அலங்காரத்தையும், ஆடம்பரமான பொருட்களை இழந்த அரண்மனையைக் காணுவதற்கு யார் வரப்போகிறார்கள். ஒரு நாளுக்குப் பத்துப் பதினைந்து பார்வையாளர்கள் வருவதே அபூர்வம் என்றார்கள்.

மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் இப்போது அமெரிக்காவில் வசித்து வருவதாகச் சொன்னார்கள். முன்பு தர்பார் ஹாலாக இருந்த அறையை இப்போது ஓவியக் கூடமாக மாற்றியிருந்தார்கள். பல்வேறு ஐரோப்பிய ஒவியர்கள் மன்னர் குடும்பத்தை வரைந்திருக்கிறார்கள். சில ஓவியர்களைக் குடும்பத்துடன் வரவழைத்து அரண்மனையிலே தங்க வைத்திருக்கிறார்கள். அன்றாடம் மன்னர் குடும்பத்தை வரைவது அவர்களின் வேலை.

மன்னரின் பவனி. போர்களக் காட்சிகள் பெரிதாக வரையப்பட்டிருந்தன. மன்னரின் குதிரை, நாய், பூனை கூட வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியர்களின் பெயர்களைத் தவிர உருச்சித்திரம் எதுவும் அங்கே காணப்படவில்லை. ஒருவேளை அவர்கள் தன்னை வரைந்திருக்கவில்லையோ என்னவோ.

நான்கு வெள்ளைக்காரர்கள் வழிகாட்டியுடன் அந்த ஒவியக்கூடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். வலது பக்கச் சுவர் முழுவதும் மன்னர்களின் உருவச் சித்திரங்கள். எதிர் சுவர் முழுவதும் ராணிகள், இளவரசிகளின் சித்திரங்கள். ஆனால் பெண்களின் சித்திரத்தில் அவர்களின் முகம் வரையப்படவில்லை. பதிலாக ரோஜாப் பூவை வரைந்திருந்தார்கள். கழுத்துவரை துல்லியமாக வரையப்பட்ட பெண்ணின் உருவம். முகத்திற்குப் பதிலாக ரோஜா இருப்பது விநோதமாக இருந்தது. எந்த அரசியின் பெயரும் குறிக்கபடவில்லை.

“ராணியின் முகத்தை வரையக்கூடாது . அவர்கள் பெயர்களைப் பிறர் உச்சரிக்கக் கூடாது என்பது மன்னர் காலக் கட்டுப்பாடு. இப்போது துணிக்கடை விளம்பரத்திற்காக வைக்கபடும் பெண் பொம்மைகள் தலையில்லாமல் இருக்கிறதே.. அது போலத் தான் இந்த ஓவியங்களும்“. என்று சிரித்தார் வழிகாட்டி.

ஆனால் அவர்கள் அணிந்துள்ள உடையும் நகைகளும் துல்லியமாக வரையப்பட்டிருந்தன.

“ஒவ்வொரு பெண்ணின் அந்தஸ்திற்கு ஏற்ப ரோஜா இதழ்களின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கும். நன்றாகப் பாருங்கள்“ என்றார் வழிகாட்டி.

ஒரு வெள்ளைக்காரப் பெண் அருகில் சென்று பார்த்துவிட்டு “ஒவியர் இந்த ராணிகளை நேரில் பார்த்து தானே வரைந்திருப்பார்`` என்று கேட்டார்.

அது வியப்பூட்டும் விஷயம். சாவித்துளை வழியாக மட்டுமே அவர் ராணியைப் பார்க்க முடியும். அதுவும் இந்த ஓவியத்தில் இருப்பது போலக் கழுத்துக்குக் கீழே தான் காண முடியும். ராணியின் முகம் திரையிடப்பட்டிருக்கும். நான்கைந்து ஒவியர்கள் வேறுவேறு காலகட்டத்தில் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். எவரும் எந்த ராணியின் முகத்தையும் நேரில் கண்டதில்லை.

வழிகாட்டி தனது குரலை தாழ்த்திக் கொண்டு ரகசியம் போல சொன்னார்

“இந்த ராணிகளில் சிலர் சந்தேகத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்கள். அதைக் குறிப்பதற்காக அவர்கள் இடது கையின் மோதிரவிரல் வரையப்பட்டிருக்காது பாருங்கள்“ என்றார். இரண்டு பெண்களின் மோதிரவிரல் வரையப்படவில்லை

“இந்த ஓவியங்களை ராணிகள் பார்த்திருக்கிறார்களா“ எனக்கேட்டார் வயதான வெள்ளைக்காரர்.

“ஒரு போதுமில்லை. நல்லவேளை மன்னர்கள் இல்லாத காலம் என்பதால் இப்படி ரோஜா முகம் கொண்ட ராணிகளை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்“ என்று சொல்லிச் சிரித்தார் வழிகாட்டி.

அதைக் கேட்டு அங்கிருந்தவர்களில் எவரும் சிரிக்கவில்லை.

0Shares
0