மறக்கப்பட்ட பெண்

நேற்றிரவு திலீப் மேத்தாவின்  The Forgotten Woman  என்ற ஆவணப்படத்தை பார்த்தேன்.  படம் துவங்கிய ஒன்றிரண்டு நிமிசங்களில் இது முக்கியமான படம் என்பதை மனது உணரத்துவங்கியது.


இந்தியாவில் இருபது மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் நான்கு வீடுகளில் ஒன்றில் ஒரு விதவை நிச்சயம் இருக்கிறாள். அவள் பிறர் கண்ணில் படாமல், ஒதுக்கபட்டு, விலக்கபட்டு அடையாளமற்றவளாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்தியாவில் பெண்களாக இருப்பது எப்போதுமே இரண்டாம் நிலையாகவே கொள்ளபடுகிறது. அதிலும் விதவையாக இருக்க நேர்வது மிகுந்த அவமதிப்பும் புறக்கணிப்பும் கொண்டது என்று படத்தின் துவக்கத்தில் இயக்குனரின் குரல் விவரிக்கத் துவங்குகிறது


மறக்கபட்ட பெண் என்ற இந்த ஆவணப்படம் டெல்லியில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுராவையும் அதன் அருகில் உள்ள விருந்தாவனம் என்ற நகரிலும் வாழும் எண்ணிக்கையற்ற வயதான விதவை பெண்களின் நிர்கதியான வாழ்வினை விவரிக்கிறது.


உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா புராதன நகரம். ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த இடம். வழிபாட்டிற்கு உரிய புனித ஸ்தலம்  என்ற நம்பிக்கை காலம்காலமாக உள்ளது. மதுராவிலிருந்து ஐந்து கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது விருந்தாவனம். அது கிருஷ்ணன் கோபிகைகளுடன் கேளிக்கை செய்து மகிழ்ந்த இடம். அங்கே தான் கிருஷ்ணர் எப்போதுமிருக்கிறார் என்கிறது இறைநம்பிக்கை.  அப்படிப்பட்ட விருந்தானவத்தில் இறந்துபோனால் நேரடியாக சொர்க்கத்திற்கு போய்விடலாம். அவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது என்ற நம்பிக்கை உள்ளது


இதற்காகவே சாவைத் தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து முதியவர்கள் இங்கே வந்து சேர்கிறார்கள். குறிப்பாக வயதான பெண்கள், விதவைகள் விருந்தானவத்தில்  கொண்டுவந்து விடப்படுகிறார்கள்.
அவர்கள் யமுனை ஆற்றில் குளித்து கரையேறி கோவில் கோவிலாக வழிபட்டு தங்கள் சாவிற்காக காத்திருக்கிறார்கள். பெரும்பான்மை வயதானவர்கள் உணவிற்கும் இருப்பிடத்திற்கும் குளிராடைகளுக்கும் வழியின்றி அல்லாடுகிறார்கள். முதுமையின் வலியும் புறக்கணிப்பும், யாசித்து வாழ வேண்டிய நாட்களின் கொடுமையும், சாவைத் தவிர வேறு எதனாலும் தங்களுக்கு மீட்சியில்லை என்று நம்பும் மனப்பாங்கும் கொண்டிருக்கிறார்கள். அந்த இருண்ட உலகையே படம் விவரிக்கிறது


விருந்தானவத்திற்கு வயதான பெண்களை கொண்டுவிடுவதில் இன்னொரு  உண்மையிருக்கிறது. அது வடமாநிலங்களில் அதிகம் இன்றும் நடைபெறுகிறது. வயதான பெண்கள் பெயரில் சொத்துகள் இருந்தால் அதை மகனோ, மகளோ எழுதி வாங்கிக் கொண்டு அந்த பெண்ணை விருந்தானவத்தில் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். அல்லது வயதானவர்களை தங்களோடு உடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றால் மதுராவிற்கு அழைத்து வந்து எங்காவது ஒரு வீதியில் கைவிட்டு போய்விடுவார்கள். அப்படி தவறவிடப்பட்ட வயதானவர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்திற்கும் மேலாக உள்ளது


எங்கே தங்குவது எங்கே போவது என்று புரியாமல் இரண்டு வேளை உணவிற்கும், இருப்பிடத்திற்கும் வழியின்றி அல்லாடுகிறார்கள். எலிவளை போன்ற இருட்குகை அறைகளில் வசிக்கிறார்கள். வெளிச்சம் கிடையாது. போதுமான உணவு கிடையாது. யாரும் தேடி வர மாட்டார்கள். மாற்று உடைகள் கிடையாது. இந்த நிலையிலும் அவர்கள் காலையில் யமுனை ஆற்றிற்கு போகிறார்கள். குளித்து பக்தியோடு தங்களை எப்படியாவது தன்வசம் அழைக்கும்படியாக கிருஷ்ணனை வேண்டுகிறார்கள். கூன்விழுந்த முதுகோடு எங்கே யாசகம் தருகிறார்கள் என்று அலைகிறார்கள்.  சாவிற்காக காத்திருக்கிறார்கள்.


படத்தின் ஒரு காட்சியில் வீதியில் அலையும் நாய்களுக்கு ஒரு ஆள் தேடி வந்து உணவை வீசி எறிந்துவிட்டு போவார். தெருநாய்கள் அதை சண்டையிட்டு சாப்பிடுகிறது. அதன் அருகில் ஒரு வயதான பெண் நாய்கள் சாப்பிடுவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.


விருந்தானவத்தில் நிறைய கோவில்கள் இருப்பதால் யாத்ரீகர்கள் அதிகம் வந்து போகிறார்கள். அவர்கள் தரும் காசை யாசிகம் பெற்று கொள்வதும் அவர்கள் தரும் தானங்களை வாங்கி கொள்வதுமே இந்த வயதானவர்களின் அன்றாடம். அதற்கும் கெடுபிடிகள் மிரட்டல்கள் காசு பறிப்பு போன்றவை நடக்கின்றன.


வயதான விதவை பெண்கள் மரணம் அடைய நேர்ந்தாலும் கொடுமை தொடர்கிறது. இறந்து போன விதவைகளை யாரும் எடுத்து அவர்களுக்கான இறுதிசடங்குகளை செய்வதில்லை. அப்படி செய்வது பாவம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆகவே குப்பைகளை அள்ளி போடுவது போல அவர்களை அப்புறபடுத்தும் வரை அங்கேயே இறந்த பெண் உடல் கிடக்கிறது.


எண்ணிக்கையற்ற கோவில்கள் உள்ள அந்த பழமையான நகரின் பின்னே நீக்கமுடியாத கறை போல படிந்திருக்கிறது கைவிடப்பட்ட விதவைகளின் முதுமையான வாழ்க்கை.


மதுராவிற்கு நான் நாலைந்து முறை சென்றிருக்கிறேன். அதிகாலை நேரங்களில் யமுனையில் நீராடியபடியே நடுங்கும் வயதான முகங்களை கண்டிருக்கிறேன். இருண்ட சத்திரங்களில் பகல்நேரங்களில் அவர்களின் உதடுகள் கோவிந்த நாமத்தை இடைவிடாமல் சொல்லிக் கொண்டேயிருப்பதை கேட்டிருக்கிறேன்.


ஒருவகையில் இது அவர்களின் புகலிடம். இன்னொரு வகையில் அது அவர்களின் வதை முகாம்.


ஏன் வயதானவர்கள் இப்படி துரத்தபடுகிறார்கள். கைவிடப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள். இந்த ஆணவப்படத்தில் ஒரு வயதான பெண் தலையில் அடித்துக் கொண்டு சொல்கிறாள் சொந்த பிள்ளைகள், உறவுகள் எல்லாமும் சேர்ந்து தான் என்னை தூக்கி எறிந்துவிட்டார்கள். என்னால் இனிமேல் உபயோகம் இல்லை என்கிறார்கள். உடைந்து போன மண்சட்டியை விடவும் என் வாழ்க்கை கேவலமாகி போய்விட்டது. இனி நான் யாரையும் எதிர்பார்க்க போவதில்லை. சாவு என் அறையின் கதவை தட்டும் வரை இந்த இருட்டிற்குள்ளாகவே இருப்பேன் என்கிறாள்


கேமிரா ஒரு வயதான பெண்ணின் சிறிய அறை ஒன்றை ஒரு முறை எட்டிப்பார்க்கிறது. அந்த பெண் சுருண்டு கிடக்கிறாள். நாலுக்கு ஆறு அளவிலான அறை. அவளை தவிர அங்கே வேறு ஒரு பொருளுமில்லை. அந்த பெண் கோபத்துடன் இங்கே என்ன இருக்கிறது பார்ப்பதற்கு என்று கேட்கிறாள். அறையின் வெறுமையை கேமிரா சுட்டிக் காட்டுகிறது.


இன்னொரு இடத்தில் வெள்ளை உடை அணிந்த வயதான பெண் கேமிரா அருகில் வந்து என்ன இது என்று கேட்டுவிட்டு இதனால் தனக்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்கிறாள். உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதும் அவள் முறைத்துக் கொண்டு போய்விடுகிறாள். 


முதியவர்கள்  கூட்டம் கூட்டமாக அதிகாலை நேரத்தில் யாசிக்க செல்கிறார்கள். இருளில் காத்திருக்கிறார்கள். உணவை கண்டதும் வயதை மறந்து ஒடுகிறார்கள். சூடு பொறுக்காமல் சாப்பிடுகிறார்கள். கல்லறை பெட்டிகளை போல இருக்கிறது அவர்கள் வாழும் அறைகள்.


வயதானவர்களை  மலையில் அல்லது யாரும் வர முடியாத தனி இடத்தில கொண்டு போய் போட்டுவிட்டு  அவர்கள் தாகம் பசி மிகுந்து தானே இறந்து போகும்படி விட்டுவிடும் வழக்கம் ஜப்பானில் இருந்திருக்கிறது


சூசிரோ ப்யுகுஷவா என்ற நாவலாசிரியர் அதைபற்றி தி பேலட் ஆப் நாராயாமா என்ற நாவலை எழுதியிருக்கிறார்.  அதை ஷோகே இமாமுரா மிக சிறப்பாக படமாக்கியிருப்பார். அந்த படம் கான்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றது


அந்த படம் பார்த்த போது இத்தகைய அகவலியை உணர்ந்தேன். அதற்கு நிகரானது திலீப்பின் ஆவணப்படம்


பதேர்பாஞ்சாலியில் வரும் துர்காவின் பாட்டியை நினைவுபடுத்தும் பல பாட்டிகள், அவர்களின் வலி நிரம்பிய குரல். அதற்குள்ளும் வாழ்க்கையை போராடி காப்பாற்றிவிட துடிக்கும் முயற்சிகள். பேச்சு ஒடுங்கிய போன வயதான முகங்கள். சுருக்கம் நிரம்பி கண்ணீர் வழியும் கண்கள். அவர்களுக்கான மறுவாழ்வு தருவதற்காக போராடும் தன்னார்வ அமைப்புகள். அவர்களின் உதவிகள் மற்றும் உணவு உடை பரிமாற்றங்கள். இத்தனை ஆயிரம் பெண்கள் கைவிடப்பட்டு தெருவில் அலைவதை பற்றி கவலையே படாத உள்ளுர்வாசிகள், அரசியல் வாதிகள், அதிகார வர்க்கம் யாவும் படத்தில் சுட்டிகாட்டப்படுகின்றன.


புராணங்கள் விருந்தானவத்தை கிருஷ்ணனின்  காதலையும் கொண்டாட்டத்திற்குமான குறியீடாகவே காட்டுகிறது. ஆனால் திலீப் மேத்தா காட்டும் விருந்தாவனமோ சாவின் கூடாரம். அங்கே காத்திருப்பவர்களின் துயரம் யமுனையை விடவும் நீண்டது. மௌனமானது. 


வாட்டர், பயர் போன்ற சர்சைக்குரிய படங்களை இயக்கிய தீபா மேத்தாவின் சகோதரர் திலீப் மேத்தா. உலகப்புகழ்பெற்ற புகைப்பட கலைஞர். டைம்ஸ் இதழில் அட்டைபட புகைப்படத்தை தனது 24 வயதில் எடுத்தவர். நேஷனல் ஷியாகிரபி உள்ளிட்ட பல முக்கிய சேனல்களுடன் வேலை செய்திருக்கிறார். சமகாலத்தின் உலகப்புகழ் பெற்ற புகைப்பட கலைஞர்களில் ஒருவர்.


அவரது புகைப்படங்களின் வழியே தான் போபல் துயரச்சாவு உலகின் கவனத்தை பெரிதும்  பெற்றது. அது போலவே இவரது புகைப்பட சேமிப்பு யுனெஸ்கோ உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.
வாட்டர் படமும் விதவைகைள பற்றியதே. அந்த படதயாரிப்பின் போது திலீப்பிற்கு விருந்தாவனமும் அங்கே உள்ள தன்னார்வ நிறுவனங்களும் பரிச்சயமாகியிருக்கின்றன.


 வாட்டர் சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆகவே அதற்கு சிறப்பான கவனம் கிடைத்தது. அந்த உந்துதல் காரணமாக திலீப் ஒளிப்பதிவு செய்து இயக்கி இந்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது


இந்த படம்  மிகச்சிறப்பான அம்சம் அதன் ஒளிப்பதிவு . உலகின் சிறந்த படங்களில் காண முடிந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் அழகுணர்வும் இந்த படத்தில் முழுமையாக உள்ளது. ஒளிப்பதிவில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் பலமுறை இதை பார்க்க வேண்டும். ஒரு பாடம் போல பயில வேண்டும். அவ்வளவு சிறப்பாக காட்சிகள் படமாக்கபட்டிருக்கின்றன


ஆவணப்படம் என்று கிடைத்த விஷயங்களை எல்லாம் பதிவு செய்துவிடாமல் மிக பொறுமையாக, மிகுந்த ஈடுபாடும் உணர்வெழுச்சியும் கொண்ட ஒளிப்பதிவு இது. குறிப்பாக விடிகாலை காட்சிகளும், இருண்ட வீதிகளும்,  விதவைகளின் அறையும் நகரமும், வீதியோரங்களில்  விழுந்து கிடக்கும் உடல்களும் பகலிரவு காட்சிகளும் துல்லியமாகவும் இயல்பாகவும் படமாக்கபட்டுள்ளன. 


முடிந்த வரை இயல்பான வெளிச்சத்தில் படமாக்கியதாகவும் தேவைப்பட்ட இடங்களில் ஒரு 60 வாட்ஸ் பல்பை ஒரு குச்சியில் கட்டி அதை வைத்துக் கொண்டு காட்சிகளை படமாக்கி உள்ளதாகவும் திலீப் குறிப்பிடுகிறார்



பலநேரங்களில் நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து அந்த காட்சிகளின் கூடவே நாமும் பயணம் செய்கிறோம். அவர்களின் முதியவிரல்கள் நம்மை தொட்டு செல்கின்றன. சக்தி தெய்வம் பாரதமாதா என்று பெண்களை பெருமைபடுத்தியதாக கொண்டாடும் நம் மனப்பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. தயக்கமும் குற்றவுணர்வும் ஆழமாக பரவுகின்றன. கசப்பான சாற்றை குடிப்பது போல உடலெங்கும் கய்ப்பு பரவுகிறது.


என்றோ நூற்றாண்டுகளுக்கு முன்பாக பெண்கள் அடிமைகளாக நடத்தபட்டார்கள். ஒடுக்கப்பட்டார்கள் என்று வரலாற்று பாட நூல்கள் கூறுகின்றன. ஆனால் அது பொய் இன்றும் நம் கண் எதிரில் இருபது மில்லியன் விதவைகள் விலக்கபட்ட அடிமை போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று உரத்து சொல்கிறார் திலீப் மேத்தா.


காட்சிகளை படமாக்கி கொண்டிருக்கும் போது அவர்கள் சொன்ன சம்பவங்களும் அவர்களின் வாழ்நிலையும் பலமுறை படமாக்க முடியாதபடி கண்ணீர் வர வைத்திருக்கின்றன. உலகில் வேறு எந்த சமூகத்திலும் இப்படி கூட்டம் கூட்டமாக பெண்கள் புறக்கணிக்கபட்டதேயில்லை. என்று வேதனையுடம் சொல்கிறார் திலீப்


கனடாவிலும் நியூயார்க்கிலும் மாறி மாறி வசிக்கும் திலீப்மேத்தா இந்த ஆவணப்படத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்திருக்கிறார்.  இளம்விதவைகளை பற்றிய வாட்டர் படத்தை காசியில் எடுக்க கூடாது என்ற மதஅமைப்புகள் தீபா மேத்தாவை விரட்டின. அவர் இலங்கûயில் சென்று அதை படமாக்கினார். ஆனால் தன்னுடைய ஆவணப்படம் பற்றி மத அமைப்புகளுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆகவே தன்னை கண்டுகொள்ளவில்லை என்கிறார் திலீப்.


பலநேரங்களில் கடவுள் நம்பிக்கை மட்டுமே இந்த வயதானவர்களுக்கு ஒரே துணையாக இருக்கிறது. மதம் சார்ந்த அமைப்புகள் எவ்வளவு விமர்சிக்கபட்டாலும் அது கைவிடப்பட்டவர்களின் புகலிடமான வெளியை உருவாக்கி தந்திருக்கிறது என்பதே உண்மை. அதற்கு மாற்றாக நாம் என்ன அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். எது புறக்கணிக்கபட்டவர்களுக்கு பிடிமானமாக உள்ளது. 


இந்தியாவில் கோவில்கள் வெறும்வழிபாட்டு தலங்கள் மட்டுமில்லை. அது ஒரு மாற்றுவெளி. அதை சார்ந்து மட்டுமே கைவிடப்பவர்கள். அடையாளமற்றவர்கள், துயர் மிகுந்தவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள். யாரையும் பற்றிய பயமின்றி தனித்திருக்கிறார்கள்.


சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் இடையில் உள்ளது கோவில் எனும் வெளி. இரண்டிலும் கைவிடப்படவர்கள் இங்கே கூடுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்பதையும் விட அவர்கள் நம்புவதற்கு கடவுள் மட்டுமே பாக்கியிருக்கிறது என்பதே உண்மை.


நான் செல்லும் கோவில்கள் எல்லாவற்றிலும் பிரகார தூண்களோடு சாய்ந்து அமர்ந்தபடியே தனக்கு தானே பேசிக் கொள்ளும் வயதானவர்களை காண்கிறேன். கடந்து செல்லும் கால்களை வெறித்தபடியே நிலை குத்தி நிற்கும் கண்களை காண்கிறேன். கசக்கியெறிக்கபட்ட காகிதம் போல அவர்கள்  பயனற்று போய்விட்டதை போல உணர்வதை அறிகிறேன். கோவில் மணி சப்தம் கூட அவர்கள் மனதில் உள்ள மௌனத்தை அகற்ற முடிவதில்லை.


பிரகாரம் தான் அவர்களின் இப்போதைய புகலிடம். யார் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள். ஏன் இப்படி உறைந்து போயிருக்கிறார்கள். ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு கதையிருக்கிறது. அது பகிர்ந்து கொள்ளபடாதது. இரவில் கோவில்கள் மூடப்பட்டுவிடுகின்றன. அது ஒன்று தான் அவர்களின் ஒரே வருத்தம். அது ஒன்று தான் யாரையோ நாடி திரும்ப செல்ல வைக்கிறது. இது தான் இன்றைய நிதர்சனம்.


இவர்களை போன்றவர்கள் தான் காசி விருந்தானவத்தில் வசிப்பவர்களும். இது மதம் சார்ந்த பிரச்சனை அல்ல. மாறாக மனித அவமதிப்பு தொடர்பானது. .  அவள் ஒரு பெண், அதிலும் பல ஆண்டுகாலம் குடும்பத்திற்காகவே உழைத்த பெண், முடிவில் சக்கையாக தூக்கி எறியப்பட்டிருக்கிறாள். அது ஏன் இவ்வளவு இயல்பாக ஏற்றுக்  கொள்ளபடுகிறது.


இந்த வயதான பெண்கள் யாரோ ஒருவரின் தாய், யாரோ ஒருவரின் மனைவி, யாரோ ஒருவரின் சகோதரி, இந்த ரத்தஉறவுகள் ஏன் பொய்த்து போய்விட்டது. பால்யத்திலிருந்து அவள் நம்பியிருந்த குடும்பம் என்ற அமைப்பு ஏன் அவளை தூக்கி எறிந்தது. பொருளாதார நெருக்கடியை காரணம் சொல்லி தப்பிக்க முடியாது. காரணம் சேர்ந்து வாழும் மனநிலையை முறிந்து கொண்டது தான் பிரதான காரணம். அத்தோடு யாரும் யாரை பற்றியும் அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்பதே சமூக நிஜமாக இருக்கிறது.


இன்று உலகப்படவிழாக்களில் மிகுந்த கவனம் பெற்றுள்ள இந்த திரைப்படம் சமீபத்தில் நான் பார்த்த மிக குறிப்பிடும்படியான ஆவணப்படமாகும்.


ஒரு முறை காசியில் நான் சந்தித்த ஒரு கிழவி சொன்னாள், பணம் இருந்தால் என்னை இன்னும் சில வருசங்கள் குடும்பத்தில் வைத்துக் கொண்டிருப்பார்கள். பணமில்லாதவர்கள் எதற்காக அதிக நாள் உயிர்வாழ வேண்டும் என்று தூக்கி எறிந்து விட்டார்கள். இப்படி நான் யோசித்திருந்தால் என் பிள்ளைகளில் ஒன்று கூட உயிரோடு இருந்திருக்காது. கடந்த காலம் யாருக்கு தேவைப்படுகிறது. சாப்பிடும் வரை தான் இலை வேண்டும். அதற்கு அப்புறம் எச்சில் தானே. 


அந்த குரலின் உச்சமே இந்த ஆவணப்படம். அவசியம் பாருங்கள்.


**


 

0Shares
0