பாடு புஜ்ஜி பாடு.

புத்தக அலமாரியை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த போது மேலடுக்கில் கிடந்த ஒரு தெலுங்கு புத்தகம் கண்ணில் பட்டது. நிறைய ரோஜாப்பூக்கள் கொண்ட அட்டைபடம்.. ஏதோ கோபத்தில் வீசி எறிந்திருக்கிறேன். இன்று தான் மறுபடியும் கண்ணில் படுகிறது.நிச்சயம் ஆறு ஏழு வருசம் இருக்க கூடும்.


பின்அட்டையில் ஒரு பூங்காவில்  புல்வெளியில் அமர்ந்தபடியே மடியில் ஒரு பேடு, பேனாவுடன் கன்னத்தில் கைவைத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தார் கவிஞர் புஜ்ஜி. (அவர் நிஜபெயர் வேண்டாமே ). சபாரி உடை. முகத்திற்கு பொருந்தாத கண்ணாடி.  நிறைய மேக்கப் போட்டு தலைக்கு டை அடித்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. கவிதையை விட இளமையாக கவிஞர் இருக்கவேண்டுமல்லவா?  அந்த புத்தகத்தை கையில் வைத்து புரட்டிக் கொண்டிருந்தேன்.


பக்கத்துக்கு பக்கம் வண்ணத்துபூச்சி பறந்து கொண்டிருந்தது. வேறுவேறு கோணங்களில் கவிஞர் படுத்தபடி, உட்கார்ந்தபடியே சிரித்துக் கொண்டிருந்தார். இடையில் அவரது காரில் சாய்ந்து நின்றபடியும்,  நாய்க்குட்டியை கொஞ்சியபடியும், அதிகாலை வானத்தை அண்ணாந்து  பார்த்தபடியும் ஒன்றிரண்டு புகைப்படங்கள் இருந்தன.


நிச்சயம் இந்த புகைப்படங்களை ஒரு நாளில் எடுத்திருக்க முடியாது. ஆறேழு மாதங்கள் இதற்காக நிறைய சிரமப்பட்டிருப்பார் என்று தோன்றியது. தெலுங்கு கவிதை என்பதால் ஒரு வரி கூட என்னால் படிக்க முடியாது. அதனால் ஒரு கவிதை எவ்வளவு நீளமாக இருக்கிறது என்று வரியை எண்ணி பார்த்தேன். குறைந்தது நூற்றிஇருபது வரிகள்.  நிச்சயம் பெரிய கவிஞர் தான்.


புத்தக முகப்பில் அன்பான நண்பருக்கு என்று பச்சை மையில் கையெழுத்து போட்டு தந்திருந்தார் புஜ்ஜி. ( எதற்காக  பச்சை மையை உபயோகிக்கிறார், ஒருவேளை தன் கவிதைகள் இயற்கையின் பசுமை கொண்டவை என்பதற்காகவோ,


மத்திய அரசின் நிதி உதவி பெற்று எழுத்தாளர்களை சந்திக்கும் திட்டத்தின் கீழாக 2003 டிசம்பரில் தமிழகம் வந்திருந்த அவர் சூறாவளி பயணம் போல கவிஞர்களை சந்தித்து கொண்டிருப்பதாக அறிமுகம் ஆனார் . நான் கவிதைகள் எழுதியதில்லை. கவிதைகளை பற்றி அதிகம் பேசுவது கூட கிடையாது. என்னை  எப்படி அவர் சந்திக்க தேர்வு செய்தார் என்று  புரியவேயில்லை. இதுபோன்ற நேரங்களில் தான் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று சிலப்பதிகார வரிகள் உண்மை என்று புரிகின்றது.


போனில் அவர் தமிழில் பேசுவதாக நினைத்துக் கொண்டு எண்பது சதவீத தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தார். அரைமணி நேர சந்திப்பு என்று அவராகவே முடிவு செய்து கொண்டு வடபழனியில் இறங்கி சாமி கும்பிட்டுவிட்டு உங்களை தேடி வந்துவிடுகிறேன் என்றார்.


அதன்படியே பதினோறு மணிக்கு சாம்பல் வண்ண சபாரி சூட், கையில் ஒரு கறுப்பு நிற சூட்கேஸ். நெற்றியில் சந்தனம் திருநீறு வண்ணமாக வீட்டின் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினார். நான் வழக்கமாக கறுப்பு வேஷ்டி அணிபவன். ஆகவே அன்றும் அது போலவே கறுப்பு வேஷ்டியும் பழைய டீசர்ட் ஒன்றும் அணிந்திருந்தேன். அவர் என்னை சபரிமலைக்கு போகின்றவன் என்று நினைத்துக் கொண்டு சாமி சரணம் என்று சொன்னார்.


வருடம் முழுவதும் கறுப்பு அல்லது காவி வண்ண சாய வேஷ்டிகளை கட்டுகின்றவன் நான். அதற்கும் கோவில்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இவை சுத்தமான கதர்வேஷ்டிகள். என்று அவருக்கு நான் புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.


வந்தவர் என் அறையெங்கும் இருந்த புத்தகங்களை பார்த்தபடியே இருந்தார். நான் மிக ஆர்வமாக நான் வாசித்து அறிந்த  தெலுங்கு எழுத்தாளர்களான முப்பாள ரங்கநாயக்கம்மா, வோல்கா, , பாலகும்மி பத்மராஜ÷ என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் பாபு நீங்கள் கவிதைகள் எழுதுவதில்லையா என்று கேட்டார். நல்ல கவிதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். கவிதைகளின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. அதை நான் எழுதி கெடுத்துக் கொள்ளவிரும்பவில்லை என்றேன்.


அவர் சீரியஸôக இல்லை பாபு எழுத்தாளர் என்றால் நிச்சயம் கவிதை எழுத தெரிந்திருக்க வேண்டும். அது தான் இந்தியாவின் பராம்பரியம். என்றபடியே என்னுடைய புத்தகங்களை கையில் எடுத்து பார்த்துவிட்டு எதனுள்ளும் வண்ண வண்ண புகைப்படங்கள் காணவில்லையே என்று உதட்டை பிதுக்கியபடியே கிழே வைத்தார்


பிறகு நான் கேட்காமலே புஜ்ஜி தன் கவிமூலத்தை சொல்லத்துவங்கினார்.


எனக்கு பத்து வயதாக இருக்கும் போது பள்ளியில் குருவியை பற்றி ஒரு கவிதை எழுதினேன். என்னுடைய ஆசிரியர் சத்யநாராயணா அதை கைதட்டி பாராட்டி பாடு புஜ்ஜி பாடு என்று உற்சாக படுத்தினார். மாநில அளவில் நடந்த பள்ளி போட்டிகளில் நிறைய கவிதைகள் எழுதி பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.


என்னை பாட வைத்தவர் என்னுடைய ஆசிரியர். இப்போதும் நான் ஒவ்வொரு கவிதை எழுதும் போது அவர் என் முன்னே உட்கார்ந்து அதை கேட்டு ரசித்து பாடு புஜ்ஜி பாடு என்று சொல்வது போலவே இருக்கிறது என தழதழத்த குரலில் சொன்னார்.


எனக்கும் பாடு புஜ்ஜி பாடு என்று அவரது ஆசான் சொல்லும் குரல் காதில் கேட்டது. நானும் உருகிப்போய் உட்கார்ந்திருந்தேன்.


அவர்  தன்னுடைய சூட்கேûஸ பிரித்தார். அதற்குள் நாலைந்து டயரிகள் பத்து பதினைந்து நோட்டுகள் இருந்தன. ஒரு நோட்டை பிரித்து வைத்து  நேற்றிரவு ஒரு கவிதை எழுதியதாக சொல்லியபடியே ஒரு நீண்ட பாடல் ஒன்றை சப்தமாக பாடத்துவங்கினார்.


அவர் கவிதை வாசிக்க போகிறார் என்று தானே சொன்னார்  பாட்டு என்பதும் கவிதை என்பதும் ஒன்றா? நான் தான் இத்தனை ஆண்டுகாலம் தவறாக நினைத்து கொண்டிருக்கிறேனா?


.அவர் நோட்டை விரித்து வைத்துக்  கொண்டு உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார். அதில் ஒரு வார்த்தையும் எனக்கு புரியவில்லை. அவரது குரல் வேறு தகரடப்பாவில் சில்லறைகளை போட்டு குலுக்குவது போலிருந்தது.  பாட்டை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது அடுத்த கண்ணி துவங்கிவிடும்.


நேற்றிரவு எழுதிய கவிதை என்றால் நிச்சயம் பத்து பதினைந்து வரி தான் இருக்கும் என்று நான் நினைத்தது தவறு என்பதை சில நிமிசங்களில் உணர்ந்தேன்.  அந்த நோட்டு முழுவதும் நேற்று தான் எழுதப்பட்டதோ என்று கூட பயம் எழுந்தது.


அவர் என் முகத்தை பார்த்தபடியே பாடிக்கொண்டிருந்தது கூடுதலான நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஒருவழியாக பாடிமுடித்துவிட்டு என்னிடம் இந்த பாடல் இயற்கையை மனிதர்கள் எப்படி சீரழிக்கிறார்கள் என்பதை பற்றியது  என்று சொல்லி முதல்வரியில் இருந்து திரும்பவும் விளக்கம் சொல்லத் துவங்கினார்.


எப்படியாவது பேச்சை மாற்ற வேண்டும் என்று குறுக்கிட்டு தமிழில் இப்படி யாரும் கவிதைகளை பாடுவதில்லை, கவிதைகள் என்றால் மௌனமாக வாசிக்கபட வேண்டும் என்றேன். அவர் அது தான் உங்கள் மொழியின் பெரிய பலவீனம். கவிதை என்பதே பாடுவதற்கு தானே. இது என்ன கணக்கு வாய்பாடா. மனதிற்குள்ளாகவே படிப்பதற்கு என்று சொல்லி வாய்விட்டு சிரித்தார்.


நான் வேறு எந்த தமிழ்கவிஞர்களை சந்தித்தீர்கள் என்று கேட்டேன். அவர் ஒரு வாரத்தில் ராமேஸ்வரம் மதுரை திருநெல்வேலி கன்யாகுமரி சென்று வந்ததாகவும் எல்லா கோவில்களையும் பார்த்துவிட்டு வழியில் பொன்மாணிக்கம் என்ற கவிஞரை சந்தித்தாகவும் சொன்னார். யார் பொன் மாணிக்கம் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் எந்த ஊரில் சந்தித்தீர்கள் என்று கேட்டேர்.


கன்யாகுமரியில் நான் தங்கியிருந்த விடுதியில் அருகில் தங்கியிருந்தார். மிக நன்றாக கவிதை பாடுகிறார். இரவு முழுவதும் இரண்டு பேரும் கடற்கரையில் மாறி மாறி கவிதை பாடினோம் என்று உற்சாகமாக சொன்னார். பாவம் ஜனங்கள் என்று தோன்றியது.


தெலுங்கில் சமகால இலக்கியம் எப்படியிருக்கிறது என்று கேட்டேன். அப்படி என்றால் என்னவென்று என்னிடமே மறுபடியும் கேட்டார். போஸ்ட்மார்டனிசம் பற்றிய பரிச்சயம் உண்டா என்றதற்கு போஸ்ட் மார்டம் குறித்து எதற்காக கவிஞர்கள் பரிச்சயம் கொள்ள வேண்டும் என்று திகைத்தபடியே கேட்டார். நான் ரில்கேயின் லெட்டர் டு த யங் பொயட் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். அவர் எரிச்சல் அடைய துவங்கினார்.


தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என்று எந்த இலக்கியமும் அவருக்கு துளி கூட பரிச்சயம் ஆகவில்லை என்பது தெளிவாக புரிந்தது. எப்படி அவர்  எழுத்தாளர்களுக்கான நிதிஉதவி பெற்று வந்திருக்கிறார் என்று வியப்பாக இருந்தது.


அவரிடமே கேட்டுவிடலாமே என்று தயக்கத்துடன் விசாரித்த போது தனது மனைவி ஒரு பிரபலமான மருத்துவர் என்றும் அவர் தேர்வு குழு தலைவரின் மூட்டுவலி சிகிட்சைக்கு மருத்துவம் செய்கிறார். அதனால் தனக்கு சிக்கல் எதுவும் இல்லை. எளிதாக நிதி உதவி கிடைத்துவிட்டது என்றார்


உங்கள் ஊரில் உங்களது கவிதைகளுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்று கேட்டேன்.  ரோட்டரி கிளப், கோவில்கள், வழியனுப்பு விழாக்களில் என்னை கவிதை பாட கூப்பிடுகிறார்கள். இதுவரை பதினெட்டாயிரம் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அத்தனையும் சொக்க தங்கம்,


தேசியகீதமான ஜனகணமன  பாடலின் அதே மெட்டில் ஒரு பாட்டை எழுதி அதை அமைச்சர்கள் முன்னிலையில் பாடி பாராட்டு பெற்றிருக்கிறேன். கேட்கிறீர்களா என்று பாட துவங்கினார்.


நல்ல நேரத்தில் காபி வந்தது. காபி சாப்பிட்டு பாடலாமே என்று பவ்வியமாக சொன்னேன். அவரும் பாடி களைத்திருக்க கூடும். காபி சாப்பிட்டபடியே இன்றைக்குள்ள இளைஞர்கள் கவிதையில் ஆர்வம் காட்டுவதேயில்லை. சினிமா டிவி கிரிக்கெட் என்று கெட்டுபோய்விட்டார்கள் என்று குறை சொல்லியபடியே காபியை சாப்பிட்டு மறக்காமல் பாட துவங்கினார்.


நான் சலனமேயில்லாமல்  இருந்தேன். அவர் பாடி முடித்து இந்த பாடலை என் ஆசிரியருக்கு தான் காணிக்கையாக்கியிருக்கிறேன். அவர் மருத்துவமனையில் இருந்த போது அருகில் அமர்ந்து அவருக்காக ஒரு பாடல் பாடியிருக்கிறேன். என் கையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டார் என்று திரும்பவும் நெகிழ்ந்து போனார்.


இனி யாரை சந்திக்க போகிறீர்கள் என்று கேட்டேன். அவர் ஒரே நாளில் மூணு பேரை அவசியம் சந்திக்க வேண்டும். அருகில் யாராவது கவிஞர்கள் இருந்தால் முகவரி கொடுங்கள் இதே ஆட்டோவில் போய் பார்த்துவிட்டுவந்துவிடுகிறேன்.
இன்றைக்கு இரவு நான் ஊருக்கு புறப்படுகிறேன். இந்த திட்டத்தில் குறைந்தது நான் ஐந்து கவிஞர்களையாவது சந்தித்து போட்டோ எடுத்து குறிப்புகள் எழுதி தர வேண்டும். பொன் மாணிக்கம், நீங்கள் இன்னும் மூன்று பேரை சந்தித்துவிட்டால் போதும் என்று சொல்லியபடியே தன்னுடைய புத்தகம் ஒன்றை தந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்


எனக்கு கவிஞர்களை அதிகம் பரிச்சயம் இல்லை என்று சொல்லி நழுவினேன். அவர் பரவாயில்லை. நான் தங்கியுள்ள லாட்ஜ் உரிமையாளர் ஒரு ஆளை சொல்வதாக வாக்களித்திருக்கிறார். லஞ்ச் டயத்தில் சந்தித்துவிடுவேன். மற்ற ரெண்டுபேரை எப்படியும் மாலைக்குள் பிடித்துவிடலாம் என்றார்


அது உண்மை தான் தமிழில் கவிதை எழுதத் தெரியாதவர்களை கண்டுபிடிப்பது தான் மிக சிரமமானது.


இந்த திட்டத்தில் என்னை எப்படி சந்திக்க தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன்.


அவர் சிரித்தபடியே உங்களது மருத்துவரும் என் மனைவியும் நண்பர்கள். அவர் வழியாக தான் உங்கள் முகவரி கிடைத்தது என்று சொன்னார்.


விதி வலியது என்பது எத்தனை சத்யமான நிஜம்.


விடைபெற்று போகும் தயக்கத்துடன் அவர் என்னிடம் கேட்டார்


நீங்கள் லெண்டிங் லைப்ரரி நடத்துகிறீர்களா?


இல்லையே. எதற்காக கேட்கிறீர்கள்?


இவ்வளவு புத்தகம் வைத்திருக்கிறீர்களே அதான் என்றார்.


 இதை எல்லாம் நான் படிப்பதற்காக வைத்திருக்கிறேன் என்று சற்றே கோபத்துடன் சொன்னேன்.


அவர் என்னிடம் மிக உரிமையுடன் சொன்னார்


நிறைய படிச்சால் ஒன்றுமே எழுத முடியாது. என் வீட்டில் ரெண்டே ரெண்டு புத்தகங்கள் தான் இருக்கின்றன. ஒன்று பகவத்கீதை மற்றது ராமாயணம். அதையும் என் மனைவி படிப்பாள். எனக்குள் பொங்கி வரும் கற்பனைகளையே கவிதைகளாக எழுதவே நேரம் போதாவில்லை. எப்படி தான் நீங்கள் வேலையற்று படிக்கிறீர்களோ.  உங்கள் நல்லதற்கு சொல்கிறேன். படிப்பதை குறைத்து எழுதுவதை அதிகபடுத்துங்கள்.


என்று சொல்லி விடைபெற்றார். அவர் கொடுத்த புத்தகத்தை தான் ஆத்திரத்தில் புத்தக அலமாரி மீது வீசினேன். இத்தனை நாட்களுக்கு பிறகு இன்று தான் மறுபடியும் கண்ணில் பட்டிருக்கிறது. அதை கையில் எடுத்து புரட்டியபோது என்னை அறியாமல் பாடு புஜ்ஜி பாடு என்ற வார்த்தை நினைவிலிருந்து பீறிட்டது.


எப்படியும் புஜ்ஜி இந்த ஆறு வருசத்தில் இன்னும் இருபது முப்பதாயிரம் கவிதைகள் எழுதியிருப்பார்கள். வேறு சில மாநிலங்களில் கவிதை பயணம் செய்திருப்பார். பரிசுகள் பாராட்டுகளில் நனைந்து கொண்டிருப்பார். 


இந்தியாவில் இதுவரை மொத்தம் எவ்வளவு கவிதைகள் எழுதப்பட்டிருக்க கூடும். வேறு ஏதாவது நாட்டில் இப்படி அள்ள அள்ள குறையாதபடி கவிதைகள் எழுதப்படுகின்றதா?  நம் ஊரை போல உலகின் ஏதாவது ஒரு தேசத்தில் அலுவலகத்தில் வேலை செய்து ஒய்வு பெறும் நபருக்கு ஆள் உயரக் கவிதை பரிசாக தரப்படுவது உண்டா? இந்திய மக்கள் தொகையின் எண்ணிக்கையை விடவும் அதிகம் கவிதைகளின் எண்ணிக்கை இருக்க கூடும் என்றே தோன்றுகிறது.


கவிமனதும் கவிதையான வாழ்க்கையும் கொண்டாடப்பட வேண்டியது. அதில் நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். மைடாஸ் தொட்டதெல்லாம் பொன் ஆகும் என்பார்கள். நம் ஊரில் தொட்டதெல்லாம் கவிதையாக பொங்குகிறது.  


பாடு புஜ்ஜி பாடு என்று பாராட்ட தான் தோன்றுகிறது. வண்ணத்துபூச்சிகளும் வானவில்லும் இருக்கும் வரை புஜ்ஜியும் இருப்பார் தானே?


**
 

0Shares
0