மலையாள சினிமாவில் எப்போதும் என் விருப்பத்திற்குரிய நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். பல படங்களை இவரது நகைச்சுவை காட்சிகளுக்காகவே பார்த்திருக்கிறேன். எப்போதாவது ஏசியாநெட் காணும் போது அவரது நகைச்சுவை காட்சிகளை விரும்பி பார்ப்பதுண்டு.
தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு மோகன்லால், மம்முட்டி, திலீப், ஜெயராம் என்று முன்னணி நடிகர்கள் பலரையும் தெரிந்த அளவிற்கு ஜெகதி அறிமுகமாகவில்லை. முக்கிய காரணம் அவர் மலையாளப் படங்கள் தவிர வேறு எதிலும் நடிக்காததே. என் வரையில் இந்திய அளவிலான சமகால நகைச்சுவை நடிகர்களில் ஜெகதி மிக முக்கியமானவர் .
ஜெகதியின் நகைச்சுவை ஒரு வகையில் எம்.ஆர்.ராதாவை போன்றது. அவர் தன் உடல், குரல், பாவம் என்று சட்சட்டென மாற்றக்கூடியவர். பலநேரங்களில் அவரது மௌனம் கூட தியேட்டரில் சிரிப்பலையை உருவாக்கிவிடுகிறது. நடிகனாக தேர்ந்த நுட்பமும் தனித்திறனும் கொண்டவர். நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி குணசித்திர வேஷங்களில் சிறப்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார் என்கிறார்கள். ஒரு ஆண்டில் வெளியாகும் 70 படங்களில் நிச்சயம் 40 படங்களில் ஜெகதி நடித்திருப்பார். அவ்வளவு பிசியான நடிகர்.
எத்தனையோ மாறுபட்ட வேஷங்கள், மாறுபட்ட மலையாள உச்சரிப்புகள். கேரள தேசத்தின் எல்லா தட்டு மக்களையும் அவர் வேடமிட்டு பிரதிபலித்திருக்கிறார். குறிப்பாக அவர் பாதிரியராக தோன்றி நடிக்கும் படங்களில் அவர் உடல்மொழியும் வசனங்களை அவர் உச்சரிக்கும் விதமும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்க கூடியவை. பல பிரபலமான வெற்றிபடங்களின் ஆதார காரணமாக ஜெகதியிருந்திருக்கிறார்.
குறிப்பாக பத்மராஜனும் ப்ரியதர்சனும் ஜெகதியை பயன்படுத்திக் கொண்டதில் சிறப்பான இரண்டு இயக்குனர்கள். பத்மராஜன் படங்களில் ஜெகதி ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அற்புதமானவை.
தொடர்ந்த படப்பிடிப்பு, பயணம் என்று பரபரப்பாக இயங்கும் ஜெகதி படப்பிடிப்பின் போது காரில் வந்திறங்கி காட்சி என்னவென்று ஒரு முறை கேட்டுவிட்டு அப்படியே நடித்து கொடுத்துவிட்டு போய்விடுவார் என்று சொல்கிறார்கள்.
பொள்ளாச்சி அருகே நானும் இயக்குனர் ஜீவாவும் ஒரு படப்பிடிப்பிற்கான வீடு தேடி அலைந்த போது மலையாள படப்பிடிப்பு ஒன்று அருகில் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே சென்ற காட்சியில் ஜெகதி நடித்துக் கொண்டிருந்தார். ஒரே டேக், காட்சி ஒகே ஆனது. அடுத்த சில நிமிசங்களில் உடைமாற்றிக் கொண்டு அடுத்த காட்சி. அவதாரம் எடுப்பது போல நிமிசத்தில் தன் முழுஉடலையும் மாற்றிக் கொள்ள தெரிந்த அற்புதமான கலைஞன்.
படப்பிடிப்பு நடந்த வீட்டை நாங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ஜெகதி வெளியே வந்து நின்றபடியே என்னிடம் தமிழ்படமா என்று கேட்டார். ஆமாம் உங்கள் படங்களை பார்த்திருக்கிறேன். எனக்கு உங்களது நகைச்சுவை ரொம்பவும் பிடிக்கும் என்று சொன்னேன். அவரிடம் ஒரு புன்னகை மட்டுமே பீறிட்டது. அடுத்த காட்சியில் நடிக்க திரும்பி போய்விட்டார்.
அன்றிரவு நானும் ஜீவாவும் ஜெகதியின் நகைச்சுவை பற்றி நிறைய பேசிக் கொண்டிருந்தோம். என்னிடமிருந்த உதயநானு தாரா படத்தின் குறுந்தகட்டினை ஒட விட்டு ஜெகதி சீனிவாசனுக்கு நடிப்பு சொல்லி தரும் காட்சியை பார்த்து இரவெல்லாம் சிரித்தோம்.
படத்தில் பட்டாளம் பாஸி என்பது ஜெகதியின் பெயர். அவர் பொய்சொல்லி நடிகனாக மாறிய சீனிவாசனுக்கு நடிப்புகலை சொல்லிதர வந்துசேர்வார். நவரசங்களை ஒவ்வொன்றாக அபிநயத்து காட்டுவார். அதன் முன்பாக சீனிவாசினிடம் உனக்கு ரசம் பற்றி தெரியுமா என்று கேட்பார். ஒரளவு தெரியும் என்று கூறும் சீனிவாசன் முதலில் பருப்பை வேகவைத்து கொள்ள வேண்டும் பிறகு தக்காளி மிளகு வேண்டும் என்று ரசம் வைப்பதை பற்றி சொன்னதும் எரிச்சல் அதிகமாகி அந்த ரசம் வைக்க ரசப்பொடியிருக்கிறது. நான் சொல்வது நவரசம் பற்றி என்று கோபமாகி ஒவ்வொரு பாவமாக நடித்து காட்டுவார்.
சீனிவாசன் அதை பின்பற்ற முடியாமல் விழிப்பார். குறிப்பாக சிருங்காரம் என்பதை ஜெகதி காட்டுவதும் பதிலுக்கு சீனிவாசன் உதட்டை பிதுங்கி கண்ணை உருட்டியதும், ஏன்டா பசு சாணி போடுவது போல முகத்தை வைத்துக் கொள்கிறாய் என்று கேட்பது நகைச்சுவையின் உச்சம்.இந்த படத்தில் ஜெகதி பங்கு சிறியது. ஆனால் மிகச் சிறப்பானது.
இது போலவே உள்ளடக்கம் என்றபடத்தில் தான் ஒரு குதிரையை விழுங்கி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் மனநலமற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் மருத்துவரிடம் போய் தன் நோயை பற்றி சொல்லும் காட்சி வெடித்து சிரிக்க வைக்க கூடியது.
எனது மலையாள சினிமாவை சேர்ந்த நண்பர்களை சந்திக்கும் போது அவசியம் சில மணி நேரம் ஜெகதியின் நகைச்சுவை காட்சிகளும் பகிர்ந்து கொள்ள நேரிடும்.
ஜெகதி முப்பத்தைந்து வருசங்களுக்கும் மேலாக மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். எளிமையான மனிதர். பிறமொழி படங்களில் நடித்தால் தனக்கு வேறு ஒருவர் டப் செய்ய நேரிடும். அதனால் தான் ஜெகதி மறுத்துவருகிறார். அவருக்கு தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களை பிடிக்கும் குறிப்பாக அவருக்கு பிடித்தமான நடிகை மனோரா என்று நேர்காணலில் சொல்லியிருக்கிறார் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பாக ஜெகதியின் நேர்காணல் ஒன்றை இணையதளம் ஒன்றில் வாசித்தேன். அது அவரை பற்றிய மதிப்பீட்டினை இன்னும் அதிகமாக்கியது. மிக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
குறிப்பாக தனக்கு ரசிகர் மன்றங்கள் கிடையாது. தானே ஆள் வைத்து கைதட்ட, திரையில் பூ போட வைப்பது கிடையாது. கிசுகிசுக்கள், அக்கப்போர்களில் ஒரு போதும் விருப்பம் கிடையாது. சில கதாபாத்திரங்களை திரும்பத் திரும்ப நடிப்பது போலிருப்பதற்கு காரணம் நிஜவாழ்க்கையிலே இன்று மாறுபட்ட மனிதர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பதால் தான்.
தான் ஒரு நகைச்சுவை நடிகர் என்பது திரையில் மட்டுமே, நிஜவாழ்க்கையில் சீரியசான ஆள். நகைச்சுவை என்ற பெயரில் பொது விஷயங்களில் முட்டாள்தனமான பேசுவது தனக்கு பிடிக்காது.
நடிகன் தனது முகத்தையும் உடலையும் பக்குவமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு எந்த வேஷமிட்டாலும் பொருந்தும்படியாக உடலும் முகமும் அமைந்திருக்கிறது. அது தான் எனது ஒரே பலம். என்னை விழாவிற்கு அழைக்க விரும்பகின்றவர்கள் குறைந்தது பத்தாயிரம் ரூபாயை உடல்குறைபாடுள்ள குழந்தைகளுக்கான நலநிதியாக தந்தால் மட்டுமே அந்த விழாக்களில் கலந்து கொள்கிறேன். இப்படி எனக்கு சில சுயநிபந்தனைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்று ஜெகதி தெரிவித்திருந்தார்.
நான் ஜெகதியின் சொந்த வாழ்க்கை பற்றியோ, அவரது திரைச்சாதனைகள் பற்றியோ அதிகம் அறிந்தவன் இல்லை. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றவன் என்ற முறையில் அவரைப் போல அடக்க முடியாத சிரிப்பை உருவாக்கும் வேறு திரைக்கலைஞரை மலையாள சினிமாவில் நான் கண்டதில்லை.
சில நேரங்களில் அவர் வசனங்களை ஏற்றி இறக்கி உச்சரிக்கும் பாணி அப்படியே எம்.ஆர்.ராதாவை போலவே இருக்கிறது. சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், உடல் அசைவுகள், விலக்கட்ட கேலிகள் என்று யாவையும் கிண்டல் அடித்திருக்கிறார்.
அடிப்பது, உதைப்பது, மோசமான இரட்டை வசனங்களில் பேசுவது போன்ற நகைச்சுவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஜெகதியின் நகைச்சுவை . தமிழில் வடிவேலு, கவுண்டமணி ஆகிய இருவரின் பல நகைச்சுவை காட்சிகளுக்கு மூலம் இவரது மலையாள திரைப்படங்களே .
ஜெகதியின் நகைச்சுவை காட்சிகள் இன்று இணையத்தில் அதிகம் காணக்கிடைக்கிறது. தொடர்ந்த எழுத்து வேலையின் ஊடாக இப்போதும் என்னை புத்துணர்ச்சி செய்ய உதவி செய்வது ஜெகதியின் நகைச்சுவை காட்சிகளே.
இன்று கூட யூடிப்பில் குருசிஷ்யன் என்ற மலையாளபடத்தில் உள்ள ஜெகதியின் நகைச்சுவை காட்சி ஒன்றை பார்த்தேன். மனைவியை சந்தேகப்படும் ஜெகதி அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கபடுகிறார். அங்கே அவர் மனைவியோடு மற்றவர்கள் பேசும் போது அவரால் பேசமுடியாத போதும் வெளிப்படும் ஆத்திரம் வெகு வேடிக்கையானது.
இதற்கிடையில் சலீம்குமார் அவருக்கு உயிர்உள்ள மீனை விழுங்க வைத்தால் நோய் குணமாகிவிடும் என்று சொல்லி பெரிய மீன் ஒன்றை பிடித்து வந்து வாயில் திணித்து அந்த மீன் முள் அவரது தொண்டையில் சிக்கி கொண்டு மீனை எடுக்க முடியாமல் திணறும் போது சலீம்குமாரும் தன்மனைவியும் நெருக்கமாக பேசுவதை கண்டு தாவி அடிக்கும் காட்சி குலுங்க சிரிக்கும் நகைச்சுவை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மலையாளத்தில் ஜெகதியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
நல்ல நகைச்சுவைக்கு மொழி தடையில்லை. அதை நிரூபணம் செய்பவர் ஜெகதி. அவரது நகைச்சுவையை காணும் போது நீங்களே அதை உணர்வீர்கள்.
***