மீன்களின் நடனம்

குறுங்கதை

அந்த அறையில் முன்பு குடியிருந்தவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் வண்ணமீன்கள் வளர்த்திருக்கிறார். அறையைக் காலி செய்து போகும் போது கண்ணாடித் தொட்டியை அப்படியே விட்டுவிட்டுப் போயிருந்தார்.

ராஜன்பாபு அந்தக் கண்ணாடித் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பெரியதொரு தொட்டி. அதற்குள் பாசியேறிய கூழாங்கற்கள். அறுந்து போன பிளாஸ்டிக் டியூப். மீன் தொட்டியின் வெளியே மார்க்கர் பேனாவால் ஜெலின் என்று எழுதப்பட்டிருந்தது. அது மீனின் பெயரா. அல்லது மீன் நினைவுபடுத்தும் பெண்ணின் பெயரா எனத் தெரியவில்லை.

ராஜன்பாபு அந்தப் பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். அதுவே மீன் நீந்துவது போலதானிருந்தது.

ஒருவர் எப்போதும் மீன் வளர்ப்பதை நிறுத்திக் கொள்கிறார். அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யாரும் கேட்பதில்லை.

ராஜன்பாபு இரண்டு முறை மீன் வளர்ப்பதை நிறுத்தியிருக்கிறான். அந்த முடிவை எடுப்பதற்கு அவன் பல நாட்கள் யோசனை செய்தான். அவனுக்குள் குற்றவுணர்வு ஏற்பட்டது. இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கவும் முடியவில்லை.

சிறிய விஷயங்களில் முடிவு எடுப்பது கடினமானது என்பதை அப்போது உணர்ந்தான்.

ஒருவன் மீன் வளர்ப்பதை நிறுத்துவது என்பது எளிமையான செயலில்லை. உலகின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளில் ஒன்றைக் கைவிடுவதன் அடையாளமது.

வண்ணமீன்களை வளர்ப்பதற்கு வேண்டுமானால் ஏதோவொரு காரணம் இருக்கலாம். ஆனால் மீன் வளர்ப்பதை நிறுத்துவதற்கு வெளியே பகிர முடியாத, பகிர விரும்பாத காரணம் நிச்சயம் இருக்கக் கூடும்.

ஒருவேளை ஆசையாக வளர்த்த மீன்களில் ஒன்று தொட்டிக்குள் செத்து மிதப்பதைக் கண்ட நாளுக்குப் பிறகு தான் அந்த முடிவை எடுத்திருப்பார்களா. ராஜனுக்கு அப்படியான அனுபவம் இருந்தது.

வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பிய இரவில் அவனது வளர்ப்பு மீன்களில் ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்தது. அவனுக்குத் தொட்டியில் மிதந்த மீனை வெளியே எடுக்கத் தைரியம் வரவில்லை.

அதே தொட்டியிலிருந்த மற்ற மீன்கள் ஆனந்தமாக நீந்திக் கொண்டிருந்தன. அது ராஜனை எரிச்சல் படுத்தியது. இரவு முழுவதும் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

காலையில் மீன்தொட்டியைத் தூக்கிக் கொண்டு மொட்டைமாடியில் வெயில்படும்படியாக வைத்தான். அவனது நோக்கம் பூனை தொட்டியிலுள்ள மீன்களைப் பார்க்க வேண்டும். தொட்டிக்குள் இருக்கும் எந்த மீன் பூனைப் பார்த்தாலும் பதற்றமாகிவிடும். அது தான் அதற்குத் தரும் தண்டனை.

இரண்டு நாட்களுக்குப் பின்பு மொட்டைமாடிக்குப் போன போது வெறும் தொட்டியாக இருந்த்து. அதிலிருந்த மீன்கள் என்னவாகின என்று தெரியவில்லை.

ஆனால் இந்த புதிய அறைக்கு வந்தவுடன் காலியாக இருந்த கண்ணாடித்தொட்டி அவனது மீன் வளர்க்கும் ஆசையை மறுபடி தூண்டியது.

யாரோ விட்டுச் சென்ற கண்ணாடி தொட்டியில் இன்னொருவர் மீன் வளர்க்கும் போது அது முந்தியவரின் விருப்பத்தைத் தொடர்வதாக மாறிவிடாதா என ராஜன்பாபு யோசித்தான்..

அவனைப் போன்று மீன் வளர்க்க விரும்புகிறவர்கள் தோற்றத்தில் அமைதியானவர்கள் போலத் தோன்றும் குழப்பவாதிகள். அவர்கள் உண்மையில் மீன்களுடன் பேச விரும்புகிறார்கள். மீன்களிடமிருந்து சில பதில்களை எதிர்பார்க்கிறார்கள்.தனது தனிமையைப் போக்கிக் கொள்ள மீன்கள் மட்டுமே இருந்தால் கூடப் போதும் என நினைக்கிறவர்கள்.

கண்ணாடி தொட்டியில் தனக்கு விருப்பமான இரண்டு மீன்களை வாங்கி நீந்த விட்டான். அந்த மீன்களில் ஒன்றை அவன் ஜெலின் என்றே அழைத்தான். இன்னொரு மீனுக்குப் பெயர் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டான்.

தொட்டிக்குள் அந்த மீன்கள் நீந்தும் போது அந்த அறையில் இதற்கு முன்பு வசித்தவன் நினைவில் வந்து கொண்டேயிருந்தான்.

ஒரே தொட்டிக்குள் இருந்தாலும் இரண்டு மீன்களும் ஒரே வயதுடையதில்லை.

ஒரு அறையில் ஒரு மனிதனும் இரண்டு மீன்களும் வசிக்கின்றன என்றால் அதை மூவர் வசிக்கும் இடமாகத் தானே கருத வேண்டும். அவன் அப்படித்தான் கருதினான்.

உண்மையில் மீன்கள் நீந்துவதில்லை. அவை விநோதமான முறையில் நடனமாடுகின்றன. அந்த நடனத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இரண்டு மீன்களும் ஒன்றுக்கொன்று இணையாக நடனமாடும் போது ஏற்படும் வியப்பும் மகிழ்ச்சியும் நிகரில்லாதது.

திடீரென இரண்டு மீன்களில் ஒன்று மேல் நோக்கிச் செல்வதாக நடனமாடுகிறது இன்னொன்று கீழ் நோக்கி வருவதாக நடனமாடுகிறது. இரண்டும் சந்திக்கும் புள்ளி மாறிக் கொண்டேயிருக்கிறது. மீன்களின் நடனத்திற்குள் ரகசியம் ஒளிந்திருக்கிறது.

பகலை விடவும் இரவில் மீன்கள் அதிகம் அமைதியற்றுப் போகின்றன. தனது அறையை ராஜன்பாபு ஒரு கண்ணாடித்தொட்டி போல நினைத்தான். அதற்குள் அவனும் ஒரு மீன் போலவே அலைந்து கொண்டிருந்தான்.

கண்ணாடிச் சுவரின் விளம்பு வரை தனது மூக்கால் உரசும் மீன் உண்மையில் எதையோ சொல்ல விரும்புகிறது. மீன் தனது சமநிலையைப் பராமரிக்கிறது, பல நேரங்களில் மிகவும் மெதுவாக நகர்கிறது. இயக்கமற்றது போலக் காட்டிக் கொள்கிறது. அது அவன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

மீன்களின் நடனத்தைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்கள். மீன்களுக்கு நினைவு உண்டா. நினைவு மறதி உண்டா.

நினைவு மறதி கொண்டது போலச் சில வேளைகளில் நடந்து கொள்கிறதே.

தங்க மீன்களுக்குக் குறுகிய கால நினைவாற்றல் இருப்பதாக நம்புகிறார்கள். , அதனால் தானோ என்னவோ மீன் வளர்க்கிறவரைப் பார்க்கும் போது அவை உற்சாகமடைகின்றன.

கண் பார்வையில்லாத டால்பின் ஒன்றை ஒரு நாள் தொலைக்காட்சியில் பார்த்தான். அந்த டால்பினை இன்னொரு டால்பின் வழிநடத்துகிறது. இரண்டு ஒன்றாக நீந்துகின்றன. ஒன்றாகத் தண்ணீருக்குள் மறைகின்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன்னை அறியாமல் ராஜன் அழுதான்.

புத்தகம் படிப்பது போல ஆசையாக, கவனமாக, அவன் மீன்தொட்டியின் அருகில் அமர்ந்து அதன் நடனத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். மீன்களின் உருவம் மறைந்து அலையும் இரு சிறுகோடுகள் போல மாறின. பின்பு அதுவும் மறைந்து அவனது அகத்தில் சிறியதொரு அசைவு. நகர்வு. ஆனந்தம் ஏற்படுவதை உணர்ந்தான்.

இது போதும் , இது போதும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

ஒரு நகரம் மனிதனைக் கைவிடும் போது அவனது அறை மீன்கள் தனது நடனத்தால் அவனை உற்சாகப்படுத்துகின்றன.

தொட்டியில் உள்ள மீன்கள் யாவும் சிறுமிகள் என்று ராஜன்பாபு நினைத்துக் கொண்டான். அப்படி நினைத்துக் கொள்வது கூடுதல் சந்தோஷம் தருவதாக இருந்தது.

••

0Shares
0