ஒரு படைப்பாளியாக எனக்கு கவிதைகளின் வழியே தான் அதிகத் தூண்டுதல் கிடைக்கிறது. நான் கவிதைகளைக் கொண்டாடுகிறவன் . சமகால உலகக் கவிதை நூல்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தமிழின் நவீன கவிதை மீதும் தனித்த ஈடுபாடு உண்டு.
கடந்த வாரம் ஜோசோ கப்ரால் டி மெலோ நெட்டோ,( João Cabral de Melo Neto) என்ற ஒரு பிரேசிலிய கவிஞரின் Education by Stone என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்தேன்.
இது அவரது ஐந்து கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கிறது.
பிரேசிலின் முக்கியக் கவிஞராகக் கொண்டாடப்படும் இவர் மூன்று முறை நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். மெலோவின் கவிதைகள் புதிய வெளிப்பாட்டு முறையை, கவித்துவ மொழிதலைக் கொண்டிருக்கின்றன.
நமக்குள் உறைந்து போயுள்ள புற உலகம் குறித்த புரிதலை கவிதைகள் மாற்றம் கொள்ள வைக்கின்றன. அன்றாட வாழ்க்கை குறித்த நமது புரிதல்கள் யாவும் மிகவும் மேலோட்டமானவை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
கவிதையில் வெளிப்படும் விஷயம் வாழ்வைப் புதியதாகத் தரிசிக்கவும் அனுபவிக்கவும் உதவியாக இருக்கிறது.
மெலோவின் கவிதையொன்றில் ஆறு கடலில் சென்று கலக்கிறதெனில் கடலென்பது ஆற்றின் சமாதியா என்ற வரி இடம் பெறுகிறது.
எங்க ஆற்றின் வாழ்க்கை முடிகிறதோ, அது அதன் சமாதி தானே.
இந்த வரியின் வழியே கடல் முன்னறியாத பெரிய சமாதியைப் போல மனதில் உருக்கொள்கிறது.
தாளின் வெற்றுப் பக்கம்
என்னைக் கனவு காணத் தூண்டுவதில்லை
மாறாகச்
சரியான கவிதையொன்றால்
நிரப்பவே தூண்டுகிறது
என்ற கவிதை வரி வெற்றிடத்தைக் கவிதை அனுமதிப்பதில்லை என்பதைப் புரிய வைக்கிறது.
இன்னொரு கவிதையில் கடலென்பது விரிந்து கிடக்கும் நீலக்கொடி என்ற வரி இடம்பெற்றுள்ளது. கடலை பிரம்மாண்டமான நீலக்கொடியாகக் காணும் அனுபவம் புதுவிதமானது.
வேறு ஒரு கவிதையில், மூடப்பட்ட நிசப்தம் மூடப்படாத நிசப்தம் என மௌனத்திற்கு இரு நிலைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் மெலோ.
இசை, ஓவியம், தத்துவம் ஆகியவற்றால் எழுத்தாளர்கள் பலர் உந்துதல் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நான் கட்டிடக்கலைஞர் லு கார்பூசியர் படைப்புகளின் வழியே தான் அதிகப் பட்ச தூண்டுதல் பெற்றேன். ஒரு கட்டிடக்கலைஞர் கவிஞனுக்கு வழிகாட்டினார் என்பது தான் நிஜம். பதின்வயதிலே லு கார்பூசியரின் கட்டிட வடிமைப்பு குறித்த செய்திகளை வாசிக்க ஆரம்பித்தேன். அவரது கட்டிடக்கலை சிறப்புகளை அறியத்துவங்கினேன். அவர் அளவிற்கு எந்தக் கவிஞரும், , எந்தத் தத்துவஞானியும் என் மீது செல்வாக்கை செலுத்தவில்லை. பல ஆண்டுகளாக அவரே கவிதையின் அடிப்படைகளைக் கற்றுத்தந்தபடி இருக்கிறார் .”Fable of an Architect.” என அவரைப் பற்றி ஒரு கவிதையே எழுதியிருக்கிறேன். என்கிறார் மெலோ
வாசகரை உலுக்குவதில் அக்கறை கொண்ட ஒரு குறிப்பிட்ட வகைக் கவிஞர்கள் இருக்கிறார். ஆனால் எனது கவிதையின் வழியே வாசகனை விழிப்புணர்வு கொள்ள வைக்கவே விரும்புகிறேன். நான் எந்த இசையையும் விரும்புவதில்லை. முற்றிலும் இசையைத் தவிர்க்கவே விரும்புகிறேன். இசை எனக்குரிய உலகமில்லை என்றும் தன் நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
பதினாறு வயதிலிருந்தே தனக்குத் தலைவலி உள்ளது. அதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட முறை சிகிச்சைகள் எடுத்திருக்கிறேன். ஆனால் எதிலும் தலைவலி குணமாகவேயில்லை. இந்த வலி உண்மையில் வெறும் மனப்பிரமை தானோ என்னவோ. முன்பு வலி வந்தவுடன் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வேன். அதுவும் நாலைந்து முறை கூட மாத்திரை போடுவது உண்டு ஆஸ்பிரின் மாத்திரை பற்றிக் கூட ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதை ஜெர்மனியில் மொழிபெயர்த்து மருத்துக்கம்பெனியின் விளம்பரத்திற்க விற்க முனைந்தார்கள் என்பது வேடிக்கையான விஷயம். வயதாக வயதாக இப்போது தலைவலி பழகிப்போய்விட்டது,
இன்று என் கவிதைகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. என் கவிதையை வேறு மொழியில் நானே படிக்கமுடியாமல் வெறித்துப் பார்த்தபடியே மட்டும் இருப்பது வியப்பு தானில்லையா என்கிறார் மெலோ.
மெலோவின் கவிதைகளில் மட்டுமின்றி அவரது உரையாடலிலும் வியப்பான விஷயங்களும் இயல்பான வாழ்க்கையும் ஒன்று கலந்தேயிருக்கிறது.
••
.