லூ சுனின் காதற்கடிதங்கள்

சீன எழுத்தாளர் லூ சுன் (Lu Xun) பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவரது காதல் கடிதங்கள் தனி நூலாக வெளியாகியுள்ளது என்பதைப் பற்றிய தகவலை அறிந்தேன்.

சீனாவில் லூசுனிற்கு முன்பாக யாரும் தங்கள் காதல் கடிதத்தைத் தனி நூலாக வெளியிட்டது கிடையாது. ஆகவே அந்தப் புத்தகம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் சில கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது

Letters Between Two என்ற அந்த புத்தகத்தை இணையத்தில் தேடிப் படித்தேன்.

தனது மாணவியும் தன்னை விடப் பதினாறு வயது குறைந்தவருமான சூ குவாங்பிங்கிற்கு லூசுன் எழுதிய கடிதங்களும் அதற்குக் குவாங்பிங் எழுதிய பதில்களும் இதில் அடங்கியுள்ளன

ஜு ஆன் என்ற பெண்ணை லூசுன் கல்லூரி நாட்களிலே திருமணம் செய்து கொண்டிருந்தார். அந்த மண உறவில் கருத்துவேறுபாடு உருவாகவே அவர் தனித்து வாழ்ந்து வந்தார்

லூ சுன் மாணவியாக இருந்த குவாங்பிங் தனது ஆசிரியர் மீது அன்பு கொண்டு அவருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பக் கடிதங்களில் நலம் விசாரிப்பு மற்றும் பொது விஷயங்களைப் பற்றியே இருவரும் எழுதியிருக்கிறார்கள். மெல்ல அது காதலாக மாறி பரஸ்பரம் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளவும் அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறார்கள்

திருமணம் செய்து கொள்ளாமலே குவாங்பிங்குடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார் லூ சுன். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்திருக்கிறது. குவாங்பிங் முதற்கடிதத்தை எழுதிய போது அவரது வயது 27.

அப்போது கல்லூரி படிப்பை முடித்துப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். அவர் பள்ளியில் படித்த போது இரண்டு ஆண்டுகள் லூ சுன் பாடம் கற்பித்திருக்கிறார். அந்த நாட்களில் லூ சுனின் பேச்சும் சிந்தனைகளையும் அவரைக் கவர்ந்திருக்கின்றன.

லூ சுனின் சிறுகதைகள் புதிய கதைப்போக்கினை உருவாக்கி பெரிய வரவேற்பினை பெற்றிருந்தன. ஆகவே தனது விருப்பத்திற்குரிய ஆசிரியரும் எழுத்தாளருமான லூ சுன் மீது குவாங்பிங் ரகசியக் காதல் கொண்டிருந்தார்

குவாங்பிங்கின் குடும்பம் ஒரு காலத்தில் வசதியாக இருந்தது. அவளது தாத்தா மாகாண ஆளுநராக இருந்தவர். ஆனால் தந்தையின் காலத்தில் குடும்பம் நொடித்துப் போனது. அவளது தந்தை ஒரு சிறு வணிகர். அம்மா ஏற்றுமதி வணிகம் செய்யும் ஒருவரின் மகள்.

அந்தக் காலச் சீனாவில் இளம் பெண்களின் கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பாதங்களைப் பிணைத்துக் கட்டும் பழக்கம் இருந்தது. அப்படிப் பாதங்களை இறுக்கமாகக் கட்டியதால் அம்மாவின் கால்கள் ஒடுங்கிப் போய்விட்டன. ஆள் துணையில்லாமல் அவரால் நடக்க முடியாமல் ஆனது.

இதன் காரணமாகக் குவாங்பிங்கின் தந்தை தன் மகளுக்கு அப்படி கால்களைப் பிணைத்துக் கட்டும் சடங்கு செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அந்தக் காலத்தில் இருபாலர் படிக்கும் பள்ளியில் பெண்களைச் சேர்க்க அனுமதிக்கமாட்டார்கள். அதை மீறி குவாங்பிங்கை இருபாலர் பள்ளியில் படிக்க அனுமதி தந்தார் அவரது தந்தை.

இளம் மாணவியாக அவள் தனது வீட்டில் பத்திரிக்கை படிப்பதை அண்டை வீட்டார் ஒரு புறம் வியந்து பார்த்தார்கள். மறுபுறம் இது பெண்களின் தலையில் மோசமான எண்ணங்களை உருவாக்கிவிடும் என்று கண்டித்தார்கள். ..

படிப்பில் சிறந்துவிளங்கிய குவாங்பிங் பீஜிங்கில் உள்ள கல்லூரியில் படித்திருக்கிறார். இந்த நாட்களில் அவர். பத்திரிக்கையாளராக விரும்பினார்

வார மாத இதழ்களுக்குத் தனது பயணம் மற்றும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்து சிறுகட்டுரைகள் எழுதிவந்தார்.

லூ சுன் குடும்பமும் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து நொடித்துப் போனது தான். அவருடன் பிறந்தவர்கள் மூவர். அவரே மூத்தவர். அந்த நாட்களில் ஜப்பானுக்குச் சென்று கல்வி பயிலுவது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது. அரசின் உதவித்தொகை பெற்று ஜப்பானுக்குச் சென்று படித்தார் லூசுன்.

மருத்துவம் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவரது கவனம் மாறிப்போனது. இலக்கியமும் மொழியும் கற்றுக் கொள்ளத்துவங்கிப் படிப்பை முடிக்காமலே சீனா திரும்பினார்

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கி பெண்கள் பள்ளி ஒன்றில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அப்போது தான் குவாங்பிங்கிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்

ரஷ்ய மற்றும் பிரெஞ்சு இலக்கியங்கள் மீது அதிக விருப்பம் கொண்டிருந்த லூசுன் அதன் முக்கியப் படைப்புகளைச் சீன மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தனது சிறுகதைகள் மூலம் நாடறிந்த எழுத்தாளராக மாறிய அவர் அரசியல் கட்டுரைகளையும் சமூகப்பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்துத் தொடர்ந்து எழுதி வந்தார்.

குவாங்பிங்கை காதலிக்கத் துவங்கிய பிறகு அவரது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது.

குவாங்பிங் அவரது கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து இதழ்களுக்கு அனுப்பி வைத்தார். சகோதரனுடன் பிணக்குக் கொண்டு விலகி இருந்த லூசுனுக்கு ஆறுதல் சொல்லி புதிய வாழ்க்கையை உருவாக்கித் தந்தார்

அவளது காதலின் வழியே தனது நீண்ட கால மனத்துயரை, வேதனையைத் தான் கடந்துவிட்டதாக லூ சுன் எழுதியிருக்கிறார். அவளது பிறந்தநாள் ஒன்றுக்காக ஒரு காதற்கவிதையை எழுதிப் பரிசளித்திருக்கிறார் லூசுன்.

மிதமிஞ்சிய குடி மற்றும் புகைப்பழக்கம் காரணமாக அவரது உடல்நிலை நலிவடைய நேர்ந்த போது குவாங்பிங் உடனிருந்து நலம்பெற உதவியிருக்கிறார். ஆனால் காச நோய் முற்றிய நிலையில் லூ சுன் இறந்து போனார். அதன்பிறகு அவரது படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதில் குவாங்பிங் தீவிர கவனம் கொண்டிருந்தார்

லூ சுனின் உற்றதுணையாக விளங்கிய போதும் குவாங்பிங் இறந்த போது அவரது உடலை லூசுன் கல்லறைக்கு அருகில் புதைக்க அனுமதிக்கவில்லை. காரணம் அவர் அவளை முறையாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே.

லூசுனின் மனைவி ஜு ஆன் ஷாக்ஸிங்கில் ஒரு தொழிலதிபரின் மகளாகப் பிறந்தவர், மற்ற பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மாவின் விருப்பம் மற்றும் குடும்பக் கௌரவத்திற்காக அவளை லூசுன் திருமணம் செய்து கொண்டார். லூசுனை விடவும் மூன்று வயது மூத்தவர் ஜு ஆன். இவர்களின் திருமண உறவு நீடிக்கவில்லை.

லூ சுனின் மனைவியாக ஜு ஆன் 41 வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தார்.

தனது திருமணத்திற்குப் பிறகே லூ சுன் கல்வி பயில ஜப்பான் சென்றார். வெளிநாட்டில் படிக்கும் மருமகன் என ஜு ஆன் குடும்பத்தில் அவர் ஒரு அறிவுஜீவியாகக் கருதப்பட்டார்.

சீனா திரும்பிய லூசுன் கட்டுப்பெட்டியாக இருந்த தனது மனைவியை விரும்பவில்லை. திருமணமான முதலிரவில் கூட அவர் ஒரு அறையிலும் ஜு ஆன் தனி அறையிலும் தூங்கினார்கள். அது தான் அவர்கள் குடும்பச் சம்பிரதாயம் என்று கூறப்பட்டது.

அவள் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும், நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று லூ சுன் வற்புறுத்தினார். அவள் அதை ஏற்கவில்லை. நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள அவள் தயாராகயில்லை என்பதால் லூசுன் அவளை விட்டு விலகிக் கொண்டார்.

.பிரிந்து வாழ்ந்த போதும் லூசுன் அவளை விவாகரத்து செய்யவில்லை. காரணம் விவாகரத்துப் பெற்ற பெண் சமூக அந்தஸ்தை இழந்துவிடுவதோடு குடும்பத்தின் சொத்துரிமையினையும் இழந்துவிடுவாள். அப்படி அவளை நிர்கதியாக விடவேண்டாம் என நினைத்த லூசுன் அவளை விவாகரத்து செய்யவில்லை.

குவாங்பிங்குடன் வாழ்ந்த காலத்திலும் மனைவிக்கும் அவளது குடும்பத்திற்குத் தேவையான பணஉதவியை மாதந்தோறும் அனுப்பி வந்திருக்கிறார். அவரது மறைவிற்குப் பிறகு அது போலவே வருவாயில் ஒரு பகுதியை ஜு ஆனிற்குத் தவறாமல் அனுப்பி வந்தார் குவாங்பிங்., வருவாய் இல்லாத மிகக் கடினமான சூழ்நிலையிலும் கூட அந்தப் பணம் அனுப்பத் தவறவேயில்லை.

குவாங்பிங்கின் வாழ்க்கையினையும் அவளது காதல் கடிதங்களையும் வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் உதவியாளராக வந்து அவரைத் திருமணம் செய்து கொண்டு சிறந்த வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னா தஸ்தாயெவ்ஸ்கி நினைவில் வந்து போகிறார்

அன்னாவிற்கும் குவாங்பிங்கிற்கும் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. இருவரும் படித்தவர்கள். எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தனித்து வாழ்ந்து வந்த எழுத்தாளருக்கு உதவி செய்ய முயன்றவர்கள்.. எழுத்திலும் வாழ்க்கையிலும் மாறாத்துணையாக விளங்கியவர்கள். அன்னாவை தஸ்தாயெவ்ஸ்கி திருமணம் செய்து கொண்டார். ஆனால் லூசுன் குவாங்பிங்கை திருமணம் செய்து கொள்ளவில்லை.

குவாங்பிங்கின் முதல் கடிதம் 11 மார்ச் 1925 அன்று எழுதப்பட்டிருக்கிறது, நான்கு பக்கமுள்ள கடிதமது. முதல் பக்கம் மிக அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் பக்கங்களில் அடித்தல் திருத்தல் கொண்டதாகக் கடிதம் உள்ளது. இதில் ஒன்றிரண்டு இடங்களில் அடிக்குறிப்புகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஏப்ரல் 1925 க்கு பிறகு குவாங்பிங் எழுதிய கடிதங்கள் மிக நீளமானவை. பக்க எண் போடப்பட்ட நாற்பது ஐம்பது பக்க கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்தக் கடிதங்களுக்கு உடனுக்கு உடனே லூசுன் பதில் எழுதியிருக்கிறார். அவளிடமிருந்து மறுகடிதம் வரத் தாமதமான போது அவரே அடுத்த கடிதங்களையும் எழுதி அனுப்பியிருக்கிறார். நாட்கணக்கில் கடிதம் வருவதற்குத் தாமதமாகும் போது தபால் துறை மீது கோபம் கொண்டிருக்கிறார்.

விடுமுறை நாளில் தபால் துறை செயல்படுவதில்லை என்பது அவரை எரிச்சல் படுத்தியிருக்கிறது. மூன்று நான்கு பகுதிகளாகக் கடிதத்தைத் தனியே பிரித்து எழுதி அனுப்பியிருக்கிறார். பெரும்பான்மை கடிதங்கள் இரவில் எழுதப்பட்டிருக்கின்றன. விடிகாலையில் அதைத் தபாலில் சேர்த்திருக்கிறார்.

இன்று எழுதப்படும் கடிதம் போல அன்புமிக்க என விளித்து எழுதப்படும் கடிதம் அந்நாளில் இல்லை. நேரடியாகப் பெண்ணின் பெயரைச் சுட்டி கடிதம் எழுதும் மரபு தான் அன்றிருந்தது.

குவாங்பிங் எழுதிய கடிதங்களை அவளது தோழி வாசித்துத் திருத்தம் செய்திருக்கிறாள். இந்தக் கடிதங்களில் அன்றைய சமகாலப்பிரச்சனைகள். பண்பாட்டு விஷயங்கள். அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கிறார்கள்.

பிறர் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவளது பெயரின் முதல் எழுத்துகளை மட்டுமே லூசுன் பயன்படுத்தியிருக்கிறார். கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் அப்படியே திருத்தம் செய்யாமல் வெளியிட வேண்டும். அதில் பாசாங்கில்லாமல் எழுத்தாளரின் உண்மையான அகம் வெளிப்படுவதைக் காணமுடியும் என்கிறார் லூசுன்.

அவர் 1912 க்கு1936க்கும் இடையில் தனது நண்பர்கள். உறவினர்களுக்கு 5600 கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்த எண்ணிக்கை மிகப்பெரியது. அவரது காலத்தில் வேறு எவரும் இவ்வளவு கடிதங்கள் எழுதியதில்லை. கடிதம் எழுதுவதில் இவ்வளவு ஆர்வம் கொண்டிருந்த லூசுன் தனக்கு வரும் தேவையற்ற கடிதங்களைப் படித்தவுடனே எரித்துவிடுவார். முக்கியமான கடிதங்களைப் பாதுகாக்கத் தனியே மரப்பெட்டிகள் வைத்திருந்தார். அதில் வண்ண உறைகளில் கடிதங்களை முறையாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

ஒரு நாளில் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வருவதுண்டு. இதற்குப் பயந்து அவர் தனது வீட்டு முகவரியைத் தராமல் பதிப்பகத்தின் முகவரிக்கே கடிதங்கள் எழுதச் சொல்வதுண்டு. தனிப்பட்ட நண்பர்கள் மட்டுமே அவரது வீட்டுமுகவரிக்குக் கடிதம் எழுதினார்கள்.

தனது காதற்கடிதங்களைத் தொகுப்பாக வெளியிடுவதற்கு முன்பாகவே இதழ்களில் ஒன்றிரண்டினை வெளியிட்டு வாசகர்கள் அதற்குத் தரும் எதிர்வினையை, பாராட்டுகளைத் தெரிந்து கொண்டிருந்தார் லூசுன்.

எழுத்தாளர்கள். கலைஞர்களின் காதற்கடிதங்கள் இப்படி நூலாக வெளியாக மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. குறிப்பாகப் பீத்தோவனின் 1812 காதற் கடிதம் எடித் வார்டனின் காதல் கடிதங்கள் ஃப்ரான்ஸ் காஃப்கா தனது காதலி ஃபெலிஸ் பவாருக்கு எழுதிய காதல் கடிதங்கள் தனி நூலாக வெளியாகியுள்ளன.

மகப்பேறுக்காகக் குவாங்பிங் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது போன்சாய் மரம் ஒன்றை வாங்கி வந்து அவளது படுக்கை அருகே வைத்திருக்கிறார் லூசுன். குழந்தையுடன் அவள் வீடு திரும்பிய போதும் வீட்டில் அவளது படுக்கை அறையில் புதிய போன்சாய் மரம் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார். அது நித்தியமான வாழ்க்கை அமையட்டும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

தாதியை நியமித்துக் குழந்தையைக் கவனித்துக் கொள்வதை விடுத்து அவரே குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி நினைவு கொள்ளும் போது தன்னையும் குழந்தையும் அவர் பகலிரவாக மிகுந்த நேசத்துடன் கவனித்துக் கொண்டார் என்று எழுதியிருக்கிறார் குவாங்பிங்

பத்தாண்டுகள் அவர்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். லூசுன் இறந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு குவாங்பிங் இறந்து போனார். அவரது வாழ்க்கை லூசுனின் நூல்களை முறையாகப் பதிப்பு செய்வதிலே கழிந்து போனது.

எழுத்தாளராக லூ சுன் இன்று அறியப்படுவதற்குக் குவாங்பிங்கின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் எந்த அங்கீகாரமும் இன்றி அவர் இறந்து போனார் என்பது தான் வருத்தமானது.

சீன நவீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் லூசுன் சிறுகதைகளில் சில தமிழில் வெளியாகியுள்ளன. கே. கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். இதில் ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் ஆ கியூவின் உண்மைக் கதை இரண்டும் மிக முக்கியமான கதைகள்.

லூசுன் ஆவணப்படத்தில் தனது தம்பியோடு ஏற்பட்ட பிணக்கைத் தாங்க முடியாமல் ஒரே வீட்டில் வேறுவேறு வாசல்கள் வைத்துக் குடியிருந்த நாட்களைப் பற்றி லூ சுன் சொல்கிறார். அந்தப் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவேயில்லை. வாழ்க்கை குறித்த புதிய புரிதலை அதற்குப் பிறகே அவர் உருவாக்கிக் கொண்டார்.

லூ சுனின் கதைகள் திரைப்படமாக வெளியாகியுள்ளன. நாடகமாகவும் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

தஸ்தாயெவ்ஸ்கியின் House of the Dead” போலவே “10years of Silence” என லூ சுன் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு தலைசிறந்த எழுத்தாளர்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் ஒப்பிடும் போது அதிசயக்கத்தக்க ஒற்றுமையைக் காண முடிகிறது. இருவரும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் நோயினால் அவதிப்பட்டவர்கள். இருவரது வாழ்க்கையிலும் ஒரு இளம்பெண் மூலமே மீட்சி கிடைத்தது.

லூ சுனின் காதற்கடிதங்களில் காதல் மிகக் குறைவாகவே உள்ளது. சமூக அக்கறையும் எதிர்காலக் கனவுகளும் எழுத்தின் நுட்பங்களும் தான் அதிகம் பேசப்படுகின்றன.

உலகின் துயரை தனதாக்கிக் கொண்ட கலைஞனுக்கு வாழ்வில் சிறுமகிழ்ச்சியைத் தருவதற்கு முன்வந்த அன்னாவும் குவாங்பிங்க்கும் தூய அன்பின் வடிவங்களே.

நாம் எழுத்தின் மகத்துவத்தை நினைவு கொள்ளும் போது இவர்களின் மகத்தான அன்பையும் இணைத்தே நினைவு கொள்ள வேண்டும்

•••

0Shares
0