விருப்பமான கவிதைகள்

எனக்கு விருப்பமான 7 கவிதைகள்

 **

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.
தேவதச்சன்

2

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்

மனுஷ்ய புத்திரன்

pநாம் ஏன் இப்படி

இருக்கிறோம்

சதா முணுமுணுத்துக்கொண்டு

எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு

எதையாவது சுத்தம் செய்துகொண்டு

யாரையாவது சபித்துக்கொண்டு

எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு

எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு

எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு

ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு

தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு

யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு

ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு

கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு 

நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு

நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு

கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு

மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு

பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு

புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு

சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு

எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு 

சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு

அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு

யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு

நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு

முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு

குடிக்கும்போது அழுதுகொண்டு

புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு

அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு

சிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு

பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு

எதையாவது தொலைத்துக்கொண்டு

எதையாவது தேடிக்கொண்டு 

தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு

தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு

யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு

யாரையாவது இணங்கச் செய்துகொண்டு

கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு

சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு

பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு

தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு

 கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு

போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு

எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு

தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு

மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு

நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு

பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு

யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு

உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு

மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு

யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு

பொது அறிவை வளர்த்துக்கொண்டு

எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு

சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு

நிழல்களுக்குப் பயந்துகொண்டு

எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு

உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு

எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு

தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு

அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு

புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு

திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு

வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு

நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு

 ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு

வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு

யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு

எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு

எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு

எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு

சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு

மன்னிக்க முடியாதவற்றை

மன்னித்துக்கொண்டு

நாம் ஏன்

இப்படி இருக்கிறோம்

p3

மரத்தில்

எஞ்சியிருக்கும்

கடைசி இலைக்கு

பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?

வாய்க்கும்.

உச்சிவெயிலில்

தரையில் ஒரு சிற்றெறும்பு

நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.

காற்றில் ஆடியபடி

தொடர்ச்சியாக

எறும்பின் பாதையில்

நிழலிட

அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.

ஆட்டத்தின் உச்சத்தில்

இலை

மரத்தை விட்டு அகலலாம்.

அப்போதும்,

ஓர் குடையாய்

எறும்பின் மேலேயே

விழ வாய்த்தால்,

தாய் வந்து

குட்டியை ஒளித்ததற்காக

கண்சிவக்க கோபிக்கும் வரை

அந்த இருப்பு தொடருமானால்,

அதுவே

பெருமகிழ்ச்சி.

– வீரன்குட்டி மலையாளம்.

தமிழில் : சித்தார்த்.

4

உடன்படுக்கை விதிகள்

சுகுமாரன்

pஇரட்டைக் கட்டிலில் கிடக்கும்
ஒற்றை நுரைமெத்தை நடுவில்
வரையப்பட்டிருக்கும் எல்லைக்கோடு
கண்ணுக்கு ஒருபோதும் புலப்படுவதில்லை
எனினும்
படுக்கையின் எல்லை விதிகள்
நாமறியாமல் நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன

உறக்கக் கடலின் இருளாழத்தில் துளாவிக்
கைகால்களோ உடலோ பெயர்ந்து
எல்லை தாண்டுகிறோம்.
உடனே
கடலோடியின் நீரியல் எச்சரிக்கையுடன்
அவரவர் எல்லைக்குப் புரண்டு துயில்கிறோம்

கடலோடிக்கு
நீர்வெளியின் எல்லைகள் தெரிவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் புலப்படுகின்றன.

காமத்தின் வானில் வேட்கையுடன் பறந்து
உடல்களைப் பகிர்ந்து
எல்லையைத் தாண்டுகிறோம்
உடனே
விமானியின் சாதுரியத்துடன்
அவரவர் எல்லையைப் புறக்கணித்துக் கூடுகிறோம்

விமானிக்கு
ஆகாய சுதந்திரத்தில் எல்லைகள் இயல்பாவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் மறக்கின்றன.

எனினும்
உடன்படுக்கை எல்லைகளில்
மீற முடியாத விதியொன்று –
ஈருடல் ஓருயிர் என்று பீற்றிக்கொண்டாலும்
ஒரே சிதையில் எரிக்கப்படவோ
ஒரே சவப்பெட்டியில் அடக்கப்படவோ முடியாது.

**

5

எலும்புப்பறி

மவோரி மூலம் : கெரி ஹல்ம் (நியூசிலாந்து) | தமிழில் : இளங்கோவன்            

 எங்கே உன் எலும்புகள்?
என் எலும்புகள் கடலில் கிடக்கின்றன.

எங்கே உன் எலும்புகள்?
அவை தொலைந்துபோன நிலங்களில்
திருடப்பட்டு, உழப்பட்டு புதைக்கப்பட்டன.

எங்கே உன் எலும்புகள்?
தென்புறத் தீவுகளில்
கண்டுபிடிக்கும் காற்றினால்
அறுத்தெறியப்பட்டன.

எங்கே உன் எலும்புகள்?
மொராக்கி, புராக்கானுய், அராகுரா,
ஒக்காரிட்டோ, முரிஹிக்கு, ராக்கியூரா…
என்று முணுமுணுக்கலாம்.

எங்கே உன் எலும்புகள்?
கனமாக என் இதயத்தில் கிடக்கின்றன.

எங்கே உன் எலும்புகள்?
காலப் பிரக்ஞையற்ற மனத்தில்
ஆடல் பாடல்களாக,
பழஞ்சொற்களாக அரங்கேறுகின்றன.

எங்கே உன் எலும்புகள்?
இதோ இங்கே என் மனவுறுதியில்,
நடக்கும் கால்களில் வலிமையில்,
இறுகும் முஷ்டியில்.
ஆனால்…

எங்கே உன் எலும்புகள்?
ஆ!… என் எலும்புகள்!
ஆளவந்த அந்நியர் உண்ண
ரொட்டிக்கு மாவாக்கப்பட்டன.

6

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

அவளைக் கல்லினுள்ளிருந்து

உயிர்ப்பிப்பது என்று பொருள்

அடிமுதல் முடிவரை காதலால் நீவி

சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்

கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை

சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற

வானம்பாடியாக மாற்றுவது

இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர

தோள் குனிந்து கொடுக்கும்

தளிர் அடர் மரமாக மாறுவதாகும்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

காற்றும் மழையும் நிறைந்த கடலில்

மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி

காலம் செலுத்துதல் என்று பொருள்

நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்

முளைத்த ஒரு மலர்ச்செடியை

யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்

கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

தன் தசைநார்களின் ஆறறல் முழுவதையும்

ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்

கைமாற்றம் செய்து கொள்வதாகும்

மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து

மற்றொரு வானம் கடந்து

மற்றொரு வீட்டிலுள்ள

காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்

தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

அவளுடைய பழமையான காயங்களிலிருந்து

சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க

அவளுக்கு உதவுவதாகும்

பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை

அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்

நான் ஒரு பெண்ணைக் காதலித்ததில்லை.

சச்சிதானந்தன் கவிதைகள். மலையாளத்திலிருந்து – தமிழில்; சிற்பி

7

கல்லொன்றுடன் உரையாடல் விஸ்வாவா ஷிம்போர்ஸ்கா

கல்லின் முன்கதவைத் தட்டுகிறேன்.
“நான்தான், உள்ளே வரவிடு.
உன்னுள் நுழையவேண்டும்,
சுற்றிப் பார்க்கவேண்டும்,
உன்னை சுவாசித்து நிரப்பிக்கொள்ளவேண்டும்.”

“திரும்பிப் போ” என்கிறது கல்.
“நான் இறுக்கி மூடப்பட்டுளேன்.
என்னைத் துண்டுகளாய் நொறுக்கினாலும்,
மூடியேயிருப்போம் நாங்களனைவரும்.
மணலாய் அரைக்கலாம் எங்களை நீ,
ஆயினும் உள்ளே அனுமதியோம் உன்னை”

கல்லின் முன்கதவைத் தட்டுகிறேன்.
“நான்தான், உள்ளே வரவிடு.
வந்துள்ளது ஆர்வமிகுதியால் மட்டுமே.
வாழ்க்கைதான் அதைத் தணிக்க முடியும்.
உனது மாளிகைக்குள் நடைபயில விரும்புகிறேன்,
பிறகு ஒரு இலையையோ நீர்த்துளியையோ கேட்கச் செல்வேன்.
எனக்கு அதிக நேரமில்லை.
எனது மரணத்துவம் உன்னைத் தீண்டவேண்டும்.”

“நான் கல்லாலாயிருக்கிறேன்” என்றது கல்,
“எனவே உணர்ச்சிகளைக் காட்டவியலாது.
திரும்பிப் போ.
சிரிப்பதற்கான தசைகள் என்னிடமில்லை.”

கல்லின் முன்கதவைத் தட்டுகிறேன்.
“நான்தான், உள்ளே வரவிடு.
உன்னுள் பெரும் காலி அரங்கங்கள் உள்ளன எனக் கேள்வி,
காணப்படாமல், வீணாகும் அழகுடன்,
ஒலியின்றி, யாருடைய காற்சப்தங்களையும் எதிரொலியாமல்.
ஒத்துக்கொள், அவற்றை நீ கூட அதிகம் அறிந்திரவில்லையென.

“பெரும், காலி, உண்மைதான்” என்றது கல்,
“ஆனால் அறைகளேதுமில்லை.
அழகியதாயிருக்கலாம், ஆனால் உனது
மலிவான ரசனைக்கேற்ப அல்ல.
என்னை உன்னால் அறிய முடியும், ஆனால் துளைத்தறிய இயலாது.
எனது மொத்தப் பரப்பனைத்தும் உன்னை நோக்கி,
எனது உட்புறங்கள் அனைத்தின் திசைவேறு.”

கல்லின் முன்கதவைத் தட்டுகிறேன்.
“நான்தான், உள்ளே வரவிடு.
கால காலமாய்த் தங்க விருப்பமில்லை
நான் மகிழ்ச்சியாய் இல்லாமலில்லை.
நான் வீடற்றிருக்கவில்லை.
எனது உலகம் திரும்பலுக்குத் தகுதியானது.
வெறுங்கையுடன் உள்நுழைந்து வெறுங்கையுடன் திரும்புவேன்.
அங்கிருந்தேனென்பதற்கு ஆதாரம்
எவரும் நம்பக்கூடிய சாத்தியமற்ற
எனது வார்த்தைகள் மட்டுமே.”

“உள் நுழையக்கூடாது நீ” என்கிறது கல்,
“பங்குபெறுதல் குறித்த புரிவில்லை உனக்கு.
வேறெந்தப் புரிவுங்கொண்டு உனது பங்குபெறுதற்ப் புரிவின்மையை நிரப்பவியலாது.
பார்வையென்பது சர்வதிருஷ்டியாய் எழுதல்கூடப்
பயனற்றது பங்குபெறுதல் குறித்த புரிவின்றிப்.
உள் நுழையக்கூடாது நீ, உன்னிடமிருப்பது புரிவு என்னவாயிருக்கவேண்டுமென்ற
புரிவு மட்டுமே,
அதன் விதை மட்டுமே, கற்பனை.”

கல்லின் முன்கதவைத் தட்டுகிறேன்.
“நான்தான், உள்ளே வரவிடு.
இரண்டாயிரம் நூற்றாண்டுகள் காத்திருக்கவியலாது,
உனது கூரைக்கடியில் என்னை வரவிடு.”

“என்னை நீ நம்பவில்லையெனில்.” என்றது கல்,
“இலையைக் கேட்டுப்பார், இதையே சொல்லும் அது.
ஒரு நீர்த்துளியைக் கேட்டுப்பார், இலை சொன்னதையே சொல்லும் அது.
இறுதியில், உன் தலைமயிரொன்றைக் கேட்டுப்பார்.
வெடித்துச் சிரிக்கிறேன், ஆம், சிரிப்பு, பெருஞ்சிரிப்பு,
எப்படிச் சிரிப்பதென்று எனக்குத் தெரியாவிட்டாலுங்கூட.”

கல்லின் முன்கதவைத் தட்டுகிறேன்.
“நான்தான், உள்ளே வரவிடு.”

“எனக்குக் கதவில்லை” என்றது கல்

ஆங்கிலம் வழி தமிழில்: சன்னாசி

***

0Shares
0