ஷெல் சில்வர்ஸ்டைன்


குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் மிக குறைவு. உலக அளவில் பிரசித்தி பெற்ற பல குழந்தைகளுக்கான படைப்புகள் இன்னமும் தமிழில் வெளியாகவில்லை. நான் லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம் நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு சொல்லப்படும் இயற்கை குறித்த கதைகளை கால்முளைத்த கதைகள் என்று தனித்த நூலாக வெளியிட்டிருக்கிறேன். ஏழு தலை நகரம், கிறுகிறுவானம் என்ற இரண்டு நாவல்களை குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறேன்.

எழுத்தறிவு இயக்கம் சார்பில் மக்கள் வாசிப்பிற்கான எளிய புத்தகங்களை உருவாக்கிய போது ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் The Story of a Mother கதையை தமிழாக்கம் செய்து தந்தேன். அது சிறிய வெளியீடாக கிராமப்புறங்களில் மிக அதிகம் வாசிக்கபட்டது. இந்த ஆண்டும் அக்கடா என்ற சிறுவர்களுக்கான நாவல் ஒன்றை வெளியிட இருக்கிறேன். காமிக்ஸ், கிராபிக் நாவல், தேவதை கதைகள், சிறுவர் கதைகள் என்று தேடிவாசிப்பதில் என் விருப்பம் பள்ளிவயதிலிருந்து அப்படியே நீள்கிறது.


உலகம் முழுவதும் சிறுவர்கள் வாசித்து மகிழ்ந்த சி.எஸ். லூயிஸின் நார்னியா என்ற சாசக நாவல் வரிசையோ, (The Chronicles of
Narnia
  )டோல்கினின் லார்டு ஆப் தி ரிங்ஸ் (The Lord of the Rings
  )நாவல்தொகுதிகளோ, இன்று மிக அதிகமாக வாசிக்கபடும் கிராபிக் நாவல் வகையின் உன்னதமான சாதனையான Kazuo Koike யின்  Lone Wolf and Cub  இருபத்தியெட்டு புத்தகங்களாக உள்ளது. அதில் ஒன்று கூட தமிழில் வெளியாகவில்லை. இருபது வருசங்களின் முன்புவரை ரஷ்யாவிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த சிறுவர்கள் நூல்கள் கூட எதுவும் மீள்பதிப்பு செய்யபடவில்லை.


பதிப்பகங்களின் சமீபத்தைய வளர்ச்சி உற்சாகம் தருவதாக இருந்தபோதும் குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்களை வெளியிடுவதில் இன்னமும் எவரும் முழுமையாக கவனம் கொள்ளவில்லை. ஆயிரத்தோரு அராபிய இரவுகள் தமிழில் முழுமையாக மொழியாக்கம் செய்யபட்ட போதும் அதன் ஒருங்கிணைந்த ஒரே தொகுப்பு இன்னமும் வெளியாகவில்லை. இப்படி சிறுவர் இலக்கியத்தின் பிரதான பகுதி தமிழுக்கு அறிமுகமாகவேயில்லை.


சிறுவர் இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர் வரிசை மிக நீண்டது. அதில் எனக்கு விருப்பமான சிலர் எப்போதுமிருக்கிறார்கள். ஷெல் சில்வர்ஸ்டைன் அதில் முக்கியமானவர். அமெரிக்காவை சேர்ந்த சில்வர்ஸ்டைன் ஒவியங்கள், பாடல்கள், குழந்தை கவிதைகள், கதைகள் என்று பன்முகமான இயங்கியவர். இவரது சிறார் நூல்கள் ஒவ்வொன்றும் பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்றிருக்கின்றன.

இவர் ஒரு கிதார் இசை கலைஞர் என்பதால் இவர் இசைத்து பாடிய சிறுவர் பாடல்கள் குழந்தைகள் மத்தியில் பிரபலமானவை. அதற்காக கிராமி விருது பெற்றிருக்கிறார்.

முப்பது மொழிகளில் ஷெல் சில்வெர்ஸ்டைன் புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தமிழில் நான் அறிந்தவரை அவரது ஒன்றிரண்டு கவிதைகளை தவிர வேறு எதுவும் வெளியானதில்லை. 1930ல் சிகாகோவில் பிறந்த சில்வெர்ஸ்டைன் சிறுவயதிலே கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். அதனால் வீட்டினுள் இருந்தபடியே ஒவியம் வரைவது கேலி சித்திரங்கள் தீட்டுவது தான் அவரது ஒரே பொழுதுபோக்கு.

இந்த ஆர்வம் நாளடைவில் இசையின் பக்கம் திரும்பியது. கிதார் இசைகலைஞராக விரும்பிய சில்வெர்ஸ்டைன் ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அவ்வப்போது அவர் எழுதிய வேடிக்கையான கவிதைகளை பாடுவதுண்டு. அதை அறிந்த ஒரு நண்பர் அந்த கவிதைகளை வெளியிடலாம் என்று வற்புறுத்தி சில்வெர்ஸ்டைனைஎழுத்தாளராக்கினார். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய இவர் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் சில வருச காலம் வசித்திருக்கிறார். பிளேபாய் இதழில் இவரது கேலிசித்திரங்கள் தொடர்ந்து வெளியாகின.

தனது கவிதைகள் பள்ளியில் ஆசிரியருக்கு தெரியாமல் திருட்டுதனமாக சாப்பிடும் சாக்லெட் போன்று ரகசியமான சுவை கொண்டவை என்று ஒரு நேர்காணலில் சில்வெர்ஸ்டைன் குறிப்பிடுகிறார். இவரது சிறார் கதைகளை வெளியிடுவதற்கு ஆரம்ப நாட்களில் பதிப்பாளர்கள் முன்வரவேயில்லை.

இவை பெரியவர்களுக்காக எழுதப்பட்டதாக இருப்பதாக அதை மறுத்தார்கள். சில்வெர்ஸ்டைன் பெரியவர்கள் யாவரும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் தானே என்று விவாதம் செய்த போதும் அவை எளிதாக ஏற்றுக் கொள்ளபடவில்லை. நீண்ட முயற்சியின் பிறகே இவரது புத்தகங்கள் வெளியாகின. 

இவரது கவிதைகள், பாடல்கள் மிக எளிமையானவை. குழந்தைகளின் இயல்பான பகடி செய்யும் தன்மையும் விசித்திரமான கனவுகளும் நிரம்பியவை. இந்த கவிதைகளில் வெளிப்படும் அர்த்தமற்ற தன்மை சிறப்பானது. அது ஒற்றை வரியில் குழந்தையின் மனதை வெளிப்படுத்திவிடக்கூடியது. அந்த எளிமையின் அடியில் புரிந்து கொள்ள முடியாத ஏக்கமும் அன்பும் நிரம்பியிருக்கும்.

The Giving Tree, Where
the Sidewalk Ends, A Light in the Attic, Falling Up : Poems and Drawings, Runny
Babbit : A Billy Sook, Missing Piece, Giraffe and a Half,
Don`t
Bump the Glump : And Other Fantasies
 போன்றவை அவரது முக்கியமான புத்தகங்கள்.

குழந்தைகளுக்காக இவர் வரைந்த கேலிசித்திரங்கள் மிக சிறப்பானவை. ஆரம்ப பாடபுத்தகங்கள். சிறார் கதைகள், இசைபாடல்கள் என்று இவரது பங்களிப்பு மிக பெரியது. ஷெல்பி அங்கிள் என்று குழந்தைகளால் கொண்டாடப்படும் ஆளுமையாக இருந்தார். இவரது கதைகள் நாடமாகவும் குழந்தைகளுக்கான படமாகவும் வெளியாகி உள்ளன.

இவரது பிரசித்தி பெற்ற கவிதை ஒன்றினை தமிழில் கவிஞர் அசதா மொழியாக்கம் செய்திருக்கிறார்.  

எப்போதும் கொடுக்கும் மரம்

ஷெல் சில்வர்ஸ்டைன். தமிழில் : அசதா


ஒரு காலத்தில் மரம் ஒன்று இருந்தது.

அது ஒரு சிறுவனை மிகவும் நேசித்தது.

தினமும் அவன் அந்த மரத்திடம் வருவான்.

இலைகளை சேகரிப்பான்.

அவற்றைக் கொண்டு ஒரு கிரீடம் செய்வான்.

அதை அணிந்துகொண்டு காட்டுக்கு அரசன் நானென ஆடுவான்.

மரத்தின் மீதேறி கிளைகளில் ஊஞ்சலாடுவான்

பழங்களைப் பறித்துத் தின்பான்

அவர்கள் இருவரும் ஒளிந்து விளையாடுவார்கள்

களைத்துப் போகும்போது மரத்தின் நிழலில் படுத்து அவன் உறங்குவான்

அந்தச் சிறுவனும் மரத்தை மிகவும் நேசித்தான்

மரம் மிக மகிழ்ச்சி கொண்டது.

காலம் கடந்தது

சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனான்

இப்போது அனேக நேரம் மரம் தனிமையில் நின்றது.

அப்போது ஒருநாள் சிறுவன் மரத்திடம் வந்தான்

மரம் அவனிடம் சொன்னது, ‘வா, வந்து என் மீது ஏறு, என் கிளைகளில் ஊஞ்சலாடு, என் பழங்களைப் பறித்து உண், என் நிழலில் விளையாடு, மகிழ்ச்சியாக இரு’.

‘உன் மீது ஏறி விளையாட நான் இன்னும் சிறு பையன் இல்லையே. நான் எனக்குத் தேவையானவற்றை வாங்கி விளையாட விரும்புகிறேன். எனக்குப் பணம் தேவை.’ என்றான் சிறுவன்.

‘ஆனால் என்னிடம் பணம் இல்லையே. என்னிடம் இலைகளும் பழங்களும் மட்டுமே இருக்கின்றன. என் பழங்களைப் பறித்துச் சென்று நகரத்தில் விற்றால் உனக்குப் பணம் கிடைக்கும். அதை வைத்து மகிழ்ச்சியாக இரு’.

சிறுவன் மரத்திலேறி பழங்களைப் பறித்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. மரம் வருத்தமடைந்தது.

ஒருநாள் சிறுவன் திரும்பவும் வந்தான்.மரம் மகிழ்ச்சியில் ஆடியது. அது சொன்னது
‘வா, வந்து என் மீது ஏறி என் கிளைகளில் ஊஞ்சலாடு, மகிழ்ச்சியாக இரு.’

‘மரங்களில் ஏறி விளையாட எனக்கு நேரமில்லை’ சிறுவன் சொன்னான். ‘என்னை கதகதப்பாக வைத்துக்கொள்ள எனக்கொரு வீடு வேண்டும். எனக்கு மனைவி வேண்டும், குழந்தைகள் வேண்டும் அதன்பொருட்டு எனக்கொரு வீடு தேவை. உன்னால் எனக்கொரு வீட்டைத்தர முடியுமா?’

‘என் கிளைகளை வெட்டி அவற்றைக் கொண்டு வீடொன்றைக் கட்டிக் கொள். நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.’

சிறுவன் மரத்தின் கிளைகளை வெட்டி வீடு கட்ட எடுத்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. திரும்ப அவன் வந்தபோது மகிழ்ச்சியில் மரத்திற்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

‘வா, வந்து விளையாடு’ மெல்ல முணுமுணுத்தது மரம்.

‘நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும், உன்னால் எனக்கொரு படகைத் தர முடியுமா?’ அவன் கேட்டான்.

‘என் நடு மரத்தை வெட்டி அதிலிருந்து படகொன்றை செய்துகொள், அதில் நீ நீண்ட தூரம் பயணம் செய்யலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்றது மரம்.

அதன்படியே அவன் நடு மரத்தை வெட்டி அதைக் கொண்டு படகொன்றைச் செய்து அதில் பயணம் செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது, ….ஆனால் உண்மையான மகிழ்ச்சி அல்ல அது.

மிக நீண்ட காலம் கழித்து சிறுவன் திரும்பி வந்தான். ‘மன்னிக்க வேண்டும், உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை-என்னிடம் பழங்கள் இல்லை’.

‘பழங்களைத் தின்னுமளவுக்கு என் பற்களுக்கு வலுவில்லை’ சிறுவன் சொன்னான்.

‘என் கிளைகளும் என்னைவிட்டுப் போய்விட்டன, அவற்றில் நீ ஊஞ்சலாட முடியாது.’

‘கிளைகளில் ஊஞ்சலாடும் வயதை நான் கடந்து விட்டேன்.’ என்றான் சிறுவன்.

‘என் நடு மரமும் போய்விட்டது, இனி என் மீது நீ ஏற முடியாது.’ மரம் சொன்னது.

‘நான் மிகவும் களைத்துவிட்டேன், என்னால் மரம் ஏற முடியாது.’ சிறுவன் சொன்னான்.

‘மன்னிக்க வேண்டும், உனக்கு எதையாவது கொடுக்கத்தான் விரும்புகிறேன், ஆனால் என்னிடம் எதுவும் மீதமில்லை.இப்போது நானொரு வெறும் மரத் திண்டு மட்டுமே, என்னை மன்னித்துவிடு.’ என்றது மரம்.

‘எனக்கு இப்போது பெரிதாக எதுவும் தேவையில்லை, அமர்ந்து ஓய்வெடுக்க அமைதியான ஓர் இடம், அவ்வளவுதான். நான்
மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்’ என்றான் சிறுவன்.

‘நல்லது,’ எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தன்னை நீட்டிக்கொண்டு மரம் சொன்னது, ‘வயதான அடிமரத் திண்டு அமர்ந்து இளைப்பாற உகந்தது. வா வந்து அமர்ந்து இளைப்பாறு.’

சிறுவன் அவ்வாறே செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

***

நன்றி. அசதா.

0Shares
0