அஞ்சலி

இயல் விருது வாங்குவதற்காக கனடாவிற்குச் சென்றிருந்த போது கவிஞர் செழியனைச் சந்தித்து உரையாடினேன். இலங்கையிலிருந்து தான் உயிர்தப்பிவந்த நிகழ்வை  வேடிக்கையான சம்பவத்தை நினைவுகூறுவது போல சிரிப்போடு விவரித்தார். கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. நாடகங்கள் குறித்து   நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
‘அரங்காடல்’  கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படும் தீவிர நாடக முயற்சி. மனவெளி கலைக் குழுவினர் இதை ஒருங்கிணைப்பு செய்து நடத்துகிறார்கள். அதில் செழியனின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கிறது
அவரது கவிதைநூல் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். நாங்கள் ஒரு நண்பரின் வீட்டிற்கு இரவு உணவு சாப்பிடப் போனோம். என் அருகே அமர்ந்தபடியே ஈழக் கவிதைகள் பற்றியும், புலம்பெயர் வாழ்வின் அவலங்கள் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது நேசமிக்க குரல். அதிலிருந்து நட்புணர்வு. தோழமை மறக்கமுடியாதது.
அவரது மரணச்செய்தி என்னைத் துயரம் கொள்ளச் செய்கிறது. கவிஞர் செழியனின் மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
0Shares
0