டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குனர், ஜெயகாந்தனின் நெருக்கமான தோழர், நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர், உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர், அவரது அனுபவச்சுவடுகள் என்ற நூலை சமீபமாக வாசித்தேன், கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கேஎஸ்ஸின் பள்ளி வாழ்க்கை துவங்கி பிலிப்பைன்ஸில் அவர் பணியாற்றிய காலம், அவரது நண்பர்கள், சந்திப்புகள், நினைவில் நிற்கும் ஆளுமைகள் எனப் பல்வேறு நிகழ்வுகளின் நினைவுத்தொகுப்பே இந்த நூல், இதன் தனிச்சிறப்பு தனது நினைவுகளை மட்டும் கேஎஸ் விவரிக்கவில்லை, அக்காலகட்டத்தில் இருந்த நம்பிக்கைகள், அறிமுகமான மனிதர்களின் தனித்தன்மைகள், பிலிப்பைன்ஸின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் எனத் துல்லியமாக, உணர்ச்சிபூர்வமாக, சுவாரஸ்யமாகத் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்,
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் என் கதையை வாசித்த போது இப்படியான ஒரு பிரமிப்பை அடைந்திருக்கிறேன், அதற்கு நிகராகத் தனது வாழ்க்கையைச் சுவைபட எழுதியிருக்கிறார் கேஎஸ், அவரது நீண்ட இலக்கியவாசிப்பும், வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளும் அவரை எந்த அளவு உருமாறியிருக்கின்றன, சாதிக்க வைத்திருக்கின்றன என்பதற்கு இந்த நூலில் பல எடுத்துகாட்டுகள் காணப்படுகின்றன, அவை வாசிப்பவருக்குப் புத்துணர்வும் உத்வேகமும் தரக்கூடியவை,
கேஎஸ் தனது அத்தையைப் பற்றிக் குறிப்பிடும் நினைவு முக்கியமானது, ஒற்றை ஆளாக வாழ்ந்துவந்த அத்தையின் வீட்டிற்கு ஒரு நாள் திருடன் திருட வருகிறான், அத்தை வீட்டிற்குள் நுழைந்த திருடனை பார்த்து பயந்து அலறியபடியே கதவை ஒங்கி சாத்தவே, அவனது கட்டைவிரல் கதவிடுக்கில் மாட்டிக் கொள்கிறது, அதை எடுக்கமுடியாமல் அவன் கத்துகிறான், விரல் நசுங்கிப்போய்க் கட்டை விரலை அகற்றும்படியாக மாறுகிறது, தன்னால் தானே திருடனின் விரல் துண்டிக்கபட்டது என மனம் வருந்திய அத்தை அதன் பிந்திய நாட்களில் தனது சாப்பாட்டில் ஒரு பகுதியை திருடனுக்குத் தினசரி கொடுத்து வந்திருக்கிறார்,
வாசிக்கையில் அத்தையின் உருவம் நம் கண் முன்னே தோன்றி மறைகிறது, அவரது குரலை நாமே அருகில் இருந்து கேட்கமுடிவது போல எழுதியிருப்பது கேஎஸ்ஸின் வெற்றி,
இது போலவே கல்லூரி படிப்புக்கு வழிகாட்டிய ரங்க ஐயங்கார், ஆங்கிலம் தெரியாத கண்ணுச்சாமி, வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் கந்தசாமி, நீதியரசர் சந்துருவின் குடும்பம் எனப் பலவகையான மகத்தான மனிதர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்
பிலிப்பைன்ஸில் அவரோடு பணியாற்றிய ப்ரயன் என்பவரின் இறுதிசடங்கு பற்றிய நிகழவும், எரிமலை கொந்தளிக்கும் போது அதை அருகில் பார்க்க போன சாகசப்பயணமும், வேரித்தாஸ் வானொலியில் பணியாற்றிய ரபி பெர்னான்டஸின் தந்தை சாமி பற்றிய நினைவுக்குறிப்புகளும் ஜெயகாந்தன் அசோகமித்ரன், சா. கந்தசாமி. லா.ச.ரா என இலக்கிய ஆளுமைகளுடன் பழகிய நட்பை விவரிப்பது எனத் தனது வாழ்வனுபவத்தை மிகச் சுவாரஸ்யமாகவும் நேர்த்தியாகவும் பதினேழு கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்,
தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தின் மேன்மைக்காகப் பாடுபட்டுவரும் கேஎஸ் போன்ற ஆளுமைகளைக் கொண்டாட வேண்டியது நமது கடமை, இந்த நூல் அதற்கான சாளரமாக விளங்குகிறது
••