நான் என்னிலிருந்து வெளியே நீந்திப் போனேன்
என்னைக் கூப்பிடாதே
நீயும் உன்னிலிருந்து வெளியே நீந்திப் போ
நாம் நீந்திப் போய்விடுவோம், நமது உடல்களை விட்டு
கரையில்
ஒரு ஜோடி கடற்கரைச் செருப்புகள் போல

அன்னா ஸ்விர் (Anna Swir) போலந்தின் முக்கியக் கவிஞர். இவரது தந்தை ஒரு ஓவியர். ஆகவே குழந்தைப் பருவம் முழுவதும் ஒவியக்கூடத்திலே கழிந்தது. கல்லூரி படிப்பை முடித்த அன்னா சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றியிருக்கிறார். கவிதைகளுடன் குழந்தைகளுக்கான நாடகங்களும் எழுதியிருக்கிறார். நோபல் பரிசு பெற்ற கவிஞரான செஸ்வாஃப் மிவோஸ் இவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

தன்னிலிருந்து ஒருவர் வெளியேறி நீந்துவதைப் பற்றிப் பேசுகிறார் அன்னா.
பரவசமான தருணங்களில் நாம் இப்படி உணருகிறோம். அல்லது உச்சபட்ச துயரத்தில் ஒருவர் இவ்வாறு தன்னிலிருந்து நீந்தி வெளியேறுகிறார். உச்ச இன்பமோ துன்பமோ நம்மிடமிருந்து நம்மை விடுவிக்கிறது. இதில் நீந்துதல் என்பது அழகான பிரயோகம். நீயும் உன்னிலிருந்து வெளியே நீந்தி வா என்று அழைக்கிறார். அவர்கள் உடல்களை விட்டு நீந்திப் போக முயல்கிறார்கள். கரையில் விடப்பட்ட ஒரு ஜோடி செருப்புகள் போல என்ற இறுதி வரி கவிதையைச் சட்டென நிகழ்காலத்தினுள் பதிய வைக்கிறது.
இவரது பல்வேறு கவிதைகளில் உடல் முக்கியமான பொருள். உடலுடன் உரையாடுகிறார். உடலிருந்து வெளியேறி நீந்துகிறார். உடலை மலராக்குகிறார். நகுலன் கவிதைகளில் இது போன்ற நிலையை எழுதியிருக்கிறார்
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
என்றொரு கவிதையை நகுலன் எழுதியிருக்கிறார். இதே அனுபவத்தின் இன்னொரு நிலையை நாம் அன்னா ஸ்வேரிடம் காணமுடிகிறது
துயரத்தை ஒரு எழுதுகோலாக மாற்றியிருக்கிறார் அன்னா. அது குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார்
••
எனது துயரம்
எனக்குப் பயன்படுகிறது
அது எனக்கு முன்னுரிமை தருகிறது
அடுத்தவர்களின் துயரத்தை எழுதுவதற்கு
எனது துயரம் ஒரு பென்சில்
அதைக் கொண்டு நான் எழுதுகிறேன்
••
இரண்டு உருளைக்கிழங்குகள் வைத்திருந்தேன்
ஒரு பெண் என்னிடம் வந்தாள்
இரண்டு உருளைக்கிழங்குகளை அவள் வாங்க விரும்பினாள்
அவளுக்குக் குழந்தைகள் இருந்தன
நான் அவளுக்கு இரண்டு உருளைக்கிழங்குகளைத் தரவில்லை
நான் மறைத்து வைத்தேன் இரண்டு உருளைக்கிழங்குகளை
எனக்கு ஒரு அம்மா இருந்தாள்
••
கவிஞர் சமயவேல் உலகின் மிகச்சிறந்த கவிஞர்களைத் தேடி வாசித்து அவர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். இது போன்ற புதுக்குரல்களின் வரவு நவீன தமிழ் கவிதைவெளியை செழுமைப்படுத்தும் என்பதே நிஜம்.
அன்னா ஸ்விர் கவிதைகள் அவரது மொழிபெயர்ப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியுள்ளன. கவிஞர் சமயவேலின் மொழியாக்கச் செயல்பாடு மிகுந்த பாராட்டிற்குரியது.
••