கதையின் வெளிச்சம்.

திருச்சியை சேர்ந்த மீ. அ. மகிழ்நிலா எட்டாம் வகுப்பு பயிலுகிறார். எனது ஏழு தலை நகரம் சிறார் நாவலுக்கு மகிழ்நிலா எழுதியுள்ள விமர்சனம்

•••

அக்கடா, கிறு கிறு வானம், ஏழு தலை நகரம் போன்ற நாவல்களையும் எழுதத் தெரிந்த புலி, தலை இல்லாத பையன்  போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். இவற்றுள் ஏழு தலை நகரம் என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்தது.

ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் எனக்கு இந்தக்  கதை என் நண்பர்களின் ஞாபகத்தை ஏற்படுத்தியது.

இக்கதையில் தனது நண்பனான பிகாவை காப்பாற்ற அசிதன் எடுக்கும் முயற்சிகள் நட்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் பிகாவை காப்பாற்ற மியோ போராடுவது அவன் கண்ணாடிகார தெருவாசிகளிடம் கொண்டிருந்த நன்றி உணர்வை காட்டுகிறது.பார்சிமின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தாலும் அவன் ஊர்காரர்களின் அறிவுரைகளுக்குச் செவிசாய்த்திருந்தால் அந்த நிலை அவனுக்கு ஏற்பட்டிருக்காது. அவனது கதையோ ஆணவம் தலைக்கேறினால் என்ன ஆகும் என்பதை எடுத்துரைக்கிறது.

மானீ, அசிதன் மீதும் பிகா மீதும் கொண்ட நட்பு மனிதன் அல்லாத உயிர்களுக்கும் மனிதர்களைப் போலவே உணர்வுகள் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

வீரா என்ற கிளி தாத்தா மீது கொண்ட பாசம் இதையே காட்டுகிறது. ஒரே ஒரு கதையின் மூலம் இத்தனை கருத்துகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியுமானால் அந்தக் கதை சொல்லிகள் கூறியதைப் போல கதைகள் உண்மையிலேயே வெளிச்சத்தை உண்டாக்குகின்றன.

எப்படி ஏழு தலை நகரத்தில் அந்த வெளிச்சத்தை எந்த இருளாலும் ஒன்றும் செய்ய இயலவில்லையோ அதே போல இந்தக் கதையினால் என் மனதிற்குள் உண்டான வெளிச்சத்தை எந்த இருளாலும் எதுவும் செய்ய முடியாது. காற்றிலிருந்து வேண்டிய குரலை வடித்துக்கொள்ளலாம் என்று தாத்தா கூறியபோது அசிதனின் வியப்பை விட பல மடங்கு நான் வியந்து போனேன்.

மாயாஜால கதைகளில் அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்ட எனக்கு “ஏழு தலை நகரம் ” என்ற மிகப்பெரிய மாயாஜால உலகத்திற்குள் மூழ்கி போகும் வாய்ப்பை அளித்தது

0Shares
0