.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது இலங்கையின் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் குறுநில மன்னர்களைப் போல மக்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள். சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.. அப்படிப்பட்ட ஒருவரின் கதையைத் தான் Elephant Walk திரைப்படம் விவரிக்கிறது.

படம் ஜான் வைல் என்ற தேயிலைத் தோட்ட உரிமையாளர் இங்கிலாந்திற்கு வருவதில் துவங்குகிறது. அங்கே ரூத் என்ற வாடகை நூலகத்தினை நடத்தி வரும் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் வைல்.
ரூத்திற்கு இலங்கையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகவே அவள் கனவுகளுடன் புதுவாழ்க்கையைத் துவங்க இலங்கை புறப்படுகிறாள். தேனிலவு முடிந்து அவர்கள் இலங்கையில் சென்று இறங்குகிறார்கள்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தால் அவர்களை வரவேற்க கார் காத்திருக்கிறது. மலைப்பாதையில் நீண்ட பயணம். இயற்கையின் சொர்க்கமாகத் திகழும் இலங்கையினுள் அவர்கள் பயணிக்கிறார்கள். கண்டியை நோக்கி அந்தப் பயணத்தின் ஒரு இடத்தில் காட்டு யானை ஒன்று குறுக்கே வருகிறது. ரூத் பயந்துவிடுகிறாள். ஆனால் ஜான் துப்பாக்கியால் சுட்டு யானையை விரட்டியடிக்கிறான். இது போன்ற மூர்க்க விலங்குகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும். ஆனால் தேசத்தின் அடையாளம் என அதை அரசு அனுமதிக்காது என்று கோபமாகச் சொல்கிறான். ஜானின் கோபத்தைக் கண்டு ரூத் பயந்து போய்விடுகிறாள்.
பிரம்மாண்டமான மாளிகையாக உருவாக்கப்பட்டுள்ள தனது எலிஃபண்ட் வாக் பங்களாவுக்கு மனைவியை அழைத்துச் செல்கிறான். அது யானை வலசை வரும் பாதையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீட்டில் அப்புஹாமி என்ற பொறுப்பாளர் அறிமுகமாகிறார். அப்புசாமி தான் அப்புஹாமியாகிவிட்டார் என்று தோன்றுகிறது. அவரது உடை மற்றும் ஒப்பனைகள் அவரைத் தமிழராக அடையாளம் காட்டுகிறது. படத்தின் பல காட்சியில் வேலையாட்கள் தமிழ் பேசுகிறார்கள். தேயிலை பறிப்பவர்களுடன் தமிழில் தான் கங்காணி உரையாடுகிறான்.
எலிபண்ட் வாக் என்ற மாளிகை ஒரு அடையாளம். அது பிரிட்டிஷ் அதிகாரத்தின் குறியீடு. அந்த மாளிகையில் அந்த மலையகப்பகுதியில் உள்ள வெள்ளைக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். மது அருந்துகிறார்கள். ஒன்றாக விளையாடுகிறார்கள். அந்த வீடு ஒரு உல்லாச விடுதி போலவே செயல்படுகிறது
ஒரு காட்சியில் ரூத் அந்த வீட்டின் பிரம்மாண்ட சமையலறையைப் பார்வையிடுகிறாள். அதில் தான் எத்தனை விதமான உணவு வகைகள். சேமிப்பு அறையில் விதவிதமான பொருட்கள், மதுவகைகள்.

ரூத்திற்கு அந்த வீடு கிள போலச் செயல்படுவது பிடிக்கவில்லை. அதை மாற்ற முயல்கிறாள். ஆனால் ஜான் வைல் அதை விரும்பவில்லை. அவன் மனைவியைக் கோவித்துக் கொள்கிறான். வீட்டு விவகாரம் எதிலும் அவள் தலையிடக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிடுகிறான். இதில் மனமுடைந்து ரூத் கண்ணீர் விடுகிறாள்.
அந்த வீட்டின் நிர்வாகப் பொறுப்பு முழுமையாக அப்புஹாமி வசமிருக்கிறது. அவர் அந்த வீட்டில் ஒரு அறைக்குள் மட்டும் ரூத்தை அனுமதிப்பதில்லை. அது வைலின் தந்தையின் அறை. எப்போதும் அது பூட்டப்பட்டேயிருக்கிறது. அதற்குள் அப்புஹாமி ஒருவர் மட்டுமே போய் வருகிறார். உள்ளே என்ன இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள ரூத் முயல்கிறாள்.
இதற்கிடையில் வைலின் தாய் இலங்கையில் வசிக்க விரும்பவில்லை என்றும் அவள் பிரசவத்தில் இறந்து போனாள் என்பதையும் ரூத் கண்டறிகிறாள்.
அந்த மாளிகையின் ஒரு பக்கம் ஜான் வைலின் தந்தை டாம் வைலின் கல்லறை இருக்கிறது. அதை அப்புஹாமி பராமரிக்கிறார். இன்றும் டாம் வைலிற்குப் பிடித்தமான சுருட்டு, பிடித்தமான மதுவகைகள் வாங்கப்படுகின்றன.
டாம் வைல் மறைந்துவிட்ட போதும் அவரது அதிகாரம் மறையவில்லை. அவர் தான் இன்றும் அந்த வீட்டினை ஆட்சி செய்கிறார் என்பதை ரூத் நன்றாக உணர்ந்து கொள்கிறாள். அவளால் அதை ஏற்க முடியவில்லை. புதிய மாற்றங்களை உருவாக்க முனைந்து தோற்றுப்போகிறாள்.

இதற்கிடையில் விளையாட்டு ஒன்றின் போது ஜான் கால் முறிவு கொள்கிறான்
சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை ஜான் கோவித்துக் கொள்கிறான். அவன் அப்படித்தான். அந்தக் கோபம் தந்தையிடமிருந்து உருவானது என்கிறார் டாக்டர். ரூத்திற்கு டாம் வைல் மீதான எண்ணம் மேலும் மோசமடைகிறது
இதற்கிடையில் அந்தத் தேயிலை தோட்டத்தில் வேலைசெய்யும் டிக் கார்வருடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறாள். அவன் தன்னோடு லண்டனுக்கு வந்துவிடும்படி அவளை அழைக்கிறான். ஆனால் ஜானை விட்டு விலக அவள் விரும்பவில்லை. ஆனாலும் ஜானின் மூர்க்கத்தைத் தாங்க முடியாமல் ஒருந நாள் அவனை விட்டு விலகி டிக் கார்வருடன் செல்ல முடிவு எடுக்கிறாள்.

இந்த நிலையில் எதிர்பாராமல் காலரா மலையகத்தைத் தாக்குகிறது. நிறையப் பேர் இறந்து போகிறார்கள். குடியிருப்புகள் காலியாகின்றன. மருத்துவச் சிகிச்சைகளுக்கான உதவிகளை ஜான் முன்னின்று செய்கிறான். ரூத் தானும் ஒரு நிவாரணப் பணியாளராகச் செயல்படுகிறாள். முடிவில் காலரா தொற்றுக் குறைகிறது.
இந்த நேரம் எதிர்பாராதபடி யானைகளின் தாக்குதல் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன. அவர்கள் என்னவானார்கள் என்பதைப் படத்தின் இறுதிப்பகுதி விவரிக்கிறது
இலங்கையில் படமாக்கியிருக்கிறார்கள். மலையக வாழ்க்கையைப் பிரிட்டிஷ் கண்ணோட்டத்தில் படம் விவரிக்கிறது. அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் கஷ்டங்கள் எதுவும் படத்தில் இல்லை. ஒரு காட்சியில் தோட்ட தொழிலாளர்கள் ஒன்றாக நடமாடுகிறார்கள்.. பரிசு பெறுகிறார்கள். படம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் காட்சிகளை முதன்மைப்படுத்தியிருக்கிறது
டிக் கார்வரை எதிர்பாராமல் ரூத் முத்தமிடும் காட்சியும் வீட்டில் ஒன்று கூடிக் குடிப்பவர்களை ரூத் துரத்தியடிக்கும் காட்சியும், சிறப்பானவை. எலிசபெத் டெய்லர் ரூத்தாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜான் தேயிலைத் தோட்டத்தை நிர்வகிப்பதிலும், இரவில் தனது நண்பர்களுடன் குடித்துக் கொண்டாடுவதிலும் முனைப்பாக இருக்கிறான். ஆகவே ரூத் தனிமையை அதிகம் உணருகிறாள். அங்கே அவளைத் தவிர வேறு வெள்ளைக்காரப் பெண் கிடையாது. ஜானின் நண்பர்கள் பலரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சிலரது குடும்பம் இங்கிலாந்தில் இருக்கிறது. ஆகவே தானும் தோட்டப்பணிகளை நிர்வாகம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறாள். அவளால் கணவனைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
டாம் வைலின் அதிகாரம் படத்தின் இறுதியில் நிறைவு பெறுகிறது.

வழக்கமான ஒரு கதையைப் புதிய சூழலில் படமாக்கும்போது அது பார்வையாளர்களுக்குப் பிடித்தமானதாக அமையும் என்ற ஒரே நோக்கம் தான் இது போன்ற படங்கள் உருவாகக் காரணம்.
இந்தியாவில் படமாக்கப்பட்ட ஆங்கிலப் படங்களைப் போலவே இலங்கையில் படமாக்கப்பட்ட இந்தப் படமும் வெறும் பின்புலமாக மட்டுமே தேசத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. படத்தில் வரும் எலிபெண்ட் வாக் மாளிகை ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட செட். முக்கியக் காட்சிகள் யாவும் அதற்குள் தான் நடைபெறுகின்றன.
ஹாலிவுட் சினிமா அன்றும் இன்றும் தனது வணிக நோக்கத்திற்காக மட்டுமே எந்தத் தேசத்தையும் கதைக்களமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது Out of Africa படம் நினைவிற்கு வந்து போனது. அது Karen Blixen நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மிகச்சிறந்த படம்.
இது போலவே கரேன் திருமணம் நிச்சயம் செய்து கொண்டு ஆப்ரிக்கா செல்கிறாள்., அங்கே ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப்பினுள் வருங்காலக் கணவனைத் தேடுகிறாள். அவசரமாக அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். காபி தோட்டம் ஒன்றை உருவாக்க முனைகிறார்கள். அவளது பணத்தை ஊதாரிதனமாகச் செலவு செய்யும் கணவன் காபி தோட்டத்தை உருவாக்குவதை விடவும் வேட்டையில் அதிக ஈடுபாடு காட்டுகிறான். அவனிடமிருந்து பால்வினை நோய் அவளைத் தொற்றிக் கொள்கிறது. மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள். புதிய தோழமை கிடைக்கிறது. அவளது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைப் படம் அழகாக விவரிக்கிறது
ரூத் மற்றும் கரேன் இருவரும் ஒன்று போலக் கதாபாத்திரங்களே. ஆனால் அவர்களைக் கையாண்ட விதமும் கதையில் அவர்கள் ஆளுமை வெளிப்பட்ட விதமும் மாறுபாடானது. ரூத் கதையில் இல்லாத உண்மை கரேனிடம் இருக்கிறது. அது தான் Out of Africa படத்தைச் சிறப்பாக மாற்றுகிறது.
***