இரண்டு நாட்களின் முன்பாக மெக்சிகோவில் இருந்து Carlos Solares என்ற எழுத்தாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் வெளியான எனது சிறுகதையான ராமசாமிகள் வம்ச சரித்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததுஎன்றுவியந்துபாராட்டியிருந்தார்.அத்துடன் அக்கதையை ஸ்பானிய மொழியில் வெளியிடுவதற்கான அனுமதி கேட்டிருந்தார்.
பெங்குவின் இந்தியா The Tenth Rasa: An Anthology of Indian Nonsenseஎன்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் எனது ராமசாமிகள் வம்ச சரித்திரம் சிறுகதை இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் லதா ராமகிருஷ்ணன்
என் சிறுகதையோடு எம்.டி. முத்துகுமாரசாமியின் சிறுகதை ஒன்றும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. மைக்கேல் ஹைமன் தொகுத்துள்ள இப் புத்தகம் இந்திய இலக்கியத்தில் மரபாக தொடர்ந்து வரும் அபத்த எழுத்துவகையை அடையாளப்படுத்துகிறது. தமிழில் சிறுவர்கள் பாடல்களில் அர்த்தமற்றசொற்கள்ஒன்றிணைந்து சப்தரீதீயான ஒரு ஒன்றிணைப்பைஉருவாக்கி பாடுபவரை மகிழ்விக்கின்றன. சிறுவயதில் இப்படியான பாடல் ஒன்றைக் கேட்டிருக்கிறேன்.
ஆக்குபாக்கு வெற்றிலை பாக்கு டாமு டூமு டம்.
டம்மைத் தூக்கி மேலே போட்டால் செட்டியார் வீட்டு நண்டு
நண்டைத் தூக்கி மேல போட்டால் நாக ரத்தினப் பாம்பு
பாம்பைத் தூக்கி மேலே போட்டால் பஞ்ச வர்ணக்கிளி
கிளியைத் தூக்கி மேல போட்டால் கிருஷ்ணனோட கொண்டை
என்று பாடி விளையாடுவார்கள். இது போன்ற விளையாட்டுப் பாடல்கள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது.
இது போன்ற அபத்த இலக்கியவகைமையை அறிமுகப்படுத்துவதே இந்த தொகுப்பின் நோக்கம். மரபான பாடல்களுடன் இந்திய மொழிகளில் சமகால எழுத்தில் பகடியாக எழுதப்பட்ட சிறுகதைகள், கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.
குஷ்வந்த்சிங் இந்தத் தொகுப்பினை மிகவும் பாராட்டி விமர்சனம் எழுதியிருக்கிறார். நியூயார்க்கர் உள்ளிட்ட அமெரிக்க இதழ்கள் மிகவும் பாராட்டியுள்ளன. அமெரிக்கப் பல்கலை கழக பேராசிரியரான மைக்கேல் ஹைமன் நான்கு ஆண்டுகாலம் இதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து நிறைய வாசித்திருக்கிறார். அவரோடு சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது தமிழின் சிறுவர்பாடல்கள் குறித்து அவர் அறிந்து வைத்துள்ள தகவல்கள் வியப்பளிப்பவையாக இருந்தன.
**
