இடக்கை தாளகதியில் ஒரு வாசிப்பு – பெஷாரா
சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இடக்கை’’ என்னும் நாவல் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. வாழ்க்கையின் உள்ளோடும் அவலங்களின் சாரம் தொட்டுச் செல்கிறது நாவல். மற்றும் தேடல்தான் நாவலின் மையக் கரு. ஆம், சில கதாபாத்திரங்களின் மனம், கடந்த காலத்தில் நழுவ விட்ட, வாழும் தருணங்கள் தேடி நினைவலைகளில் அலைகின்றது. பிரிந்த குடும்பத்துடன் ஒன்று கூட விழையும் முயற்சிகளாக தேடல். ஞானிகளின் தரிசனத்தில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள பயணப்படும் தேடல். கருவூல ரகசியம் கண்டடையத் தேடல். பசிக்காக உணவு வேண்டி திருடும் வழிமுறை கொண்ட தேடல். பிறரை ஏமாற்றி தன்வசம் பொருள் கொள்ள புது யுக்திகளின் தேடல். மனதின் ஆழத்தில் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள முயலும் தேடல். இப்படிப் பலவகையான தேடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த நாவலில், சிதறிய முத்துக்கள்போல் வரும் சம்பவங்களை நாவலாசிரியர் பின்னிப் பிணைத்திருக்கும் விதம் ஒரு புதிய வாசிப்பைத் தருகின்றது. முப்பத்தேழாம் அத்யாயத்தில் ஜோயா என்னும் கிராமத்தில் காற்றில் பறவைகள்போல் பறந்து வரும் நட்சத்திரங்களாய், மிதக்க விடப்படுகின்றன அன்பின் சுடரொளி தீபங்கள். இவை நாற்பதாவது அத்யாயத்தில் சம்பு என்னும் புது பணக்கார வணிகனின் கப்பல் பயணிக்கும் திசையில், பறவைகள்போல் பறந்து வரும் நட்சத்திரங்களாய் கடல் நீரின் மீது படிகின்றன; முப்பத்தெட்டாவது அத்யாயத்தில் வேசிப் பெண்ணான குலாபி, ஓவியன் நியோகியுடன் ஓடிப்போகிறாள். கடலோடியுடன் கொண்ட உறவில் அவள் முதுகின் மீது வரிகள் படர்ந்திருப்பதாக ஓர் காட்சி. பின்னால் நாவலின் நாற்பத்தியொன்றாவது அத்யாயத்தில் மதுராவில் நடக்கும் கலவரத்தின்போது மிகவும் மோசமான முறையில் இழிநிலையில் கொல்லப்படும் நாற்பது வயது மதிக்கத்தக்க யாரோ ஒரு அழகான பெண் ஒருத்தியின் முதுகில் காணப்படும் வரிகள் குலாபியை நினைவூட்டுகின்றன. இதுபோல் முழு வாசிப்பிலும் தொய்வில்லா சங்கிலித் தொடராக கதைகளை சம்பவங்களை ஆங்காங்கே கோர்த்துப் படிக்க நேர்வது நாவலை சுவாரசியமாக்குகிறது.
உள் கதைகளில் சில கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களும், வர்ணனைகளும், விவரங்களை விளக்கும் தொனியும் ஓர் நீண்ட கவிதையை படிக்கும் பிரமிப்பை ஏற்படுத்துவது இந் நாவலின் சிறப்பம்சம் எனக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு வார்த்தைகள் எளிமையாகவும் இயல்பாகவும் கவிதை நடையில் வெளிப்படுகின்றன. (உ-ம்.) அனார் என்னும் தாதிப் பெண்ணுக்கும் வருங்கால மன்னனான ஒளரங்கசீப்புக்கும் இடையில் நடக்கும் பேச்சு; மாபெரும் சூஃபி ஞானியுடன் மன்னன் ஒளரங்கசீப்பின் உரையாடல்; சுடரொளி தீபத்தின் விளக்கம் எனப் பல இடங்களில் கவிதையாய் மிளிர்கின்றது கதை.
தர்மேயு காலா சிறையில் அடைக்கப்பட்ட ஓர் கைதி. அவனின் மனநிலை வாயிலாக வலக்கை புனிதமான வேலைகளுக்காகவும், இடக்கை என்பது கழிவுகளை சுத்தப்படுத்தவும் மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவும் கூறப்பட்டுள்ளது. இடக்கை பகுதியில்தான் இதயத்தின் இயக்கம் உள்ளது. இதயத் துடிப்பு நின்று போனால் உடல் சடலமாக உருமாறும். முற்றிலுமாக ஓய்வு கொள்ளும் தருணம் வரும்போது தனக்கே உரித்தான சங்கேத மொழியில் இதயம் மனித மனதில் செய்தியைப் பதிவு செய்து விடுகிறது. அரசனானாலும் ஆண்டியானாலும் இயற்கை மரணத்தின் கணம் நெருங்கும்பொழுது அதன் உணர்விலிருந்து தப்பிக்க முடியாது.
மனித குணாதிசயத்தின் இயல்பென இங்கும் மரணத்தின் நுழைவாயிலில் மன்னன் ஒளரங்கசீப் அடியெடுத்து வைத்த கணம் முதல் மன வானில் அவன் செய்த தவறுகள் முன்னிலையாக தொடர்ந்து பவனி வரத் துவங்குகின்றன. முரட்டு சுபாவத்தாலும் சாமர்த்தியத்துடனும் தந்திரமான வழிமுறைகளைக் கையாண்டும் அசாத்தியமான துணிச்சலுடன் அரசைக் கைப்பற்றி அதிகாரத்துடன் வாழ்ந்த மன்னன், நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவும் நிலையிலும் தன்னைப் பேரரசனாகவே தக்க வைத்துக்கொள்ளும் மன வலிமையுடன் நாவல் துவங்குகிறது. தான் மிகவும் கொடூரமான முடிவுகள் எடுத்த கொடுமைக்காரனாக இறுதிக் காலத்தில் ஒளரங்கசீப் தன்னைத் தானே சித்தரித்துக் கொள்வதாக அமைகிறது.
அஜ்யா பேகம் என்னும் ஹிஜ்டா வேலைக்காரப் பெண்ணிடம் மன்னன் ஒளரங்கசீப் தன் மனதைப் பகிர்ந்து கொள்ளும்போது மிகவும் கனிவான ஓர் சாதாரண மனிதனாக காணப்படுகிறான். பிள்ளைகளை நம்பி அரியணையை ஒப்படைக்க விரும்பாத மனம். ஆனால் தன்னிடம் மிகுந்த விசுவாசத்துடன் இருந்த அஜ்யா பேகத்திடம் மிகப் பெரிய பொறுப்பு ஒன்றை ஒப்படைக்கிறார். ஒரு சமயம் பிச்சைக்காரன்போல் எளிய தோற்றத்தில் குல்லா இன்றி மசூதிக்கு தொழுகச் சென்றபோது, தன் குல்லாவை பரிவுடன் இவருக்களித்த மனிதர் முன்பின் அறிமுகம் இல்லாதவர். ஆயினும், ஒளரங்கசீப் நன்றி மறவாமல், தன் கையால் பின்னப்பட்ட குல்லாவை சில பொற்காசுகளுடன் அவரைத் தேடிக் கண்டறிந்து ஒப்படைக்கும் வேலையை அஜ்யா பேகத்திடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கின்றார். தன் உயிலில் அவளைப்பற்றிய குறிப்பு எழுதுகிறார். தாயன்புடன் தன்னை கவனித்துக் கொண்ட சகோதரியாக அவளை விளிக்கின்றார். முதுமையும் நோயும் இயலாமையுமானபின் ஓர் சாதாரண பணிப்பெண்ணிடம் அன்பால் தன்னைப் பிணைத்துக் கொள்ளும்போது உண்மையான மனிதத் தன்மை அவரிடம் இருந்து வெளிப்படுகிறது.
ராஜ விசுவாஸத்திற்கு அஜ்யா பேகம் மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறாள். எவ்வளவுதான் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டாலும் தூக்குக் கயிற்றில் மரணத்தை முத்தமிடும் கணம் வரைக்கும் தான் அரசனுக்குக் கொடுத்த வாக்கை தன்னுடனேயே இறந்துபோகச் செய்யும் மன வலிமை உடையவளாக இருக்கிறாள். தாதிப் பெண் அனார், ஒளரங்கசீப்பிடம் கவிநயத்துடன் பேசும் பேச்சில், ஒவ்வொரு மரமும் தனக்கான ரகசியத்தை பூக்களின் வாசமாக மலரச் செய்வதாக வரும் கூற்று அழகியல் உணர்வுகள் நிரம்பியதாக இருக்கிறது. இதைப் பெண் மட்டுமே உணர முடியும் என்ற விளக்கம் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது. பெண்கள் பூக்களைப்போல் மென்மையான தன்மை கொண்டவர்கள் ஆதலால் அவற்றின் வாசம் சுமந்து வரும் மரங்களின் ரகசியத்தை புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுதான் மென்மையான சுபாவம் உடையவளாக இருப்பினும் ஆண்களைப் பற்றி தெளிவாக கணித்து அறியும் மனத் திறமை கொண்டவளாக பெண் இருப்பதை புலப்படுத்துகிறது.
பிஷாட மன்னனின் வக்கிரம் தோய்ந்த மனதிற்கேற்ப ஜால்ரா அடிக்கும் தாய்மாமன் முத்கலனின் தவறுதலான ஊக்கம், மஹாபாரதத்தில் துரியோதனனை வழி நடத்தும் மாமன் சகுனியை நினைவுபடுத்துகின்றது. முடிவும் பேரழிவில்தான் முற்றுப் பெறுகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற கூற்றிற்கு ஒப்ப ரெமிஸஸின் படிப்படியான தந்திர செயல்கள் முதலில் வெற்றியைத் தந்தாலும் பின் அவன் அகால மரணமடைகிறான். பிஷாட மன்னன் வளர்க்கும் குரங்காகிய அநாமின் செயல்கள் மனித மனத்தின் பிரதிபலிப்பு. தவறான குணாதிசயங்களோடு சேர்க்கையில் இருந்தால் துர் மரணம்தான் முடிவு என்பதை இக்குரங்கின் சாவு உணர்த்துகிறது. சத்கரில் வசிக்கும் அனைத்து ஆடவர்களுடனும் ஆடம்பர வசதிகள் வேண்டி செல்வ சம்பத்துக்களுடனும் பிஷாட மன்னன் டில்லிக்குப் பயணம் மேற்கொள்வது ஆணவத்துடன் கூடிய அதிகார வெறியில் எடுக்கும் கண்மூடித்தனமான அர்த்தமற்ற மூட முடிவாகும்.
இவன்போன்ற குறுநில மன்னர்களின் தவறான செயல்கள் எக்காரணமுமின்றி பேரரசர்களின் புகழுக்கு இழுக்கையும் சரித்திர ஏடுகளில் நிரந்தர களங்கத்தையும் பதிவாக்குகின்றன. இவர்களின் விவரங்கள் சற்றும் பேரரசர்கள் வரை சென்றடைவதில்லை. ஆன்மீக போர்வையில் அவலத்தனமாய் செய்யும் மஹாபண்டிதர்களின் செயல்கள் அவர்கள் மனத்தின் இழிவைச் சுட்டிக் காட்டுகிறது. அனைத்து சாஸ்திரங்கள் அறிந்திருந்தும் அஹங்காரத்துடன் கூடிய தந்திரம் அழிவிற்குக் காரணமாகிறது. மொட்டையடித்துக் கொண்டு இடக்கை பழக்கமுள்ள சிக்கிரியர்கள் மாயாவித்தனம் கொண்ட கொள்ளையர்களாக வருகிறார்கள். மனிதனானாலும் மிருகமானாலும் வித்தியாசமான வகையில் கொன்று பிறர் வலியில் சுகம் காணும் பிஷாட மன்னனின் இறுதி நேரம் மனதை உலுக்கும் காட்சியாகும்.
சம்பு சாதாரண மனிதனாக பிறந்து கூலியாளாகவும் கடின உழைப்பால் படகோட்டியாகவும் வலம் வருகிறான். சமயோசித புத்தியால் பெரும் பணக்காரனாகி, பின் பேராசையால் கப்பலில் யானைகளுடன் பயணித்து அடிக்கடி மனக்கண்ணில் தோன்றி மறையும் பிரேதமாக நிஜ வாழ்வில் கடலில் இறந்து மிதக்கிறான். எதேச்சையாக நிகழ்வதுபோல் காணப்பட்டாலும், ஆழ் மனதின் பயங்கள் உண்மையில் உருக் கொள்வது நிதர்சனமாகிறது. அடகா என்பவன் தன்னிடமிருக்கும் ஆரூடக் கடிகை மூலம் கால நிலைகளையும் எதிர் கொள்ளப்போகும் உண்மைகளையும் கணித்துக் கூறுவது நிஜமாகிறது.
ஆரம்பம் முதல் கடைசிவரை ஒவ்வொரு கால கட்டத்திலும் நல்ல கெட்ட நிகழ்வுகளின் ஊடே பல தரப்பான வாழ்விடங்களில் பயணப்பட்டு பசி, பட்டினி, இழித்துரைக்கப்படுதல் எனத் துயரமும், சந்தோஷமும், கடின உழைப்பும் அநுபவித்து வாழும் தூமகேதுதான் உண்மையில் கதாநாயகனாக இந்நாவலில் பயணிக்கிறான். மனைவி நளாவையும் குழந்தைகளையும் பிரிந்து அவர்கள் மீது தான் கொண்ட பிரியம் சற்றும் குறையாமல் நம்பிக்கையுடன் தேடியபடியே அலைகிறான். அநியாயமாக பழி சுமத்தப்பட்டு காலா என்னும் சிறையில் அடைக்கப்படும் தூமகேதுவைப்பற்றி பல கதைகள். காற்றில் மிதப்பவன்; ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி தருபவன் என்றெல்லாம். காலா என்றால் உருது மொழியில் இருள் என பொருள்படும். இந்தச் சிறையில் அநீதியால் அடைக்கப்பட்டு எதிர்காலமே இன்றி வாழ்ந்து மறைபவர்கள் ஏராளம். ஆனால் இங்கு அடைக்கப்பட்ட தூமகேது மட்டும் சக்ரதாரின் உதவியுடன் தப்பிக்கிறான். இறக்கை காற்றில் பறந்தால், பறவை பறந்ததைக் கண்ணால் கண்டதாக சாதிக்கும் பொய்யர்கள் வாழும் உலகில் எதுவும் சாத்தியமே. இப்படியாக தூமகேதுவும் மாயாவி எனப் பெயரிடப்படாமலே அசாதாரணமானவனாக சித்தரிக்கப்படுகிறான்.
ஜோயா என்னும் கிராமத்தில் அவனுக்குப் பரிச்சயமாகும் ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் மிகவும் நல்லவர்களாகவும் இயல்பிலேயே சுதந்திரமான வாழ்க்கை வாழுபவர்களாகவும் சக மனிதனை மதிப்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆயினும் தன் மனவி மக்களைத் தேடி தூமகேது அங்கிருந்து விலகி விடாமுயற்சியுடன் பயணிக்கிறான். தூமகேது என்னும் பெயரில் நட்சத்திரம் ஒன்று உள்ளது. அது பூமியின் சுழற்சிக்கேற்ப ஓரிடத்திலும் சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலும் காணப்படுவதாக நாடோடிக் கதைகளில் உண்டு. இக் கதையில் வரும் தூமகேதுவும் ஜாகிர்தார் வீட்டு குதிரைலாயத்தில் வேலை செய்பவனாகவும், முதல் நாள் நீரில் அடித்து வரப்பட்டு கரையோரம் புதையுண்டவனாகவும் கூறப்படுகிறான். மேலும் கதையின் இறுதி அத்யாயத்தில் வரும் கவிஞன் ஜலீலிடம் தூக்குக்கயிறு விற்க வந்தவனாகவும் விவரிக்கப்படுகிறான். நாவலில் தூமகேது நுழைந்தது முதல் அவன் பயணிக்காத இடமே இல்லை.
ஆட்டுத்தோல் ஒன்றில் ஒளரங்கசீப் தன் கஜானா இருக்கும் இடத்தை ரகசியமாக சங்கேத மொழியில் எழுதியிருப்பதாக கிளப்பப்பட்ட புரளியில் அதனைத் தேடும் படலமாக கதையின் சாரம் அமைந்துள்ளது. அதைப் பின்னணியாகக் கொண்டு பலதரப்பட்ட மக்கள், இடங்கள், வாழ்வனுபவங்கள், அரசியல்முறை, நீதி குறித்த விளக்கங்கள், நீதி மறுக்கப்பட்டு தவிக்கும் மக்கள் என்று கதை ஓர் அவலங்களின் நீரோட்டமாகப் பாய்கிறது. அதே சமயம் சச்சல் போன்ற அறிவாளிகளின் பேச்சுக்கள் எளிய பாமர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயல்கின்றன. வரலாற்றுக் காலம் சார்ந்த வாழ்வியலாக கட்டமைப்புகள் இந்நாவலில் இடம் பெற்றிருந்தாலும் இன்றைய வாழ்க்கையின் சூழலுக்கும் அவை வெகுவாகப் பொருந்துகின்றன.
சல்லாபித்து சந்தோஷம் தரும் இரு வேறு மாறுபட்ட நடன மங்கையர்கள் மற்றும் வேசியர்களின் வாழ்விடங்கள் இந் நாவலில் சில ஆச்சரியங்களைக் காட்டுகின்றன. என்னதான் கேளிக்கைக் கூடங்களாக இருந்தாலும் அவர்களுக்குள் கட்டமைப்பான ஒரு வாழ்க்கைநெறி. இதனை வழிநடத்தும் ஜமீலின் உறுதியான நம்பிக்கை வித்தியாசமானது. வெள்ளிக்கிழமைகளில் தங்கள் இருப்பிடங்களை சுத்தப்படுத்தி மது அருந்தாமல் குடிப்பவர்களுக்கும் விநியோகிக்காமல், சமைக்காமல் வெறும் பழங்களை மட்டும் உண்டு ஆடலழகிகளுக்கும் பணியாளர்களுக்கும் முழு நேர ஓய்வும் அளித்தல் என்ற விதிமுறை அவர்களாகவே அவர்களுக்குள் கொண்டிருக்கும் ஓர் ஒழுங்கு..
குலாபி, காதம்பரி என்னும் வேசியர்கள் முதற்கொண்டு பெண் ஒரு போகப்பொருளாகத்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறாள். அநாம் என்ற தன் குரங்கிற்கு அமந்தா என்னும் அடிமைப்பெண்ணை மணம் முடித்து ரசிக்கும் பிஷாட மன்னனின் அருவருக்கத்தக்க செயல் பெண்மையை இழிவுபடுத்தியதற்குச் சரியான உதாரணம் ஆகும். மகள், மனைவி, சகோதரி என்ற பந்தங்கள் வாயிலாகவும் பெண் அடிமையாகவே வாழ்ந்தாள். அவளுக்கான சுய சிந்தனைகள், செயல்கள் என உரிமை மறுக்கப்பட்டுத்தான் வாழ்ந்திருக்கிறாள். ஒளரங்கசீப்பின் மகளான ஜெய்புன்னிஷா பேகம் அரசியல் ஆலோசனைகளை அறிவுப்பூர்வமாக எடுத்துரைக்கும்போது பாராட்டி ஏற்றுக்கொண்ட மன்னன், மக்ஹ்பி என்னும் புனை பெயரில் கவிதை எழுதுவதையும் கவிஞனொருவனை காதலிப்பதையும் ஏற்கவில்லை. இறுதிமூச்சுவரை சிறைச்சாலையில் அவள் வாழ்நாள் கழிந்தது, சற்றும் ஈவு இரக்கமற்ற நிகழ்வு. குடும்பப் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மண்ணாலான லகியா என்னும் பெண் உருவம் கரைந்து, கதையாக ஆபோகிகளிடையே உலா வருகிறாள். அடிப்படையில் குடும்பப் பெண்கள் எவ்வளவு பொறுப்பாக கவனத்துடன் வீட்டு வேலைகளைச் செய்தாலும் அவர்களுக்கான முழு அங்கீகாரம் தரப்படவில்லை; ஆண்களின் தேவைகளுக்காக தம்மையே வருத்திக் கொண்டு வாழ்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள் என்ற குறிப்பைப் பெற முடிகின்றது. அதேபோல் அந்தப்புரத்தில் ஆடம்பரமாய் வாழும் பெண்களுக்கும், பட்டத்து அரசி முதல் அரசனின் அபிமானம் பெற்றவளுக்கும் மனப்பிறழ்வுகளுக்கு ஆளாவது என மிகவும் மோசமான வாழ்வே காணப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் சம உரிமையுடன் நடத்தப்படுவதற்கான அங்கீகாரம் பெற்றிருந்தாலும் உடல் ரீதியாக பல வன் தொல்லைகளை சகிக்கும் கட்டாயத்திலும் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியும்தான் வாழ்ந்து கொண்டுள்ளாள் பெண். இது மறுக்க இயலாத உண்மையாகும்.
ஒரு இடத்தில் நீதிகேட்டு வரும் பெண்புழு கடவுளிடம் செல்கிறது. பின் மகராணிக்கு முறையாக தண்டனை அளிக்க கடவுள் உத்தரவிடும் பொழுது, “’தேவையில்லை. எனக்கான நீதி கிடைத்து விட்டது. நான் இவளை மன்னிக்கிறேன். தண்டனையை விட மேலானது மன்னிப்பு. அது கழுத்தில் கட்டப்படும் மணியைப் போல வாழ்நாள் முழுவதும் இவள் கூடவே ஒலித்துக் கொண்டிருக்கும்.’’ எனப் புழு உரத்துச் சொல்கிறது. வாசிக்கும்போது இந்தக் குரலால் அதிர்கிறது மனம்.
இந்நாவலில் ஆண்களின் வீரம் தந்திரத்தனத்திலும் ஏமாற்றும் யுக்திகளிலும் அதிகாரத்தின் துஷ்பிரயோகத்திலும்தான் காட்டப்படுகிறது. சாகசங்களும் மனதில் நிற்கும்படியான பெருஞ் செயல் செய்பவனாகவும் யாரும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் இல்லை என்றே கூறலாம். மாறாக வக்கிரமும் சுய கழிவிரக்கமும் இயலாமையின் இறுக்கமான மனமும் உடையவர்களாகத்தான் ஆண்கள் பரிதாப முகம் காட்டுகிறார்கள். ஆனால் அனைத்துவிதமான கஷ்டங்களையும் துக்கித்து நடைபயின்றாலும், இறப்பையே எதிர்கொண்டாலும், நாவலில் வரும் பெண் மனவலிமை, சாமர்த்தியமான அணுகுமுறை, அனைத்திற்கும் மேலாக அன்புள்ளத்துடன் கூடிய பொறுமை உடையவளாக இருக்கிறாள். இந்த முரண் வலுவான சித்தரிப்பையும் உள்ளோடும் கதைகளின் மைய நகர்வையும் உறுதியாக்குகிறது.
. நாவலின் ஆரம்பத்தில் ஒளரங்கசீப் என்னும் அரசன் தன் அரசாட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் வாழ்வின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள விரும்பியும் ஒரு மாபெரும் சூஃபி ஞானியை சந்திக்கச் செல்கிறான். இளமைக் கால பலம், அரசாட்சியின் மூலம் அநுபவிக்கும் அதிகாரம், இறுமாப்புடன் மனதிற்கு கடிவாளமிடாமல் வாழ்ந்து நோயுற்ற நிலையில் முதுமையின் தனிமையில் மரணத்தைத் தவிர்க்க இயலாமல் இருக்கும் மனத்தின் தவிப்பு விஸ்தாரமாக எடுத்துரைக்கப்படுகிறது.
நாவலின் இறுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாய் கோஷமிட்டபடி ஞான மார்க்கம் சார்ந்த பீர்பாபாவை தரிசிக்கச் செல்கின்றனர். போகும் வழியில் மரத்தடியில் தங்கி இருக்கும் தூமகேதுவிற்கு அவன் வாழ்நாளில் மறுக்கப்பட்ட சாமந்திப்பூ மாலை அவன் கழுத்திற்குக் கிடைக்கிறது. ஒளரங்கசீப்பின் கையால் பின்னப்பட்ட குல்லா என்ற பிரக்ஞை சற்றும் இன்றி இது நாள்வரை அணிந்திருந்த பிச்சைக்காரன் எவனோ, இவனுக்குத் தலையில் அணிவித்துவிட்டு கூட்டத்துடன் விலகிச் செல்கிறான்.
தன் மனைவி நளாவின் நினைவுகளுடன் பேசியபடி அமர்ந்திருக்கும் தூமகேதுவின் இடது கை, மெல்ல கடந்து செல்லும் மக்களின் இசையொலியைக் கேட்டபடி தாளமிடுகிறது. கடந்து வந்த வாழ்வின் பாதையில் சகிப்புத்தன்மையின் பரிசாக, கஷ்டங்களில் ஒடுங்கிப்போன தூமகேதுவின் இதயம் மீண்டும் உயிர்த்துடிப்புடன் அங்கீகரிக்கும் புது வாழ்வின் துளிர்த்தலோ இது?
மதம், மொழி, இனம் என்று தனித்தனியாக சுட்டிக்காட்டாமல் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் சாராம்சங்களில், அடிப்படையில், மனிதன் ஒரே மாதிரியான மனநிலையில்தான் இயங்குகிறான். அவன் யாராக இருந்தாலும் நல்லவன் நல்லவனாகவும் வல்லவன் வல்லவனாகவும் தீயவன் தீமைகளின் பிறப்பிடமாகவும் இயங்குகிறான். ஆழ்மன சக்தியின் பிரதிபலிப்பாகத்தான் அவனை நிகழ்கணம் அழைத்துச் செல்கிறது.
தேடலில் அரசனும் சாதாரணக் குடிமகனும் ஒன்று தானே
••