இடக்கை -விமர்சனம்

மரணத்துக்கு முன் உன் வாழ்வை திரும்பி பார்
பவா. செல்லதுரை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, ‘இடக்கை’ என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. அவுரங்கசீப் பற்றிய நாவல் என உணர்ந்தாலும், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் இந்நாவலில் உள்ளன. ஒரு பேரரசனின் எழுச்சியும், வீழ்ச்சியும், எப்படி ஒரு சாமானியனோடு தொடர்பு கொள்கிறது என்பதை நாவல் சொல்கிறது.
ஒரு நாவலை படிக்க எடுத்தோம், ஒரே நேரத்தில் படித்து முடித்தோம் என, ‘இடக்கை’ நாவலை படித்துவிட முடியாது.
சம்பவங்களோடு, தத்துவார்த்த சிந்தனையும் இணைந்து வருவதே அதற்குக் காரணம். இடக்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, கட்டாயப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவனையும், ஒரு பேரரசனையும் இணைத்து இந்த நாவல் செல்கிறது. அதனால் தான், ‘இடக்கை’ என, நாவலுக்கு பெயர் வைத்துள்ளார் நூலாசிரியர்.
அவுரங்கசீப், பாலைவனம் ஒன்றில் இருப்பார். அவரை சந்திக்கும் வரும் மவுலானா, ‘நீ எனக்கு என்ன தருவாய்’ என, கேட்பார். ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்’ என்பார் அவுரங்கசீப். ‘எனக்கு ஒன்றும் பெரிதாக வேண்டாம். அதோ தெரிகிறதே பேரீச்சை மரம், அதன் அருகில் இருக்கும் கிணற்றிலிருந்து, ஒரு கை நீர் வேண்டும்’.
‘இப்போது செல்லாதே, இரவில் தான் கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கும். அப்போது செல்’ என்பார் மவுலானா. இரவில் கிணற்றுக்கு சென்றால்
, தண்ணீர் எடுக்க கயிறோ, வாளியோ இல்லாமல் தவிப்பார் மன்னர். ‘முழு நம்பிக்கையோடு, தண்ணீரே மேலே வா என சொல், தண்ணீர் வரும்’ என்பார் மவுலானா. அப்படி சொன்னதும் தண்ணீர் வரும். ஆனால், காலை வரை ஒரு கை தண்ணீரை எடுத்து வந்து மவுலானாவுக்கு, அவுரங்கசீப்பால் கொடுக்க முடியாது.
‘ஒரு பிடி நீரை கூட உனக்கு சொந்தமாக்க முடியவில்லை. அதற்குள், மண்ணில் உள்ள அனைத்தும் உனக்கே சொந்தம் என, எத்தனை போராட்டம் செய்கிறாய்.
மரணத்தை நெருங்கும் இந்த நேரத்திலாவது, உன் வாழ்க்கையை திரும்பிப் பார்’ என்பார் மவுலானா.
இப்படி, பல்வேறு தத்துவங்களோடு பயணிக்கிறது இந்நாவல்.
பவா.செல்லதுரை, எழுத்தாளர்
நன்றி
நூல்வெளி

இடக்கை நாவல் வாங்குவதற்கு

தேசாந்திரி பதிப்பகம்

தொலைபேசி 044 23644947

desanthiripathippagam@gmail.com

0Shares
0