இனி

ஒவ்வொரு மாதமும் எனக்கு இருபது முப்பது சிற்றிதழ்கள் தபாலில் வருவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காலத்தில் ஒரு இதழும் வெளியாகவில்லை. தபால் வருவதே இரண்டு மாதங்களாக இல்லாமல் இருந்தது. தற்போது தபால் வருகிறது. ஆனால் இதழ்கள் ஒன்றையும் காணவில்லை.

சிற்றிதழ் நடத்துகிறவர்களின் பொருளாதாரக் கஷ்டம் உலகம் அறிந்தது. அதிலும் இந்த ஊரடங்கு காலத்தில் அச்சிடுவது, தபாலில் அனுப்புவது இயலாத காரியம்.

நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. அது போல இவர்களால் செயல்படவும் முடியாது, தொழில்நுட்ப வசதிகளும் குறைவு. சிற்றிதழ்கள் இனி என்னவாகும் என்பது பெரும் கேள்விக்குறி.

பெரிய இதழ்களே விற்பனைச் சரிவின் காரணமாக மூடப்படுகின்றன. பத்திரிக்கை விற்கும் பெட்டிக்கடைக்காரரிடம் பேசினால் தினசரி பேப்பர்களின் விற்பனை ஐம்பது சதவீதம் குறைந்துவிட்டது. வார இதழ்களுக்கும் இதுவே நிலை. இதில் இலக்கிய இதழ்களைக் கேட்டு யார் வரப்போகிறார் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாகவே மனதில் இனி இதழை திரும்ப பார்க்க வேண்டும என்ற ஆசை தோன்றிக் கொண்டேயிருக்கிறது. எவ்வளவு சிறப்பான சிற்றிதழ்.

1986ம் ஆண்டு விருதுநகர் பேருந்து நிலையத்தினுள் உள்ள சேது புத்தகக் கடையில் தற்செயலாக இனி என்ற இதழைப் பார்த்தேன். அப்போது தான் வரத்துவங்கியிருந்த புதிய கலை இலக்கிய இதழ் என்று சொன்னார்கள். கையில் எடுத்துப் பார்த்த போது ஆங்கில இதழ்களைப் போல நேர்த்தியான காகிதமும் அழகான அச்சாக்கமும் மிகச்சிறப்பான அட்டைப்படமும் கொண்டிருந்தது. அப்படி ஒரு தமிழ் இதழை அதன் முன்பு நான் கண்டதேயில்லை. ஆசிரியர் எஸ்.வி. ராஜதுரை. திரைப்படம், அரசியல், காமிக்ஸ், சிறுகதை, கவிதை, கட்டுரை எனச் செறிவான இதழாக வெளியாகியிருந்தது.

பேருந்து நிலையத்தின் பெஞ்சிலே வைத்துப் படித்து முடித்தேன். சர்வதேச அளவில் தமிழில் வெளியான இலக்கிய இதழ் என்று இனியைக் குறிப்பிடுவேன்.

அடுத்த நாள் நானே ஐந்து இதழ்களை வாங்கி எனது நண்பர்கள் சிலருக்குக் கொடுத்தேன். அவர்களுக்கு இந்த இதழில் வெளியான விஷயங்கள் வியப்பளித்தன.

அடுத்த இதழ் எப்போது வரும் எனக் காத்திருந்தேன். முதல் இதழில் அட்டை படமாக ஜான் ஐசக் எடுத்திருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. அவரைப் பற்றிய குறிப்பையும் வெளியிட்டிருந்தார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த ஜான் ஜசக் U.N. Photographer ஆகப் பணியாற்றியவர் . சிறந்த கிதார் இசைக்கலைஞர். சென்னையில் கல்வி பயின்றவர்.  நிக்கான் விருது , கோடக் விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றவர்.

ஆறு இதழ்களோடு நின்று போனது வருத்தமளித்தது. ஆனால் அந்த ஆறு இதழ்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது என்பதே நிஜம்.

இனி இதழ்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதற்காகப் பைண்ட் செய்து வைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் அதைக் கேட்டு வாங்கிச் சென்றார். திரும்பித் தரவேயில்லை.

இனி இதழில் வெளியான கட்டுரைகள் கதைகள் யாவும் ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.

இல்லாவிட்டால் நிச்சயம் அதை எஸ்.வி.ஆர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

••

அவசியம்  காணவேண்டிய காணொளி.

The Pictures I didn’t Take | ​John ​Isaac | TEDxIHEParis

https://youtu.be/ayPiEmz30Cw

0Shares
0