இரண்டு கவிஞர்கள்

வேறுவேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு கவிஞர்களின் வாழ்க்கையை ஒப்பு நோக்கும் போது அவர்கள் ஒன்று போலவே வாழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சீனாவின் புகழ்பெற்ற கவிஞரான லி பெய் மற்றும் உருதுக் கவி மிர்ஸா காலிப் இருவரும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அரசிடம் மன்றாடுவதற்காகச் செலவு செய்திருக்கிறார்கள். இருவருமே தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட கவிஞர்கள். தங்களை ராஜவிசுவாசியாகக் கருதியவர்கள். ஆனால் அவர்களின் நியாயமான ஆசை கடைசி வரை நிறைவேறவேயில்லை.

உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப் 1857ல் நடைபெற்ற சிப்பாய் எழுச்சியை டெல்லியில் நேரில் கண்டிருக்கிறார். அதைப் பற்றித் தனது கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு அரசியலில் ஆர்வமில்லை என்பதால் தான் என்ன நிலைப்பாடு எடுத்தேன் என்பதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.

1797ல் காலிப் பிறந்தார். மொகலாய ஆட்சியின் கடைசி காலகட்டமது. அப்போது டெல்லி சிறிய நகரமாக இருந்தது. நகரின் முக்கியப் பிரச்சனை குடிநீர். அதற்காக ஷாஜகான் காலத்தில் உருவாக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் வராமல் போனது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதைச் சரிசெய்தார்கள். நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதால் அங்கே பெரிய மாளிகைகளில் உயர்குடியினர் வசதியாக வாழ்ந்தார்கள். அன்று ஒன்றரை லட்சம் பேர் டெல்லியில் வசித்திருக்கிறார்கள். காலிப் ஆக்ராவிலிருந்து 1810ம் ஆண்டு டெல்லிக்குக் குடியேறியிருக்கிறார். 51 ஆண்டுகள் அவர் டெல்லியில் வசித்திருக்கிறார்.

1788ல் மன்னர் ஷாஆலம் கண்கள் குருடாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1803ல் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழே டெல்லி வந்தது. பிரிட்டிஷ் ஓய்வூதியம் வாங்கும் நபராக மன்னர் உருமாறியிருந்தார்

ஐந்து வயதிலே தந்தையை இழந்த காலிப். மாமாவால் வளர்க்கப்பட்டார். மாமா அரசாங்க வேலையிலிருந்த காரணத்தால் அந்த வருமானத்தில் குடும்பம் செல்வாக்காக வாழ்ந்துவந்தது. மாமாவின் மறைவிற்குப் பிறகு பிரிட்டிஷ் ஓய்வூதியம் காலிப்பிற்கும் கிடைத்து வந்தது. ஆனால் அந்தப் பணம் அவருக்குப் போதுமானதாகயில்லை.

டெல்லி வாசியான காலிப் தன் வாழ்நாள் முழுவதும் தனக்குச் சேரவேண்டிய பராம்பரிய உரிமைகளை மீட்கவும் அரசிடமிருந்து உதவிப் பணம் பெறவும் போராடியிருக்கிறார்.

மிர்ஸா காலிப்பின் கவிதைகள் மிகவும் நுட்பமான அகவயத் தேடுதலையும் உலகியல் வாழ்வின் அர்த்தமற்ற தன்மைகளையும் பேசுபவை. ஆனால் தனிநபராக இந்த மனநிலைக்கு நேர் எதிராக அரசோடு உரிமைப்போராட்டம் நடத்தியிருக்கிறார்

காலிப்பின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் அதில் இந்த அலைக்கழிப்பும் அதில் அடைந்த தோல்விகளும் ஏமாற்றங்களும் தான் அதிகமிருக்கின்றன.

உலகியல் வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை என்ற மனிதன் ஏன் தனக்கு அரசு தரவேண்டிய உதவிப்பணத்திற்காக இத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது

காலிப்பின் மூதாதையர்கள் மொகாலய ராணுவத்தில் முக்கியப் பதவிகளிலிருந்தவர்கள். இதன் காரணமாகச் செல்வாக்கான குடும்பமாக விளங்கினார்கள். ஆகவே தன் உடலில் ராஜவிசுவாசம் ஓடுகிறது என்ற எண்ணம் காலிப்பிடம் மேலோங்கியிருந்தது.

அன்று டெல்லியின் முக்கிய விருந்துகளில் காலிப்பின் கவிதைகள் பாடப்பட்டன. நகரின் முக்கியக் கவிஞராக அவர் பெருமைப்படுத்தப்பட்டிருந்தார். மொகலாய மன்னர்களின் வரலாற்றை உரைநடையில் எழுதும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

தங்கள் குடும்பத்திற்கு அரசிடமிருந்து கிடைத்து வந்த உதவித்தொகை குறைக்கப்பட்டதைத் தான் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அறிவித்த காலிப் இதற்காகப் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் முறையிடுவதற்காகக் கல்கத்தா பயணம் செய்தார்.

அந்த நாட்களில் தான் முதன்முறையாக நியூஸ் பேப்பர்கள் அறிமுகமாகின்றன. காலிப் கல்கத்தாவில் நியூஸ் பேப்பர் படித்ததைப் பற்றிக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஒருமுறை காலிப் வீட்டில் நடந்த சீட்டாட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டான். ஆறுமாதகாலத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகி மும்பை வரை சென்று விட்டது. அந்தக் காலத்தில் இது போல டெல்லியில் நடக்கும் விஷயங்கள் வெளியுலகிற்குத் தெரியவே தெரியாது. ஆனால் பத்திரிக்கை செய்தி இப்படி வட இந்தியா முழுவதும் தன்னைப் பற்றிய மோசமான சித்திரத்தை உருவாக்கிவிட்டதை நினைத்து காலிப் வருத்தியிருக்கிறார்.

டெல்லி கல்லூரி துவங்கப்பட்ட போது பெர்சியன் கற்பிக்கும் ஆசிரியர் பணிக்கு மாத சம்பளம் நூறு தருவதாகச் சொல்லி மிர்ஸாவை அழைத்திருக்கிறார்கள்.. இந்த வேலைக்கான நேர்காணலுக்குத் தாம்சன் என்ற பிரிட்டிஷ் அதிகாரியைக் காண நேரில் சென்றார் மிர்ஸா

அவரிடம் மிர்ஸா காலிப் உங்களைக் காண வந்திருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவரும் வரச்சொல்லி உத்தரவிடுகிறார். ஆனால் மிர்ஸா காலிப் தன்னைத் தாம்சன் வெளியே வந்து வரவேற்று உள்ளே அழைத்துப் போகவில்லை. ஆகவே நான் அவரைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று கோவித்துக் கொண்டு கிளம்பிப் போய்விட்டார்.

மிர்ஸா பெரிய கவிஞராக இருந்தாலும் தற்போது வேலை கேட்டு வந்திருக்கிறார். அவரை எதிர்கொண்டு அழைப்பது முறையில்லை என்று தாம்சன் விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் காலிப் ஆசிரியர் வேலை என்பது தனக்குக் கூடுதல் கௌரவம் மட்டுமே. பராம்பரியமாக நான் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். டெல்லியின் முக்கியக் கவிஞன். ஆகவே என்னைப் பிரிட்டிஷ் அதிகாரி நேர்கொண்டு அழைக்காதது அவமானத்துக்குரிய விஷயமே என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்

இவ்வளவிற்கும் அந்தக் காலத்தில் காலிப்பின் கவிதைகளை ரசித்துக் கொண்டாடும் வெள்ளைக்கார அதிகாரிகள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சில தருணங்களில் தேவையான உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.

கவிதையின் அரசனாகவே தன்னைக் கருதியிருக்கிறார் காலிப். ஆகவே அரசனைப் போலவே சுகவாழ்வு வாழுவதற்காக நிறையக் கடன்வாங்கியிருக்கிறார். சுவையான மாமிச உணவுகள். மிதமிஞ்சிய குடி. விலை உயர்ந்த ஆடைகள். விருந்துக் கொண்டாட்டங்கள் என்று செலவு செய்து கடனை திருப்பிக் கொடுக்கமுடியாமல் நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறார்

உயர்வான வைன் கையில் இருக்கும் போது பிரார்த்தனை செய்வதற்குத் தேவையென்ன இருக்கிறது என்பதே மிர்ஸா காலிப்பின் கேள்வி. பிரெஞ்சு ஒயினில் கொஞ்சம் பன்னீர் கலந்து குடிப்பது அவரது வழக்கம். அந்த நாட்களில் பிரிட்டிஷ் அங்காடிகளில் உயர்வகை மதுவகைள் கிடைப்பது வழக்கம். அங்கேயும் கடன் சொல்லி ஒயின் வாங்குவதும் பணம் கிடைக்கும் போதும் திரும்பத் தருவதும் காலிப்பின் நடைமுறை. அந்த நாட்களில் மாதம் நூறு ரூபாய் ஒயின் வாங்குவதற்குச் செலவு செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் அவருக்கு மாதம் கிடைத்த அரசின் உதவித்தொகை 62 ரூபாய் மட்டுமே.

தனக்கு உரிய உரிமைகளை மீட்க அவர் கல்கத்தா சென்ற போது அங்கே அவரது நண்பராக இருந்த நவாப் அவர் தங்கிக் கொள்ள மாளிகை ஒன்றை அளித்திருக்கிறார். மூன்று பணியாளர்கள். பல்லக்கு எனச் சகல வசதிகளையும் அளித்திருக்கிறார். பிரிட்டிஷ் அதிகாரிகள் காலிப்பை கண்டுகொள்ளவேயில்லை. அவரது மனுவைப் பரிசீலனை செய்யாமல் இழுத்தடித்தார்கள். இதனால் கைப்பணம் கரைந்து போய்க் கடன் வாங்கிச் செலவு செய்தார் காலிப். முடிவில் தனது குதிரையை விற்று அந்தப் பணத்தில் சில மாதங்கள் கல்கத்தாவில் தங்கியிருந்தார். கடைசிவரை அவரது கோரிக்கை ஏற்கப்படவேயில்லை.

காலிப் பெரும்பாலும் மாலையில் குடித்துக்கொண்டே கவிதைகள் பாடுவார். அப்போது தோளில் போட்டுள்ள வஸ்திரத்தில் ஒவ்வொரு கவிதை முடிந்தவுடன் ஒரு முடிச்சு போட்டுக் கொள்வார். காலை விடிந்து எழுந்தவுடன் அந்த முடிச்சுகளை அவிழ்த்து விடும் போது அதே கவிதை மனதில் எழுவது வழக்கம். அதைக் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டுவிடுவார். விசித்திரமான எழுத்துமுறையது.

குடிப்பது போலவே சௌபர் எனப் பகடை உருட்டி ஆடும் விளையாட்டிலும் அவருக்குப் பெரும் விருப்பம் இருந்திருக்கிறது. இதில் நிறையப் பணம் இழந்திருக்கிறார்.

முதுமையில் பார்வையை இழந்த நிலையிலும் அவர் கவிதை பாடிக் கொண்டிருந்தார். வறுமையான சூழ்நிலை. 1869ல் அவர் இறக்கும் நாளில் கூடப் பணம் வந்து சேர்ந்துவிடும் என்பதற்காகவே அவர் காத்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள். காலிப்பின் கடிதங்கள் வழியாக அந்த நாளைய டெல்லி வாழ்க்கையின் சித்திரங்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரத்தில் டெல்லியில் நடந்த பிரச்சனைகள். எதிர்வினைகள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

உருது மொழி தான் மிர்ஸாவின் தாய்மொழி. ஆனாலும் கவிதைகள் எழுத வேண்டும் என்பதற்காகவே பாரசீக மொழியினைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். உருதுவில் கவிதை எழுதுவதை விடவும் பாரசீகத்தில் கவிதை எழுதுவதே சிறந்தது என்ற எண்ணம் அவருக்குள்ளிருந்தது. அவரது காலத்தில் அரசசபையில் பாரசீக கவிஞர்களே அங்கீகரிக்கப்பட்டார்கள். அவர்களுக்கே வெகுமதிகள் அளிக்கப்பட்டன. ஆகவே தானும் பாரசீக கவிஞராக அறியப்படவே காலிப் விரும்பினார்

காலிப்பின் காலத்தில் அச்சு இயந்திரங்கள் அதிகம் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆகவே அவரது கவிதைகளைப் பலரும் மனப்பாடமாகப் பாடுவதே வழக்கம். காலிப்பின் மரணத்திற்குப் பிறகே அச்சில் அவரது கவிதைகள் வெளியாகத் துவங்கின.

காலிப் போலவே தன் வாழ்நாள் முழுவதையும் அரசுப்பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகவே சீனக்கவிஞர் லிபெய் போராடியிருக்கிறார். அந்த நாட்களில் அரசு அதிகாரியாக வேலை செய்வதே கௌரவமானது. உயர் குடும்பத்தின் அடையாளம். ஆனால் அதற்குப் பல்வேறு தேர்வுகள் உண்டு. ஒவ்வொரு மாகாணமாகச் சென்று அங்கு அரசு தேர்வுகளைச் சந்தித்து அதில் வெற்றி பெறாமல் தோற்றுப் போயிருக்கிறார். அரசு அதிகாரியின்  மகளைத் திருமணம் செய்து கொண்டு மாமனார் வழியாக அரசாங்க பதவி பெற முனைந்திருக்கிறார். அதிலும் தோல்வியே ஏற்பட்டது.

கடைசிவரை அவருக்கு அரசாங்கப்பதவி அளிக்கப்படவேயில்லை. முடிவில் அவரை அரசின் முக்கியப் பதவியில் அமர்த்தி அதற்கான ஆணையை மன்னர் அனுப்பிய போது லிபெய் இறந்து இரண்டு ஆண்டுகளாகியிருந்தன.

காலிப், அல்லது லிபெய் இருவரும் அரசோடு போராடித் தோற்றவர்கள். அவர்கள் கவிதைகளில் வெளிப்படும் ஞானமும். தெளிவும் ஏன் தினசரி வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. உலகம் அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் வீடும் உறவும் புரிந்து கொள்ளவேயில்லை. உண்மையில் இரண்டு கவிஞர்களும் வாழ்வியல் பந்தயத்தில் தோற்றுப் போனவர்களே. அவர்கள் பாதிக் கற்பனையிலும் பாதி நிஜத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள்.

லிபெய் முறையாக வாள் சண்டை பயின்றிருக்கிறார். குதிரையேற்றம் சிறப்பாகச் செய்யக்கூடியவர். கணக்கு மற்றும் வரிவிதிப்பு குறித்து ஆழ்ந்து படித்திருக்கிறார். அவர் கவிதைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

ஒருமுறை உதவி வேண்டி அவர் சந்திக்கச் சென்ற அரசு அதிகாரி ஒருவர் சாலையில் அவரைக் கடந்து போகும் போது தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்று மனம் நொந்து உதவி கேட்காமலே விலகிப் போய்விட்டிருக்கிறார். நீண்டகாலத்தின் பின்பு இதை அறிந்து கொண்ட அதிகாரி மனம் வருந்தி தன்னால் அவருக்கு அரசாங்க வேலை வாங்கித் தந்திருக்க முடியும். ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்று வருந்தியிருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில் நிறையத் தோல்விகளைச் சந்தித்த போதும் இருவரும் அதைப் பெரிதாக நினைக்கவேயில்லை. அதைப்பற்றிய புலம்பல்கள் எதுவும் அவர்களின் கவிதையில் வெளிப்படவில்லை. புறவாழ்க்கையின் இந்த நெருக்கடிகள். தோல்விகள் அவர்களின் அகத்தில் தீராத நெருப்பாக எரிந்து ஞானத்தை உருவாக்கியிருக்கிறது.

நாம் கவிதைகளின் வழியே இந்தக் கவிஞர்களைச் சந்திக்கிறோம். அவர்களுடன் உரையாடுகிறோம். அவர்களின் ஞானத்தைப் பெறுகிறோம். அவர்களின் வாழ்க்கை அடையாளப்படுத்துவதெல்லாம் புறக்கணிப்பின் ஊடாகவே கவிஞன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற உண்மையை மட்டுமே.

0Shares
0