The First City டெல்லியிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய இதழ். இதில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு இரண்டு தொகுதிகளாக வெளித்துள்ளன. அவற்றைச் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் பழைய புத்தகக் கடை ஒன்றில் வாங்கினேன்.

இந்தியாவின் மிக முக்கியமான ஓவியர்கள். இசைக்கலைஞர்கள். திரைப்பட இயக்குநர்கள். எழுத்தாளர்கள். வரலாற்று ஆய்வாளர்கள். சூழலியல் அறிஞர்களின் நேர்காணல்கள் கொண்ட இந்தத் தொகுப்பு மிகச்சிறப்பானது..

The Paris Review Interviews தொகுதிகளுக்குப் பிறகு இவற்றையே அடிக்கடி எடுத்து வாசிப்பது வழக்கம். எழுத்தாளர்களின் நேர்காணலைப் பொருத்தவரை தி பாரீஸ் ரிவ்யூவிற்கு நிகரே கிடையாது. அவை எழுத்தாளனின் ஆளுமையை விரிவாக, நுட்பமாக வெளிப்படுத்துபவை. பாரீஸ் ரிவ்யூவில் நேர்காணல் வெளியாவது என்பது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் பெரிய அங்கீகாரம். வில்லியம் பாக்னர். மார்க்வெஸ், போர்ஹெஸ். ஹெமிங்வே, மிலன் குந்தேரா, கால்வினோ, ஆக்டோவியா பாஸ், சாமுவேல் பெக்கட், டி.எஸ். எலியட். ஹென்றி மில்லர் போன்றவர்களின் நேர்காணல்கள் சிறப்பானவை.
நேர்காணல் செய்பவர் எவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறார்கள். எப்படி எழுத்தாளரை அணுகுகிறார் என்பதற்கு இந்தத் தொகுதிகளே சிறந்த உதாரணம்.
இதன்பிறகு The Last Interview என 25 நேர்காணல் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இதில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் விரிவான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் பதினைந்து தொகுதிகளை வாங்கிப் படித்திருக்கிறேன். மிக நல்ல நேர்காணல்கள்.


தனது படைப்பில் வெளிப்படுத்தாத தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக அரசியல் பண்பாடு குறித்த எண்ணங்களை, பயண அனுபவங்களை, மறக்கமுடியாத நிகழ்வுகளை, வாசிப்பு அனுபவத்தைத் தனது நேர்காணலின் வழியே எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் வழியே நாம் எழுத்தாளனின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொள்கிறோம்.
First City நேர்காணல்கள் விரிவானவையில்லை. இரண்டு மூன்று பக்க அளவு கொண்டவை. ஆனால் அதில் வெளிப்படும் அசலான பார்வையும் வாழ்க்கை மதிப்பீடுகளும் கலை இலக்கியம் குறித்த தெளிவான புரிதலும் இவற்றைத் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன.
வேறுவேறு துறை சார்ந்த ஆளுமைகள் எந்தப் புள்ளியில் ஒன்று சேருகிறார்கள் என்பதை இது போன்ற நேர்காணல் தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாகப் பால்ய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும், தனது கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லும் அனுபவங்களைப் பற்றிப் பேசும்போதும் எல்லோரும் கவிஞனின் குரலில் தான் பேசுகிறார்கள்

இந்த நேர்காணல் தொகுப்பில் சதுர்வேதி பத்ரிநாத் மகாபாரதம் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். இவர் எழுதிய Women of the Mahabharata: The Question of Truth படித்திருக்கிறேன். மகாபாரதப் பெண்கள் பற்றிய சிறப்பான ஆய்வாகும்.
நேர்காணலில் தனது ஜப்பான் பயணத்தினைப் பற்றி விவரிக்கும் பத்ரிநாத் நிகழ்ச்சி அமைப்பாளர் தன்னிடம் உடன் யார் வருகிறார்கள் என்று கேட்டதாகவும் அதற்குத் தான் பனிரெண்டு பெண்களுடன் வருவதாகப் பதில் சொன்னதாகவும் சொல்கிறார்
ஜப்பானியர் குழப்பம் அடைந்துபோகவே தன்னோடு பயணம் செய்யும் பெண்கள் அத்தனை பேரும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் என்று சொல்லிச் சிரித்திருக்கிறார். மகாபாரதப் பெண்களைத் தனது தோழிகளாகக் கருதும் பத்ரிநாத் அவர்கள் எப்போதும் தன்னுடனிருப்பதாகக் கூறுகிறார்
அவரது வயது 70 என்பதைப் பற்றி நேர்காணல் செய்பவர் குறிப்பிடும் போது பத்ரிநாத் வேடிக்கையாகச் சொல்கிறார்
இல்லை நான் எட்டாயிரம் வருஷம் கொண்டவன். அப்படித் தான் உணருகிறேன். வயதை உடலை வைத்து மட்டும் மதிப்பிட வேண்டும் என்று யார் சொன்னது என்று கேட்கிறார்.
இந்த நேர்காணலில் அவர் மகாபாரதம் குறித்த தனது ஆழ்ந்த புரிதலைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவரைப் படிக்கும் போது மகாபாரதத்தில் பெண்கள் என்று எம்.வி. வெங்கட்ராம் ஒரு புத்தகம் எழுதியிருப்பது நினைவில் வந்து போனது. தான் எப்படி இந்தக் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தேன் என்று எம்.வி.வெங்கட்ராம் தனது மகாபாரத வாசிப்பு அனுபவத்தை விரிவாக எழுதவில்லை. ஒருவேளை அவரை இது போல நேர்காணல் செய்திருந்தால் அதற்கான பதில் கிடைத்திருக்கக்கூடும்
இந்தத் தொகுப்பில் மசானபு ஃபுகோகோ அளித்துள்ள நேர்காணலில் இயற்கையை அவர் புரிந்து கொண்டுள்ள விதமும் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் முறையும் வியப்பளிக்கிறது.
அமிதாவ் கோஷ். இந்திரா கோஸ்வாமி, நிர்மல் வர்மா யு. ஆர். அனந்த மூர்த்தி போன்ற எழுத்தாளர்களின் நேர்காணலின் வழியே நவீனத்துவத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் இலக்கியத்தின் செயல்பாடுகள் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசப்படுகின்றன.
ஒரு மனிதன் ஒரே நேரத்தில் பார்வையுள்ளவனாகவும் பார்வையற்றவனுமாக இருக்கிறான். பார்வை என்பது புறவயமான பார்த்தல் மட்டுமில்லை. எந்த ஒன்றில் ஒருவன் ஆழ்ந்து கற்று தேறியிருக்கிறானோ அதையும் பார்த்தல் என்கிறார்கள். அறியாத, பயிலாத, தெரியாத விஷயங்களைப் பொறுத்தவரை அது பார்க்கப்படாதவையே. இதையும் பத்ரிநாத் ஒரு கதை மூலம் விளக்குகிறார். இது போன்ற நேர்காணல் தொகுப்புகளும் அப்படி நாம் எதைப் பார்க்கிறோம். எதைப் பார்க்கவில்லை என்பதைச் சரியாக அடையாளப்படுத்துகின்றன.
**