இரண்டு புத்தகங்கள்

யுவான் ருல்போ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர்ஹெஸ், ஆக்டோவியா பாஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கவிஞர் பிரம்மராஜன், ஆர். சிவகுமார், எதிராஜ் அகிலன், நாகார்ஜுனன், சம்யுக்தா, மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்பாக மொழியாக்கம் செய்து வெளியிட்ட இந்நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது.
நவீன தமிழ் சிறுகதையை மாற்றம் செய்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்கிருக்கிறது. பாஸ்கரன் ஒவியத்துடன் சிறந்த வடிவமைப்பில் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்தது
இந்நூலை பிரம்மராஜன் மறுபதிப்பு செய்தால் இன்றைய வாசகர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
••
மச்சடோ டி ஆசிஸ் (Machado de Assis) பிரேசிலின் முக்கியப் படைப்பாளுமைகளில் ஒருவர்
மச்சடோ டி ஆசிஸ் எழுதிய மனநல மருத்துவர் நாவலை ராஜகோபால் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் அதிகம் கவனம் பெறவில்லை. தற்போது அச்சிலும் இல்லை. ஆனால் தேடிவாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகமிது.
”நானும் ஒரு மனிதப்பிறவி என்பதால், மானுடத்தைப் புரிந்து கொள்வது என்பது, ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. எனினும் தெய்விக அருளைப் பெறாத மனிதப்பிறவிகளைக் காட்டிலும் நான் உண்மைக்கு வெகு நெருக்கமாக வந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்” என்ற டேனியல் பால் ஷ்ரபரின் வாசகங்கள் மச்சடோவின் படைப்புகளுக்கு மிகப் பொருத்தமானவை.
காஃப்காவின் ‘உருமாற்றத்திற்கு இணையாக மச்சடோவின் ‘மனநல மருத்துவர்’ மதிப்பிடப் பெறுகிறது என்கிறார் ராஜகோபால்.
ராஜகோபால் முன்னதாக மிலன் குந்தேரா, கால்வினோ, மார்க்வெஸ், முரகாமி உள்ளிட்ட பலரது சிறுகதைகளையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
எனது அட்சரம் இதழ் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது.
•••
0Shares
0