எழுத்தின் தோழமை.


மார்க்ரெட் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன்.

Margaret Atwood: Once in August என்ற இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் மைக்கேல் ரபோ. 1984ல் வெளியானது

மைக்கேல் ரபோ எழுதும் கடிதம் ஒன்றின் மூலம் ஆவணப்படம் துவங்குகிறது. கனேடிய எழுத்தாளர்கள் பலரையும் பற்றி ஆவணப்பபடம் எடுத்துவரும் தான் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றை உருவாக்க விரும்புவதாகவும் அது அவரைப் பிரேதப் பரிசோதனை போலக் கூறுபோடுவதாக ஒரு போதுமிருக்காது. அவர் விரும்புகிறபடி, விரும்பும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும். அவரது படைப்புலகம் சார்ந்தே இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட வேண்டும் என நினைப்பதால் அதற்கு அனுமதி தேவை என்று ரபோ கடிதம் எழுதுகிறார். மார்க்ரெட் அட்வுட் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவே படம் துவங்குகிறது.

ட்வுட் குடும்பம் விடுமுறைக்காகச் செல்லும் தீவு ஒன்றுக்கு ஆவணப்படக்குழு செல்கிறது. அட்வுட் சிறுவயது முதலே விடுமுறைக்கு இந்தத் தீவிற்குத் தான் வருவது வழக்கம் அந்தத் தீவு அவரது Surfacing என்ற நாவலின் மையப்பொருளாக விளங்குகிறது.

தீவு மட்டுமே உண்மையானது. கதையும் கதாபாத்திரங்களும் எனது கற்பனையே என்கிறார் அட்வுட்

முடிவற்ற நீர்ப்பரப்பில் மார்க்ரெட் அட்வுட் படகைச் செலுத்திக் கொண்டு தனியே பயணிக்கிறார். பேரமைதியான சூழல். அட்வுட்டின் உறுதியான கைகள் துடுப்புத் தள்ளுகின்றன. தீவில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். அட்வுட்டை பற்றிய இந்த ஆவணப்படத்தில் அவரது காதலர், தாய் தந்தை மகள் நண்பர் எனப் பலரும் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒரு காட்சியில் அட்வுட் தன் மகளுக்கு “Treasure Island” நாவலைப் படித்துக் காட்டுகிறார். அப்போது அவரது முகபாவம் எத்தனை அழகாகயிருக்கிறது.

அட்வுட்டினைப் பற்றிய படம் என்றாலும் அவரது அம்மாவே என்னை அதிகம் கவர்ந்தவர். அவர் சமைத்தபடியே தன் மகளைப் பற்றிப் பேசுகிறார். உணவு தயாரிப்பது மற்றவர்களை அதிகம் சந்தோஷப்படுத்தும் விஷயம் என்று சொல்லும் அவர் தன் மகள் சிறுவயதிலே எழுத துவங்கியதை பெருமையோடு சொல்கிறார். இது போலவே தான் மார்க்ரெட்டின் தந்தையும் தயக்கத்துடன் வியப்புடன் தன் மகளின் படைப்பாற்றலை, அவளை வளர்த்த விதத்தைப் பற்றிப் பேசுகிறார்

அட்வூட்டின் இணையர் கிரேம் கிப்சன் தங்களின் காதல் மற்றும் அட்வுட்டின் கவிதைகள் பற்றிப் பேசுகிறார்.

ஆவணப்படத்தின் இயக்குனர் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர் போலவே ஒன்று கலந்திருக்கிறார்.  தீவில் அட்வுட்டோடு ஒன்றாக குளிர்காய்கிறார். ஒன்றாக நடக்கிறார். ஒன்றாக மது அருந்துகிறார். தோழமையான இருவர் சந்தித்து உரையாடிக் கொள்வது போலவேயிருக்கிறது

ஒரு காட்சியில் அட்வுட் காகிதப்பை ஒன்றை முகத்தில் அணிந்து கொண்டு யார் இந்தப் பெண் என ஒவ்வொருவராகக் கேள்வி எழுப்பும்படி செய்கிறார். அது ஆவணப்படம் எடுக்கும் ரபோவைக் கேலி செய்வது போலிருக்கிறது

••

மார்க்ரெட் அட்வுட் கனேடிய இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். கவிஞர். இவரது வரலாற்றுப் புனைவுகளும் அறிபுனைப் படைப்புகளும் தனித்துவமிக்கவை. தி ஹாண்ட்மெய்ட்ஸ் டேல் என்ற இவரது நாவல் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பபட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து முறை புக்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவர் அட்வுட். சில காலம் ஆங்கில இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

தி ஹாண்ட்மெய்ட்ஸ் டேல் மத அடிப்படைவாதத்தை விமர்சிக்கும் நாவலாகும். இக்கதையில் ஜில்லியட் குடியரசின் ஆளுநர்கள் கருத் தரிக்கக்கூடிய ஆரோக்கியமான பெண்களைத் தங்களின் பணிப்பெண்களாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வேலை குழந்தை பெற்றுத் தர வேண்டும் என்பதே. ஆனால் அந்தக் குழந்தைகளின் மீது அவர்கள் உரிமை கொண்டாட முடியாது பணிப் பெண்கள் யாவரும் சிவப்பு நிற உடை அணிந்தவர்கள். இந்தக் கண்காணிப்பு உலகிலிருநது தப்பி முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். DYSTOPIAN NOVEL வகையில் மிகவும் கொண்டாடப்பட்ட படைப்பாக இந்நாவல் கருதப்படுகிறது.

கனடா நாட்டில் ஒட்டாவா நகரில் பிறந்த அட்வுட், டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் ராட்கிளிஃப் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதத்துவங்கினார்.  பின்பு சிறுகதை, நாவல்கள். விமர்சனம் என பல்துறைகளில் எழுதி தனித்துவமிக்க இலக்கியவாதியாக உருவானார்.

••

அட்வுட்டின் சிரிப்பு எவரையும் கவரக்கூடியது. குற்றவுணர்வும், அச்சமுமில்லாத கண்களையும் கொண்டவராகயிருக்கிறார் அட்வுட்.  தீவிரத்தன்மை கொண்ட மனதுடன் உள்ளார்ந்த ஏக்கம் கொண்டவராகவுமே அட்வுட்டை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆவணப்படத்தில் இலக்கியவாசிப்புத் தன்னை மேம்படுத்திய விதம் மற்றும் தனது படைப்புகள் குறித்த கருத்துகளை அட்வுட் வெளிப்படையாக முன்வைக்கிறார்.

உங்கள் கதாபாத்திரங்கள் பொம்மலாட்டத்தின் பொம்மைகளைப் போல எவராலோ ஆட்டுவிக்கப்படுகிறார்கள். ஏன் இத்தனை துயரம் மற்றும் வீழ்ச்சி  என ரபோ கேட்டபோது அப்படித் தான் நினைக்கவில்லை. தான் அதிகமும் பெண் கதாபாத்திரங்களையே எழுதியிருக்கிறேன். வாழ்க்கைச் சூழல் அவர்களுக்கு அப்படியாகத் தானே இருக்கிறது என்கிறார் அட்வுட்.

ஒரு காட்சியில்  தன் அம்மா நீந்தும் போது தான் அதிகச் சந்தோஷம் கொள்கிறார் என்கிறார் அட்வுட்.  காட்சி அட்வுட்டின் அம்மா  நீரில் நீந்துவதை காட்டுகிறது. வான் நோக்கியபடி அம்மா ஏரியில் மிதந்து கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் எத்தனை பரவசம். எவ்வளவு மகிழ்ச்சி.

எழுத்தாளர்களின் நேர்காணல் என்றாலே இரண்டு நாற்காலியில் எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது இந்த ஆவணப்படத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அட்வுட்டும் மைக்கேல் ரபோவும் தரையில் அமர்ந்து காலை மடக்கி உட்கார்ந்து கொண்டு தோழர்களைப் போலவே உரையாடுகிறார்கள். ஒன்றாக நடக்கிறார்கள். படகில் செல்கிறார்கள். கூடி வாசிக்கிறார்கள்.

மார்க்கெட் பெரிய பாக்கெட் உள்ள சட்டைகளை விரும்பி அணிகிறார். அவரது உடைத் தேர்வு மிகப் பொருத்தமாக உள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களே தனக்கு விருப்பமானவை எனக்கூறும் அட்வுட் தனது கதைகளுக்கு உந்துதலாக இருந்த மனிதர்கள். நிகழ்வுகள் பற்றி நிறையவே விவரிக்கிறார்.

எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படம் என்றாலே மறைந்தவருக்குச் செலுத்தப்படும் அஞ்சலி எனக் கருதப்படும் சூழலில் இப்படம் எழுத்தாளனின் ஆளுமையை, விருப்பங்களை, வாழ்க்கை முறையை, குடும்பத்தினர் காட்டும் அன்பினை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது.

எழுத்தைப் போலவே காட்சிகளும் நமக்கான வாசலைத் திறந்துவிட்டு நாமாக அனுபவித்துக் கொள்ளச் செய்கின்றன. எழுத்தாளனுக்குச் செய்யப்படும் உண்மையான மரியாதை என்பது  இது போன்ற ஆவணப்படங்களே.

•••

0Shares
0