உதயம் தியேட்டரில் இருந்து கேகேநகர் செல்லும் சாலையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையின் அருகில் உள்ள நடைபாதையில் புத்தகங்களை குவித்து போட்டிருக்கும் ஒரு பழைய புத்தக கடைக்காரருடன் எனக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். சில நாட்கள் எனக்கு போன் செய்து பழைய புத்தகங்கள் வந்துள்ளது பாருங்கள் என்று அழைப்பார்.
ஐம்பது வயதைத் தாண்டிய உருவம். பெயர் பாய். எப்போதுமே வெள்ளை ஜிப்பா அணிந்திருப்பார். பல ஆண்டுகாலமாக குப்பை தூசி நிரம்பிய காகிதங்களுடன் வாழ்ந்து நுரையீரல் பாதிப்பு கொண்டவர், சக்கரை நோயும் சேர்ந்து கொண்டிருந்தது. அருகாமையில் எங்கோ ஒரு அறை எடுத்து வைத்திருந்தார். அதில் எப்போது தங்குவார் என்று தெரியாது.
மற்றபடி காலை எட்டு மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை சாலையோர கடையில் தானிருப்பார். என்றைக்காவது அவர் புத்தகம் வாங்கி வருவதற்காக வெளி ஊர் போகும் நாளில் தினச்சம்பளத்திற்கு ஒரு ஆளை வைத்திருந்தார்.
புத்தகங்கள் வாங்க துவங்கிய நட்பு மெல்ல வளர்ந்து என்னை எங்கே பார்த்தாலும் நிறுத்தி தேநீர் வாங்கி தருவார். ஒரு நாள் ஒன்றாக சாப்பிடலாம் வாருங்கள் என்று உதயம் தியேட்டர் அருகில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்றார்.உங்க குடும்பம் எல்லாம் எங்கே இருக்காங்க பாய் என்று கேட்டதும். அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. இந்த பழைய காகிதங்கள் பொத்தகங்கள் தான் நம்ம குடும்பம் என்று கேலியாக சிரித்தபடியே சொன்னார்.
அவர் பல நாட்கள் சாக்கடையின் அருகில் குப்பையாக குவிந்து கிடந்த காகிதத்தின் மீது படுத்து உறங்குவதை கண்டிருக்கிறேன். ஒரேயொரு மடக்கு சேர் வைத்திருந்தார். அது ஒன்று தான் அவரது ஒரே சொத்து. அதைவிரித்து போட்டு கண்ணை மூடிக் கொண்டு படுத்து கிடப்பார்.
அவருக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் கூட ஒவ்வொரு எழுத்தாக கூட்டியே படிப்பார். ஆகவே எந்த புத்தகம் எதை பற்றியது என்று கேட்டு அறிந்து கொள்வதற்காக அடிக்கடி என்னை வந்து பார்ப்பார். சாலையை கடக்கும் போது உரிமையாக அழைத்து இது என்ன புத்தகம் ஆசிரியரே என்று கேட்பார்.
எழுத்தாளர் என்பதை அவர் எப்போதும் ஆசிரியர் என்று தான் சொல்வார். சில நாட்கள் அவருக்காக அந்த பழைய புத்தககடையில் நானே இருந்து விற்பனை செய்து தந்திருக்கிறேன். அது அவரோடு உள்ள உறவை மிக நெருக்கமாக்கியது.
நான் எடுத்துக் கொள்ளும் புத்தகங்களுக்கு ஒரு போதும் அவர் விலை நிர்ணயம் செய்தது கிடையாது. உங்களுக்கு தெரியும் ஆசிரியரே. நீங்களே பாத்து குடுங்க என்பார். நான் தரும் பணத்தை வாங்கி வைத்துக் கொள்வார். கூடுதலாக ஒரு போதும் கேட்டதேயில்லை
அவரிடமிருந்து பல அரிய தமிழ் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஒரு மழைக்காலத்தில் இரவெல்லாம் பலத்த காற்றோடு மழை பெய்தது. அடுத்த நாள் காலை நடை பயிற்சிக்காக அந்த பக்கம் போனபோது ஈரமாகி நனைந்த புத்தகங்களை அள்ளி சாலையில் போட்டுக் கொண்டு வருத்தம் தோய்ந்த முகத்துடன் பாய் உட்கார்ந்திருந்தார்.
என்ன பாய் இப்படி ஆகிருச்சி என்றேன். எல்லா பொத்தகமும் போச்சி சார். இதை இனிமே யாரு வாங்குவாங்க. ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தா மூடியிருப்பேன். வாங்க முடியாம போச்சி என்று புலம்பிக் கொண்டேயிருந்தார்.
ஸ்கூட்டர் மூடும் கவர் ஒன்று என் நண்பரிடமிருந்தது. அதை அவருக்காக வாங்கி கொண்டு வந்து தந்தேன். அடுத்த சில நாட்களில் திரும்பவும் மழையில் அதே புத்தகங்கள் நனைந்து கொண்டிருந்தது. என்ன பாய் ஆச்சி என்று கேட்டேன்.
அந்த கவரை பிளாட்பாரத்தில இருக்கிற ஒரு குடும்பம் கேட்டுச்சி. குடுத்துட்டேன். கைப்பிள்ளை வச்சிகிருக்கிற குடும்பம். அத்தோட அவங்க பொண்ணு ஒண்ணாம் வகுப்பு படிக்குது. அது புத்தகம் நனைய கூடாது பாருங்க என்றார்.
மழையால் சில வாரங்களுக்கு அந்த பழைய புத்தக கடையில் ஐந்து ருபாய்க்கு கூட விற்பனையாக வில்லை. எனக்கு போன் செய்து வரச் சொன்னார்.
மாலையில் அவரது கடைக்கு சென்றிருந்தேன். ஒரு புத்தகமாவது வாங்கிகிட்டு போங்க என்றார். நான் தேடி பார்த்தபோது எதுவும் கிடைக்கவில்லை. உங்க கிட்டே சும்மா பணம் கேட்க என்னமோ போல இருக்கு. ஏதாவது ஒரு புத்தகம் எடுத்துக்கோங்க என்றார். நானும் வேறு வழியில்லாமல் பாதி பியந்து போயிருந்த கிப்ளிங்கின் கிம் என்ற நாவலை எடுத்துக் கொண்டபடி பத்து ரூபாய் கொடுத்தேன்.
அவர் தயக்கத்துடன் நூறு ரூபா குடுங்க ஆசிரியரே என்றார். பணம் தந்ததும் அவர் சலிப்புடன் இருபது வருசமா இங்க தான் தொழில் பண்றேன். என்னை நம்பி ஒருத்தனும் நூறு ரூபா தர மாட்டேங்கிறான். ஈரக்காகிதம் மாதிரி கால்ல மிதிபட வேண்டியதான் இருக்கு என்றார்.
அவரை அடுத்த சில மாதங்களுக்கு காணவில்லை. மன நிம்மதியில்லாமல் எங்கோ வெளியூருக்கு போய்வந்ததாக சொன்னார். பிறகு ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு என் அறைக்கதவை தட்டினார். என்ன பாய் என்று கேட்டேன். புதுசா இன்னைக்கு சரக்கு வரப்போகுது. திருவள்ளுர்ல ஒரு ஆள் கிட்டே மொத்தமாக வாங்கிட்டேன். பத்தாயிரம் ரூபா சரக்கு. வட்டிக்கு வாங்கி இறக்கியிருக்கிறேன். வேன் இப்போ வந்துரும் என்றார்.
அதிகாலை பிளாட்பாரத்தில் உட்கார்ந்தபடியே நானும் அவரும் வேனில் இருந்து கொண்டு வந்து கொட்டிய புத்தகங்களை எடுத்து பிரித்தோம். யாரோ ஒரு ரசனையான மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த புத்தகங்கள். அவன் காலத்திலே தெருவிற்கு வந்து விட்டது.
நான் பல வருசமாக தேடிக் கொண்டிருந்த முப்பது நாற்பது புத்தகங்கள் கிடைத்தன. இரண்டு நாளில் அவர் நினைத்தை விட அதிக பணம் அவருக்கு கிடைத்துவிட்டது. ஒரு இரவு அவரை அபூர்வமாக திரையரங்கில் பார்த்தேன். மிக உற்சாகமாக இருந்தார். பியர் குடிச்சிருக்கேன். இந்த லாட்டு நமக்கு ரொம்ப லாபம் சார் என்று சிரித்தார்.
அதன் பின்பாக இன்னொரு நண்பருக்கு தேவையான புத்தகங்களை வாங்க அழைத்து கொண்டு போயிருந்தேன். நண்பர் தேர்வு செய்த புத்தகம் எதற்கும் பாய் பணம் வாங்கவில்லை. அதான் போதுமானது சம்பாதிச்சாச்சி. ஆசிரியர் நண்பருனு சொல்றீங்க. எடுத்துட்டு போங்க என்று நாற்காலியில் சாய்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தார்.
நடைபாதை கடைகள் அகற்றப்படுவது தீவிரமாக்கபட்ட போது அவரிடம் எங்காவது ஒரு கடை எடுத்துக் கொள்ளலாமே என்றேன். அவர் சிரிப்போடு அப்படி ஒரு கடை வச்சி நொடிச்சி போய் தான் பிளாட்பாரத்துக்கே வந்திருக்கேன். இனிமே அது ஒத்துவராது என்றார்.
சில மாதங்கள் நான் வெளியூர் போயிருந்த காலங்களில் அவர் என் நண்பர்களிடம் என்னை விசாரிப்பார். ஊர் திரும்பியதும் எனக்காக எடுத்து வைத்து பிறகு விற்றுவிட்ட புத்தகங்களை நினைவு கொண்டு எப்படியும் அது வரும். மறக்காமல் எடுத்து வைக்கிறேன் என்பார். அவரை பற்றி ஒரு வார இதழில் சிறிய குறிப்பு எழுதியிருந்தேன்.
அதை படித்த அருகாமை கடைக்காரர் சொல்லியிருக்க கூடும். கையில் அந்த இதழுடன் ஆசிரியரே என்ன பத்தி நல்லா எழுதியிருக்கீங்க என்று சந்தோஷமாகி என் கையை பிடித்துக் கொண்டார்.
அங்கிருந்து வீடு மாறிய பிறகு அவரை அடிக்கடி பார்ப்பது குறைந்து போனது. இடையில் ஒரு முறை புத்தகம் தேடி போன போது அவர் முகம் கொடுத்து பேசவேயில்லை . வால்ட் விட்மன் கவிதைகள் புத்தகம் ஒன்றை கையில் எடுத்து கொண்டு இருபது ரூபாய் பணம் தந்த போது அவர் சற்றே குரலை உயர்த்தி நூற்றிஐம்பது குடுங்க என்றார்.
என்ன பாய் இதுக்கு போய் இவ்வளவு பணம் கேட்குறீங்க என்றேன். யோவ் வாங்க இஷ்டம் இருந்த வாங்கு இல்லேன்னா வச்சிட்டு போ என்றார். பதில் பேசாமல் வைத்துவிட்டு நடந்தேன். அடுத்து இரண்டு முறை அவர் கடைக்கு போன போதும் அவரது இயல்பு முழுவதும் மாறியிருந்தது. காரணமில்லாமல் எரிச்சல்பட்டார். கத்தினார்.
ஒரு நாள் அவரை பேருந்தில் பார்தேன். அருகில் வந்து நின்றபடியே கால் வீக்கமாகிட்டு வருது ..முன்னே மாதிரி தொழில் நடத்த முடியலை என்றார். நான் அவரிடம் பேசவேயில்லை. அவர் வீடு மாறி போயிட்டீங்களோ என்று கேட்டார். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கீழேஇறங்கி நடந்தேன். சில மாதங்கள் அவரை சந்திக்கவேயில்லை.
என் பையனின் பாடநோட்டில் ஒட்டுவதற்காக விலங்குகள் படம் வேண்டும் என்று நேஷனல் ஜியாகிரபிக் இதழ் வாங்க அவரை தேடி போனேன். ஆள் மெலிந்து போயிருந்தார். முகம் இருண்டு போயிருந்தது. என் கையை பிடித்து கொண்டு நான் ரொம்ப மாறிப்போயிட்டேன் ஆசிரியரே. பயமா இருக்கு.. எனக்குனு யாருமே இல்லைனு தோணுது..நீங்க எதையும் மனசில வச்சிகிடாதீங்க என்றார். நான் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றேன்.
அன்று என் மகன் எடுத்த எந்த புத்தகத்திற்கும் அவர் காசு வாங்கிக் கொள்ளவில்லை. நான் கேட்காமலே பழைய ஆங்கில அகராதி ஒன்றை எனக்காக அவர் தந்தார். எதுக்கு என்று கேட்டேன். நானாக இதுவரை உங்களுக்கு புத்தகம் எதுவும் தந்ததில்லையே என்று சொல்லியபடியே டீ குடிக்கிறீர்களா என்று கேட்டார். அவரோடு சேர்ந்து டீக்குடித்தேன். அதன் பிறகு அவ்வப்போது அவரது கடையை பார்ப்பபேன். சாலையோரம் காகிதம் குவிந்து கிடக்கும். அவர் கண்ணில் படவேயில்லை.
இரண்டு வாரத்தின் முன்பாக அவரை தேடிச் சென்றிருந்தேன்
அந்த பாய் செத்து போயி நாலு மாசம் மேல இருக்கும். பழைய புத்தகம் எல்லாம் அள்ளி குப்பையில் போட்டாச்சி என்று அருகாமை கடைக்காரர் சொன்னார். அவர் இறந்து போன தகவல் கூட தெரியாமல் போய்விட்டதே என்ற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.
சாவை முன் உணர்ந்து கொண்டதால் தான் என் போல நண்பர்களின் அருகாமையை விட்டு விலகுவதற்காக அறிந்தே சண்டை போட்டாரோ என்று தோணியது. காலியாக இருந்த அந்த மரத்தடியினை பார்த்தபடியே இருந்தேன்.
அந்த வெற்றிடத்தின் ஊடே அவரது தோற்றம் தோன்றி மறைந்தது. மிகுந்த மனத்துயரமாக இருந்தது. நடந்து வீடு வந்து அவரிடம் வாங்கிய ஒவ்வொரு புத்தகமாக பார்த்துக் கொண்டிருந்தேன். புத்தகங்களோடு மனிதர்களுக்கு உள்ள உறவு புரிந்து கொள்ளவே முடியாதது என்று தோணியது.
ஒவ்வொரு முறை அந்த சாலையைக் கடந்து போகையில் அந்த வெற்றிடம் கண்ணில் படுகிறது. அவரது இழப்பு வெகு அந்தரங்கமானது. சொல்லில் அடங்காதது.
****