சிறுநடை.


கூடல் இலக்கிய சந்திப்பிற்காக மூன்று நாட்கள் மதுரையில் இருந்தேன். ஒரு நாள் மாலையில் நானும் எழுத்தாளர் பிரபஞ்சன் மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் மூவரும் நேதாஜி சாலை வழியாக  நடக்க துவங்கி மீனாட்சியம்மன் கோவிலை முழுமையாக சுற்றி புதுமண்டபம், வடக்கு வாசல், சிம்மக்கல் சாலை என  மூன்று மணி நேரம் நடந்து சிறிய வீதிகளுக்குள்  அலைந்து திரிந்தோம்.



நேதாஜி சாலை மிக பரபரப்பாக மாறியிருக்கிறது. வாகன போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் அந்த வீதியின் இயக்கத்தை பெரிதாக மாற்றியிருக்கிறது. திருவிழா கூட்டங்களில் தள்ளிக் கொண்டு போவது போல முன்னும் பின்னும் மக்கள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலம் கலக்காத மதுரைத்தமிழ் செவியில் நிறைகிறது.



மதுரையின் சிறப்பு சாலையோர கடைகள். எவ்வளவு சிறிய வணிகங்கள் நடக்கின்றன என்று அன்று தான் பார்த்தேன். ஒரு ஆள் தென்னங்குருத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். வயிற்றுக்கு நல்லது வாங்கி சாப்பிடுங்கள் என்று அவரது குரல் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.


இன்னொரு இடத்தில் ஒரு பெண் சுடச்சுட முறுக்கு சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். முறுக்கு விற்கும் கடையை நீண்ட நாட்களின் பிறகு அன்று தான் பார்த்தேன். ஒரு வயதான பெண் கிழிந்த சேலை ஒன்றை விரித்து அதில் வெள்ளைபூடுகளை கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தாள். மொத்தமாக நூறு வெள்ளைபூண்டுகள் இருக்ககூடும்.



தேங்காய் விற்பவள், இஞ்சி விற்பவள், மிளகாய் விற்பவள், குடை ரிப்பேர்காரன், பேனா ரிப்பேர் செய்கின்றவன், பனை விசிறி விற்பவன், பனியன் வியாபாரி, நாட்டு மருந்து வியாபாரி, காலி பாட்டில், மூடி விற்பவன், பழைய துணி விற்கும் ஆள், பால்கடை, கறுப்பு கயிறு விற்பவன், பழக்கடைகள், வெற்றிலை விற்பவள், ருபாய் நோட்டிற்கு அழுக்கு எடுத்து தருபவன், செல்போனுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு தருபவன். வேர்கடை வண்டிகாரன், கீ செயின் விற்பவன், போட்டோ பிரேம் கடை, காலண்டர் கடை, பழைய புத்தகம் விற்பவன், சீப்பு, கேர்பின், ஸ்டிக்கர் பொட்டு விற்பவள், சுருக்கு பை விற்பவர், சுரைக்காய் விற்பவள், இளநீர் விற்கும் ஆள், வளையல்கடை, சுண்ணாம்பு விற்பவன், என்று ஆயிரத்தோரு வகை விற்பனையாளர்களை காணமுடிகிறது. இவர்களின் உலகம் தனித்துவமானது.


மதுரையின் பிரதான வீதிகளை விடவும் குறுகலான சந்துகள் மற்றும் சிறிய வீதிகளை எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு மேல் செல்லமுடியாது சந்து முடிந்துவிட்டது என்று நினைக்கும் இடத்தில் சிறிய இடைவெளியிருக்கும். அதை ஒட்டியே தாழ்வான வீடு கூட இருக்கும். அதற்குள்ளாக நடந்து சென்றால் அடுத்த வீதிக்கு வந்துவிடலாம். கோவில் அந்த நகரின் இயக்கத்தை தன் வளர்ச்சியோடு சேர்த்து மாற்றிக் கொண்டேயிருக்கிறது.


சின்னஞ்சிறு வீதிகளுக்கு நடந்து அலைந்தோம். ஒவ்வொரு வீதியினுள்ளும் நூற்றாண்டுகால நினைவுகள் புதையுண்டிருக்கின்றன. மதுரை ஒரே நேரத்தில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.


ஒரு வீதியின் நுழைவாசலில் அதிநவீன செல்போன்கள் விற்கும் கடை உள்ளது. பத்தடி உள்ளே தள்ளி நடந்தால் நாயக்கர் காலத்து சத்திரம் வெளிறிய தூண்களுடன் உள்ளது. இன்னும் நூறடி தள்ள நடந்தால் நகரின் இத்தனை பரபரப்பையும் கண்டுகொள்ளாமல் ஒரு வயதானவர் வீட்டு திண்ணையில் அமர்ந்தபடியே திருஅருட்பா பாடிக் கொண்டிருக்கிறார். தெருநாய் ஒன்று மிக சாவகாசமாக நடந்து போய்க்கொண்டிருக்கிறது. சுவர் ஒரம் சாத்தி வைக்கபட்டிருந்த சைக்கிள் ஏதோ ம்யூசியப்பொருள் போல உள்ளது.


இருபது ஆண்டுகளுக்கும் மேலாக  சுற்றியலைந்த போதும் மதுரை இன்றும் வியப்பிற்குரியதாகவே இருக்கிறது. அடிமனதில் மதுரை இன்னும் நான் முழுமையாக காணாத நகரம் என்றே தோன்றிக் கொண்டிருக்கிறது. மதுரையை காண்பதற்கு நடந்து அலைவது ஒன்றே வழி.


வெள்ளைக்காரர்கள் மட்டும் திறந்த ரிக்ஷாவில் போகிறார்களே என்று கல்லூரி நாட்களின் போது நானும் ஒரு நண்பனும் திறந்த ரிக்ஷாவில் மதுரைக்குள் சுற்றினோம். கூச்சமாகவும் எல்லோரும் நம்மை பார்த்துக் கொண்டேயிருப்பது போன்ற உணர்ச்சியும் மேலிட மேலமாசி வீதி போவதற்கு இறங்கி கொண்டுவிட்டோம். இத்தாலியும் பிரெஞ்சும் பேசத்தெரிந்த ரிக்ஷாக்காரர்களை மதுரையில் சாதாரணமாக காணமுடியும்.


மதுரைக்கு வந்து போகின்றவர்கள் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் பழமையான கடைகள், கடை விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் அப்படியே இருக்கிறார்கள். நடைபாதை வியாபாரிகள் கூட பல வருசமாக அதே இடத்தில் இருப்பதை கண்டிருக்கிறேன். பத்து வயதில் நான் பார்த்த காபி கடை உரிமையாளர் இன்றைக்கு வயதான தோற்றத்தில் அதே கடையில் அதே முக்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ரேடியோ இருந்த இடத்தில் புதிதாக ஒரு சிடி பிளேயர் வந்திருக்கிறது  அவ்வளவு தான் கடையில் ஏற்பட்ட மாற்றம்.


ஒய்எம்சிஏ புதிதாக மாற்றியமைக்கபட்டிருக்கிறது. அதன் முன்னே நின்றபடியே தமிழின் மிக முக்கிய நாவலான புயலிலே ஒரு தோணி எழுதிய எழுத்தாளர் பா. சிங்காரத்தை நினைவு கொண்டோம். அங்கே தான் சிங்காரம் ஒற்றை அறையில் தங்கியிருந்தார். அருகாமை கடைக்காரர்களில் ஒரு சிலருடன் அவருக்கு நல்ல நட்பிருந்தது. குறிப்பாக சலூன் வைத்திருந்த ஐஎன்ஏவை சேர்ந்த ஒருவரை தினமும் சந்தித்து பேசிக் கொண்டிருப்பார். சிங்காரம் இல்லாத அந்த மேன்சனை பார்த்தபடியே இருந்தோம். சிங்காரம் தன் நினைவுகளில் உள்ள மதுரையை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். ஆனால் எழுதாமலே போய்விட்டார்.


பழைய புத்தக கடைகள் நிரம்பிய  சந்திற்குள் சென்ற போது பாடப்புத்தகங்கள் விற்கும் நேரம் என்பதால் இலக்கியம் எல்லாம் இப்போ வராதீங்க என்று கடைக்காரன் அன்போடு விரட்டி அனுப்பி வைத்தான். கோவிலை சுற்றிய உலகம் முற்றிலும் மாறியிருக்கிறது. சிமெண்ட் தளமிட்ட வீதிகள், பயணிகள், பாதுகாப்பு சோதனைகள், தள்ளுமுள்ளுகள், பெரும்வணிக சந்தைக்குள் நுழைந்தது போலிருந்தது


புதுமண்டபம் காலி செய்யப்பட போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். புது மண்டபத்திற்குள் மிக அழகான சிற்பங்கள் உள்ளன. அதை காண்பதற்கு ஒரு நாள் வேண்டும். அத்தனை அழகான சிற்பங்கள். அதன் இருப்பு வெளித்தெரியாமல் கடைகள் சுற்றிலும் நிரம்பிவிட்டன. கோவிலின் அன்றாட காரியங்களுக்கான அத்தனை கடைகளும் புதுமண்டபத்திற்குள்ளாக இருக்கின்றன. விளக்குகள், திரி துவங்கி கோவில் அலங்காரங்கள் வரை யாவும் அதற்குள்ளாகவே தயாரிக்கபட்டு விற்பனையாகின்றன. புதுமண்டபத்து கடைகள் விசித்திரமானவை.குறிப்பாக அங்குள்ள டெய்லர்கள். அவர்கள் வெட்டிப்போட்ட விதவிதமான துணிகள்.  


மதுரையை சுற்றிலும் மிகப்பெரிய கோட்டை சுவர் இருந்தது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அதை 1830 களில் மாவட்ட ஆட்சிதலைவராக இருந்த பிளாக்பெர்ன் இடித்து அகற்ற உத்திரவிட்டார். இதற்கு உதவியாக இருந்த சர்வேயர் மாரட் மற்றும் பெருமாள் மேஸ்திரி பெயரில் இன்றும் மதுரையில் தனியான வீதிகள் இருக்கின்றன.


பழமையான வீடுகள் அதிகம் உள்ள நகரம் மதுரையே. குறிப்பாக மதுரையின் நான்கு வாசல்களை சுற்றிலும் உள்ள வீதிகள் இன்றும் கம்பி அழி போட்ட வீடுகளையும் , அலங்கார முகப்பு வைத்த வீடுகளையும் பார்க்க முடியும்.
அன்று நாங்கள் நடந்து திரிந்த போது வழியில் சிறுவர்களை காணவேயில்லை. வழக்கமாக கோவிலை சுற்றிய பகுதிகளில் விளையாடும் சிறுவர்களை பார்த்திருக்கிறேன். அன்றைய எங்கள் மாலை நடையில்  ஒரு சிறுவன் கூட கண்ணில் படவேயில்லை. ஒரேயொரு பூ விற்கும் சிறுமி தன் வயதை மீறிய குரலில் விற்பனை செய்து கொண்டிருந்தாள்.


சிறிய சின்னஞ்சிறு கோவில்கள், சாலையோர சாமிகள் என்று நெருக்கடியான சாலைக்குள்ளும் பக்தியும் வழிபாடும் ஒன்று கலந்திருந்தது. ரமணர் பிறந்த வீடு, எம். எஸ். சுப்புலட்சுமி வீடு மதுரை சோமுவின் வீடு என்று அருகாமை வீதிகளில் இருந்த வீடுகளை பற்றிய நினைவுகளை பேசியபடியே நடந்தோம். வடக்குமாசி வீதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிற்பங்கள் அற்புதமானவை. அதன் அருகில் ராமாயணசாவடி உள்ளது.


இரவு எட்டரை மணி அளவில் ரீகல் தியேட்டர் முன்பாக வந்து நின்று காபி சாப்பிட்டபடியே வாசக சாலையாகவும் தியேட்டராகவும் ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில் இயங்கிய ரீகல் இன்று தங்க ரீகலாகிவிட்டதை பற்றி பேசியபடியே நின்றிருந்தோம். கடைக்காரன் அந்த தியேட்டரில் பார்த்த ஆங்கில படங்களை பற்றி உற்சாகமாக சொல்ல துவங்கினான். ரீகல் தியேட்டர் நினைவுகள் என்று தனியாக பத்தி போடலாம். அவ்வளவு நினைவுகள் அது சார்ந்து உள்ளன. அநேகமாக மதுரையில் வசித்த, வந்து போன யாவருக்குள்ளும் ரீகலும் தங்கம் தியேட்டரும் ஏற்படுத்திய நினைவுகள் தனித்துவமாக இருக்க கூடும்.


அறையை நோக்கி நடக்கும் போது தஞ்சை திருச்சி மதுரை போன்ற எல்லா நகரங்களும் ஒரே சாடையில் இருப்பது போலதானிருக்கிறது என்றார். நான் ஒவ்வொரு நகரமும் மற்றொரு நகரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சகோதர சகோதரிகளின் முகங்களை போல என்றேன்.


பெரியார் பேருந்து நிலையத்தின் அருகாமையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்தோம். உறக்கதினுள்ளும் பேருந்தின் ஒசை கேட்டுக் கொண்டே  இருக்க கூடிய அறை. கைதொட்டால் ஒட்டிக் கொள்ளும் தூசியும் அழுக்குமான அறை. தண்ணீர் குழாயை திறந்துவிட்டால் மஞ்சள் நிறத்தில் கொட்டுகிறது.


ஒவ்வொரு அறைக்கும் தனியான கொசுக்களின் கூட்டமிருக்கிறது. அவை அடுத்த அறைகளுக்கு போவதேயில்லை. அறைக்கு வந்து சேர்ந்த போது இருபது வருசங்களுக்கும் மேலாக நான் சுற்றியலைந்த நகரம் அது என்பது மறைந்துபோய் ஏதோ புதிய ஊருக்குள் சுற்றி வந்தது போலவே இருந்தது.


ஒரு கிராமத்திற்குள் வருவதற்கு அதிகபட்சம் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அதனால் அந்த ஊருக்குள் வருபவர் மக்கள் கண்ணில் படாமல் நடந்து திரிந்து விட முடியாது. ஆனால் நகரங்கள் எண்ணிக்கையற்ற வழிகள் கொண்டவை. ஒரு வாசல் வழியாக நகரினுள் வந்து அலைந்து போனதை மற்றொரு வாசல் வழியாக வருபவன் அறிந்து கொள்ளவே முடியாது. மதுரையின் ஒவ்வொரு நுழைவாசலும் ஒரு இயல்பில் இருக்கின்றன. கோபுரம் தான் அதன் அடையாளம்.


இலக்கிய நண்பர்கள் சிலர் அறைக்கு வந்திருந்தார்கள். நள்ளிரவு வரை அறையில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னிரவில் தேநீர் குடிக்க மறுபடி வெளியே வந்த போது சாலையோரம் உட்கார்ந்து ஒருவன் சுவரில் ஏதோ வீரவாசகங்களை எழுதிக் கொண்டிருந்தான். பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. மதுரை விழித்துக் கொண்டுதானிருந்தது.


தேநீர் கடையில் உற்சாகமாக அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அருகாமை ஊர்களில் இருந்து பூ விற்பவர்கள் மதுரை மல்லிகைகளை விற்பனைக்கு கொண்டு வர துவங்கிவிடுவார்கள். பூ வணிகம் ஆரம்பமாகும் நேரம் என்றேன்.


குளித்து திருநீறு பூசி கையில் மஞ்சள் பையுடன் ஒருவர் அடுத்த நாளை துவங்கிய உற்சாகத்தில் வெளியூர் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். மதுரையில் திசைக்கொரு பேருந்து நிலையங்கள் இருக்கின்றன.


திருநீறு பூசிய முகத்தில் இருந்த உற்சாகம் கண்டபடியே நாங்கள் உறங்குவதற்காக அறையை நோக்கி நடக்க துவங்கினோம்.



****

0Shares
0