ஐமாக்ஸ்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் திரையரங்கு வளாகம் உள்ளது. அதை திரையரங்கம் என்று சொல்லி எளிமை படுத்த முடியாது.


அது ஒரு உலகம்.  பிம்பங்களின் பிரபஞ்சம். ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்தவர்கள் அதன்பிறகு வேறு எந்த திரையிடலையும் ரசிக்க முடியாது. வழக்கமாக நாம் பார்க்கும் திரையிடலை போன்று பத்து மடங்கு பெரிய திரை. படம் பார்க்கும் அனுபவமே அற்புதமானது.


 டிக்கெட்டின் விலை 25 டாலர்.  அதில் இரண்டு முறை சினிமா பார்த்திருக்கிறேன். கனவுலகிற்குள் நாம் நுழைந்துவிட்டது போன்ற திகைப்பும் வியப்பும் நெருக்கமுமாக படம் பார்ப்பது சிறந்த அனுபவம்.


மெல்போர்னிலும் ஒரு ஐமேக்ஸ் திரையரங்கு உள்ளது. அதன் உள்ளே  ஐமாக்ஸ் திரைப்படங்களுக்கான படச்சுருள் மற்றும் திரையிடும் முறை பற்றிய கண்காட்சி அமைந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் ஐமாக்ஸினுள் சுற்றுலா வருவது போல வந்து சுற்றியலைகிறார்கள்.


டுரிங் தியேட்டரில் படம் பார்க்க துவங்கி உலகின் அதி உன்னத திரையரங்கு வரை சினிமா பார்த்திருக்கிறேன். திரையரங்குகள் வெறும் சினிமா காட்சியகங்கள் மட்டுமில்லை. அது நம் நினைவுகளின் பிரிக்க முடியாத பகுதி


தமிழகத்தின் முக்கிய ஊர்கள் எல்லாவற்றிலும் உள்ள திரையரங்குகள் எனக்கு நன்றாக தெரியும். பண்டிகை நாட்களில் ஒரு நாளில் நான்கு படங்கள் பார்த்திருக்கிறேன். உலக திரைப்பட விழாக்களில் நாளைக்கு ஆறு அல்லது ஏழு படங்கள் வீதம் பத்து நாள் பார்த்துவிட்டு டெல்லியில்இருந்து ரயில் ஏறி கண்ணை மூடினால் ஏதேதோ படங்கள் ஒடிக்கொண்டேயிருக்கும்.


சென்னை, மும்பை, கல்கத்தா, காசி. திருவனந்தபுரம் பூனா, லக்னோ, டெல்லி, , போபால், புவனேஷ்வர், மைசூர், ஹசன், கோவா, டாக்கா, ஹைதராபாத் என்று அலைந்து திரிந்த நகரங்களில் வெவ்வேறு விதமான திரையரங்குகளில் படம் பார்த்திருக்கிறேன்.


கேரளாவின் ஒடேசா இயக்கம் திரையிடும் மக்கள் சினிமா முதல், புவனேஸ்வர் கடற்கரையில் நடக்கும் திறந்த வெளி திரைப்பட விழா வரை கண்டிருக்கிறேன்.
இன்று பெரும்பான்மை நகரங்களில் திரையரங்குகள் இடிக்கபட்டு வணிக வளாகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. மீதமுள்ள ஒரு சில திரையரங்குகளை  ரிலையன்ஸ் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விலைக்கு வாங்கி நவீனமயமாக்கி புதிய பெயர்களுடன் நடத்த துவங்கிவிட்டன.


டுரிங் தியேட்டர்கள் இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் நாலைந்து வருடங்களின் முன்பு பழனி அருகே ஒரு டுரிங்கில் படம் பார்த்திருக்கிறேன்.  சமீபத்தைய வருசங்களில் டுரிங் தியேட்டரே கண்ணில் படவில்லை


சினிமா வெறும் பொழுது போக்கு மட்டுமில்லை. அது வெவ்வேறு நினைவுகளாக பலருக்குள்ளும் படிந்திருக்கிறது. அதில் ஒரு பகுதி நினைவுகள் யாருடன் எந்த ஊரில் எந்த படத்தை பார்த்தோம் என்பது. இன்று நினைக்கையில் அது வியப்பாகவே இருக்கிறது.


சினிமாவிற்கு சரித்திரம் இருப்பதை போலவே சினிமா தியேட்டர்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.  இது முழுமையாக எழுதப்படாதது. ஒரு நாள் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த போது டிவியில் ஒடிக்கொண்டிருந்த ஒரு பாடலை காட்டி அவரது மனைவி . இது தான் நாம கல்யாணம் ஆனதும் நாராயணசாமி தியேட்டர்ல பார்த்த முதல் படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா  என்று கேட்டாள்.  அவரும் ஆர்வமாக அதை நினைவு கூர்ந்தார்.


இப்போது அப்படியொரு தியேட்டரும்  இல்லை. அந்த படம் வெளியாகி நாலு நாள் கூட ஒடியதில்லை. ஆனால் அவர்களை பொறுத்தவரை அது மறக்கமுடியாத படம். காரணம் அவர்கள் திருமணத்தின் பிறகு சேர்ந்து பார்த்த முதல்படம்.


இப்படி சினிமாவோடு உள்ள தொடர்பு ஒவ்வொருவருக்கும் ஒருவிதத்தில் அந்தரங்கமானது.


என்னுடைய ஆச்சி சினிமாவே பார்த்தது கிடையாது. ஆனால் வீட்டில் யார் சினிமாவிற்கு கிளம்பினாலும் தானும் கூடவே கிளம்பி வந்துவிடுவார். அவரது வேலை சினிமா தியேட்டர் காவலாளியோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டியது. படம் முடிந்து நாங்கள் திரும்பி வரும்போது கூடவே வந்துவிடுவார். 


 தியேட்டரின் வெளியில் இருந்து இருந்து ஆச்சிக்கு நடிகர் நடிகைகள் பெயர்கள் யாவும் நன்றாக தெரியும். எந்த படம் ஒடியது. எது ஒடவில்லை என்று தெரியும்.


ஆனால் ஒரு நாள் கூட திரை அரங்கிற்குள் வந்து உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதேயில்லை. பிறகு வீட்டில் இருக்கலாம் தானே என்றால் பகல் எல்லாம் ஒடுங்கியிருந்த வீட்டிற்கு மாற்றான வெளி தேவைப்பட்டிருக்கிறது.


இப்படி பழகி பழகி சினிமா தியேட்டரில் வேலை செய்பவர்கள் பலரும் அதற்கு நண்பர்களாகியிருந்தார்கள்.


ஆச்சியைக் கண்டதும் சேரை எடுத்து போட்டு உட்கார சொல்லி வெற்றிலை பாக்கு வாங்கி தந்து படம்விடும்வரை தங்களது வீட்டுகதைகளை பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த உறவிற்கு என்ன பெயர் என்று இன்று வரை புரியவேயில்லை. 


திரையரங்கம் குறித்த அழியாத நினைவுகளை குசாபே டொர்னடோர் இயக்கிய சினிமா பாரடிஷோ என்ற இத்தாலியபடம்  மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது. அந்த படத்தை இருபது முறைக்கும் மேலாக பார்த்திருக்கிறேன்.


நான் திரையரங்குகளில் இரவு காட்சி என்று அழைக்கபடும் செகண்ட்ஷோ பார்த்து பழகியவன். இந்த காட்சிக்கு என்றே வரும் விசேசமான மனிதர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். அநேகமாக நான் பார்த்தபெரும்பான்மை திரைப்படங்கள் இரவுக்காட்சிகள் தான். பத்தரை மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் படம் துவங்க எப்படியும் பதினோறு மணியாகிவிடும்.


எல்லா நாளும் இரவில் படம் பார்க்காமல் தூங்க முடியாதவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் வீட்டிலோ கடையிலோ ரெண்டு இட்லி அல்லது பரோட்டா சாப்பிட்டுவிட்டு தியேட்டர் பக்கமாக சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள். அதில் ஒரு வயதானவரை பலநாட்கள் பார்த்திருக்கிறேன். தரை டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து நிம்மதியாக திரையின் முன்பாக சுருண்டு உறங்கிவிடுவார். எதற்காக வீட்டில் உறங்கலாம் தானே என்று தோன்றும். ஆனால் அது அவரது பழக்கம் போலும்.


இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்க பொதுவாக பெண்கள் அதிகம் வருவதேயில்லை. புதுப்படங்களுக்கு தப்பி தவறி யாராவது பெண்கள் வந்துவிட்டால் திரும்பி போகும் போது பாதுகாப்பாக அழைத்து போக வீட்டிலிருந்து  தைரியமான ஆம்பளைகள் கையில் டார்ச்லைட்டுடன் வந்திருப்பார்கள்.


செகண்ட் ஷோ சினிமாவிற்கு என்று தவறாமல் வருபவர்கள் ஹோட்டலில் வேலை செய்பவர்கள்.  நாள் முழுவதும் வேலை செய்து களைத்து போன அவர்கள் குளித்து மாற்றுஉடைகள் அணிந்து தியேட்டருக்கு வந்து சேர்வார்கள். பத்தாவது முறை சினிமா பார்க்கும் போது கூட கைதட்டி விசில் அடித்து உற்சாகமாக பார்ப்பார்கள்.


 
ஹோட்டலில் வேலை செய்பவர்களில் நிச்சயம் ஒன்றிரண்டு வீட்டை விட்டு ஒடிவந்த சிறுவர்கள் இருப்பார்கள். அவர்கள் முகத்தை பார்த்தமாத்திரம் அது தெரிந்துவிடும். அவர்கள் சினிமா தியேட்டரில் யாராவது தெரிந்தவர்கள் வந்து பிடித்துக் கொண்டு போய்விடுவார்களோ என்ற பயத்தோடு திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்கு என்று சில சலுகைகள் இருந்தன. சில நேரம் பிடித்த பாடல்களை மறுமுறை போடுவார்கள். அடுத்த நாள் திரையிடப்போகும் படத்தின் சண்டை காட்சியோ பாடல் காட்சியோ முழுமையாக போடப்படும். அதை விடவும் மறுநாள் வெளியாக உள்ள படத்தின் ஸ்டில்களை முந்திய இரவே பார்த்துவிடலாம்.


அதே நேரம் இரண்டாம் ஆட்டம் முடிந்து சைக்களில் திரும்புகின்றவர்களை சந்தேக கேஸில் பிடிப்பதற்கு என்றே காவலர்கள் இருப்பார்கள். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் டிக்கெட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அப்படியும் சைக்கிளில் டைனமோ இல்லை என்று பிடித்து விடுவார்கள்.


இத்தனை சிக்கல் இருந்தாலும் இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து பாதி இருண்ட வீதியில்  படத்தின் கதையை பேசிக்கொண்டே நடந்து போவதில் இருந்த உற்சாகம் இன்றைக்கு அதிநவீன அரங்கில் பார்த்துவிட்டு அவசரமாக வெளியேறி வீடு வரும் போது கிடைப்பதேயில்லை
**

0Shares
0