எழுத நினைத்த நாவல்


நாவல் எழுதுவதற்காக ஐரோப்பிய எழுத்தாளர்கள் யாருமில்லாத தீவுகள் , பனிமலை சார்ந்த விடுதிகள், மலைநகரங்களை தேடிச் சென்று அங்கேயே தங்கியிருந்து எழுதுவார்கள் என்று வாசித்த நாளில் இருந்து நானும் அப்படி எங்காவது பயணம் செய்து நாவல் எழுதலாமே என்று விருப்பமாக இருந்தது.


பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை கோணங்கியும் நானும்  இதற்காக தனுஷ்கோடிக்கு சென்று சில நாட்கள் இருந்தோம். கடல் பார்த்ததை தவிர ஒன்றும் நடக்கவில்லை.



காட்டிற்குள் போனால் இயற்கையோடு இணைந்த மனநிலை உருவாகும். புதிதாக  நாவல் எழுதலாம் என்று தோன்றியது.  மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள கர்நாடகா வனப்பகுதியில் உள்ள வனகாவலர் விடுதி ஒன்றினை நண்பரின் உதவியால் பெற்று பயணம் கிளம்பினேன்.


எழுதத் தேவையான காகிதங்கள். படிப்பதற்கு விரும்பிய புத்தகங்கள், மாற்றுஉடைகளுடன்  காட்டிற்குள் செல்லும் வரை மனது மிக சந்தோஷமாக இருந்தது. நான் பயணம் செய்தது பிப்ரவரி மாதம்  என்பதால் காடு குளிருடன் பாதி உறக்கத்தில் இருந்தது. 



அந்த வனவிடுதியில் மின்சார வசதி கிடையாது. சிறியதாக நாலு அறைகள் இருந்தன. ஒன்றில் வனகாவலர் ஒருவர் தங்கியிருந்தார். காட்டின் நடுவே இருந்ததால்  தொலைபேசியும் கிடையாது.  பரபரப்பான அன்றாட உலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கபட்ட இடமது. வனத்துறையினர் வாகனம் தவிர வேறு எதுவும் அங்கே வரவும் முடியாது. எங்களுக்கு சமைப்பதற்காக ஒரு கிழவர் இருந்தார். மற்றபடி பூச்சிகளின் சப்தமும் காற்றில் அசையும் இலைகளும் பறவைஒலியும், நீரோடும் சப்தமும் மட்டும் தான்.


முதல் நாள் போனதும் அறையின் மரக்கட்டிலில் படுத்தபடியே ஜன்னலுக்கு வெளியே தெரியும் பருத்த மரமொன்றை பார்த்தபடியே இருந்தேன்.  நிச்சயம் நூற்றாண்டை கடந்த மரமாக இருக்கும் என்று தோன்றியது. வனவிடுதியை சுற்றிலும் பழுத்து உதிர்ந்த இலைகள் அடர்ந்து கிடந்தன.  அன்றைய பகல் முழுவதும் அறைக்குள்ளாகவே இருந்தேன்.


மாலை நேரம் காட்டின் உள்ளே நடந்து போக ஆரம்பித்தேன். சருகுகளில் நடப்பது ஆனந்தமாக இருந்தது. என் முதுகிற்கு பின்னே ஏதோ பெயர் தெரியாத பறவை கத்திக் கொண்டிருந்தது. என்ன எழுதப்போகிறேன் என்று மனதில் ஒரு திட்டமும் இல்லை. காட்டு ஒடையில் இறங்கி குளித்தேன்.


யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. திரும்பி பார்த்தால் யாருமேயில்லை. காடு நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்ச்சி அது என்று தோன்றியது.  ஈர உடலுடன் ஒரு பாறையின் மீதேறி நின்றபடியே ஆகாசத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். வெளிறிய மேகங்கள், காற்று வேகமாக ஆரம்பித்தது.


நடந்து அறைக்கு திரும்பிய போது வழியில் ஒரு காட்டுகோழி போய்க் கொண்டிருப்பதை கண்டேன்.  பார்த்துக் கொண்டிருந்த போதே இரவு கவ்வத்துவங்கியது.


காட்டிற்கு இரவு வேகமாக வந்துவிடுகிறது என்பதை அன்று தான் கண்டேன். கண்முன்னே நான் பார்த்துக் கொண்டிருந்த மரங்கள், பிரம்மாண்ட மலை யாவும் மறைந்து போயின. காட்டின் இருள் உலர்ந்து போயிருந்தது. யானைகள் அசைவது போல முன்பின்னாக அசைந்து கொண்டிருந்தது  இருள். என் அறையில் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்துவிட்டு ஒரு பக்கமாவது எழுதலாம் என்று நினைத்துக் கொண்டேன்.


மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அந்த அறை மிக விநோதமாக இருந்தது. வெளிச்சத்தின் மீது விருப்பமில்லாத இருட்டு  காற்றை அனுப்பி சுடரை அணைக்க போராடிக் கொண்டிருந்தது.  பூச்சிகளின் சப்தம் மாறியிருந்தது.  மனதில் ஒரு வார்த்தை கூட சுரக்கவில்லை. படிப்பதற்கும் மனதில்லை.


மெழுகுவர்த்தியை அணைத்துவிடலாம் போல தோன்றியது. நானே ஊதி அணைத்துவிட்டு இருளுக்குள் உட்கார்ந்திருந்தேன். இருட்டு  கரைந்து போவதை காண ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் அது  பழகியிருந்தது.


 சமையக்கார கிழவர் நடந்து வரும் சப்தம் கேட்டது. அவர்  அக்கறையுடன்  மெழுகுவர்த்தியில்லையா என்று கேட்டார். இருட்டில் இருப்பது நன்றாகவே இருக்கிறது என்றேன். அவர் சிரித்தபடியே நமக்கு தான் வெளிச்சம் வேண்டியிருக்கிறது. காட்டில் உள்ள யானை, சிங்கம் புலி எதுக்கும் தேவையில்லை,அது இருட்டிற்கு பழகியது என்றார். 


நான் எழுதும் மனநிலையில் இருந்து விடுபட்டு காட்டின் நெருக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தேன். இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை. காற்று ஒடுங்கியிருந்தது.


அவர் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். மணியை பார்த்தேன். ஏழு மணியாகியிருந்தது. இந்த நேரத்தில் சாப்பிடுவதா என்று தோன்றியது. அவரோ சாப்பிட்டால் உறங்கிவிடலாம் என்றார். அதுவும்  சரிதான், சாப்பிடலாம் என்றேன். சாப்பிடுவதற்காக  விளக்கை கொளுத்திய போது வண்டுகள் வரத்துவங்கின.  சாதமும், புளிக்குழம்பும் தந்தார். 


 அடுத்த ஐந்தாவது நிமிசத்தில் அவர் அங்கிருந்த மரப்பலகை ஒன்றில் சுருண்டு படுத்துக் கொண்டுவிட்டார்.


நான் தனித்திருந்தேன்.  பின்னிரவில் உறங்கி பழகிய எனக்கு இரவு நீண்டு கொண்டேயிருந்தது. எங்கேயும் போகவும் முடியாது. அறைக்குள்ளாகவே இருக்கவும் முடியவில்லை.  யாரோ நடப்பது போன்ற ஒரு சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அதிகாலையில் எழுந்து எழுதலாம் என்று சுயசமாதானம் சொல்லிக் கொண்டு நானும் படுத்துக் கொண்டேன்.  எப்போது உறங்கினேன் என்று தெரியாது. ஆனால் குளிர் நிரம்பி அறையெங்கும் நடுக்கம் கொள்ள துவங்கியிருந்தது.


என்னிடம் குளிராடைகள் எதுவுமில்லை. ஒரேயொரு மப்ளர் மட்டுமேயிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி இங்கே ஏன் வந்திருக்கிறாய் என்று குளிர் கேட்பது போலிருந்தது. தாள முடியாத குளிர். எங்கே போய் ஒண்டிக் கொள்வது என்று புரியவில்லை.  மரக்கட்டிலில் சுருண்டு படுத்துக்கிடந்தேன். உறக்கம் பறிபோய்விட்டது.


யாரோ அறைக்கதவை தட்டுவது போலவே தோன்றியபடி இருந்தது. சுவாச கோளங்களில் குளிர் நிரம்பியது.  மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து அதன் சூட்டினை கையில் ஏந்தி ஏந்தி உடல் எங்கும் நிரப்ப முயன்றேன். சில நிமிசங்கள் கூட தாங்கவில்லை. போராட்டத்துடன் கூடிய இரவில் என்னை அறியாமல் உறங்கி விழித்த போது காட்டின் பகல் துவங்கியிருந்தது. 


அந்த சமையற்கார கிழவர் கூட  இப்போது இல்லை. ஈரம்படிந்த தரை, வெயிலேறாத மரங்கள், வனப்பாதை குழப்பம் தருவதாக இருந்தது. குளித்துவிட்டு வந்து எழுத ஆரம்பித்துவிட வேண்டும் என்று அருகாமையில் உள்ள நீரோடையில் குளித்துவிட்டு வந்து பேப்பரை எடுத்து கொண்டேன். 


நான் தனியாக இருக்கிறேன். காட்டின் ஒசை கேட்டுக் கொண்டிருக்கிறது. மரங்கொத்தி எங்கிருந்தோ ஒலு மரத்தை கொத்துகிறது. இப்படியான எண்ணங்கள் தான் ஒடியதே அன்றி ஒரு வரி எழுத முடியவில்லை. 


இயல்பாக எழுத முடிந்த எனக்கு அந்த சூழல் வார்த்தைகளை அனுமதிக்க மறுப்பதாக தோன்றியது. எழுந்து காட்டின் உள்ளே நடந்து சென்றேன்.  ஒரு காட்டுபூனை என்னை திரும்பி பார்த்துவிட்டு மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தது. 


பருத்த மரம் ஒன்றில் நிழலில் இருந்த பாறையில் ஏறி படுத்துக் கொண்டபடியே என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
எழுதுவதற்கு இடம் முக்கியமில்லை. மனநிலையும் அதை கெடுக்காத நிசப்தமும் தேவை என்று தோன்றியது. கூடுதலாக பரிச்சயமான இடத்தில் இருப்பது போல மனது இயல்பாக இல்லாமல் எழுத முடியாது என்றும் தோன்றியது.


பாறையின் மீது ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் அதனுடன் ஏதாவது பேச விரும்பினேன். அது அங்குமிங்கும் பறந்துவிட்டு தண்ணீர் ஒட்டத்தின் அருகில் இருந்த ஒரு செடியில் அமர்ந்தபடியே சொக்கிப் போக துவங்கியது. இங்கே இருந்தால் என்னால் நிச்சயம் எழுத முடியாது என்று தோன்றியது. பகல் முழுவதும் அந்த மரத்தடியில் படுத்துகிடந்தேன்.


ஒரு மரத்தை சார்ந்து எவ்வளவு இயக்கம் இருக்கிறது என்பதை அன்று தான் கண்டுகொண்டேன். அணில்கள் ஏறி விளையாடுகின்றன. எறும்பு அலைகிறது. பறவைகள் வந்து போகின்றன. வண்டுகள் அதை ஒட்டி கொள்கின்றன. காற்று இலைகளோடு விளையாடுகிறது. குரங்குகள் கிளைவிட்டு கிளை தாவுகின்றன.  மரம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.


கண்ணாடி சிறகுகள் கொண்ட தும்பிகளின் கூட்டம் ஒன்று பாறையை நோக்கி வருவதும் திரும்பி போவதுமாக போக்கு காட்டிக் கொண்டிருந்தது.


அன்றிரவு சமையற்காரகிழவரிடம் இருந்த கம்பளி ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் குளிர் ஒருவிதமாக இருந்தது. கதவை காற்று தள்ளி திறந்துவிட்டிருந்தது. எழுந்து போய் மூட வேண்டும் என்று கூட தோணாமல் படுத்துகிடந்தேன். அன்றிரவும்  ஒரு வரி எழுத முடியவில்லை.


இப்படியாக காட்டிற்குள் ஆறு நாட்கள் கடந்து போனது. காலை நேரம்  காட்டில் நடப்பது ஆனந்தமாக இருந்தது. மதியம் காடு மயக்கம் கொண்டுவிடுகிறது. இரவு காடு விசித்திரமாகிறது.



அந்த நாட்களில் ஒரு உண்மையை கண்டுபிடித்தேன். பூனைகள் எங்கே வேண்டுமானாலும் சுற்றியலையும். ஆனால் அது உறங்குவதற்கு  என்று ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு அங்கே போய் தான் படுத்துக் கொள்ளும். எழுத்தாளனும் அப்படி தான் என்று.


எழுதுவதற்கான இடம் என்பது ஒரு அந்தரங்கமான வெளி. அதை எழுத்தாளனின் அகம் தேடி கண்டு கொள்கிறது. வீட்டிலே பாதி இருட்டான ஒரு மூலையில் தான் பல வருசம் எழுதிக் கொண்டிருந்தேன். கணிப்பொறி வந்தபிறகு தான் வெளிச்சமான அறையும் உரிய மரமேஜைகள் வந்து சேர்ந்தன. ஆனால் இன்றைக்கும் எழுதும் போது அறைக்கதவை மூடிக் கொள்கிறேன். அந்த தனிமை சொல்லி விளங்க வைக்க முடியாதது.


காட்டின் அகம் ஒவ்வொரு நாளும் ஒருவிதமாக இருந்தது. ஒரு நாள் மலைவாசி ஒருவனை சந்தித்து அவனோடு காட்டிற்குள் வெகுதூரம் நடந்து போய்வந்தேன். அவன் ஒவ்வொரு பாறையையும் அறிந்திருந்தான். இலை அசைவதிலிருந்தே அவன் என்ன விலங்கு அதன் பின்னால் போகிறது என்று சொன்னான்.


ஆறாம் நாள் வனத்துறை நண்பர் என் அறைக்கு வந்து என்ன சார் நாவல் எப்படி போய்கிட்டு இருக்கு  என்றார். நான் சிரித்தபடியே இன்னும் ஆரம்பிக்கவேயில்லை என்றேன். இங்கே செட் ஆகலைன்னா சொல்லுங்க. இன்னொரு இடம் இருக்கு என்று உயரமான மலையை காட்டினார்.


மலை காடு கடல் பாலை என்று எங்கே வேண்டுமானாலும் சுற்றியலையலாம்.  ஆனால் எங்கேயும் தங்கியிருந்து  என்னால் எழுதமுடியாது என்ற உண்மையை அன்று தான் உணர்ந்து கொண்டேன்.


இன்று வரை  வீட்டில் உள்ள என் அறையை தவிர வேறு எங்கும் எழுத முடிவதில்லை. பயணங்களில் தவிர்க்க முடியாமல் எழுத வேண்டிய சூழல் உருவான போது லேப்டாப்புடன் இடம் தேடி போராடி சில பக்கங்கள் எழுதியிருக்கிறேன். அந்த எழுத்தில் ஏதோ குறையிருப்பது போலவே தோன்றிக் கொண்டிருக்கும்.


எதை எழுத நினைத்து அந்த காட்டிற்கு போனேன் என்று இன்று வரை தெரியவில்லை. ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதிய நாவல்களை விட எழுத நினைத்த நாவல்களின் எண்ணிக்கை அதிகம். அதை பற்றிய கற்பனையும் கனவும் உருவாகி சில பக்கங்கள் கூட எழுதியிருப்பார்கள். ஆனால் தொடரமுடியாமல் கைவிட்டு விடுவார்கள். உதிர்ந்த சிறகை போல அவை எழுத்தாளனின் அறைக்குள்ளாக பறத்தல் மறந்து கிடக்கும்.


நான் எழுதுவதற்கு தேவை நூறு சதவீத நிசப்தம். நடமாட்டம் ஒய்ந்த இரவு. ஒரு பாட்டில் தண்ணீர். அவ்வளவே. ஆனால் இந்த மூன்றையும் விட எழுதும் மனநிலையும் அதை உருவாக்கும் நினைவுகளும், அகதூண்டுதல்களும் மிக மிக அவசியம். 



என் கணிப்பொறி ஒரு இயந்திரம் என்பது மறந்து போய் அதனுடன் உயிரோட்டமான நெருக்கம் உள்ளது. இன்றைக்கும் கணிப்பொறியில் ஏதாவது சிக்கல் என்றவுடன் குழந்தைக்கு உடல்நலமில்லை என்பது போல பதற்றம் கொண்டுவிடுகிறேன்.


 ஒவ்வொரு நாளும் கணிணி முன் அமரும் தருணங்களில் சந்தோஷம் கொள்கிறேன். என் அந்தரங்கங்களின் தோழன் அல்லவா இந்த கணிணி.


எல்லா நாவலின் பின்னும் எழுத்தாளனின் எண்ணிக்கையற்ற பகலிரவுகளும் தனிமையும் நினைவுகளும் சேர்ந்தே நெய்யப்பட்டிருக்கின்றன.


அது வாசகர் அறியாதது.


***


 

0Shares
0