உறங்கும் நாய்கள்

புதிய குறுங்கதை

மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு வட்டத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். எனது குடியிருப்பின் படிக்கட்டை ஒட்டிய இடம் சாம்பல் நிற நாயுடையது. இப்போது அந்த இடத்தில் மூன்று நாய்கள் வளையம் போல உறங்கிக் கொண்டிருந்தன. காலில் ஒன்றை மடக்கி இன்னொரு காலை பின்னங்கால் மீதிட்டு வாலைத் தளர்த்தி ஒடுங்கிய முகத்துடன் உறங்கும் மூன்று நாய்களுக்கு நடுவே நீல நிற கிழிந்த துணியொன்று கிடந்தது விநோதமாகத் தோன்றியது. என்ன ஆயிற்று இந்த மூன்று நாய்களுக்கும். யாராவது படியை நோக்கி வரும் போது கறுப்பு நாய் லேசாகத் தலையைத் தூக்கி பார்த்தது. அப்போதும் அதன் உடலில் அசைவில்லை. கடந்த சில நாட்களாகவே மூன்று நாய்களும் தீராத உறக்கத்தால் பீடிக்கப்பட்டவை போலப் பகலிலும் தளர்ந்து கிடந்தன. அதன் காதுகள் உதிர்ந்த இலை காற்றில் அசைவது போல லேசாக அசைவதைக் கண்டேன். நாயின் பாதித் திறந்த கண்களுக்குள் பசியும் நோயின் வேதனையும் வெளிப்பட்டன. சாம்பல் நிற நாய் முதுமையை அடைந்துவிட்டது. அந்த நாய் ஒரு நாள் வாந்தியெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளாகவே எங்கள் வீதியில் மூன்று நாய்களும் தெருவில் ஒன்றாக அலைவதைப் பார்த்திருக்கிறேன்.. தெரு நாய்களுக்கு பெயர்கள் கிடையாது. நிறம் தான் அதன் அடையாளம். ஒட்டமும் நடையுமாக இருக்கும் இந்த நாய்களில் ஒன்று சப்தமாகக் குரைத்தபடி வாகனங்களைத் துரத்தி ஓடக்கூடியது. காரை துரத்தியோடுவதால் என்ன கிடைக்கிறது என்று புரியவில்லை. நாய்களின் விசித்திரமது. சாம்பல் நிற நாய் சிறுவர்களைப் பார்த்தால் மட்டுமே குரைக்கக் கூடியது. அதற்கு என்ன கோபமே தெரியவில்லை. கறுப்பு நிற நாய் தொட்டிச்செடிகளுக்கு அருகே போய்த் தான் படுத்துக் கொள்ளும். அந்த நாய் சில நேரம் உதிர்ந்து கிடக்கும் பூக்களை முகர்ந்து பார்ப்பதையும் கண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களாக அந்த நாய்கள் ஒரே இடத்தில் கொடியிலிருந்து விழுந்த துணிகள் கிடப்பது போலிருந்தன. அவற்றின் மௌனம் என் மனதை வேதனைப்படுத்தியது. சாவை நெருங்கும் நாயிற்கு மற்ற இருநாய்களும் துணையிருப்பதாகவே உணர்ந்தேன். முதுமையடைந்த நாயின் முகபாவம் மனதில் உள்ளதைக் கேட்கத் தெரியாத சிறுமியின் சாடையை ஒத்திருந்தது.

வெள்ளிக்கிழமை காலையில் மூப்படைந்த நாய் இறந்து போயிருந்தது. அதன் அருகில் இரண்டு நாய்களும் முன்பு போலவே படுத்திருந்தன. குடியிருப்பின் காவலாளி இறந்துகிடந்த நாயின் முகத்தில் மொய்க்கும் ஈக்களை விரட்டியபடியே நாயை எங்கே புதைப்பது என்பதைப் பற்றிக் குடியிருப்பு நிர்வாகியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

இறந்த நாயின் முகத்தில் வெயில் விழுந்து கொண்டிருந்தது. அசைவற்ற நாயின் வாலைக் காணுவது மிகுந்த வருத்தமளித்தது அதுவரை உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களும் மெல்ல எழுந்து கொண்டன. சோம்பலான நடையுடன் அவை வீதியில் மெதுவாகச் சென்றன. தெருவைக் கடந்து மேற்கே செல்லும் போது எதையோ பறி கொடுத்தது போலத் திரும்பிப் பார்த்துக் கொண்டன. பின்பு அவற்றை எனது வீதியில் பார்க்கவேயில்லை.

•••

0Shares
0