நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையாளர்கள், ஆசிரியர்கள். நூலகர் மற்றும் நூலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்.

படிப்பதற்காகவே வாழுகிறவர்கள் என்று சிலரை நினைத்துக் கொள்வேன். அதில் முக்கியமானவர்கள் வேலூர் லிங்கம் மற்றும் ஆம்பூர் அசோகன். இருவரும் ஆண்டு முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். புதிய புத்தகங்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். புத்தகங்களுடனே வாழுகிறார்கள்.
வேலூர் லிங்கம் ஒரு புத்தகக் கண்காட்சி தவறாமல் சென்றுவிடுவார். ஆன்லைன் மூலமாகவும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புத்தகம் வாங்குகிறார். தன் வீட்டில் ஆயிரக்கணக்கான நூல்களை வைத்திருக்கிறார். அவரது வீடு முழுவதும் புத்தகங்கள் தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர வாசகரான லிங்கம் தன்னை என்றும் வழிநடத்துபவர் தஸ்தாயெவ்ஸ்கியே என்கிறார். அன்றாடம் அவருடன் நான் பேசக்கூடியவன். படித்த புத்தகங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வார்.
தான் நல்ல ஆரோக்கியத்துடன் தெளிந்த மனதோடு இருப்பதற்கு ஒரே காரணம் வாசிப்பது தான் என்கிறார். விவசாயத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அவர் புதிதாக எழுத வரும் இளம்படைப்பாளிகள் வரை வாசித்துத் தன் பாராட்டினை தெரிவிக்க கூடியவர்.

இவரைப் போலவே தேடித்தேடி நல்ல இலக்கியங்களை வாசிக்கக் கூடியவர் ஆம்பூர் அசோகன். ஆஸ்திரியா மற்றும் ஜெர்மானிய இலக்கியங்களை மிகவும் விரும்பிப் படிக்கக் கூடியவர். வாசிப்பின் வழியே உருவான தெளிவையும் ஞானத்தையும் அவர் பேச்சில் காணமுடியும்.
ஆம்பூர் அசோகன் டெல்லி JNUவில் படித்தவர். வீட்டில் பெரிய நூலகம் வைத்திருக்கிறார். அவரது மனைவி கல்லூரி பேராசிரியர். அவரும் தீவிரமாக வாசிக்கக் கூடியவர். இலக்கிய உலகோடு எந்த தொடர்புமில்லாமல் தனியே தனக்குப் பிடித்தமான புத்தகங்களை வாசித்துக் கொண்டு சிறிய நண்பர்கள் வட்டத்திற்குள் அமைதியாக வாழ்ந்து வருகிறார் அசோகன்.
உலகப் புத்தகத் தினவிழாவில் இந்த இருவரையும் கௌரவிக்க விரும்புகிறேன். வேலூர் லிங்கம் மற்றும் ஆம்பூர் அசோகன் இருவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்.
••

எத்தனையோ புத்தகங்களைப் படித்திருந்தாலும் உலகின் முதல் புத்தகத்தைப் பார்த்திருக்கிறோமா, படித்திருக்கிறோமா என்ற ஏக்கம் எனக்குள் எழுவது உண்டு.
உலகின் முதல் அச்சுப்புத்தகமாகக் கருதப்படுவது டயமண்ட் சூத்ரா எனப்படும் பௌத்த நூலாகும். சீனாவில் கையால் செய்யப்பட்ட அச்சாக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதினாறு அடி நீளமுள்ள இந்தச் சுருள் வடிவம் லண்டனின் பிரிட்டிஷ் நூலகத்தில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது
DIAMOND SUTRA புத்தகம் படித்திருக்கிறேன். ஆனால் அதன் மூல சுருள் வடிவ நூலைக் கண்டதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகக் கௌதம் கோஷ் இயக்கிய Beyond The Himalayas என்ற ஆவணப்படத்தினைக் கண்டேன். மிக முக்கியமான ஆவணப்படமது. 1994 ஆம் ஆண்டில் கர்னல் அலுவாலியா தலைமையில் ஒரு குழு ஐந்து மஹிந்திரா ஜீப்புகளின் மூலம் மத்திய ஆசியா, சீனா மற்றும் திபெத் வழியாக 14,000 கி.மீ தூர பயணத்தை மேற்கொண்டனர். -பௌத்த தடயங்கள், பட்டு பாதையின் வரலாறு, அரசியல், புவியியல் கலை மற்றும் தொல்லியல் ஆய்வுகள் சார்ந்த இந்தப் படம் இந்த ஆவணப்படம் 1996 இல் தூர்தர்ஷன், டிஸ்கவரி மற்றும் பிபிசி ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த முக்கியமான பயணத்தின் ஒரு பகுதியில் வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு குகையில் பல நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கபட்டிருந்த , ‘டயமண்ட் சூத்திர நூலின் பிரதியை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.
உலகின் முதல் புத்தகத்தைக் கண்ணால் கண்டது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த நூல் 868ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. சீன மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் மஞ்சள் படிந்த காகிதங்களில் வுட்பிளாக் முறையில் அச்சிடப்பட்டு ஒன்றாக ஒட்டப்பட்டுச் சுருளாக வைக்கப்பட்டிருக்கிறது.

கௌதம புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவர் சுபூதி. இந்தச் சுபூதியோடு கௌதம புத்தர் உரையாடிய ஞானமொழிகளின் தொகுப்பே இந்தச் சூத்திரங்கள். மகாயான பௌத்த நூல்களில் முதன்மையாகக் கருதப்படுகிறது.
புத்தர் தனது துறவிகளுடன் சிராவஸ்திக்கு செல்கிறார். அங்கே வீடு வீடாகச் சென்று உணவினை யாசிக்கிறார். பின்பு அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது மூத்த துறவியான சுபூதி அவரிடம் தனது சந்தேகங்களைக் கேட்கிறார்
“போதிசத்துவரின் பாதையில் புறப்பட்ட ஒருவர் எவ்வாறு தனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், எவ்விதம் தன் வாழ்வினை தொடர வேண்டும், மனதை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும்?“
இந்தக் கேள்விகளுக்குப் புத்தர் சொன்ன பதில்களும் அதையொட்டிய உரையாடலுமே இந்த நூலின் மையமாகும்

இந்த வாழ்வில் எதுவும் நிலையானதில்லை. எல்லாமும் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒரு நீர்க்குமிழி போன்றது தான் இந்த வாழ்க்கை. ரூப அரூப நிகழ்வுகளும் பொருட்களும் அதற்கு கொடுக்கப்பட்ட பெயர்களும் வெறும் மனக் கட்டமைப்பாகும், அவை உண்மையான, காலமற்ற யதார்த்தத்தை மறைக்கின்றன. எனும் வைரசூத்திரத்தால் வசீகரிக்கப்பட்ட எழுத்தாளர் ஜாக் கரோக்(Jack Kerouac) அதை ஆழ்ந்து படித்துப் பௌத்த ஞானத்தின் பாதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுபூதியின் வாரிசுகளாகவே தலாய் லாமாக்களை கூறுகிறார்கள்.
புத்தரிடம் இந்தச் சூத்திரம் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். உலக மாயையினை அறுத்து உண்மையான மற்றும் நித்தியமானவற்றை வெளிச்சமிட்டுக் காட்டும் ஆழ்நிலை ஞானத்தின் வைரக்கத்தி போன்றிருப்பதால் இதை வைர சூத்திரங்கள் என்று அழைக்கலாம் என்கிறார். அப்படித் தான் இந்தப் பெயர் வந்தது என்கிறார்கள்.

மங்கோலியாவிற்கும் திபெத்துக்கும் இடையிலான வடமேற்கு சீன பாலைவனத்தில் டன்ஹுவாங் நகருக்கு அருகிலுள்ள ஒரு குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளில் அச்சிடப்பட்ட வைரசூத்திர நூலின் நகலும் ஒன்றாக இருந்தது,.

இந்தக் குகையை ‘ஆயிரம் புத்தர்களின் குகைகள்’ என்று அழைக்கிறார்கள. இதனுள் ஒவியங்களும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த வைர சூத்திரத்தை 1907 ஆம் ஆண்டில் ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த மார்க் ஆரேல் ஸ்டெய்ன் என்பவர் கண்டுபிடித்தார்
மேற்கத்தியர்களால் உலகின் பழமையான புத்தகமாகக் குட்டன்பெர்க் பைபிள் கருதப்பட்டு வந்தது. இந்தப் பைபிள் பதினான்காம் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டது. ஆனால் இந்த வைர சூத்திரப் பிரதி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதுவே உலகின் மிகத் தொன்மையான அச்சுப் புத்தகமாகக் கருதப்படுகிறது.
ஒரு புத்தகம் நம் கைக்கு வரும்போது அது காலமற்றதாகவே உள்ளது. எந்த ஆண்டில் அது அச்சிடப்பட்ட என்ற தகவல் தான் அதன் பழமையைச் சுட்டுகிறதே தவிர அச்சிடப்பட்ட சொற்கள் காலத்தைத் தாண்டி புதியதாகவே இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழைய நூலாக இருந்தாலும் நேற்று வெளியான புத்தகமாக இருந்தாலும் நம் கைக்கு வரும் போது அது புதிய புத்தகமே. கலைப்பொருட்களின் மீது காலம் உறைந்துவிடுவது போலச் சொற்களின் மீது உறைவதில்லை. சொற்கள் நித்ய இருப்பின் வெளிச்சத்துடன் ஒளிர்கின்றன.

இந்த வைர சூத்திரத்தினைத் திரையில் கண்டபோது ஆயிரம் ஆண்டுகளாக அது எவராலும் வாசிக்கப்படவில்லை என்பது தான் என் மனதைத் தொட்டது. ஒரு புத்தகத்தின் விதி என்பது விநோதமானது. அது எப்போது எவ்வளவு பேரால் படிக்கப்படும். மறைந்து போகும். மீட்டு எடுக்கப்படும் என்று யாராலும் சொல்லிவிடமுடியாது.
புதைந்து போன நகரங்களைத் தேடிக் கண்டறிய முயன்ற ஸ்டைன் பாலைவனத்தில் மிகுந்த சிரமங்களுக்குள் தான் இந்தக் குகையைக் கண்டறிந்தார். ஒளித்து வைக்கப்பட்ட ஏடுகள். சுருள்களின் மீது வெளிச்சம்போட்டது. உலகின் கவனத்திற்கு உள்ளான இந்த ஏடுகள் மீண்டும் படியெடுக்கப்பட்டன. புதிய வாசிப்பிற்கு உள்ளாகின. வைர சூத்திரம் எப்படிச் சீனாவிற்குச் சென்றது. யார் இதனை அச்சிட்டது. யாரெல்லாம் வாசித்தார்கள் என்று எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் பூமியின் அடியிலிருந்து கண்டறியப்பட்ட அபூர்வமான வைரம் போலவே இந்த நூலும் பெரும் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் உலகின் ஏதேதோ மொழிகளில் புதிய புத்தகங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. புத்தகமே வெளியாகாத நாள் என்று ஒரு தேதியைச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. அது போன்றது தான் வாசிப்பும்.
உலகெங்கும் யாரோ, ஏதோ ஒரு இடத்தில். ரகசியமாக, சந்தோஷமாக, வடிகாலாக, அன்பின் பரிசாக, காதலின் நினைவாக, போராட்டத்தின் துணையாக,தனிமையின் நண்பனாக, ஞானத்தின் திறவுகோலாக, அறிவின் உச்சமாக, ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துப் புரட்டுகிறார்கள். உலகின் மீது வெளிச்சம் பரவுவது போன்ற மாயமது. புத்தகத்தைத் திறக்கும் போது இருந்த மனிதன் அதை முடிக்கும் போது மாறிவிடுகிறான். என்னவாக மாறினான். என்ன கிடைத்தது என்று அவனால் துல்லியமாகச் சொல்லமுடியாது. ஆனால் அந்த மாற்றம் புதுவகை ஆனந்தம். புது வகை நம்பிக்கை, புதிய திறப்பு என்றே சொல்வேன்.
வாசித்தல் என்பது பறத்தலா, வாசித்தல் என்பது நீந்துவதா, வாசித்தல் என்பது கூடு விட்டுக் கூடு பாய்வதா, வாசித்தல் என்பது தண்ணீரின் மீது நடப்பதா, வாசித்தல் என்பது கரைந்து போவதா, வாசிப்பு என்பது சொல்லை ஆயுதமாக ஏந்துவதா, வாசித்தல் என்பது காலத்தின் பின்னோக்கி பயணம் செய்வதா, வாசித்தல் என்பது தியானமா, வாசித்தல் என்பது சொற்களைக் காதலிப்பதா, அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வதா, வாழ்வின் புதிர்களை அவிழ்க்கும் செயல்பாடா, வாசிப்பு என்பது ரகசியமான நடனமா, எல்லாமும் தான். வாசிப்பின் வழியே நாம் மாறத்துவங்குகிறோம். நம்மோடு உலகமும் மாறத்துவங்குகிறது.
இந்த உலகப் புத்தகத் தின நாளில் உலகின் முதல் புத்தகமான DIAMOND SUTRAவை படிக்க கையில் எடுத்தேன். சிராவஸ்தியில் இருந்தபடி புத்தர் பேசத்துவங்குகிறார். சொற்களுக்கு வயதாவதேயில்லை. சிறுசொற்கள் உலகின் பேருண்மையை. பெரும்ஞானத்தை வெளிப்படுத்தியபடியே நட்சத்திரங்கள் போல ஒளிர்கின்றன.
••

இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது. எனினும்
யாராவது பூமியை விடக் கனமானது
எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.
நீங்களாவது கூறுங்களேன், இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படிக் கையில் வைத்திருப்பது என்று…
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்.
அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடி வருகிறது. நான்
கொஞ்சம் கொஞ்சமாகப் பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.
– கவிஞர் தேவதச்சன்