முனைவர் ப. சரவணன், மதுரை

நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்கள் வகுப்பறையில் நவீன இலக்கியங்கள் தொடர்பான பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, “எல்லாத்துக்கும் உதாரணம் இந்தியாவுல இருக்கும்” என்றார். அப்போது அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரியவில்லை.
ஆனால், எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இந்திய வானம்’ புத்தகத்தைப் படித்ததும் அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரிந்துவிட்டது. ‘மேன்மைகளும் கீழ்மைகளும் சம அளவில் நிறைந்த பெருநிலம்தான் இந்தியா’ என்று இப்போது எனக்குத் தெளிவாகிவிட்டது.
பொதுவாகவே யாருக்கும் பிறர் கூறும் அறிவுரைகள் பிடிக்கவே பிடிக்காது. இந்தப் புத்தகம் அறிவுரை பகரும் புத்தகம் அல்ல; மாறாக அறவுரையை நம் முன்வைக்கும் புத்தகம்.
உங்களின் காலடியில் ஒரு மலர் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் எடுத்தும் செல்லலாம் அல்லது மிதித்தும் செல்லலாம் என்பதுபோல இந்தப் புத்தகத்தின் வழியாக எழுத்தாளர் நமக்கு இரண்டு வாய்ப்புகளைத் தந்துள்ளார். ஒரு வாசகனாக நான் அந்த ‘அறவுரை’ எனும் மலரை எடுத்துக்கொணடேன்.
‘இந்த எழுத்தாளருக்குத்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்!’ என்று நம்மை வியக்க வைக்கும் புத்தகம் இது. அவரது பயணங்களில் உருவாகியிருக்கிறது அழியா நினைவுகளின் நெடும்பாதை. அந்தப் பாதையில் நம்மையும் கைப்பிடித்து நடத்திச் செல்கிறார் எழுத்தாளர். 26 அத்யாயங்களில் அறவுரைகளைத் தம் அனுபவத்தில் தோய்த்து எடுத்துத் தந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரைக்கும் தொடர்புடைய அறிஞர்களின் கருத்துகளை ஊடுபாவாக இணைத்துள்ளார்.
“எல்லோருக்கும் வாழ்வின் லட்சியமாகப் பணம் மட்டும் இருப்பதில்லை. அதைத் தாண்டி, மக்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!” என்று நம்மிடம் கேட்கும் இவர், அப்படிப்பட்டவர்களை நமக்கு அடையாளங்காட்டும் நோக்கில்தான் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
“புத்தரின் புன்னகைதான் எனது எழுத்துத்துணை” என்று கூறும் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளில் புத்தரின் புன்னகையும் அன்பான அறிவுரைகளும் இழையோடியுள்ளன.
“இல்லாத மனிதர்கள் ஒருவரையொருவர் சந்தோஷப் படுத்திக்கொள்கிறார்கள். பகிர்ந்து வாழ்கிறார்கள். ஆனால், வசதியும் வாய்ப்பும் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த மனது இருக்கிறது?” என்று கேட்கும் இவர் நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ளப் பணித்துவிடுகிறார்.
‘வாழ்க்கை’ பற்றி எத்தனையோ ஞானிகள் எவ்வளவோ தத்துவ விளக்கங்களைக் கூறியிருக்கிறார்கள். அவர்களுள் யாரும் இவரைப் போல இவ்வளவு எளிதாக வாழ்க்கையை நமக்கு விளக்கியிருப்பதாகத் தெரியவில்லை.
“பறவைகள் சிறகுகளால் மட்டும் பறப்பன அல்ல. அவை, ‘பறக்க வேண்டும்’ என்ற இடையறாத வேட்கையால், மனத்தால்தான் பறக்கின்றன. அதுதான் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது சிறகு. நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது. அதை விரித்துப் பறக்க நாம் எத்தனிப்பது இல்லை. வாழ்க்கை பரமபதக்கட்டத்தை விடவும் புதிரானது. எந்த ஏணி ஏற்றிவிடும், எந்தப் பாம்பு இறக்கிவிடும் எனத் தெரியாது. அதைவிடவும் எது பாம்பு, எது ஏணி எனக் கண்டுகொள்வதும் எளிதானதல்ல. ஆனாலும், விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்”.
‘இதுதான் வாழ்க்கை’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு, ‘இந்த வாழ்க்கையை வாழுங்கள்’ என்று நம்மிடம் கோரிக்கைவிடுத்துள்ளார் எழுத்தாளர்.
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்த நெறியின் மீது தீராக்காதலுடையவர். அவர் புத்தம் பற்றி இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
“புத்தரைப் பின்தொடர்வது என்பது ஒரு நீண்ட பாதை. வாழ்நாள் முழுவதும் தொடரும் பணி. அதன் முதற்படியாக, சொல்லாலோ அல்லது உடலாலோ மற்றவர்களின் அமைதிக்கும் இசைவுக்கும் பாதிப்பு வரக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருத்தலே புத்தர் காட்டும் எளிய வழி. அலங்காரப் பொருளாகப் புத்தனை வீட்டில் வைத்திருப்பதைவிடவும் அவரது அறங்களில் ஒன்றைக் கைக்கொள்வதுதான் புத்தரைப் பின்தொடரும் உண்மையான வழி”
புத்தரைப் பற்றித் தாம் புரிந்துகொண்டவற்றை எளிய தொடர்களின் வழியாக நம்மையும் புரிந்துகொள்ளச் செய்துள்ளார் எழுத்தாளர்.
மனிதர்களின் மீதும் அவர்கள் கொண்டுள்ள அன்புள்ளத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். ஆனால், இவர் புறக்கணிக்கப்படும் அன்பு குறித்தும் குறுகிய மனம் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே சுட்டிக்காட்டவும் செய்துள்ளார்.
“நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஆனால், வன்முறையையும் சுயநலத்தையும் மோசமான பண்பாட்டுச் சீரழிவுகளையும் வளர்த்து வருகிறோம். இந்த முரண்தான் உண்மையின் குரலை அடையாளம் காண முடியாதபடித் தடுக்கிறது.”
“மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவர்களின் இதயத்தை எப்படித் திறப்பது என யாருக்கும் தெரியாது. அன்புதான் மனத்தைத் திறக்கும் ஒரே சாவி. அது எப்போது, எப்படி ஓர் இதயத்தைத் திறந்து தன்வசப்படுத்தும் என்பது விந்தையே!”
“சொற்களால் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது. அன்பை வெளிப்படுத்த பணமும் பரிசுப்பொருட்களும் மட்டுமே உதவுகின்றன. இல்லாதவர்களின் அன்பு ஏளனப்படுத்தப்படவே செய்கிறது.”
நாகரிகம் வளர்ந்துவிட்டது. வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன. ஆனால், மனிதர்கள் மட்டும் தாமரை இலை நீர்த்துளிபோல விலகி விலகியே இருக்கிறார்கள். இது குறித்த தமது கவலையைத் தெரியப்படுத்தும் எழுத்தாளர் ஒரு சிறு நிகழ்வின் வழியாக நாம் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
“இன்று வீட்டைப் பூட்டிக்கொண்டு புறப்படும்போது, ‘யாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்வது?’ என்பது மிகப் பெரிய கேள்வி. இதற்கு மாற்றாக செக்யூரிட்டி கேமரா வாங்கிப் பொருத்திவிடுகிறார்கள். அல்லது செக்யூரிட்டி ஆளை நியமித்துவிடுகிறார்கள். இது பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னை மட்டும் அல்ல. மனித உறவுகள் அற்றுப்போய்விட்டதன் அடையாளம். நாமும் யாருடனும் பழகுவதும் இல்லை. யாரும் நம்மோடு பழகுவதும் இல்லை. நமது வீடுகள் தனித்தனி கல்லறைகள்போல் ஆகிவிட்டன. வாசற்படிகூட இல்லாமல் வீடுகள் சுருங்கிப் போனதுடன் மனித மனமும் சுருங்கிப்போய்விட்டது.”
2000த்துக்கு முன்புள்ள தலைமுறை பெரும்பாலும் தன் கனவுகளையும் கற்பனைகளையும் திரைப்படத்தை முன்னிறுத்தியே உருவாக்கியிருக்கும். திரைப்படம் குறித்தும் திரைப்படங்களைப் பார்ப்பதும் பற்றியும் பேசிச்செல்லும் எழுத்தாளர் இடையே பின்வரும் கருத்தை எழுதிச் சென்றுள்ளார்.
“பால்யத்தின் பெரும்பான்மை நினைவுகள் கறுப்பு – வெள்ளையாக எஞ்சியிருக்கின்றன. ஆனால், வண்ணப் படங்களாக இருப்பன சினிமா பார்த்த நினைவுகள் மட்டுமே!”
ஆம்! திரைப்படத்தைவிட அதைப் பார்க்கச் சென்ற, பார்த்த பொழுதுகளே நெஞ்சில் ஆணியடித்து நிறுத்தப்பட்டுள்ளன.
எழுத்தாளர் சமுதாயத்தைப் பாராட்டும் இடங்களில் எல்லாம் நம் மனம் இளகிவிடுகிறது. அவர் சமுதாயத்தை எதிர்நிலையில் விமர்சிக்கும் போதெல்லாம் நம் மனம் குற்றவுணர்வில் குறுகிவிடுகிறது.
“பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தனையும் கள்ளச் சந்தைக்கு உரிய பொருட்களாகிவிட்டன. எந்தப் பொருளை, எவ்வளவு விலைக்கு விற்பது என்பதற்கு ஒரு கட்டுப்பாடும் கிடையாது. தர நிர்ணயம், பரிசோதனை, கட்டுப்பாடு என எவையும் நடைமுறையில் இல்லை. உணவுப் பொருட்களில் நடைபெறும் கொள்ளை சாமானிய மனிதர்களை அன்றாடம் வதைக்கிறது. காய்கறிக்கடையில், பழக்கடையில், உணவகத்தில் தனக்குத் தானே புலம்பிக்கொள்வதைத் தவிர வேறு எதையும் மக்களால் செய்ய முடிவது இல்லை.”
“நம் காலம் அலங்கரிக்கப்பட்ட பொய்களால் ஆனது. இங்கே உண்மை என்பது, பல்லியின் துண்டிக்கப்பட்ட வால்போல தனியே துடித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய கவலை இல்லாமல் சமூகம் தன்போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.”
நம்மை இவ்வளவு நெருங்கி, நம் முகத்துக்கு நேராக, இப்படிப் பேச இவரால்தான் முடிகிறது. அதனாலேயே இவரின் சமுதாயப் பொறுப்புணர்வுள்ள எழுத்துகளை நம்மால் எந்த வகையிலும் புறக்கணிக்க இயலாமலாகிவிடுகிறது.
இந்தத் தலைமுறையினர் பலவற்றை மறந்துவிட்டனர். குறிப்பாகச் சிரிப்பதையும் புன்னகைப்பதையும் கூட மறந்துவிட்டனர். சிரிப்புக்கும் புன்னகைக்கும் இருக்கும் வலிமை குறித்துப் பேசும் எழுத்தாளர் தன்னனுபவத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை எடுத்துரைத்துள்ளார்.
“அந்தச் சிரிப்பு எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. மனிதர்களை ஒன்றிணைக்க சிறிய புன்னகை போதும். அடுத்த விநாடி மொழி தெரியாதவர்கூட சிநேகமாகிவிடுகிறார்” என்று சிரிப்புக்கும் புன்னகைக்கும் இருக்கும் வல்லமையைத் தன் அனுபவத்தின் வழியாக நமக்குக் காட்டியுள்ளார்.
இந்தியாவை உடலால் உள்ளத்தால் மட்டுமல்ல நாக்காலும் உணர முடியும் என்பதைப் பின்வரும் பத்தியின் வழியாக எழுத்தாளர் விளக்கியுள்ளார்.
“இந்தியாவைப் போல இத்தனை ருசிகரமான உணவு வகைகள் வேறு எந்தத் தேசத்திலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு இரண்டு மணி நேரப் பயண தூரத்துக்கும் உணவு மாறிவிடுகிறது. காரமும் புளிப்பும் இனிப்பும் மாறுபடுகின்றன. சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு மாறுபட்ட உணவு வகைகள்! ருசிகள்! இந்தியாவை ஒன்றிணைப்பது உணவுதான்” என்கிறார் இவர்.
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்கள் மீது அளவற்ற நம்பிக்கையுடையவர். இந்தப் புத்தகத்தில் புத்தகங்கள் பற்றியும் அவற்றின் பெரும்பயன்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
“புத்தகம் படிப்பது ஒரு தளம் என்றால், அதைப் பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் மக்களிடையே எடுத்துச் சொல்வதும் அவசியமான இன்னொரு தளம்.”
“உறவுகள் கைவிட்ட நிலையில் தனித்து வாழும் முதியவர்கள் பலருக்குப் புத்தகங்களே ஆறுதலாக இருக்கின்றன. அவர்கள் புத்தகங்களை உயிருள்ள ஒன்றாகக் கருதுகிறார்கள். அதனுடன் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். படித்த புத்தகங்கள் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறார்கள்.”
“புத்தகங்கள் வாழ்வின் மீதான பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. துயரத்தில் இருந்தும் வேதனைகளில் இருந்தும் விடுபட வைக்கின்றன. அந்த மௌனத் துணையைப் பலரும் உணராமல் இருக்கிறார்கள் என்பதே தீராத வருத்தம்!”
‘புத்தகம்’ என்றும் நமது ‘சிறந்த தோழமை’ என்பதை நாம் புரிந்து, அந்தப் புத்தகங்களின் பக்கங்களில் நம் மனமுகத்தைப் புதைத்துக்கொள்ள வேண்டும். அது நமக்கு அலுக்காமல் ஆயிரம் முறைக்கும்மேல் ஆறுதல் சொல்லும்.
‘எப்போது தன்னையறிதல் சாத்தியப்படும்?’ என்பது குறித்துப் பேசும் எழுத்தாளர், வாசகரின் தோளில் தன் நேசக்கரத்தை மெல்ல வைத்தபடி இனிமையான சொற்களால் பின்வருமாறு உரையாடுகிறார்.
“நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதிலும் அரட்டை அடிப்பதிலும் எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ, அதற்கு இணையான சந்தோஷம் விருப்பத்துடன் தனித்து இருப்பதிலும் கிடைக்கும். அதற்குத் தனிமைக்கு நாம் பழக வேண்டும். புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் இருப்பது என்பது வேறு. விருப்பத்துடன் தனிமையில் இருப்பது என்பது வேறு. நாம் விருப்பத்துடன் தனித்திருக்கப் பழக வேண்டும். அது ஒரு சுவை. பறக்கும்போது மட்டுமே பறவைகள் கூட்டமாகச் செல்கின்றன. பிறகு, ஒவ்வொரு பறவையும் அதனதன் வழியே தனியேதான் இரை தேடுகின்றன. விரும்பிய மரத்தைத் தேர்வு செய்து, வசிப்பிடத்தை உருவாக்கிக் கொள்கின்றன. தனிமை கொள்ளுதல் என்பது, நம்மை அறிந்துகொள்ளும் வழி.”
‘விரும்பிப் பெறும் தனிமை’ என்பது, ஒரு தவநிலை. அதிலிருந்தே தன்னையறிதல் தொடங்குகிறது என்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
காதலைப் பற்றியும் காதலர்களைப் பற்றியும் காதலுக்கு ஆதரவு அளிப்போரைப் பற்றியும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரைப் பற்றியும் ஒரே பத்தியில் மிக அழகாக வரையறைசெய்துள்ளார் எழுத்தாளர்.
“காதலை அங்கீகரிக்காத சென்ற தலைமுறையைச் சார்ந்த பெற்றோர்கள் பயந்தது போலவேதான் காதலை அங்கீகரிக்கும் இந்தத் தலைமுறையைச் சார்ந்த பெற்றோர்களும் காதலைக் கண்டு பயப்படுகிறார்கள். இருவருக்கும் உள்ள ஒரே கேள்வி, ‘எதிர்காலம் என்னவாகும்?’ என்பதே!. இதற்கான விடை யாருக்கம் தெரியாது. காதல், எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவது இல்லை. பயம்கொள்வது இல்லை. காதலின் பலமும் அதுதான். பலவீனமும் அதுதான்.” இதற்கு முன்பாக யாரும் இவ்வளவு நேர்த்தியாகக் ‘காதல்’ பற்றி விளக்கம் அளிக்கவில்லை.
‘எது மகிழ்ச்சி?’ என்று தெரியாமலேயே மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கும் படித்த அறிவிலிகளுக்கும் படிக்காத அறிவாளிகளுக்கும் ஒரு செய்தியைத் தந்துள்ளார் எழுத்தாளர்.
“வசதியான வீடு, புதிய கார், கை நிறைய பணம், உயர்ந்த பதவி, விருப்பமான உணவுகள், ஆடம்பர வாழ்க்கை இவைதான் சந்தோஷத்தின் அடையாளங்களாக முன் வைக்கப்படுகின்றன. இவை, விலைகொடுத்துப் பெறும் சந்தோஷங்கள். ஆனால், வாழ்வில் விலையில்லாத சந்தோஷங்கள் நிறைய இருக்கின்றன. சூரியனும் நிலவும் மலைச்சிகரங்களும் புல்வெளிகளும் அருவிகளும் ஆறுகளும் கடலும் வானும் ஒளிரும் நட்சத்திரங்களும் பறவைக்கூட்டங்களும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகின்றன. இவை விலையில்லாத சந்தோஷங்கள். இதன் அருமையை நாம் முழுமையாக உணர்வதே இல்லை.” எழுத்தாளரின் இந்தக் கருத்திலிருந்து நாம், ‘நமக்கு எது மகிழ்ச்சியைத் தரும்’ என்பதை அறிவதே, நாம் பெறும் முதல் அறிவு’ என்று புரிந்துகொள்ள முடிகிறது.
எழுத்தாளர் மரங்கள், பூக்கள் பற்றிக் கூறியுள்ள ஒரு பத்தியின் வழியாகப் பூடகமாகவும் குறியீட்டு நிலையிலும் பல தகவல்களை நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
“ஒருமரம் பூப்பதைக் கண்டு மற்றொரு மரம் பொறாமை கொள்வதில்லை. அதுதான் இயற்கையின் உன்னதம். இயற்கையில் யாவும் அதனதன் இயல்பிலேயே இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பிரித்து, வகைப்படுத்தி, ‘பயன்பாடு’ என்ற கூடைக்குள் அடைக்க நினைக்கும் மனித மனமே இயற்கையைக் கூறுபோடுகிறது. மனிதனுக்குத்தான் பூவுக்கும் மணம் தேவைப்படுகிறது. மற்றபடி மணம் இருக்கிற மலர்களைப் போல, மணம் இல்லாமல் இருப்பதும் பூவின் இயல்பே! நாம் ‘மணமற்ற மலர்’ என்பதை ‘உபயோகமற்ற ஒன்று’ என நினைத்து விலக்கி விடுகிறோம். அது நமது அறியாமை”. இந்தப் பத்தியைப் படிப்பவர்கள் தமக்கான தகவலை மட்டும் உருவி எடுத்துக்கொள்ள இயலும்.
“குரங்கை இன்னோர் உயிரினமாக நாம் மாற்ற முடியாது. ஆனால், நமக்குள் உள்ள பொறாமை உணர்வை, வெறுப்பை, தீமையை நாம் மாற்றிக்கொள்ள முடியும்தானே!” என்று அன்புடன் வினவுகிறார். இந்த அன்பு வினாவுக்கு யாராவது ‘முடியாது’ என்று பதிலளிப்பார்களா?
அன்பெனும் குடைக்குக் கீழ் நிற்கிறது இந்தியா. அன்பெனும் வான்குடையே இந்தியாவின் வானம்.